புனித மத்தியாஸ் ஆலயம்
இடம்: அசோக்நகர், சென்னை -600 083
மாவட்டம்: சென்னை
மறைமாவட்டம்: சென்னை -மயிலை உயர்மறைமாவட்டம்
மறைவட்டம்: கிண்டி
பங்குத்தந்தை: அருட்பணி. ஆ. தைனிஸ், OFM Cap
உதவி பங்குத்தந்தை: அருட்பணி. லியோ அமலநாதன், OFM Cap
குடும்பங்கள்: 1300
அன்பியங்கள்: 33
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி:
காலை 06:00 மணி (தமிழ்)
காலை 07:15 மணி (ஆங்கிலம்)
காலை 08:30 மணி (தமிழ்)
மாலை 05:30 மணி (தமிழ்)
சிறுவர்களுக்கு திருப்பலியுடன் மறைக்கல்வி:
காலை 07:15 மணி (ஆங்கிலம்)
காலை 08:30 மணி (தமிழ்)
வாரநாட்களில் திருப்பலி:
காலை 06:15 மணி (தமிழ்)
மாலை 06:15 மணி (தமிழ்)
சிறப்புத் திருப்பலி, வழிபாடு, பக்தி முயற்சிகள்:
செவ்வாய்தோறும்: காலை 11:00 மணி (தமிழ்) புனித அந்தோனியார் நவநாள்
முதல் செவ்வாய்: மாலை 06:15 மணி (தமிழ்) புனித அந்தோனியார் நவநாள் தேர்பவனி, நலமளிக்கும் விருந்து.
வெள்ளிதோறும்:
மாலை 06:15 மணி திருப்பலியுடன் இறைஇரக்க ஆராதனை மற்றும் நற்கருணை ஆசிர்.
முதல் சனிக்கிழமை: மாலைத் திருப்பலியுடன் அன்னையின் தேர்பவனி.
மூன்றாவது திங்கட்கிழமை: மாலை 06:15 மணி திருப்பலியுடன் புனித மத்தியாஸ் நவநாள் தேர்பவனி.
திருவிழா: மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. நினைவில் வாழும் அருட்பணி. டேவிட், SVD
2. அருட்பணி. யாகு, SJ
3. அருட்பணி. வில்சன், OFM Cap
4. அருட்பணி. அப்சலோம், OFM Cap
5. அருள்பணி. அசோக், S.M.A.
6. அருட்பணி. வில்லியம்ஸ், OFM Cap
7. அருட்சகோதரர். ஜூடு ததேயுஸ், OFM Cap
8. அருட்சகோதரர். நோயல், OFM Cap
9. அருட்சகோதரர். ராபர்ட் முரே, OFM Cap
10. அருட்சகோதரி. கிரேசி,
11. அருட்சகோதரி. ஆரோக்கிய மேரி, தூய காணிக்கை அன்னை சபை
12. அருட்சகோதரி. டயனா, புனித சூசையப்பரின் கன்னியர் சபை
வழித்தடம்: காமராஜர் சாலை, அசோக்நகர், சென்னை-600 083.
Church Location map: St Mathias Church
https://maps.app.goo.gl/SdyFUDFAorHQe3YP9
பங்கின் வரலாறு:
சென்னை - புதுச்சேரியில் கப்புச்சின் (OFM Cap) குருக்களின் மறைப்பணி:
கி.பி 1632-1834 வரையுள்ள 202 ஆண்டுகளில், பிரெஞ்சு கப்புச்சின் துறவிகள் சென்னை மற்றும் புதுச்சேரி மறைப்பணித்தலங்களுக்கு அடித்தளமிட்டு, உயர் மறைமாவட்டங்களாக உயர உழைத்தனர். இவர்கள், புதுச்சேரி -சென்னையில் கிறிஸ்தவத்தை விதைத்து, இம்மாநகரங்களை உருவாக்கியதில் தங்களது மேலான பங்களிப்பை தந்தவர்கள். இம்மாநகரங்களில் இன்று பிரமிக்கத்தக்க வகையில் சிறப்புற்று திகழும் கிறிஸ்தவத்திற்கு அடித்தளமிட்டவர்கள், புதிய கிறிஸ்தவர்களை உருவாக்கியவர்கள். இங்கு முதல் கிறிஸ்தவ ஆலயங்களை எழுப்பியவர்கள் என்ற பெருமை பிரெஞ்சு கப்புச்சின் மறைப்பணியாளர்களையே சாரும்.
மறைப்பணிக்கு சாட்சியாக இன்று புதுச்சேரி - உயர் மறைமாவட்டத்தில் இருக்கும் ஆலயங்கள் - கபுஸ் கோயில் (எ) புனித வானதூதர்களின் அரசி ஆலயம் - புதுச்சேரி, குருசுகுப்பம், மரக்காணம், செய்யூர் மற்றும் கடப்பாக்கம்.
சென்னை -மயிலை உயர் மறைமாவட்டத்தில் கப்புச்சின் மறைப்பணிக்கு சாட்சியாக திகழும் ஆலயங்கள் - புனித மரியன்னை இணைப் பேராலயம் (புனித பதுவை அந்தோனியார் திருத்தலம்) - பாரீஸ் கார்னர், புனித பேதுரு ஆலயம் - இராயபுரம், புனித வியாகுல அன்னை ஆலயம் - இராயபுரம், புனித ஆரோக்கியநாதர் ஆலயம் பழைய வண்ணாரப்பேட்டை, புனித காணிக்கை அன்னை ஆலயம் - இராயப்பேட்டை, புனித பதுவை அந்தோணியார் ஆலயம் - புதுப்பேட்டை, புனித விண்ணரசி ஆலயம் - சிந்தாதிரிப் பேட்டை, புனித அந்திரேயா ஆலயம் - வேப்பேரி, புனித மத்தியாஸ் (சிஎஸ்ஐ) ஆலயம் - வேப்பேரி, புனித பெரிய நாயகி ஆலயம் - பெரியப்பாளையம், புனித பிரான்சிஸ் அசிசி ஆலயம் - வாலாஜாபாத்.
பிரெஞ்சு புரட்சியின் தாக்கத்தால், போதிய மறைப்பணியாளர்கள் இல்லாமல் வேறு சபைக்குருக்களிடம் இந்த மறைப்பணித்தலங்கள் 1834 -இல் ஒப்படைக்கப்பட்டது. 109 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 1943 -இல் மீண்டும் தமிழகத்திற்கு கப்புச்சின் சபையினர் வருகைப் புரிந்தனர்.
சென்னை மறைத்தூது வட்டம் 1642-1834 வரை பிரெஞ்சு கப்புச்சின் துறவிகளால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. பணியாளர்கள் பற்றாக்குறையால் அவர்கள் சென்னையை விட்டு வெளியேறினர். 137 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பழைய பணித்தளத்திற்கு திரும்பிட, அவர்களை அன்றைய சென்னை -மயிலை பேராயார் அருளப்பா அவர்கள், திருச்சி அமல ஆசிரமத்திற்கு சென்று தங்கள் மறைமாவட்டத்திற்கு இறைப்பணியாற்றக் கேட்டுக் கொண்டார்.
முதலில் கப்புச்சின் துறவிகளுக்கு திருவெற்றியூர் மற்றும் அசோக்நகர் ஆகிய இடங்கள் காட்டப்பட்டன. முதலிடத்தில் சொத்து, கட்டிடம் மற்றும் தேவாலயம் இருந்தன. ஆனால், அந்த இடம் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டதால், நகரத்திற்கு அருகில் அசோக்நகரில் தரிசு நிலம் மட்டுமே இருந்தது. பார்வையாளர்களின் தேர்வு அசோக்நகரில் விழுந்தது. பேராயர் அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்து, ஏப்ரல் 1971இல் அதிகாரப்பூர்வமாக கப்புச்சின் துறவிகளை அழைத்தார்.
அசோக்நகர் பகுதியானது கோடம்பாக்கம் மற்றும் சின்னமலை பங்குகளிலிருந்து பிரிக்கப்பட்டு, அசோக்நகர், கலைஞர் கருணாநிதி நகர், வடபழனி, சாலிகிராமம், எம்.ஜி.ஆர்.நகர், ஜாபர்கான்பேட்டை, இராணி அண்ணாநகர், சின்மயாநகர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் சுமார் 150 குடும்பங்களைக் கொண்டதாக இருந்தது. பங்கின் பரப்பளவு சமமற்றதாக இருந்தது. ஆனால், அதில் ஒரு சில கத்தோலிக்கர்கள் மட்டுமே இருந்தனர். ஏ.வி.எம். விஜயா கார்டன்ஸ் மற்றும் மிகவும் நவீனமான, பிரபலமான விஜயா மருத்துவமனை போன்ற பல திரைப்பட ஸ்டுடியோக்கள் அனைத்தும் பங்கு எல்லைக்குள் இருந்தன.
ஜூன் 1971ல் முதல் பங்குத் தந்தையாக தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் டி. ஜேசுதாஸ் அவர்கள் நியமிக்கப்பட்டார். அவர் இன்றைய தேவாலயத்திற்கு அருகிலுள்ள ஒரு சிறிய வாடகை அறையில் தனது குடியிருப்பை அமைத்தார். அங்கு எந்த தேவாலயமும் இல்லை. அவர் பெரும்பாலும் திறந்தவெளில் திருப்பலி நடத்தினார். எம்.ஜி.ஆர்.நகர், சாலிகிராமம், இராணி அண்ணாநகர் போன்ற இன்னும் சில இடங்களில் தெருக்களில் திருப்பலி நிறைவேற்றினார். ஒரு சிலர் ஒன்றுகூடி பங்கின் அருட்பணியாளர் தங்குவதற்கு ஆரம்ப உதவிக்காக பேராயர் அருளப்பா அவர்களை அணுகினர். அவர் உடனடியாக ரூ.35,000/- தந்து உதவினார். மேலும், உள்ளூர் மக்கள் உதவியுடன் அருட்பணியாளர் ஜேசுதாஸ் அவர்கள் ஒரு மண்டபத்தையும், அதன்மீது ஒரு கூரையையும் கட்டினார். இது மிகவும் அதி வேகத்தில் செய்யப்பட்டு 1971 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு ஆலயமாக பயன்படுத்தப்பட்டது. 1972ஆம் ஆண்டில், அருட்பணியாளர் ஜேசுதாஸ் அவர்கள் முதல் முறையாக நள்ளிரவு புத்தாண்டு திருப்பலியை அறிமுகப்படுத்தியது பேராயருக்கும், மறைமாவட்டத்திற்கும் ஆச்சரியமான விதத்தில் அமைந்தது. அடுத்து அவர் ஜனவரி 1972இல் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பங்கின் வளர்ச்சிக்காக பங்குப் பேரவையை நிறுவினார். இதன் மூலம் இரண்டாம் வத்திக்கானின் வழிகாட்டுதல்களை செயல்படுத்த தொடங்கினார். பங்குப் பேரவை உறுப்பினர்களுடன் இணைந்து, ஆலயக் கட்டுமானத்திற்காக நிதி திரட்டுவதற்கான வழிமுறைகளை வகுத்தார்.
புனித மத்தியாஸ் தேவாலயம்:
ஆகஸ்டு 13, 1972 அன்று தேவாலயத்தின் கட்டுமானத்திற்காக நிதி திரட்ட தமிழ்நாட்டில் சென்னை நகரத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் குழுவினரின் உதவியுடன் இசை நிகழ்ச்சியை நடத்திய முதல் கத்தோலிக்க அருட்பணியாளர் ஜேசுதாஸ் ஆவார். அது ஒரு பெரிய வெற்றியாக அமைந்தது. மேலும், மக்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தது. பங்கின் நிதி நிலைமையை வலுப்படுத்தி, ஏப்ரல் 1973இல் தேவாலயக் கட்டுமானத்தைத் தொடங்கினார். டிசம்பர் 22, 1974 அன்று பேராயர் அருளப்பா ஆண்டகை அவர்கள் புதிய தேவாலயத்தை புனிதப்படுத்தினார்.
தொடர்ந்து பணியாற்ற வந்த அருட்பணி. சூசை அருள் அவர்களின் முயற்சியால், இங்கிலாந்திலிருந்து புதிய ஆலயமணி கொண்டுவரப்பட்டு, 1979ஆம் ஆண்டு மணிக்கூண்டு புனிதப்படுத்தப்பட்டது. இந்நாட்களில் கப்புச்சின் மறைமாநில உதவியுடன் இரண்டு தளம் கொண்ட துறவிகள் இல்லத்தை எழுப்பினார். மேலும், பங்கு மக்கள் மற்றும் வெளி உபகாரிகள் உதவியுடன், 1986இல் அமல அன்னை சமூகப் பணிக் கூடத்தை அமைத்தார். 1989ஆம் ஆண்டு, சுவிஸ் கப்புச்சின் துறவிகளின் பங்களிப்புடன் தேவாலயம் 45 அடி நீட்டிக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டு பங்குத் தந்தையாக இருந்த அருள்தந்தை கிளமென்ட் அவர்கள், தேவாலயத்தின் புனரமைப்புக்காக நிதி நிறுவனம் மூலம் ரூ.7,00,000/- பெற்றார்.
தொடர்ந்து பொறுப்பேற்ற அருட்பணி. ஐசக் மற்றும் பங்கு மக்களின் அர்ப்பணிப்புடன் பழைய தேவாலயம் இடிக்கப்பட்டு, 54 அடி உயரமும் 127 அடி நீளமும் கொண்ட புதிய தேவாலயம் பங்கு மக்கள் மற்றும் பிற மக்கள் உதவியுடன் கட்டப்பட்டது. இந்த அழகான மற்றும் நினைவுச் சின்ன தேவாலயம் டிசம்பர் 20, 2001 அன்று சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் அருள்தாஸ் ஜேம்ஸ் ஆண்டகை அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது. 2021இல் பணியாற்றிய அருட்பணி. ஏ. குழந்தைராஜ் அவர்கள் பலிபீடத்தையும், தேவாலயத்தையும் புதுப்பித்தார்.
2006 ஆம் ஆண்டு பங்கின் செய்திக் குறிப்புகளை உள்ளடக்கிய 'மத்தியாஸ் மலர்'' என்ற இதழை அருட்தந்தை ஜேசுராஜ் அவர்கள் துவங்கி வைத்தார்.
2010 ஆம் ஆண்டு அருட்தந்தை சூசைராஜ் அவர்கள் ஆலயத்திற்கு மேற்புறம் அழகிய ஆராதனை தேவாலயத்தை கட்டினார். 2018ஆம் ஆண்டு அருட்தந்தை வின்சென்ட் பாபு அவர்களால் பெரியவர்களின் வசதிக்காக ஆலயத்தின் பின்புறம் ஒரு புதிய ஆராதனை இடமாக மாற்றப்பட்டது. நவம்பர் 2015இல், இடைவிடாத மழை காரணமாக சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கியபோது, புனித மத்தியாஸ் பங்கு மக்கள் மற்றும் உதயம் சமூகப்பணி மையம் ஆகியவை இணைந்து ரூ.11,00,000/- திரட்டி மக்களின் மறுவாழ்வுப் பணிகளில் பெருமளவில் ஈடுபட்டது. 2013இல் பங்கின் அருட்தந்தை அந்தோனிதாஸ் அவர்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து நிதி திரட்டி, சமூகப்பணி மண்டபத்தை மறுவடிவமைப்பு செய்து புதுப்பிக்க உதவினார். அந்த மண்டபம் ஜனவரி 2016இல் புனிதப்படுத்தப்பட்டது.
ஆலயத்தின் தனிச் சிறப்புகள்:
திருச்சபை வரலாற்றில் முதன் முதலாக திருவுளச்சீட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புனிதர் இவர். இப்புனிதர் பெயரில் ஆலயம் அசோக்நகரில் அமைந்திருப்பது பெருமை. வாரத்தின் அனைத்து நாட்களிலும் பிறமதத்தினரும், பிறசபையினரும் |புனிதரிடம் மன்றாடவும், நன்றி சொல்லவும் வருகை புரிகின்றனர். இப்பங்கில் புனிதரின் வழியாக பல புதுமைகள் அநேக குடும்பங்களில் நிகழ்ந்துள்ளன. இப்பங்கை வழி நடத்துகின்ற கப்புச்சின் துறவிகளின் ஆத்மார்த்த ஆன்மீகப் பணிகளால் இம்மண்ணும், மக்களும் பண்பட்டுள்ளனர் என்றால் மிகையாகாது. இப்பங்கில் பல்வேறு தரப்பு மக்கள் இருந்தாலும் அவர்களின் ஒற்றுமை மிகவும் சிறப்பானது. மக்கள் அனைவரும் பங்கின் வளர்ச்சிகளுக்கு ஆன்மீக வழிபாடுகளில் பயபக்தியுடன் கலந்துகொள்வதிலும், ஞானத் தந்தையர்களிடம் தாழ்ச்சியுடன் நடப்பதிலும், அவர்களுடன் இணைந்து பணிபுரிவதிலும் மக்கள் குடும்பங்களுடன் செயல்படுவது சிறப்பானது. மேலும், இப்பங்கிலிருந்து புனித அன்னம்மாள் ஆலயம் -நெசப்பாக்கம், குழந்தையேசு ஆலயம் -சின்மயாநகர் ஆகியவை உருவாக்கப்பட்டது. அதேபோன்று இங்கிருந்து பலதரப்பட்ட மக்கள் வாழ்க்கையில் முன்னேறி சொந்தவீடுகள்கட்டி போரூர், அய்யப்பன்தாங்கல், மாங்காடு, குன்றத்தூர், மாதவரம், வண்ணாரப்பேட்டை, பல்லாவரம், குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, கூடுவாஞ்சேரி என்று பல்வேறு பகுதிகளுக்கு சென்றாலும், விழாக்காலங்களில் இவர்களுடன் விருகம்பாக்கம், ராமாவரம், ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், நெசப்பாக்கம், ஈக்காட்டுத் தாங்கல், கிண்டி, கோடம்பாக்கம் என்று பல பகுதிகளிலிருந்தும், தினந்தோறும் திருப்பலியில் பங்கேற்கவும் வருகை புரிகின்றனர்.
திருத்தூதர் புனித மத்தியாஸ் புதுமைகள்:
ஒரு குடும்பத்தில் ஏப்ரல் மாதத்தில் வீடு கட்டி மேல் தளம் போடப்பட்டு தண்ணீர் விட வேண்டுமே என்று நினைத்து வேண்டும் போது எப்படித்தான் மழை வந்தது என்றே தெரியாது. அப்படி ஒரு மழை பெய்து அந்தக் குடும்பத்தை மகிழ்வித்தது புனிதரின் பரிந்துரையால். ஒரு இஸ்லாமிய சகோதரி தன் மகளின் தலைப் பிரசவம் சுகப்பிரசவமாக இருக்க இப்புனிதரிடம் வேண்டிட, அந்த மகளுக்கு சுகப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்ததை நன்றியுடன் எடுத்துக்கூறி, குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து நேராக பங்குத்தந்தையிடம் ஆசிர் பெற்றுச் சென்றார். இதே போன்று புற்று நோயிலிருந்து விடுபட்டது, படுத்த படுக்கையிலிருந்து எழுந்தது போன்ற எண்ணற்ற புதுமைகள் இப்பங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
கிளைப்பங்குகள்:
சிறந்த விவிலியப் பேராசிரியர் அருட்தந்தை ஒடிலோ லூகாஸ் அவர்கள் பங்கின் அருட்பணியாளராக பணியாற்றியபோது, வளசரவாக்கத்தில் உள்ள தேவாலயம் டிசம்பர் 1982இல் எரிக்கப்பட்டது. இருப்பினும், ஒரு வாரத்திற்குப் பிறகு திருப்பலியுடன் அது மீண்டும் தொடங்கப்பட்டது. 300 கத்தோலிக்கர்களுடன், சில இந்துக்களும் ஒற்றுமை உணர்வுடன் பங்கேற்றனர். எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சொத்தை தேவாலயத்திற்கு திரும்பப் பெற அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். சின்மயாநகர், அசோக்நகர் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு பிப்ரவரி 19, 1989 அன்று ஒரு புதிய பங்காக உருவாக்கப்பட்டது. இந்தப் புதிய பங்கானது சின்மயாநகர், விருகம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இதில் 2000 கிறிஸ்தவர்கள் இருந்தனர். அன்றைய கப்புச்சின் அதிபர் அருட்தந்தை பி. அருள்தாஸ் அவர்களின் பரிந்துரையின் பேரில் சுவிஸ் கப்புச்சின் மறைமாநிலம் தேவாலய கட்டுமானத்திற்காக ரூ.5,00,000/- நன்கொடை அளித்தது. அருட்தந்தை மான்ட்ஃபோர்ட் அவர்கள் மறைமாவட்ட சொத்தில் 34,000/- செலவில் நெசப்பாக்கத்தில் ஒரு தேவாலயத்தைக் கட்டினார். அது 1997இல் ஒரு தனிப் பங்காக உயர்த்தப்பட்டது.
பங்கில் உள்ள கெபிகள்:
புனித மத்தியாஸ், புனித பிரான்சிஸ் அசிசியார், புனித பதுவை அந்தோனியார், புனித தந்தை பியோ, புனித லூர்து அன்னை, புனித அமல அன்னை, புனித வியாகுல அன்னை ஆகிய கெபிகள் இப்பங்கில் உள்ளன.
கல்வி சேவைகள்:
அருட்பணி. ஜேசுதாஸ் அவர்கள் மக்களின் கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டு, பிரான்சிஸ்கன் காணிக்கை அன்னை சகோதரிகளை அழைத்து வருவதற்கு முயற்சி எடுத்தார். அவர்கள் கே.கே.நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதற்கு ஆல் செயின்ட்ஸ் கான்வென்ட் என்று பெயரிட்டு, ஆங்கில வழி நர்சரியைத் தொடங்கினர். இவ்வாறு ஜூன் 1974இல் அருட்தந்தை ஜேசுதாஸ் அவர்கள் அசோக்நகர் பங்கின் வரலாற்றில் மற்றொரு சாதனையை நிகழ்த்தினார்.
மேலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட ஆலய வளாகத்திற்கு பின்னால் உள்ள நிலத்தைக் கண்டார். இந்த விஷயம் அப்போதைய முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அவர் தனது அரசின் நினைவாக அந்தப் பள்ளிக்கு தனது பெயரைச் சூட்ட வேண்டும் என்று ஒரே ஒரு நிபந்தனையை மட்டுமே விதித்தார். அதுவே இன்று ஒரு பெண்கள் மேல் நிலைப்பள்ளியாக சிறப்பாக செயல்படுகிறது. அதன் வளாகத்தில் ஸ்டெல்லா மேட்டிடூனா கல்வியியல் கல்லூரியும் உள்ளது. மாற்றுத் திறனாளிகளின் வாழ்வு நலம் பெற தூய இதய மரியன்னை சபையானது 2006 முதல் இப்பங்கில் பணியாற்றுகின்றது என்பதும் பங்கின் சிறப்பம்சமாகும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் பங்கு மக்களுக்கு பல்வேறு கல்வி ஊக்கத் தொகை மற்றும் மருத்துவ நல உதவிகள் வழங்கப்படுகின்றன.
உதயம் சமூகப்பணி மையம்:
சமூக நல நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, அமல அன்னை சமூக மையம் அக்டோபர் 1976இல் நிறுவப்பட்டது. இது பள்ளி செல்லாத பெண்கள் மற்றும் கல்வி கற்காத பெண்களுக்கு சேவை செய்யும் நோக்கம் கொண்டது. இதில், பனை பொருட்கள் மற்றும் தையல் நிறுவனம் என இரண்டு பிரிவுகள் இருந்தன. பனை திட்டப் பிரிவில் 10 மற்றும் தையல் பிரிவில் 17 இருந்தன. பனை மாணவர்கள் கூடைகள், மேஜை பாய் மற்றும் கண்ணாடி உறைகளை உருவாக்கினர். பனை மரங்களில் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து அவற்றில் பல்வேறு வீட்டுப் பொருட்கள் செய்தனர். தையல் பிரிவு நன்றாக செழித்து வளர்ந்தது. மேலும், பெண்கள் அரசுத் தேர்வுகளுக்குத் தயாராக பயிற்சி பெற்றனர். 1976ஆம் ஆண்டு சென்னை நகரில் பலத்த மழை பெய்தபோது, நிவாரணப் பணியாளர்களின் உதவியுடன் துறவிகள் குடிசைகளில் இருந்த சுமார் 45 ஏழை மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர். கப்புச்சின் சபை சமூகப்பணி மையத்தின்கீழ் இயங்கும் இச்சேவை மையம், மாலை நேர வகுப்புகள், சிறப்புத் திறமைகளை (இசை, பாட்டு, சிலம்பம், பரதநாட்டியம்) வளர்க்கும் வகுப்புகளை தொடர்ந்து பயிற்றுவித்து வருகின்றது. இவ்வாறு காலச் சூழ்நிலைக்கேற்ப பல்வேறு மக்கள் சார்ந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பங்கின் பல்வேறு அமைப்புகள்:
1) பங்குப் பேரவை
2) பங்கு நிதிக்குழு
3) அன்பியங்கள்
4) பொதுநிலையினர் பிரான்சிஸ்கன் சபை
5) புனித வின்சென்ட் தே பவுல் சபை
6) மரியாயின் சேனை
7) இறை இரக்க சபை
8) நற்கருணைநாதர் சபை
9) புனிதமத்தியாஸ் இளைஞர் இயக்கம்
10) பாடகற் குழுக்கள்
11) இறைஊழியர் ஜான்பீட்டர் பீடப்பூக்கள்
12) கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம்
பங்கின் மக்கள் சேவை தளங்கள்:
1. அமல அன்னை சமூகப்பணி கூடம்
2. புனித மத்தியாஸ் திருமண தகவல் மையம்
3. அசிசி பாத சிகிச்சை மையம்
4. போதைனின்று மறுவாழ்வு கூடுகை தளம்
5. அசிசி அருட்பொருளகம்
பங்கில் செயல்படும் நிறுவனங்கள்:
1. உதயம் சமூகப்பணி மையம்
2. ஸ்டெல்லா மாட்டுடீனா கல்வியல் கல்லூரி
3. டாக்டர் கலைஞர் கருணாநிதி நிர்மலா பெண்கள் மேல்நிலை பள்ளி
4. நிர்மலா தொடக்கப் பள்ளி
5. ஸ்டெல்லா மெட்ரிக் உயர்நிலை பள்ளி
6. மாற்றுதிறனாளிகள் வழிகாட்டும் இல்லம்
7. மாணவியர் தங்கும் விடுதி
பங்கின் துறவியர்
1. கப்புச்சின் பிரான்சிஸ்கன் துறவு சபை
2. கோயமுத்தூர் பிரான்சிஸ்கன் காணிக்கை அன்னை அருட்சகோதரிகள்
3. பிரான்சிஸ்கன் மரியன்னை தூய இதய அருட்சகோதரிகள்
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
அருட்பணி. யேசுதாஸ்: 1971-1975
அருட்பணி. சூசை அருள்: 1975-1979
அருட்பணி. வென்செஸ்லாஸ்: 1979-1981
அருட்பணி. ஒடிலா லூக்காஸ்: 1981-1984
அருட்பணி. ஜோக்கிம்: 1984-1987
அருட்பணி. எம். ஜோசப்: 1987-1989
அருட்பணி. சார்லஸ்: 1989-1990
அருட்பணி. மான்போர்ட்: 1990-1993
அருட்பணி. கிளமென்ட்: 1993-1996
அருட்பணி. மான்ஃபோர்ட்: 1996-1999
அருட்பணி. ஐசக்: 1999-2002
அருட்பணி. அகஸ்டின்: 2002-2005
அருட்பணி. ஜேசுராஜ்: 2005-2008
அருட்பணி. சூசைராஜ்: 2008-2012
அருட்பணி. அந்தோனிதாஸ்: 2012-2015
அருட்பணி. வின்சென்ட் பாபு: 2015-2018
அருட்பணி. குழந்தைராஜ்: 2018-2021
அருட்பணி. அருள்சேவியர்: 2021-2024
அருட்பணி ஆ. தைனிஸ்: 2024-
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. ஆ. தைனிஸ், OFM Cap அவர்கள்.













