769 அற்புதக் குழந்தை இயேசு ஆலயம், உலகநாதபுரம்

         

அற்புதக் குழந்தை இயேசு ஆலயம்

இடம்: உலகநாதபுரம், வேந்தோணி அஞ்சல், பரமக்குடி

மாவட்டம்: இராமநாதபுரம்

மறைமாவட்டம்: சிவகங்கை

மறைவட்டம்: பரமக்குடி

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித பதுவை அந்தோனியார் ஆலயம், தினைக்குளம்

2. புனித பதுவை அந்தோனியார் ஆலயம், சுப்பராயபுரம்

3. புனித சகாய மாதா ஆலயம், வெங்கிட்டன்குறிச்சி

4. புனித அன்னாள் ஆலயம், வணங்கானேந்தல்

5. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், பகைவென்றி

6. புனித அருளானந்தர் ஆலயம், அருள்நகர்

7. புனித அன்னை தெரசா, அரியனேந்தல் (இங்கு ஆலயம் இல்லை)

குடும்பங்கள்: 432 (கிளைப்பங்குகள் சேர்த்து)

அன்பியங்கள்: 19 (கிளைப்பங்குகள் சேர்த்து)

பங்குத்தந்தை: அருட்பணி. A. சிங்கராயர்

Contact no: +91 94430 95222

அருட்சகோதரர். அடைக்கலம், IVD

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி 

வாரநாட்களில் திருப்பலி: கிளைப் பங்குகளில் திருப்பலி

வியாழன் மாலை 06:00 மணி ஆலயத்தை சுற்றி தேர்பவனி, அற்புதக் குழந்தை இயேசுவின் நவநாள், திருப்பலி 

முதல் வெள்ளி திருப்பலி மாலை 06:00 மணி

திருவிழா: பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு வருகிற சனி, ஞாயிறு

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருள்பணியாளர்கள் 

1. அருள்பணி. இராயர்

2. அருள்பணி. சூசை மாணிக்கம் 

3. அருள்பணி. அருள் அந்தோனி

4. அருள்பணி. அருள் சாமி 

5. அருள்பணி. குழந்தைச் சாமி 

6. அருள்பணி. சேவியர், SJ

7. அருள்பணி. இக்னேசியஸ் தாமஸ்

இவர்களுடன் 6 அருட்சகோதரர்கள் மற்றும் 16 அருட்சகோதரிகளை மண்ணின் இறையழைத்தல்களாகக் கொண்டுள்ளது உலகநாதபுரம் இறைச் சமூகம்.

வழித்தடம்: பரமக்குடி -இராமேஸ்வரம் சாலையில், பரமக்குடியில் இருந்து 2கி.மீ தொலைவில் உலகநாதபுரம் அமைந்துள்ளது.

Location map:

https://g.co/kgs/yARSSo

உலகநாதபுரம் அற்புதக் குழந்தை இயேசு பங்கு உதயமான வரலாறு:

வைகை ஆறு வங்கக்கடலோடு சங்கமிக்கும் பகுதி முகவை என்று அழைக்கப்பட்ட, இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பழம் பெரும் நகரம் பரமக்குடி நகரமாகும்.  முற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட இந்நகர், பிற்காலத்தில் இராமநாதபுரம் ராஜா சேதுபதி அவரது வாரிசுகளாலும் ஆளுகை செய்யப்பட்டது.  

பயிர்த்தொழிலும் நெசவுத் தொழிலும் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கியது. பரமக்குடியின் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் சிவப்பு  குடைமிளகாயும், பருத்தியும் இந்தியா  முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல நூற்றாண்டு காலமாக வாழும் சௌராஸ்டிரா இன மக்கள் உற்பத்தி செய்யும் பட்டு மற்றும் கைத்தறி சேலைகள் இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும்  ஏற்றுமதி  செய்யப்படுகிறது.

இயேசு சபையின் மறைபரப்புப் பணி மண்டலம் உருவாகுவதற்கு முன்பே பரமக்குடி பகுதிகளில் கத்தோலிக்க  கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததாக, 1914 ஆம் ஆண்டு சேசு சபை அருள்பணியாளர்  லெயோன் பெஸ் அவர்கள் பிரெஞ்சு மொழியில் தாம் எழுதிய "மதுரை மிஷன் வரலாறு" என்ற வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார். புனித சவேரியார் இந்திய வருகைக்குப் பின்பு, முகவை (பரமக்குடி) மண்ணிற்கு வந்து பணியாற்றி, தன்னையே இரத்தப் பலியாக ஒப்புக்கொடுத்த போர்ச்சுக்கல் நாட்டு இயேசு சபை புனிதர் அருளானந்தர் (ஜான் டி பிரிட்டோ) பணியாற்றிய காலத்தில்,  போர்த்துக்கீசிய பணியாளர்கள் இப்பகுதியில் பணியாற்றி இருக்கலாம் என்ற உண்மை பலரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அருட்தந்தை லப்போர்து. சே.ச அவர்கள் பரமக்குடியிலும், சுற்றியுள்ள சில கிராமங்களிலும் பல நிலங்களை வாங்கியிருந்தார் எனவும், அந்நிலங்களின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டதால், தேநொபிலி மிஷன் காலங்களில் அருட்பணி. அந்தோனி-தே-பிரேன்சா  சே.ச அவர்கள் அனுப்பப்பட்டு, நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டன என்றும் வரலாறு  கூறுகிறது.

பாட்டி பங்கு- திருவரங்கம்:

மதுரை மண்டல சேசுசபை குருக்கள்    இராமநாதபுரத்தில் தங்கி  திருவரங்கத்தை மையப்படுத்தி மறைப்பணித் தளத்தை உருவாக்கினார்கள். 1888 ஆம் ஆண்டு திருச்சி மறைமாவட்டத்தின் புதிய குழந்தையாக திருவரங்கம் பங்கு  உருவாக்கப்பட்டது. 

திருச்சபையின் வளர்ச்சியினால் 1938 ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து பிரிந்து மதுரை மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் முதல் ஆயராக  மேதகு. பீட்டர் லெயோனார்டு சிறப்பாக பணியாற்றினார்.                                 

புனித அருளானந்தரால் இயேசுவை ஏற்றுக் கொண்ட  கத்தோலிக்க குடும்பங்களும், வடக்கு பர்மாவிலிருந்து (ரங்கூன்) வந்து குடியேறிய கத்தோலிக்கர்களும் பரமக்குடி பகுதியில் வாழ்ந்து வந்தனர். திருவரங்கம் பங்கின் கிளைப்பங்காக பரமக்குடி செயல்பட்டது. பரமக்குடி மற்றும்  கிளைக் கிராமங்களில் கத்தோலிக்க மக்களின் எண்ணிக்கை உயர்ந்ததால், பரமக்குடியைத் தனிப் பங்காக  உருவாக்க வேண்டிய தேவை  உணரப்பட்டது. 

தாய்ப் பங்கு- பரமக்குடி:

1963 ஆம் ஆண்டு திருவரங்கம் பங்கிலிருந்து பிரிந்து 24 கிளைக் கிராமங்களை உள்ளடக்கிய மதுரை உயர்மறைமாவட்டத்தின் புதிய பங்குத் தளமாக பரமக்குடி உருவெடுத்தது. அதன் முதல் பங்குப் பணியாளராக அருட்தந்தை தம்புராஜ் அவர்கள்   நியமிக்கப்பட்டார்கள்.

சிவகங்கை மறைமாவட்டம்  உதயம்:

மதுரை உயர் மறைமாவட்டத்தின் இரண்டாவது பேராயர் ஜஸ்டின் திரவியம் அவர்களின் பணிக்காலத்தில், மதுரை உயர்மறைமாவட்டத்தின் பரந்து விரிந்த எல்லைகளைக் கருத்தில் கொண்டு இராமநாதபுரம் மாவட்டத்தை ஒரு புதிய மறைமாவட்டமாக உருவாக்குவதற்கு உள்ள வாய்ப்புக்கூறுகள் ஆராயப்பட்டன. அதனடிப்படையில் பரமக்குடி இராமநாதபுரத்தின் மையமாகவும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து எளிதில் செல்லக் கூடிய நகரமாகவும் திகழ்வதால், பரமக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மறைமாவட்டத்தை உருவாக்கலாம் என்ற கருத்து மேலோங்கி நின்றது. அதன் முன் தயாரிப்பாக மதுரை பல்நோக்கு சமூக சேவை சங்கத்தின் கிளை அமைப்பு பரமக்குடியில் உருவாக்கப்பட்டது. புதிய ஆயர் இல்லம் மற்றும் பேராலயத்திற்குத் தேவையான நிலம் பரமக்குடி பங்குப்பணியாளரும், அலங்கார அன்னை கோவிலை கட்டி எழுப்பிய அருள்பணி. மைக்கேல் அவர்களின் முயற்சியால் இன்று உலகநாதபுரம் பங்கு இருக்கும் இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. மேலும் புதிய மறைமாவட்டத்தின் உருவாக்கத்திற்காக திரு இருதய அருட்சகோதரர்கள் பரமக்குடி பங்கிற்கு பேராயரால்  வரவழைக்கப்பட்டார்கள்.

இத்தகைய சூழலில் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 1985 மார்ச் 15 அன்று சிவகங்கை பிரிந்து புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. சிவகங்கை புதிய மாவட்டத்தின் தலைமையகமாக மாறியது. மறை  மாவட்டத்தின் தலைமையகம் மாவட்ட தலைமையகத்தில் இருப்பது நல்லது என்ற கருத்து நிலவியதால்  பரமக்குடியை  மறைமாவட்டத்  தலைமையகமாக மாற்றும் திட்டம் கைவிடப்பட்டது. 

எனவே புதிய மறை மாவட்டத்திற்காக வாங்கப்பட்ட  உலகநாதபுரம் இடம் சிவகங்கை பல்நோக்கு சேவை சங்கத்திற்கு வழங்கப்பட்டது. 1989 ஆம்  ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் சிவகங்கை மறை மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, மேதகு எட்வர்ட் பிரான்சிஸ் அவர்கள் முதல் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். 

குழந்தை கருவானது  -உலகநாதபுரம் பங்கு:

 பரமக்குடி பங்கு இறை அன்பில் வளர்ந்து மறை மாவட்டத்தின் எழுச்சிமிகு பங்குகளில்  ஒன்றாகத்  திகழ்கிறது. 2013 ஆம் ஆண்டு பொன் விழா கண்ட இப்பங்கு, கத்தோலிக்க மக்களின் எண்ணிக்கையில் நாளுக்கு நாள் அதிகரித்ததுடன், பங்கு அருள்பணிகளும் விரிவடைந்ததால், பரமக்குடி பங்கைப் பிரித்து, புதிய பங்கு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கி நின்றது. காட்டுபரமக்குடி, மஞ்சள் பட்டிணம், உலகநாதபுரம்  ஆகிய பகுதிகளில் ஏதாவது ஒன்றை மையமாகக் கொண்டு புதிய பங்கு உருவாக்க வாயப்புக் கூறுகள் உள்ளனவா? என்று ஆராயப்பட்டு, இறுதியில் "உலகநாதபுரம்" புதிய பங்கிற்கு ஏற்புடைய மையமாகத் திகழும் என முன்மொழியப்பட்டது. 

சிவகங்கை சமூக சேவை சங்கத்திற்கு சொந்தமான உலகநாதபுரத்தில் உள்ள நிலம் புதிய பங்கு உருவாக வழங்கப்பட்டது. புதிய பங்கு  உருவாக்குவதில் எல்லா விதத்திலும்  உதவிய பரமக்குடி மேனாள் பங்குத்தந்தை அருட்பணி. செபஸ்தியான் அவர்களையும், சிவகங்கை  பல்நோக்கு சமூக சேவை சங்கத்தின் மேனாள் செயலர் அருட்பணி. செபமாலை சுரேஷ் அவர்களையும் நன்றியோடு நினைக்கின்றோம். பங்கு உருவாக அனுமதியும், ஆசியும் வழங்கி பங்குக் கோவிலின் கட்டுமானப் பணிக்கு பங்குப் பணியாளருக்கு தேவையான உதவிகளும், ஆலோசனைகளும் வழங்கிய மேனாள் ஆயர்  சூசைமாணிக்கம் அவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

குழந்தைபிறந்தது பங்கு உதயம்:

திரு அவைச் சட்டம் எண்  515, 516 ன் படி 2016 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் நாள் புனித கார்மேல் அன்னைப் பெருவிழா நாளில் உலகநாதபுரத்தை புதிய பங்காக மேதகு ஆயர் சூசை மாணிக்கம் அவர்கள் அறிவித்து ஆணை பிறப்பித்தார்கள். பரமக்குடி பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதிகளிலிருந்து மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், சுவக்கின் ஆகிய 5 அன்பியங்களும்,   தினைக்குளம், சுப்பராயபுரம் , வெங்கிட்டன் குறிச்சி, வணங்கானேந்தல், பகைவென்றி,   அருள்நகர் மற்றும் அரியனேந்தல் ஆகிய  7 கிராமங்களும் பரமக்குடி பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, உலகநாதபுரம் சிவகங்கை  மறைமாவட்டத்தின் 81-வது பங்காக 2016 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம்  நாளன்று செயல்படும் என்பதை அறிவித்தார்கள்.

குழந்தை இயேசு, புதிய பங்கின் பாதுகாவலர் என்ற முடிவை பரமக்குடி பங்குப் பணியாளர் முன் மொழிந்ததற்கு மறை மாவட்ட நிர்வாகக்குழு ஒப்புதல் வழங்கியது. 2016 ஆம் ஆண்டு மே      மாதம் 5 ஆம் நாள் புதிய பங்கின்     அருட்பணியாளராக அ. சிங்கராயர் அவர்கள் நியமிக்கப்பட்டார். பங்கின் தொடக்கக் கட்டப் பணிகளை பரமக்குடி பங்கு தளத்தில் தங்கியிருந்து முனைப்புடன் மேற்கொண்டார். 2016ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் நாளன்று புதிய பங்கு உதயமான விழாவும், பங்குப் பணியாளர் பொறுப்பேற்பு விழாவும் மேதகு ஆயர். சூசைமாணிக்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தாய்ப்பங்கின் அருள் பணியாளர்களும்,  துறவியர்களும், பொது நிலையினரும்  இந்நிகழ்வு சிறப்பாக   நடைபெற ஒத்துழைப்பு   நல்கினர். 

அமைப்புப் பணி:

உம்மை நானும் மகிமைப் படுத்துவேன் எம்மை நீயும் மேன்மைப்படுத்துவாய் என்பதை அடித்தளமாகக் கொண்டு பங்கு உருவான நாளிலிருந்து புதிய பங்கின் நிர்மானத்திற்கு தேவையானவைகள் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டன. சிவகங்கை பல்நோக்கு சமூக சேவை சங்கத்தின் பயிற்சி நிலையமாகச் செயல்பட்ட கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு விரிவு- படுத்தப்பட்டு பங்கின் தற்காலிகக் கோவிலாகவும், பங்கு அருள் பணியாளர்களின் தங்கும் இடமாகவும் மறைமாவட்ட உதவியால் புனரமைக்கப்பட்டது. இப்பணிகள் நிறைவுற்று 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து  அருள் பணியாளர்  வளாகத்திலேயே தங்கி   பணியாற்றுகிறார். 

என் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு கோவில் எழுப்ப எண்ணியுள்ளேன் என்று சாலமோன் அரசர் விரும்பியது போல,  பங்குப்பணியாளர் அ. சிங்கராயர் அவர்களும் குழந்தை இயேசுவுக்கு புதிய கோவிலைக் கட்டி எழுப்புவதே புதிய பங்கின் வளர்ச்சிக்கு முதன்மையும் உயிரோட்டமுமானது என்பதை உணர்ந்து தெளிவான திட்டமிடலுடனும், இறைமக்களின் பங்கேற்புடனும்  இப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு  அதற்குத் தேவையான நிதி ஆதரங்களைப் பெற சிறப்புடன் முயற்சிகளை மேற்கொண்டார். 14.01.2017 சனிக்கிழமை பங்கின் முதலாம்  ஆண்டு பங்குத் திருவிழா அன்று, சிவகங்கை  மறைமாவட்ட ஆயர் மேதகு  சூசைமாணிக்கம் அவர்களால் புதிய பங்குக் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கோவில் கட்டுமான  அனுமதி அரசிடமிருந்து பெறுவதில் பல்வேறு சவால்கள் இருந்ததால், கட்டுமானப்பணியைத் துவக்க ஏறக்குறைய ஓர் ஆண்டு காலதாமதம் ஆனது. 

நம்புங்கள் செபியுங்கள் நல்லது நடக்கும் என்ற இறை வாக்கை ஆதாரமாகக் கொண்டு பங்குத் தந்தையின் சீரிய முயற்சியாலும் கோவில் கட்டுமானத் திருப்பணிக்குழுவினரின் அயராத உழைப்பினாலும், எண்ணற்ற நன்கொடையாளர்களின் தாராள உள்ளத்தினாலும், பெரும் பொருட் செலவில் கலை நயத்துடன் கூடிய எழில் மிகு அற்புதக் குழந்தை இயேசு கோவில் கம்பீரமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. 

நான் ஆண்டவரின் அடிமை உம் சொற்படியே நிகழட்டும் என்று   கூறிய  அன்னை மரியாளைப் போல பங்குப்   பணியாளர் அ. சிங்கராயர் அவர்களும்  தனது ஆற்றல்மிகு தலைமைத்துவத்தாலும், எளிய அருள் வாழ்வு வழிகாட்டுதலாலும், குழந்தை  இயேசுவின் ஆசீர்வாதத்தாலும், இச் சீரிய பணிகளை இரவும், பகலும் செம்மையுற முன்னெடுத்து நிறைவேற்றியதை  நினைத்துப் பார்த்து, உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

24.02.2022 அன்று மேதகு ஆயர் சூசை மாணிக்கம் அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.

அற்புதக் குழந்தை இயேசு கோவிலின்   சிறப்பு இயல்புகள்:

1.  புதிய கோவில் 171அடி நீளமும், 72 அடி அகலமும்  கொண்டது.  

2. முன்புறம் கோதிக் கட்டடக்கலை நயமுள்ள கோபுரமாகவும், பின் புறம் உரோமானியக் கட்டிடக்கலை உள்ள கோபுரமாகவும் நிர்மானிக்கப்பட்டுள்ளது.  

3. கோவில் முழுவதும்  மனதைக் கவரும் வகையில் சிற்ப வேலைப்பாடுகள் தீட்டப்பட்டுள்ளன.

4. பீடம் முழுவதும் புனித பவுல் உட்பட 12 திருத்தூதர்களையும்  பிரதிபலிக்கும் வண்ணம் உயிரோட்டமாக மர வேலைப்பாடுகளினால் வடிவமைக்கப் பட்டுள்ளது.   

5. குழந்தை இயேசு பக்தி உருவான செக் குடியரசு நாட்டின் பிராக் நகரில் இருந்து கொண்டு வரப்பட்ட குழந்தை இயேசு சுரூபம் பீடத்தின் வலது பக்கத்தில் காட்சி தருகின்றது.

6. திரு அவையின் வாழ்வும் பணியும் அருளடையாளங்களிலிருந்து ஊற்றெடுக்கின்றன என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஏழு அருளடையாளங்கள் பீடப்பகுதியில் சிற்பமாக தீட்டப்பட்டுள்ளன

7. திருப்பீடத்தின் மையமாக திருச்சிலுவையும் நற்கருணை பேழையும் இரு பகுதிகளிலும்  அன்னை தெரசா, அருளானந்தர், குழந்தை இயேசு, ஆரோக்கிய அன்னை  திரு உருவங்கள் மாடங்களிலிருந்து  காட்சி தருகின்றன. 

8. கோவிலின் உள் பகுதியில் கீழ் வரிசையில் இயேசுவின் திருப்பாடுகளின் சிலுவைப்பாதையும், மேல் வரிசையில் பங்கில் உள்ள 19 அன்பியப் பாதுகாவளர்களின் படங்களும்  பொருத்தப்பட்டுள்ளன. 

9. கோவிலின் கிழக்குப் பகுதியிலும் மேற்குப் பகுதியிலும்   புனித செபஸ்தியார், புனித அந்தோனியார் திரு உருவங்கள் தாங்கிய கெபிகள் அமைக்கப்பட்டுள்ளன..

10. கோவிலின் நுழைவாயிலின் இரு பக்கங்களிலும் புனித தேவசகாயம், இறை ஊழியர் லெவே ஆகியோரின் உருவப் படங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

11. கோவிலின் வெளிப்புறச்சுவர்களில் தூய ஆவியானவரின் அருள் பொழிவையும் இயேசுவின் திரு இருதயத்தையும் அடையாளப்படுத்தும் சிற்ப வேலைப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

12. கோவில் வளாக நுழை வாயிலில் திருக்குடும்பக் கெபி மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளது. முன் பகுதியில் அழகிய கொடிமரம் 62 அடி உயரத்திற்கு கம்பீரமாக காட்சி தருகிறது.

அருள் நெறிப் பணி:

உலகநாதபுரம் புதிய பங்கு மக்களின் நம்பிக்கை வாழ்வில் எழுச்சியை உருவாக்குகிறது என்பது மிகையாகாது. பங்குப் பணியாளர் கோவில் கட்டியெழுப்பப்படுவது போல பங்கு  மக்களும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று சிறப்புடன் ஆற்றலூட்டி வழி நடத்துகிறார். புதிய பங்கு உருவானபின் பங்குக் கோவிலைச் சுற்றி ஏறத்தாழ 30 க்கும் மேற்பட்டோர் புதிய வீடு கட்டி குடிபுகுந்துள்ளனர். பங்குத் தளத்தில் 6 அன்பியங்களும், கிளைக்கிராமங்களில் 13 அன்பியங்களும் முறைப்படி செயல்படுகின்றன. பங்கு அருள் பணிப் பேரவை திருஅவைச்சட்டம் மற்றும் மறைமாவட்ட  நெறிமுறைகளின் படி உருவாக்கப்பட்டு சிறப்பாகச் செயல்படுகிறது. பங்குப்பணிக் குழுக்களும், தகுந்த பயிற்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

பங்கில் உள்ள துறவற சபை:

திரு இருதய அருட்சகோதரர்கள்

பங்கில் உள்ள கெபி:

திருக்குடும்ப கெபி

பங்கில் உள்ள பள்ளிக்கூடங்கள்:

1. ஆர்.சி தொடக்கப்பள்ளி, தினைக்குளம்

2. ஆர்.சி தொடக்கப்பள்ளி, பகைவென்றி

3. அருள்சான்று சிறப்புப் பள்ளி, உலகநாதபுரம்

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புக்கள்:

1. பங்கு அருள்பணிப் பேரவை

2. மரியாயின் சேனை

3. புனித வின்சென்ட் தே பவுல் சபை

4. குடும்ப நலவாழ்வு பணிக்குழு

5. கிறிஸ்தவர்கள் வாழ்வுப் பணிக்குழு

6. மறைக்கல்வி பணிக்குழு

7. இளையோர் பணிக்குழு

8. பாடகற்குழு

9. பீடப்பூக்கள்

10. நற்செய்திப் பணியாளர் குழு

11. ஆசிரியர்கள் கூட்டமைப்பு

12. முன்னாள் இராணுவத்தினர் அமைப்பு.

அற்புதக் குழந்தை இயேசுவின் ஆசீர் பெற்றுச் செல்ல, உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் உலகநாதபுரம் இறைசமூகத்தினர்....

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:

பங்குப்பணியாளர் அருட்பணி.‌ சிங்கராயர் அவர்கள்.