808 திருக்குடும்ப ஆலயம் -அற்புத குழந்தை இயேசு திருத்தலம், கால்டுவெல் காலனி

            

திருக்குடும்ப ஆலயம் - அற்புத குழந்தை இயேசு திருத்தலம்

முகவரி: 4/155B, கால்டுவெல் காலனி 3ஆம் தெரு, தூத்துக்குடி - 628008

தொடர்புக்கு 93859 71664, 

Email: infantjesuscwc@gmail.com

பங்கின் நிர்வாகம்: 

மறைமாவட்ட ஆயர்: மேதகு ஆயர் ஸ்டீபன் அவர்கள் 

மறைமாவட்டம்:  தூத்துக்குடி

மறைவட்டம்:  தூத்துக்குடி

மாவட்டம்: தூத்துக்குடி

பங்குப்பணியாளர்: அருட்பணி. ரா.பி. பிரதீப் 

தொடர்புக்கு: 94867 16842, 

Email: rabipratheep@gmail.com

பங்கின் பொது தகவல்கள்: 

நிலை: பங்குத்தளம்

குடும்பங்கள்:  340

அன்பியங்கள்:  10

கிளைப்பங்கு:  1

பங்கின் சிற்றாலயம் மற்றும் கெபிகள்:

1.  தூய பரலோக மாதா ஆலயம், இராஜபாண்டிநகர், தூத்துக்குடி 

2.  புனித மிக்கேல் அதிதூதர் சிற்றாலயம், சத்யா நகர், தூத்துக்குடி

3.  புனித அந்தோனியார் கெபி, வள்ளிநாயகபுரம், தூத்துக்குடி 

4.  புனித அந்தோனியார் கெபி, எம்ஜியார் நகர், தூத்துக்குடி 

பங்கின் திருவழிபாட்டு நேரங்கள்: 

ஞாயிறு திருப்பலி: காலை 07:00 மணி

திங்கள், புதன், 

வெள்ளி திருப்பலி: காலை 06:00 மணி

செவ்வாய், சனி 

திருப்பலி: மாலை 06:00 மணி

குழந்தை இயேசு 

நவநாள் திருப்பலி: வியாழன் காலை 11:30 மணி, மாலை 06:00 மணி 

பங்கின் திருவிழா: 

தை மாதம் முதல் தேதி (ஜனவரி மாதம் 14 (அ) 15)

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்சகோதரி. எலிசபெத் மேரி, FBS

2. அருட்சகோதரி. ஜெயசித்ரா, FBS

ஆ. பங்கின் வரலாறு:

தொடக்க காலம்: 

1986ஆம் ஆண்டு திருக்குடும்ப ஆலயமும் குழந்தை இயேசு திருத்தலமும் வருவதற்கு முன்னர், இந்த இடம் வேலிக்கருவை மரங்களும், புதர்களும் மண்டிக் கிடந்தது. அப்பொழுது தாசில்தாராக இருந்த திரு. ஞானதுரை அவர்களின் பெரும் முயற்சியால், தற்போது ஆலயமும் பொதுநிலையினர் பணியகமும் அமைந்துள்ள இடம் தூத்துக்குடி மறைமாவட்டத்திற்காக வாங்கப்பட்டது. ஆலயத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தற்போதைய ஆலயம் இருக்கும் இடத்தில் உள்ள 10 சென்ட் நிலத்தை இலவசமாகக் கொடுத்தனர். இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் பேரருள்தந்தை லாம்பர்ட் மிராண்டா அடிகளார் ஆவார்.

1986 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மறைமாவட்ட பொருளாளராக இருந்த அருள்பணி. பவுல் ராபின்ஸ்டன் அடிகளார், கீழவைப்பாறு விண்ணரசி மாதா ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றுவதற்காக சென்ற இடத்தில், ஆலய சக்ரீஸ்டில் பையில் கட்டி வைக்கப்பட்டிருந்த உடைந்த சுரூபங்களைக் கண்டார். அதில் ஒரு அழகிய தெய்வீகச் சுடர் வீசும் குழந்தை இயேசுவின் கண்கள், இதயத்தை ஊடுருவும் வகையிலும், முகமானது அன்பும், அருளும், கருணையும் நிறைந்து வசீகரம் மிக்கதாகவும் இருந்தது. ஆகவே உடைந்த இந்த குழந்தை இயேசு சுரூபத்தை பெற்றுக் கொண்டு அதனை முழுமையாக வடிவமைத்து, அர்ச்சிப்பு செய்து கால்டுவெல் காலனியில் அப்போது இருந்த சிற்றாலயத்தில் வைத்து வழிபடச் செய்தார்.

1986 முதல் 1989 வரை: 

கால்டுவெல் காலனி சிற்றாலயமானது, தூத்துக்குடி புனித சார்லஸ் ஆலய பங்குடன் இணைந்திருந்தது. 1989ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, புனித சார்லஸ் பங்கில் இருந்து பிரிக்கப்பட்டு, கால்டுவெல் காலனியில் செயல்பட்டுவந்த பொதுநிலையினர் பணிநிலையத்தின் இயக்குநர் பேரருள்தந்தை லாம்பர்ட் மிராண்டா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, புதுப் பங்காக உருவெடுத்தது. 

இந்த காலகட்டத்தில் பேரருள்தந்தை லாம்பர்ட் மிராண்டா அடிகளார், இந்தப் பகுதியில் உள்ள மக்களை சந்தித்து அவர்களிடம் கிறிஸ்துவின் சத்திய நெறிகளை விதைத்து, பல மக்களுக்கு திருமுழுக்கு கொடுத்து, ஞாயிறு திருப்பலிக்கு வரவழைத்தார். பொது நிலையினர் பணிநிலையத்தில் திட்டமிடுவதை பணித்தளத்தில் நிறைவேற்றிட இப்பங்கு மாதிரிப் பங்காக (Model Parish) தெரிவு செய்யப்பட்டது. பொதுநிலையினர் பணிநிலையத்தின் இயக்குநர் பேரருள்தந்தை லாம்பர்ட் மிராண்டா அவர்களின் பெரும் முயற்சியால், இத்தாலி நாட்டில் உள்ள கியேத்தி மறைமாவட்டத்தைச் சேர்ந்த Msgr. டொமினிக்கோ மெடோனா என்னும் உபகாரியின் விருப்பத்திற்கேற்ப, கால்டுவெல் காலனியில் ஒரு பெரிய ஆலயம் பரிசுத்த திருக்குடும்பத்திற்கென அர்ப்பணிக்க அடிக்கல் நாட்டப்பட்டது. 

1989 முதல் 1993 வரை:

1990ஆம் ஆண்டு அருள்பணி. ஆர்தர் ஜேம்ஸ் காலத்தில் திருக்குடும்ப நடுநிலைப் பள்ளி கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. இறைப்பணியும், கல்விப் பணியும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்து வரும் அடைக்கல அன்னை சபை சகோதரிகள் பள்ளிக்கூடத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். 

அருள்பணி. ஆர்தர் ஜேம்ஸ் அவர்களின் மேற்பார்வையில் திருக்குடும்ப ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, 03.12.1991 அன்று அர்ச்சிக்கப்பட்டது. இந்த திருக்குடும்ப ஆலயத்தில் குழந்தை இயேசுவின் பக்தி முயற்சியும் தொடர்ந்து நடைபெற ஆரம்பித்தது. இப்போது இந்த ஆலயம் குழந்தை இயேசு திருத்தலம் என்று பிரபலமாகி விட்டது.

1993 முதல் 1999 வரை:  

கால்டுவெல் காலனி ஆலயமானது மேலும் சிறப்பாக வளர்ச்சி பெறும் நோக்கத்தில், பொதுநிலையினர் பணிநிலையத்தில் இருந்து பிரித்து 14.11.1993 அன்று தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. அருள்மணி அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார். இவரது பணிக்காலத்தில் பங்குப் பணியாளர் தங்கும் விடுதி (Reach Out) கட்டப்பட்டது. பள்ளிக்கூடத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் நோக்கில் நான்கு வகுப்பறைகள் மற்றும் திறந்தவெளி கலையரங்கம் கட்டப்பட்டது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர ஆணை பெற்றுக்கொடுத்து, அவர்கள் அரசு வழங்கும் ஊதியம் பெறவும் அருட்பணி. அருள்மணி அவர்கள் வழிவகை செய்தார். புனித வின்சென்ட் தே பவுல் சபை துவக்கப்பட்டது. ஆலயத்தைச் சுற்றிலும் பல்வேறு மரங்கள் நடப்பட்டன.

1999 முதல் 2003 வரை :

அருட்பணி. ஜேம்ஸ் பீட்டர் அவர்கள் பணிபுரிந்த இக்காலகட்டத்தில் அழகிய நற்செய்திக் கோபுரம் கட்டப்பட்டு, அதன் உச்சியில் ஆலயமணி அமைக்கப்பட்டது. அழகிய மறைநூல் மாதா கெபி, விசுவாச மண்டபம் ஆகியன கட்டப்பட்டன. தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையின் வலது ஓரத்தில், வாகன ஓட்டிகளுக்கு பாதுகாவலராக தூய மிக்கேல் அதிதூதர் கெபி கட்டப்பட்ட்டது. பங்கின் பேருபகாரிகளின் உதவியுடன் ஆலயத்தில் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை அமைக்கப்பட்டது. 

இராஜபாண்டி நகரில் உள்ள கத்தோலிக்க மக்களை ஒருங்கிணைத்து, ஒரு துணைப் பங்கை உருவாக்கினார். மேலும் அங்கு பரலோக மாதாவிற்கு ஒரு சிற்றாலயம் அமைத்து ஞாயிறு தோறும் மாலையில் திருப்பலி நிறைவேற்றினார். திருப்பலிக்கு வரும் இறைமக்கள் அனைவரும் கட்டாயம் விவிலியம் கொண்டு வரவேண்டும் என்று கூறி, அதனை வழக்கப்படுத்தினார். 

2003 முதல் 2008 வரை:  

அருட்பணி. M. இருதயராஜ் அடிகளார் பணிக்காலத்தில் அன்பியங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. ஆலய தூயகம் (பீடம்) சீரமைக்கப்பட்டது.

2008 முதல் 2013 வரை: 

அருட்பணி. ஸ்டேன் K. அடிகளார் பணிக்காலத்தில் பீடத்தில் அழகிய நற்கருணைப் பேழை அமைக்கப்பட்டது. பங்குப் பேரவை அமைக்கப்பட்டது. பீடத்தை மார்பிள் தளமாக மாற்றி, முன்புறம் கிராதி அமைக்கப்பட்டது.

2013 முதல் 2017 வரை 

அருட்பணி. செட்ரிக் பீரிஸ் அவர்கள் பணிக்காலத்தில் குழந்தை இயேசு இளைஞர் இயக்கம் தொடங்கப்பட்டது. கணேசன் காலனியில் பங்கு மக்களின் உதவியுடன் புனித அந்தோனியார் கெபி கட்டப்பட்டது. ஆலயத்தின் முன்புறம் கொடிமரம் அமைக்கப்பட்டது. ஆலயத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டு, ஆலயத்தை முற்றிலுமாக புதுப்பித்து, மார்பிள் தளம் அமைக்கப்பட்டது. கலைநயமிக்க நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. வெள்ளி விழா மலர் வெளியிடப்பட்டது. 15.01.2016 அன்று பங்கின் வெள்ளி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

2017 முதல் 2022 வரை: 

அருள்பணி. வில்லியம் சந்தானம் அவர்கள் பணிக்காலத்தில் குழந்தை இயேசுவை அதிகம் நேசித்த புனித அந்தோனியாருக்கு, அவருக்கு அருகிலேயே சுருபம் அமைத்து பங்கு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றி, மாதத்தின் முதல் செவ்வாய் தோறும் திருப்பலி நிறைவேற்ற ஏற்பாடு செய்தார்கள். ஆலயத்தைச் சுற்றிலும் முன்பகுதியிலும் டைல்ஸ் பதித்து ஆலயத்தை அழகுபடுத்தினார்கள். ஆலயத்தைச் சுற்றிலும் கண்காணிப்புக் கேமராக்களை ஏற்பாடு செய்து ஆலய பாதுகாப்பை உறுதி செய்தார்கள். ஆலய முன்பகுதியிலும் மறைநூல் மாதா கெபி முன்பும் மேற்கூரை அமைக்க ஏற்பாடு செய்தார்கள். 

2022 ஜூன் முதல் அருட்பணி. ரா.பி. பிரதீப் அவர்கள் பொறுப்பேற்று சிறப்புற வழிநடத்தி வருகின்றார்.

இ. பங்கின் தனிச் சிறப்புகள் 

1. நற்செய்தி கோபுரம்:

மறைநூலுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 72 உயர கோபுரம் எழுப்பப்பட்டது.  காரணம் 12 திருத்தூதர்கள் மட்டுமல்ல கூடுதலாக 72 சீடர்களையும் இயேசு தம் பணிக்காக அனுப்பினார். வழக்கமாக ஆலய கோபுரங்களில் புனிதர்களின் சுரூபம் தான் வைக்கப்படும். ஆனால் இங்கு நம் இயேசுவின் முதல் வருகை முதல், இரண்டாம் வருகை வரையுள்ள நிகழ்வுகளை வெளிப்படுத்தும் விதமாக சுரூபங்கள் அமைக்கப் பட்டுள்ளது. 

கோபுரத்தின் ஒவ்வொரு நிலைகளிலும் உள்ள சுரூபங்கள்:

1. "உனக்குள் பிறக்கிறேன்" என்ற வாசகத்தின் கீழ் குழந்தை இயேசு சுரூபம்.

2. "ஞானத்தால் நீராட்டுவேன்" என்ற வாசகத்தின் கீழ் திருமுழுக்கு யோவானிடம் நம் இயேசு திருமுழுக்கு பெறுவது போன்ற சுரூபம்.

3. "அற்புதம் செய்வேன்" என்ற வாசகத்தின் கீழ் பார்வையற்றவரை நம் இயேசு சுகமாக்குவது போன்ற சுரூபங்கள்.

4. "உன் பாவ சாபம் நீக்குவேன்" என்ற வாசகத்தின் கீழ் கல்வாரி இயேசு சுரூபம்.

5. "உன்னை உயரிர்ப்பிப்பேன்" என்ற வாசகத்தின் கீழ் உயிர்த்தெழுதல் இயேசு சுரூபம்.

6. "தூய ஆவி பொழிவேன்" என்ற வாசகத்தின் கீழ் ஏழுகொடைகளைப் பொழிபவராக தூய ஆவி சுரூபம்.

7. "மீண்டும் வருவேன்" என்ற வாசகத்தின் மேல் சிலுவையின் அருகில், இரண்டு வானதூதர்கள் எக்காளம் ஊதுவது போன்ற அமைப்பு. ஆகவே தான் இது "நற்செய்தி கோபுரம்" என்று பெயர் பெற்றது.

2. மறைநூல் மாதா கெபி:

மாதா யூதா இனத்தைச் சேர்ந்த, இறைவார்த்தையை உள்ளத்தில் இருத்தி தியானிப்பவராக மறைநூல் வெளிப்படுத்துகிறது. மறைநூலையும், மாதாவையும் பிரிக்கவே முடியாது. கடவுளின் திருவார்த்தைக்கு முற்றிலும் அர்ப்பணித்தவர். மறைநூலை தம் கையில் ஏந்தி, அதே மறைநூல் வாழ்வுக்கு நம்மையும் அழைக்கும் கனிவுப் பார்வையில், "மறைநூல் மாதா சுரூபம்" நம் திருச்சபை வரலாற்றில் முதன் முதலாக உருவாக்கப்பட்டு, இந்த கெபியில் வைக்கப்பட்டு மறைநூல் மாதா கெபி எனப் பெயரிடப்பட்டு, தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு தாமஸ் பர்னாண்டோ அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

ஈ. பங்கின் பங்கேற்பு அமைப்புகள்

1. பங்கு மேய்ப்பு பணிக்குழு

2. விவிலிய மறைக்கல்வி  

3. பாடகர் குழு

4. திருவழிபாட்டுக் குழு

5. பீடப்பணியாளர் மன்றம்

6. மறைக்கல்வி மன்றம் 

7. புனித வின்சென்ட் தே பவுல் சபை

8. திருக்குடும்ப சபை

9. மரியாயின் சேனை

10. அமலோற்பவ மாதா சபை

11. குழந்தை இயேசு இளைஞர் இயக்கம்

12. குழந்தை இயேசு செபக்குழு

பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட, அற்புதங்கள் நிறைந்த கால்டுவெல் காலனி அற்புத குழந்தை இயேசு திருத்தலத்திற்கு வாருங்கள்.. இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...

வழித்தடம்: 

தூத்துக்குடி - திருச்செந்தூர் பிரதான சாலையில், அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியின் எதிர்புற சாலையில், சுமார் 2 கி.மீ. தொலைவில்  கால்டுவெல் காலனி 3வது தெருவில் அமைந்துள்ளது. 

Location map: Infant Jesus Church

https://maps.app.goo.gl/JRLdsiTxGSt5V5UL9

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ரா.பி. பிரதீப் அவர்கள்