982 புனித சவேரியார் ஆலயம், அல்லித்துறை

      

புனித சவேரியார் ஆலயம்

இடம்: அல்லித்துறை

முகவரி:

புனித சவேரியார் ஆலயம், நடுத்தெரு,  அல்லித்துறை, சோமரசம்பேட்டை அஞ்சல், திருச்சிராப்பள்ளி, 620102

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி

மறைமாவட்டம்: திருச்சிராப்பள்ளி

மறைவட்டம்: புத்தூர்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித செபஸ்தியார் ஆலயம், சோமரசம்பேட்டை

பங்குத்தந்தை அருட்பணி. அந்தோணி பால்ராஜ்

குடும்பங்கள்: 350

அன்பியங்கள்: 6

ஞாயிற்றுக்கிழமை திருப்பலி காலை 06:30 மணி

மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 06:30 மணி திவ்யநற்கருணை ஆசீர், திருப்பலி, அன்னதானம்

திருவிழா: டிசம்பர் மாதம் 03-ம் தேதி.

திருவிழா சிறப்பு : அனைத்து மதத்தினரும் ஒன்றுக்கூடி திருவிழா நடத்துகின்றனர். திருவிழாவின் போது அன்னைக்கு வழங்கப்பட்ட புடவைகள் அனைத்தும், திருமணமாகாத அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும். அவ்வாறு செய்கையில் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது உறுதியான நம்பிக்கையாகும்.    

புதுமை: முதல் புதுமையாக இடிந்து  விழுந்து கொண்டிருந்த புதுமை அல்லித்துறை பாலமானது, வீரமாமுனிவரின் ஜெபத்தால், நிலைத்து நின்றது. இரண்டாவதாக திருமணமாகாத பெண்களுக்கும் திருமணம் நடைபெறுகிறதும், குழந்தைச் செல்வம் இல்லாத தம்பதிகளுக்கு, குழந்தை பாக்கியம் கிடைத்து சாட்சியங்கள் கூறப்படுகிறது.

மண்ணின் இறையழைத்தல்:

அருட்சகோதரி. ஜாக்குலின்

வழித்தடம்:

திருச்சியிலிருந்து தோகைமலை செல்லும் பாதையில், 8 கிலோமீட்டர் தொலைவில் அல்லித்துறை அமைந்துள்ளது.

Church map location:

St. Saveriyar Church

https://maps.app.goo.gl/omeETmbnqpfBTscF7

வரலாறு:

அல்லித்துறையில் சமயங்கள்: 

அல்லித்துறையின் கிறிஸ்தவம் குறித்த வேர்களை அறிய 16ஆம் நூற்றாண்டின் இறுதிக்கும், 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கும் செல்ல‌ வேண்டும்.‌ இக்காலத்திலேயே இங்கு சைவ, வைணவ சமய வளர்ச்சியும் இருந்தது. அல்லித்துறையை சுற்றியுள்ள சில சைவ கோயில்கள் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. பௌத்த மதம் இம்மண்ணில் ஒரு காலத்தில் செழித்திருந்ததை திருச்சி டவுன்ஹாலில் உள்ள அருங்காட்சியகத்தில் இருக்கும் தலை சிதைந்த புத்தர் சிலைகள் தெரிவிக்கின்றன. இச்சிலைகள் சுற்றுப்புற கிராமங்களில் மண்ணில் புதைந்திருந்து எடுக்கப்பட்டவை. சம காலத்தில்,  சமய ஒருமைப்பாட்டிற்கு சான்றாக அனைத்து சமயத்தினரும், ஒற்றுமையாக வாழும், வளரும் நகரம் போல இன்று அல்லித்துறை விளங்குகிறது. 

அல்லித்துறையை காத்த அரசி: 

ராசராச சோழனின் காலத்தில் வெட்டப்பட்ட உய்யகொண்டான் வாய்க்கால், இன்று வரை சிற்சில மாற்றங்களுடன் அப்படியே மாறாமல் நீண்ட காலமாக பாசனத்திற்கு பயன்பட காரணம் என்ன? நாயக்க மன்னர்களின் ஆட்சியில் வீழ்ச்சிகளைக் கண்டது தமிழகம். ஆனால் தமிழகத்தை 18ஆம் நூற்றாண்டில் தனியே ஆண்ட முதல் பெண்ணரசி ராணி மங்கம்மாள். இவருடைய காலத்தில் திருச்சிராப்பள்ளியில் அன்ன சத்திரங்கள் பல நிறுவப்பட்டன. கிராம சாலை ஓரங்களில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்குமான தனித்தனி குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டன. ஆற்றோர கிராமங்களில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக சிதைந்த கிராமங்கள் சீர் செய்யப்பட்டன. அவற்றில் அல்லித்துறையும் ஒன்று. சமயப் பொதுமை பேணப்பட்டது. அல்லித்துறையில் கிறிஸ்தவம் பரவ இச்செயலும் வழிவகுத்தது. போர்களை குறைவாக எதிர்கொண்ட ராணியின் ஆட்சியில்தான் உய்யகொண்டான் வாய்க்கால் சீரமைப்பு, புதிய ஏரி, குளங்கள் வெட்டப்படுதல் என நீர் மேலாண்மை திட்டங்கள் சிறந்தோங்கின. ஆனாலும் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் ராணி காலத்தில் கட்டப்பட்ட அல்லித்துறை உய்யகொண்டான் பாலம் மட்டும் அடிக்கடி உடைவதும், சீர் செய்யப்படுவதுமாய் சிக்கல்கள் தொடர்ந்தன. 

சாட்சியின் பாலம் - அல்லித்துறையின் நுழைவாயில்: 

ராணி மங்கம்மாள் கட்டிய அல்லித்துறை  உய்யகொண்டான் பாலம் சிதைவதும்‌ சீர்செய்யப்படுவதுமாக, ஆங்கிலேயர் ஆட்சி காலம் வரை இச்சிக்கல் தொடர்ந்தது. இந்நிலையில் 1763 ஆம் ஆண்டுவாக்கில் ஒரு பொறியாளர் (Engineer) இப்பணியை எடுத்துச் செய்தார். ஆனால் பாலச்சிதைவு தொடர்ந்தது. மனம் நொந்த பொறியாளர் ஆவூரில் உள்ள பெரிய நாயகி அன்னை ஆலய பங்குதந்தை ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி என அழைக்கப்பட்ட வீரமாமுனிவரிடம் தன் துயரத்தை பகிர்ந்து கொண்டார். அதற்கு வீரமாமுனிவர் பொறியாளரிடம் கட்டப்படும் பாலம் நிலைத்து நிற்க, கடவுளிடம் வேண்டிக் கொள்ளுமாறு கூறினார். பாலமும் நிலைத்து நின்றது. கடவுளின் திருப்பெயருக்கு புகழ் உண்டாக, அந்த பொறியாளர் தான் நேர்ந்து கொண்டபடி அல்லித்துறையில் அன்று இருந்த ஆலயத்தை (அன்று குடிசையாக இருந்தது) கான்கிரீட் கட்டிடமாக 1725-ல் கட்டித் தந்தார் (படம் கொடுக்கப்பட்டுள்ளது) வரலாற்றில் அப்பொறியாளரின் பெயர் கிடைக்காதது துரதிஷ்டமே... ஆனாலும் அல்லித்துறையை மற்ற நகர்ப்புறங்களுடன் இணைக்கும் முக்கிய இணைப்பு இந்த பாலம். நுழைவாயிலிலேயே கடவுளின் கரம் செயல்பட்டது. 

அல்லித்துறையின் முதல் நற்செய்திப் பணியாளர் சந்தனம்மாள்:

சீர்திருத்த கிறிஸ்தவம் அல்லித்துறை மண்ணில் கால்பதிக்கும் முன்னரே, உரோமைக் கிறித்தவம் கோலோச்ச தொடங்கியது. கி.பி. 1600களிலேயே இராபர்ட் டி நொபிலி எனும் தத்துவ போதகரும், இம்மானுவேல் மார்ட்டின் எனும் அருட்பணியாளரும், திருச்சியை சுற்றியுள்ள கிராமங்களில் இறைப்பணியாற்றினர். இதன் விளைவாக பலரும் கிறிஸ்தவத்தை தழுவினர். அவ்வாறு கிறிஸ்தவத்தை ஏற்றோரில் அல்லித்துறை சந்தனம்மாளும் ஒருவர். இவர் கிறிஸ்தவத்தை ஏற்றதோடு, துறவியாக மாறி பலருக்கு இயேசுவை அறிவித்தார். இதன் விளைவாக அல்லித்துறையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியது. வீரமாமுனிவரின் வருகை மேலும் இவர்களுக்கு புத்துணர்வு ஊட்டியது. அச்சூழலில் வழிபாட்டிற்கு ஆலயம் தேவை என்பதை உணர்ந்த சந்தனம்மாள், அல்லித்துறையின் மையப்பகுதியில் ஒரு இடத்தை தெரிவு செய்து, அங்கு மண் சுவற்றால் ஆன கீற்று வேயப்பட்ட ஆலயம் ஒன்றைக் கட்டினார். இந்த ஆலயத்தின் ஒரு பகுதி மறைக்கல்வி போதிக்கும் கூடமாக (THEOLOGICAL SEMINARY) அன்று விளங்கியிருக்கிறது. அன்று அல்லித்துறை எனும் குக்கிராமத்தில் ஒரு மறைக்கல்விக்கூடம் இருந்தது வியப்பானதன்றோ? குடிசை ஆலயம் கி.பி. 1643, டிசம்பர் 25, கிறிஸ்து பிறப்பு திருநாளன்று அர்ச்சிப்பு செய்யப்பெற்றது. அன்றைய அல்லித்துறை, ஆலய அருட்தந்தை பல்தசார் டிகோஸ்டா அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் கிறிஸ்தவ வழிபாட்டின் ஒலி அல்லித்துறையில் ஒலிக்கத் தொடங்கியது. 

அல்லித்துறை பாலம் கட்டிய பொறியாளர் கட்டிக் கொடுத்த ஆலயத்தில் வீரமாமுனிவர், புனித சவேரியார் சுரூபத்தை நிறுவினார். அதுமுதல் அந்த ஆலயம் புனித சவேரியார் ஆலயம் என அழைக்கப்படுகிறது. 1953ஆம் ஆண்டு முதன்முறையாக புனித சவேரியார் தேர்த்திருவிழா தொடங்கியது. காலப்போக்கில் பழமையாகிப்போன ஆலயத்தின் முன்பகுதி இடிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டு, 1992இல் அர்ச்சிப்பு செய்யப்பட்டது. ஆராதனையில் பங்கேற்கும் இறைமக்களின் எண்ணிக்கை அதிகரித்ததினால் மேலும் விரிவாக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் 2002ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்டது. கோயில் பீடம் மற்றும் மேற்கூரை பகுதி 2018இல் புனரமைக்கப்பட்டது.

ஆலய முகப்பு விரிவாக்கம், ஆலயம் புதுப்பித்தல் பணிகளுக்கு 24.11.2023 அன்று மறைமாவட்ட முதன்மைப் பணியாளர் பேரருள்பணி. லூ. அந்துவான் அடிளாரால் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. அல்லித்துறை மக்களின் நன்கொடைகளாலும், பங்குத்தந்தை அருள்பணி. அந்தோணி பால்ராஜ் அவர்களின் வழிகாட்டலில் ஆலய கட்டுமானப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

வரலாறு: திரு. வினோத் ஐசக் பீட்டர், தூய மத்தேயு ஆலயம், அல்லித்துறை.

புகைப்படங்கள் மற்றும் தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. அந்தோணி பால்ராஜ் அவர்களின் வழிகாட்டலில், திரு. அருள்தாஸ் செபஸ்தியான், அல்லித்துறை.

தகவல்கள் சேகரிப்பில் உதவி: திரு. ஆரோக்ய பிரிட்டோ, இடையாற்றுமங்கலம் (கத்தோலிக்க நண்பர்கள் குழு).