293 புனித அந்தோணியார் ஆலயம், மருதங்கோடு


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : மருதங்கோடு

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : பங்குத்தளம்
கிளை : தூய அமல அன்னை ஆலயம், அமலாபுரம்

பங்குத்தந்தை : அருட்தந்தை ஸ்டீபன் ராஜ் SDF

குடும்பங்கள் : 325
அன்பியங்கள் : 10

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு

நாள்தோறும் திருப்பலி : காலை 06.30 மணிக்கு

செவ்வாய் : மாலை 05.30 மணிக்கு நவநாள் திருப்பலி

திருவிழா : மே மாதம் இறுதியில் ஐந்து நாட்கள்.

வழித்தடம் :

மார்த்தாண்டம் - குழித்துறை - கழுவன்திட்டையிலிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் சுமார் மூன்று கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

பேருந்துகள் : மார்த்தாண்டத்திலிருந்து 85 A, VBJ mini bus. இறங்குமிடம் மருதங்கோடு ஜங்சன்.

வரலாறு :

குமரி மாவட்டத்தில் விளவங்கோடு தாலுகாவில் மருதங்கோடு என்ற இயற்கை எழில் சூழ்ந்த ஊரில் அமைந்துள்ளது புனித அந்தோணியார் ஆலயம்.

இவ்வாலய வளாகம் 1898 -ல் கவின்மிகு காட்டுப்பகுதியாக நாயர் சமுதாய மக்களிடம் இருந்தது. இச்சமயத்தில் ஏசுவடிவம் என்ற சந்நியாசி ஒருவரின் வருகையால் இப்பகுதியில் நம்பிக்கை ஒளி ஏற்றப்பட்டது.

மண்டபப்பகுதியில் சந்நியாசியவர்கள் கற்சிலுவை நாட்டி ஜெபித்து வந்தார்.

இச்சூழ்நிலையில் பூதப்பிலாவிளையைச் சேர்ந்த ஞானப்பூ என்பவர் சந்நியாசிக்கு உதவி புரிந்து வந்தார். இப்பகுதியில் பிற சமயத்தை சார்ந்த மக்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர். சந்நியாசி அவர்களின் ஜெப உதவியால் பல்வேறு அற்புதங்களும், அதிசயங்களும் இப்பகுதி நாயர் சமுதாய மக்களுக்கு நிகழ்ந்தன.

ஆகவே கழுத்தறக்கல் நாயர்கள் கோயில் வகைக்காக சந்நியாசிக்கு 64 சென்ட் நிலத்தை தானமாக கொடுத்தனர்.

சந்நியாசி தினமும் மூன்று வீடுகளில் தர்மம் (யாசகம்) எடுத்து, ஊராளிவிளை என்ற பகுதியில் பனை ஓலையால் வேயப்பட்ட ஓலைக்குடிசையில் வாழ்ந்து வந்தார். சந்நியாசிக்கு களியக்காவிளை திருத்துவபுரம் ஆலய பங்குத்தந்தையோடு தொடர்பு இருந்தது. ஆகவே சந்நியாசியின் உதவி, மக்களின் முயற்சியால் ஓலையால் ஆன குருசடியும் சாவடியும் கட்டப்பட்டன.

அருட்பணி இன்னோசென்ட் அவர்களின் முயற்சியால் அவ்வப்போது திருப்பலியும், திருவிழாவும் நடைபெற்று வந்தன.

இந்த காலகட்டத்தில் அற்புதங்களும், அதிசயங்களும் நடைபெற்று வந்தன. ஆகவே மக்களின் விசுவாசமும் அதிகமாகி கொல்லங்கோடு, களியக்காவிளை, இரையுமன்துறை, மார்த்தாண்டம் மற்றும் கேரளா பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து தங்கி பல்வேறு அற்புதங்களை பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து திருத்துவபுரம் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி வர்க்கீஸ் அவர்கள், இக்குருசடியை ஓட்டுக்கூரை வேய்ந்து பெரிதுபடுத்தி திருப்பலியும் நிறைவேற்றி வந்தார்கள். இந்நிலையில் சந்நியாசி மரணமடைந்தார்.

இச் சூழ்நிலையில் பூட்டேற்றி -யிலிருந்து ஒரு ஞானியார் வருகை தந்து, காலை மாலையில் ஜெபிப்பதற்காக ஒருவரை நியமிக்க விரும்பி திரு தாவீது அவர்களின் கால்ஊனமுற்ற அண்ணன் அவர்களை நியமித்தார்.

திரு தாவீதின் வீடு மஞ்சக்குளம் அருகில் இருந்தது. திரு தாவீது அவர்கள் தான் தினமும் அங்கிருந்து தனது அண்ணனை தோளில் சுமந்து வருவார். இவர்கள் நெடுந்தூரத்திலிருந்து வருவதை கருத்தில் கொண்டு ஞானியார் அவர்கள் குருசடியின் அருகில் 10 சென்ட் நிலத்தை இவர்கள் தங்கியிருப்பதற்காக கொடுத்தார்.

தனது அண்ணன் இறந்த பிறகு திரு தாவீது உபதேசியார் ஆனார். இந்நிலையில் குருசடி கட்டியது போக எஞ்சியிருந்த நிலத்தை ஞானியார் கல்லறைத் தோட்டத்திற்கென ஒதுக்கி மந்திரித்து விட்டு தனது சொந்த ஊரான பூட்டேற்றிக்கு சென்றார். எனவே குருசடியின் அனைத்து செயல்களையும் திரு தாவீது அவர்களே செய்து வந்தார்.

இந்த காலகட்டத்தில் கோட்டார் மறை மாவட்டம் உதயமானது. அப்போது ஆயரின் செயலாளராக பணியாற்றிய அருட்தந்தை வல்லேரி பெர்னாண்டஸ் அவர்களால் மருதங்கோடு ஆலய வகைக்காக நிலம் வாங்க பணம் கொடுக்கப்பட்டது.

அருட்பணி வர்க்கீஸ் அவர்களைத் தொடர்ந்து திருத்துவபுரம் பங்குத்தந்தையான அருட்பணி மரிய எப்றேம் கோமஸ் அவர்கள் புனித அந்தோணியார் ஆலயத்தை திருத்துவபுரம் பங்கின் கிளைப்பங்காக்கி ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றி வந்தார்கள்.

மேலும் மறைக்கல்வி மரியாயின் சேனை ஆகியவற்றை உருவாக்கி மக்களின் பங்கேற்பை அதிகரித்தார்.

தற்போதைய ஆலயம் அருட்பணி ஸ்தனிஸ்லாஸ் அவர்களின் பணிக்காலத்தில் 1976 -ஆம் ஆண்டில் மேதகு ஆயர் ஆரோக்கிய சாமி ஆண்டகையால் அடிக்கல் நாட்டப்பட்டு, 29-09-1981 அன்று அருட்பணி ஏசுதாசன் தாமஸ் அவர்களின் பணிக்காலத்தில் மேதகு ஆயர் ஆரோக்கிய சாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

இப்பங்கிற்கு பணியாற்றுவதற்காக வந்த திருச்சிலுவை அருட்சகோதரிகளின் வருகை மக்களின் விசுவாச வாழ்விற்கு உரமூட்டியது.

அருட்பணி யூஜின் குழந்தை அவர்கள் இப்பங்கின் தொடர் வளர்ச்சிக்கு வழிகாட்டி, பங்கின் தன்னிறைவுக்கான முயற்சியில் ஈடுபட்டார்.

பின்னர் பொறுப்பேற்ற அருட்பணி இராபர்ட் அவர்கள் 1994 -ல் இப்பங்கை தனிப்பங்காக்க முயற்சித்தார்.

அவரது தொடர் முயற்சியால் 05-11-1997 ல் அருட்தந்தை இராபர்ட், அருட்பணி செபாஸ்டின் ஆகியோரின் பணிக்காலத்தில் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு குழித்துறை மற்றும் அமலாபுரம் ஆகியவற்றை கிளைப்பங்காக கொண்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது.

பங்கின் வளர்ச்சி :

அருட்பணி ஞானமுத்து அவர்கள் இப்பங்கின் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு கலையரங்கம் கட்டி முடித்த பின்னர், மண்டப வேலையையும் தொடங்கச் செய்தார்.

அருட்பணி லாரன்ஸ் பணிக்காலத்தில் ஓட்டுக்கூரை கான்கிரீட் கூரையாக மாற்றப்பட்டது.

அருட்பணி மரிய செல்வராஜ் காலத்தில் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு, தரையில் மார்பிள் பதிக்கப்பட்டது. தொடர்ந்து பழைய குருசடியை மாற்றி அதே இடத்தில் புதிய குருசடி கட்டப்பட்டது..

அருட்தந்தை லியோன் ததையு ஜோஸ் பணிக்காலத்தில் ஆலய நுழைவு வாயிலில் அலங்கார வளைவு கட்ட ஆரம்பித்து, அருட்தந்தை ஜோசப் காலின்ஸ் பணிக்காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. ஆழ்துளைகிணறு, ஜெனரேட்டர் வசதி, சுற்றுச்சுவர் என பல்வேறு பணிகள் செய்யப்பட்டது.

அருட்பணி ஜெரால்டு ஜஸ்டின் அவர்கள் பணிக்காலத்தில் மண்டபம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

முக்கிய இடங்களில் அலங்கார வளைவுகள் வளைவுகள் வைக்கப்பட்டது.

இதன் கிளையாக இருந்த குழித்துறை தனிப்பங்காக மாறியது.

மண்ணின் இறை அழைத்தல்கள் :

1. Fr K. Arulappa
2. Fr C. Jeyant
3. Fr R. Arul

அருட்சகோதரிகள் :

1. Sis M. Licy
2. Sis R. Rexalina
3. Sis Rejina (Superior General St. Ann's, Trichy)