இடம் : பூமலூர்
மாவட்டம் : திருப்பூர்
மறை மாவட்டம் : கோயம்பத்தூர்
நிலை : திருத்தலம்
பங்கு : புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், புக்ளிபாளையம்
பங்குத்தந்தை : அருட்தந்தை விக்டர் அந்தோணி ராஜ் (பாபு)
குடும்பங்கள் : 18
அன்பியங்கள் : இல்லை
ஞாயிறு திருப்பலி : காலை 11.00 மணிக்கு
செவ்வாய் : காலை 07.25 மணிக்கு திருப்பலி,
காலை 10.30 மணிக்கு நற்கருணை ஆராதனை, திருப்பலி
மாலை 06.00 மணிக்கு திருப்பலி.
திருவிழா : ஜூன் 13-ம் தேதியை உள்ளடக்கிய நாட்கள்.
வழித்தடம் :
கோவை - சோமனூர் - பூமலூர்.
திருப்பூரிலிருந்து பேருந்து எண் 5 A. இறங்குமிடம் பூமலூர்.
வரலாறு :
பூமலூர் மிகவும் புராதனமான ஊராகும். கிறிஸ்தவ மக்கள் மிகவும் குறைவாக காணப்பட்டாலும் புனித அந்தோணியாரின் புதுமைகளால் புகழ் பெற்று விளங்கும் அழகிய ஊர் ஆகும்.
கோவை மறை மாவட்டத்தின் வரலாறு 1848 -ஆம் ஆண்டில் துவங்கினாலும், அதற்கு முன்பிருந்தே மதுரை சேசுசபை குருக்களால் கோவை மாவட்டத்தில் திருமறை போதிக்கப்பட்டது.
அதற்கு முன்பாகவே மேற்கு கடற்கரையோரத்தில் அப்போஸ்தலர் புனித தோமையாரால் வேதம் போதிக்கப்பட்டு, சத்திய திருமறையை ஏற்றிருந்தவர்களின் சந்ததியினரும்; கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் புனித பிரான்சிஸ் சவேரியாரால் சத்திய திருமறையை ஏற்றிருந்தவர்களின் சந்ததியினரும், கோவை மறை மாவட்டத்தில் ஆங்காங்கே கிறிஸ்தவ குடியிருப்புகளை ஏற்படுத்தி, கிறிஸ்துவ சமூகங்களைத் தோற்றுவித்து வாழ்ந்து வந்தனர்.
மதுரை சேசுசபை மிஷனைச் சேர்ந்த புகழ்பெற்ற வேதபோதகக் குருக்களான ராபர்ட் தெ நொபிலி (1606-1656), புனித அருளானந்தர் (1975-1693) ஆகியோர் அன்றைய மதுரை மிஷனில் அடங்கிய கோவை மாவட்டத்தில் நற்செய்திப் பணியை செய்ததன் பலனாக எண்ணற்றவர் கிறிஸ்தவம் தழுவினர்.
1775-ஆம் ஆண்டு கர்நாடகா மிஷன் என்ற பகுதி, மதுரை சேசுசபை குருக்கள் பொறுப்பிலிருந்து பிரிக்கப்பட்டு, பிரான்ஸ் வேத போதக் குருக்கள் சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. பாண்டிச்சேரியை தலைமையிடமாகக் கொண்டு இவர்கள் மறைப்பரப்பு பணி செய்தனர்.
இவர்களது பொறுப்பில் தஞ்சை, திருச்சி, மைசூர், கோவை, கும்பகோணம் ஆகிய மாவட்டப் பகுதிகள் வந்தன.
1797 ல் திப்புசுல்தான் நடத்திய போர்களினால் இம் மக்கள் பாதிக்கப்பட்டு பல இடங்களுக்கு சிதறிப் போனார்கள். ஆங்கிலேயர் திப்புசுல்தானை வென்று பல இடங்களை கைப்பற்றினர். அவைகளில் கோவையும், தாராபுரமும் அடங்கும்.
மெல்ல மெல்ல அமைதி நிலவியதும் பிரான்ஸ் நாட்டு வேத போதக சபை குருக்கள் சிதறுண்ட கிறிஸ்தவ மக்களை ஆங்காங்கே திரட்டி கிறிஸ்தவ சமுதாயங்களை உருவாக்கினர். இப்பணியை முன்னின்று சிறப்பாக செய்தவர் அருட்பணி துபே அவர்கள் ஆவார்.
அருட்பணி துபே அவர்கள் தான் கருமத்தாம்பட்டியைத் தேர்ந்தெடுத்து அங்கே கிறிஸ்தவ சமூகத்தை உறுதிப்படுத்தி, அங்கிருந்து தமது மறைப்பரப்பு பணி, சமூக மேம்பாட்டுப் பணிகளை சிறப்பாக செய்து வந்தார்.
1849-ஆம் ஆண்டு கருமத்தாம்பட்டியில் இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 3,500 ஆகும். கருமத்தாம்பட்டி 18 கிராமங்களுக்குத் தாய்ப் பங்காக திகழ்ந்தது. இங்குள்ள ஜெபமாலை மாதா ஆலயம் புகழ் பெற்ற திருத்தலமாகத் திகழ்ந்தது.
1850 -ஆம் ஆண்டில் பூமலூர் புனித அந்தோணியார் திருத்தலம் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
1860-ஆம் ஆண்டு பள்ளபாளையத்தில் நிலையான ஒரு பங்குத்தந்தை நியமிக்கப்பட்டு, பூமலூர், புக்ளிபாளையம், வேட்டுப்பாளையம் முதலிய ஊர்கள் இதனுடன் இணைந்திருந்தன.
1885 - ம் ஆண்டிற்கு பிறகு பூமலூர் தனிப்பங்காக ஏற்படுத்தப்பட்டு, அருட்தந்தை சிலுவைநாதர், அருட்தந்தை அந்தோனிநாதர், அருட்தந்தை மரிய சவேரிநாதரும் சிறப்பாக பணியாற்றினார்கள். அப்போது புக்ளிபாளையம், வேட்டுப்பாளையம், பரமேசுரன்பாளையம், முருகம்பாளையம் ஆகிய நான்கு ஊர்களும் பூமலூரின் தலைமையில் இணைந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது.
அருட்தந்தை மரிய சவேரிநாதர் பணிக்காலத்தில் நிர்வாக வசதிக்காக புக்ளிபாளையத்தை தலைமைப்பங்காக மாற்றினார். பூமலூர் அதன் கிளையாக இருந்தது.
புனித அந்தோணியார் வழியாக பல அற்புதங்கள் நடந்து வந்ததால், பூமலூர் பழங்காலத்தில் திருயாத்திரைத் தலமாக சிறப்புற்று விளங்கியது.
1911-ஆம் ஆண்டில் அருட்பணி இஞ்ஞாசிநாதர் பணிக்காலத்தில் பூமலூர் திருத்தல முன்னேற்றத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.
1916 முதல் 1919 வரை அருட்பணி அந்தோணிநாதர் பணிக்காலத்தில், அருட்தந்தை அவர்களின் முயற்சியால் பூமலூர் திருயாத்திரைத் திருத்தலமாக மாற்றப்பட்டது என்பது என்றும் நினைவு கூறத்தக்கது.
செவ்வாய்க்கிழமைகளில் திருப்பலியைத் தொடர்ந்து நோயாளிகளை மந்திரிக்கும் நிகழ்வையும் தொடர்ந்து நிறைவேற்றி வந்தார்கள். பூமலூர் திருத்தலத்திற்கு சிறப்பு கவனம் கொண்டு அனைத்து காரியங்களையும் அருட்தந்தை அந்தோணிநாதர் செய்து வந்தார். ஆலய மேற்கூரையைப் பிரித்து கள்ளிக்கோட்டை ஓடுகள் வேய்ந்தார். திருயாத்திரை பயணிகள் தங்குவதற்காக வீடுகள் கட்டி வைத்தார். தற்போது பூமலூர் ஆலய மதிற்சுவர் அருகே இருக்கும் வீடுகளில் பெரும்பாலும் இவருடைய முயற்சியில் கட்டப்பட்டவை ஆகும்.
இவ்வாறாக அருட்தந்தை அந்தோணிநாதர் அவர்களின் பணிக்காலம் பூமலூரின் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது.
இரண்டாவது முறையாக அருட்பணி இஞ்ஞாசிநாதர் புக்ளிபாளையம் பங்குத்தந்தையான பின்னர், பூமலூரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டன.
1940 ல் அருட்தந்தை அமிர்தநாதர் பணிக்காலத்தில் அவினாசி, கானூர், இடுவாய், கவுண்டம்பாளையம், வளையபாளையம் ஆகிய ஊர்களும் புக்ளிபாளையத்தோடு இணைக்கப்பட்டன.
1942 ல் பொறுப்பேற்ற அருட்தந்தை சவேரிநாதர் சிறப்பாக வழிநடத்தி வந்தார்கள்.
தொழில் நிமித்தமாக பூமலூரில் இருந்து பல கிறிஸ்தவ மக்களும் வெளியூர் சென்று விட்டதால் ஆயரின் உத்தரவுப்படி ஆலயத்தில் இருந்த புனித அந்தோணியார் சொரூபத்தை, அருட்தந்தையர்கள் புக்ளிபாளையம் எடுத்துச் செல்ல முயன்ற போது, பூமலூரில் உள்ள பிற சமய மக்கள் அனைவரும் ஒன்றுகூடி "புதுமைகள் பல புரியும் புனித அந்தோணியார் இங்கு விரும்பி வந்துள்ளார். அவரை இங்கிருந்து எடுத்துச் செல்ல விடமாட்டோம்" என்றுரைக்க. பிறசமய மக்கள் புனித அந்தோணியார் மீது கொண்ட பற்றுதலைக் கண்டு அருட்தந்தையர் வியப்புற்று திரும்பிச் சென்றனர்.
அன்றிலிருந்து இன்றுவரை பலதரப்பட்ட மக்களும் பல ஊர்களில் இருந்தும் சமய வேறுபாடின்றி செவ்வாய்க்கிழமைகளில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
தொடர்ந்து பணிபுரிந்த அருட்தந்தையர்கள் இராயப்பநாதர், ஆசீர்வாதம், லூர்துசாமி, வின்சென்ட் ஆகியோரும் இத்திருத்தல வளர்ச்சிக்காக உழைத்தனர்.
செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு நவநாள் செபத்தை தொடர்ந்து திருப்பலி நடைபெறும். இதில் கலந்து கொள்ள பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கூடுவர். திருப்பலியின் போது புனித அந்தோணியார் பாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்காக சிறப்பு ஜெப வேண்டுதல் நடைபெறும்.
திருப்பலி முடிந்த பின்னர் புனிதரின் ஆசீரும், மந்திரிப்பும் அளிக்கப்படும்.
பூமலூர் திருத்தலத்தில் சிலர் தங்கியிருந்து நோய் நீங்கவும், தங்களது பல தேவைகளை புனிதரின் பாதத்தில் வைத்து ஜெபித்து, புனிதரின் பரிந்துரையால் இறைவனின் ஆசீர்வாதங்களைப் பெற்று மகிழ்வுடன் தங்கள் ஊர் செல்கின்றனர்.
பூமலூர் புனித அந்தோணியார் திருத்தல திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். கேரளா மாநிலத்தில் இருந்தும், உதகை, குன்னூர், திருப்பூர், மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்தும், சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்தும் திரளான மக்கள் வந்து விழாவை சிறப்புற செய்வார்கள். ஜூன் 13-ம் தேதி புனிதரின் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ஆயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறும்.
இவ்விழாவில் கிறிஸ்தவ மக்களை விட பிற சமய மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு, தங்கள் வேண்டுதல்களை புனிதர் பாதத்தில் வைத்தும், தங்கள் வேண்டுதல்களுக்கு பலன் கிடைத்ததற்கு நன்றி செலுத்துவதும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
பூமலூரில் உள்ள மணியக்காரர், பெருநிலக்கிழார்கள், பெருங்குடிமக்கள், ஊர் பொது மக்கள் (குறிப்பாக பிற சமய மக்கள்) தங்கள் ஒத்துழைப்பையும், ஆதரவையும் தந்து திருவிழாவை தங்கள் சொந்த திருவிழாவாக இதயப்பூர்வமாக செய்வார்கள். இது பூமலூர் ஊரின் தனிச்சிறப்பு.
இத்திருத்தலத்தில் புதுமை மணி என்று மக்களால் அழைக்கப்படும் ஆலய மணி ஒன்று உள்ளது.
பூமலூர் சிறிய ஊர் ஆலயமும் அவ்வாறே. ஆனால் ஆலய மணியோ மிகவும் பெரியது. இந்த மணியின் ஓசையானது பக்தர்களை பரவசப்படுத்தும்.
புனித அந்தோணியார் வழியாக நாள்தோறும் புதுமைகள் நடந்து வந்ததால், ஆலயம் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆலயத்தில் இடநெருக்கடி ஏற்பட்டதால் ஆலயத்தை விரிவாக்கம் செய்ய அருட்பணி அலெக்ஸ் செல்வநாயகம் பணிக்காலத்தில் 01-01-2008 ல் கோவை மறை மாவட்ட மேதகு ஆயர் M. அம்புறோஸ் அவர்களால் அடிக்கல் போடப்பட்டு, அனைவரின் நன்கொடைகளால் அழகிய ஆலயம் கட்டப்பட்டு 26-01-2009 அன்று கோவை மறை மாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் மற்றும் உதகை மறை மாவட்ட ஆயர் மேதகு அமல்ராஜ் ஆகியோர் இணைந்து அர்ச்சித்து திறந்து வைத்தனர்.
கோடி அற்புதர் புனித அந்தோணியார் வழியாக இறைவனின் அருள் வளங்களை பெற்றுச் செல்ல பூமலூர் திருத்தலம் வாருங்கள்..!