273 புனித செபஸ்தியார் ஆலயம், சித்ரா


புனித செபஸ்தியார் ஆலயம் மற்றும் துணை பாதுகாவலர் புனித குப்பர்தினோ சூசையப்பர் ஆலயம்

இடம் : சித்ரா, ஏர்போர்ட்

மாவட்டம் : கோவை
மறை மாவட்டம் : கோவை

பங்குத்தந்தை : அருட்தந்தை ஜோசப் சுதாகர்

நிலை : பங்குதளம்

குடும்பங்கள் : 450
அன்பியங்கள் : 18

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு (தமிழ்), காலை 11.00 மணிக்கு (ஆங்கிலம்), மாலை 05.30 மணிக்கு தமிழ்

திங்கள், புதன், வெள்ளி திருப்பலி : மாலை 06.00 மணிக்கு

செவ்வாய், வியாழன், சனி திருப்பலி : காலை 06.30 மணிக்கு

திருவிழா : ஜனவரி 20 -ஆம் தேதி.

வரலாறு :

கோவை மறை மாவட்ட முன்னாள் ஆயர் மேதகு சவரிமுத்து ஆண்டகை அவர்களின் தலைமையிலும், ஒண்டிபுதூர் புனித சூசையப்பர் ஆலயத்தின் அந்நாள் பங்குத்தந்தை அருட்தந்தை G. M குழந்தைசாமி அவர்களின் முயற்சியாலும்,1970-ஆம் ஆண்டு கோவை பீளமேடு சித்ரா சர்வதேச விமான நிலையம் அருகில் 3.66 ஏக்கர் நிலம் மறை மாவட்டத்தின் பெயரால் வாங்கப்பட்டது.

விமான நிலையத்தில் பணிபுரியும் மற்றும் அருகில் உள்ள SIHS போன்ற காலனிகளில் வசிக்கும் கத்தோலிக்கர்கள் மற்றும் அவிநாசி நெடுஞ்சாலையில் உள்ள கல்லூரியில் பயின்று வந்த மாணவர்கள், ஒண்டிபுதூர் புனித சூசையப்பர் ஆலயத்திற்கு வருவதைக் கண்ட பங்குத்தந்தையான அருட்பணி மரிய அந்தோணி அவர்கள், அவிநாசி நெடுஞ்சாலையில் காட்டூர் முதல் கருமத்தாம்பட்டி வரை கத்தோலிக்க தேவாலயம் இல்லை என்பதை உணர்ந்தார்.

ஆகவே அன்றைய ஆயர் மேதகு சி.ம விசுவாசம் ஆண்டகை அவர்களிடம், விமான நிலையம் அருகே வாங்கப்பட்டிருந்த காலியிடத்தில் ஒரு சிற்றாலயம் கட்ட அனுமதி கோரினார்.

மேதகு ஆயர் அவர்கள் அனுமதி கொடுத்து கதவு, சன்னல் போன்ற கட்டிட பொருட்களையும் கொடுத்து உதவியதுடன் நில்லாமல் கையில் விமானம் தாங்கிய தோற்றத்துடன் விளங்கும் விமானப் பயணிகள் மற்றும் படிப்போரின் பாதுகாவலரான புனித குப்பர்த்தினோ சூசையப்பர் அவர்களை ஆலயத்தின் பாதுகாவலராக நிறுவ ஆலோசனையும் வழங்கினார்.

(1626 -ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இப்புனிதர் செபம் மற்றும் திருப்பலி சமயங்களில் தரையில் இருந்து எழும்பி மிதக்க வல்லவராக காணப்பட்டார். பறக்கும் புனிதர் என்று மக்களால் போற்றப்பட்டார். பின்னர் 1767- ஆம் ஆண்டு புனிதராக அறிவிக்கப்பட்டவர் என்பதால் விமானிகள், விமானப் பணியாளர்கள் விமானத்தில் பயணம் செய்பவர்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் போன்றோருக்கு பாதுகாவலராக விளங்குகிறார்.)📚✈️📚

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஆயர் அவர்கள் புதிய ஆலயம் கட்டப்படவிருக்கும் வளாகத்தில் இயேசுசபை குருக்களால் நிர்வகிக்கப்படும் ஒரு கல்லூரியை பின்னர் அமைத்திட திட்டமிட்டிருந்தார்.

தாய்ப்பங்கான ஒண்டிபுதூர் புனித சூசையப்பர் ஆலய பங்கில் தங்கியிருந்து அருட்பணி மரிய அந்தோணி அவர்களின் முயற்சியால் முட்புதர்களால் பெரிதும் நிரம்பியிருந்த இடத்தை சுத்தம் செய்தும், அவ்விடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், ஒரு முள்வேலி அமைத்தார். அவ்வாறு தயார் செய்யப்பட்ட இடத்தில் ஓலையால் வேயப்பட்ட கொட்டகை அமைக்கப்பட்டது. பின்னர் முறைப்படி அரசின் அனுமதி பெற்று பங்குத்தந்தை அருட்தந்தை மரிய அந்தோணி அவர்கள் சிற்றாலயம் ஒன்றை எழுப்ப ஆரம்பித்தார்.

இதற்கிடையில் திருத்தந்தையை சந்திக்க உரோமுக்கு சென்ற ஆயர் விசுவாசம் ஆண்டகை அவர்கள் எதிர்பாராதவிதமாக வெளிநாட்டிலேயே மாரடைப்பால் மரணமடைந்தார். ஆகவே ஆயரின் எண்ணப்படி புனித குப்பர்த்தினோ சூசையப்பர் பெயர் தாங்கிய முதல் சிற்றாலயத்தை மறைமாவட்ட முதன்மைகுரு அருட்தந்தை அத்தோணி லாரன்ஸ் அவர்களால் 17-11-1979 அன்று அர்ச்சிக்கப்பட்டது. காலையில் ஒண்டிபுதூரிலும் மாலையில் இச்சிற்றாலயத்திலும் பங்குத்தந்தையால் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

ஒண்டிபுதூர், புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தையாக இருந்து இக்கிளைப்பங்கில் பணியாற்றிய அருட்பணியாளர்கள் :

1. Fr குழந்தைசாமி ( 1966-1972)
2. Fr S. M இராயப்பர் (1972-1976)
3. Fr மரிய அந்தோணி (1976-1980)
4. Fr ஜோ அடைக்கலம் (1980-1982)
5. Fr மார்க் மந்தாரா (1982-1987)
6. Fr ஜான் போஸ்கோ (1987-1996)
7. Fr K. P வின்சென்ட் (1996-1998)
8. Fr பங்கிராஜ் ஜோசப் (1998-2002)
9. Fr உபகார மரிய சேவியர் (2002-2004)
10. Fr ததேயுஸ் பால்ராஜ் (2004-2005)
11. Fr வின்சென்ட் பால்ராஜ் (2005-2007)

1987- ல் ஒண்டிபுதூர் புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை ஜான் போஸ்கோ அவர்கள், இங்கு இடிந்த நிலையில் இருந்த பழைய ஆலயத்திற்கு பதிலாக, அருகிலேயே புதிய ஆலயத்தை எழுப்பி புனித செபஸ்தியார் ஆலயம் என பெயர் மாற்றி 22-04-1990 -ல் மேதகு ஆயர் அம்புறோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

இருப்பினும் புனித குப்பர்த்தினோ சூசையப்பருக்கு வழிபாடுகள் கைவிடப்படாமல் நடைபெற்றுக் கொண்டு வந்தன.

ஏராளமான மாணவ மாணவியர் பல இடங்களில் இருந்தும் ஒவ்வொரு புதன்கிழமையும் இவ்வாலயம் தேடிவந்து நவநாட்களில் செபித்து வந்தனர்.

ஒண்டிபுதூர் புனித சூசையப்பர் மெட்ரிக் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த அருட்தந்தை லாசர் சுந்தர் அவர்கள் நீண்ட காலமாக இங்கு வந்து திருப்பலி நிறைவேற்றி மக்களின் ஆன்மீகத் தேவையை கவனித்துக் கொண்டார். மக்களிடம் சிறிது சிறிதாக நிதி வசூலித்து பங்குப்பணியாளர் இல்லம் ஒன்றை கட்டினார்.

2007-ல் இவ்வாலயம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. ஆலயத்தின் முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை ஜான் போஸ்கோ அடிகளார் பொறுப்பேற்று சிறப்பாக இறைப்பணியாற்றினார்.

தொடர்ந்து பொறுப்பேற்ற அருட்தந்தை அலெக்சாண்டர் அவர்கள் பங்கு மக்களை அதிகமாக சந்தித்து நற்செய்தி பரப்பி ஆலயத்திற்கு அதிகம் அதிகமாக மக்களை வரச்செய்தார். புதிய ஆலயம் அமைவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு 13-01-2013 அன்று மேதகு ஆயர் I தாமஸ் அக்குவினாஸ் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

2013 ஜூன் மாதத்தில் அருட்தந்தை ஜோசப் சுதாகர் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். அவரது அயராத முயற்சியால் 450- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பங்கில் உள்ளன. பல கல்வி நிறுவனங்கள், சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள், உயர்தர வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் ஏராளமான உணவு விடுதிகள் இப்பகுதியில் இருப்பதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பின் நிமித்தமாக இங்கு வந்து குடியேறிய வண்ணம் உள்ளனர்.

ஆலயத்தின் அருகிலேயே பெரிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிற பல சமயத்தை சார்ந்த நோயாளிகள் பலர் இவ்வாலயம் வந்து செபித்து நலமடைந்து இறைவனுக்கு சாட்சியாக மாற்றம் பெற்று செல்கின்றனர்.

அருகில் உள்ள கல்லூரி நிறுவனங்களின் விடுதியில் தங்கி பயிலும் மாணவ மாணவியர் தினமும் இவ்வாலயம் வந்து செபித்து செல்கின்றனர். ஆகவே இவ்வாலயத்தின் இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு அருட்தந்தை ஜோசப் சுதாகர் அவர்கள் 10,000 சதுர அடிகளைக் கொண்ட புதிய நவீன ஆலயம் கட்ட தீர்மானித்து திட்டமிட்டு 13-12-2015 ல் மேதகு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் அவர்களின் நல்லாசியுடன் பணிகள் துவங்கப்பட்டு, பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பிரமாண்ட புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 19-01-2019 அன்று மேதகு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

மண்ணின் இறையழைத்தல்:

அருட்தந்தை சாலமன் ராஜா.

தற்போது பங்குத்தந்தை அருட்தந்தை ஜோசப் சுதாகர் அவர்களின் வழிகாட்டுதலில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கோவை சித்ரா வில் உள்ள புனித செபஸ்தியார் தலத்திருச்சபை வளர்ச்சிப் பாதையில் சிறப்பாக முன்னேறி செல்கிறது.