5. திருச்சி உலக மீட்பர் பசிலிக்கா சகாய அன்னை பேராலயம்


திருச்சி மாநகரின் மையமான பாலக்கரையில் பிரசித்தி பெற்ற உலக மீட்பர் பசிலிக்கா சகாயமாதா திருத்தல பேராலயம் உள்ளது. வானுயர்ந்த கோபுரத்துடன் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த ஆலயம் தோன்றுவதற்காக, திருச்சியை சேர்ந்த கிறிஸ்தவ முன்னோடிகள் அரும்பாடுபட்டு உள்ளனர். ஆலயம் பலரது வாழ்க்கையில் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. 

போப் ஆண்டவரால் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டு உயர்ந்து நிற்கிறது. கி.பி. 1616ல் மதுரை மிஷன் திருச்சிக்கு வருகை புரிந்தது. மதுரை நாயக்கரின் தார்மீக ஆதரவு இயேசு சபை வேத போதகர்களுக்கு கிடைத்தது. மதுரையில் இருந்து நாயக்க மன்னன் திருச்சிக்கு தலைநகரையும், ஆட்சி பீடத்தையும் மாற்றினார். மன்னரின் சமஸ்தான ராணுவ அதிகாரிகள், வீரர்கள் பலர் ஏற்கனவே ராபர்ட்தே நோபிலி என்ற தத்துவ போதகரால் கிறிஸ்தவத்தை தழுவியிருந்தனர். தூய பிரான்சிஸ் சவேரியார் வழியாகவும் கிறிஸ்தவம் பரவியிருந்தது.

மதுரை மறை மண்டலத்தில் திருச்சி நகர் ஒரு துணை மறைபரப்பு மையமாக இருந்து வந்தது. பாலக்கரை, தர்மநாபுரம்(இருதயபுரம்) வரகனேரி ஆகிய மூன்று பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் இருந்தனர். உலக மீட்பர் கோயில் கட்டுவதற்கு முன்னரே 7500 பேர் கிறிஸ்தவர்களாக இருந்தனர். எனவே திருச்சி பாலக்கரை பகுதியில் புதியதோர் ஆலயம் அமைப்பது அவசியமாகவிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் திருச்சி மாநகரம் திவான் கஞ்சமலை முதலியாரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அருட்தந்தை கோரிஸ், திவான் கஞ்சமலை முதலியாருக்கு செய்த நன்மைக்கு நன்றிக்கடனாக, திவான் கஞ்சமலை முதலியார் கொடுத்த இடம் தான் உலக மீட்பர் பேராலய இடமும், அதைச்சுற்றி உள்ள பகுதிகளும்.

கி.பி. 1880 பிப்ரவரி 9ம் தேதி மோர்சிங்ஞோர் கனோசு, புதிய ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டினார். 1881 ஜூன் 29ம் தேதி சிறப்பான முறையில் வலுவானதாகவும் ஓவியம் போன்ற கலைகள் நிறைந்தும் காண்போர் வியக்கும் வண்ணம் ஆலயம் கம்பீரமாக கட்டிமுடிக்கப்பட்டு புதுச்சேரி பேராயர் லுவெனா மூலம் கனோசு முன்னிலையில் அர்ச்சிக்கப்பட்டது. பிரமாண்ட ஆலயம், 16 மாதங்களில் கட்டப்பட்டது என்பது சிறப்புக்கு உரியதாகும். 1957ல் அருட்தந்தை ஏ.தாமஸ் பங்குதந்தையாக இருந்தபோது ரட்சகர் சபை குரு அருட்திரு பிரான்சிஸ் மூலம், இடைவிடா சகாயத்தாயின் பக்தி முயற்சி தொடங்கப்பட்டது. சகாய அன்னையின் வழியாக ஆயிரக்கணக்கான புதுமைகள் நடைபெற தொடங்கிய காரணத்தால் பல்வேறு சமயங்களை சார்ந்த மக்களும், ஒவ்வொரு புதன்கிழமையும் இங்கு வரத்தொடங்கினார்கள். மக்களின் விசுவாச வாழ்வில் எழுச்சியும் ஏற்பட்டது.

2006ம் ஆண்டு பங்குதந்தையாக இருந்த அருட்திரு ஏ.கபிரியேல் முயற்சியால் திருச்சி ஆயர் மேதகு அந்தோணி டிவோட்டா பரிந்துரையால் போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் 2006 அக்டோபர் 12ம் தேதி ஆலயத்தை பசிலிக்கா(பேராலயம்) நிலைக்கு உயர்த்தினார். .