286 புனித சவேரியார் ஆலயம், புனல்வாசல்


புனித சவேரியார் ஆலயம்

இடம் : புனல்வாசல்

மாவட்டம் : தஞ்சாவூர்
மறை மாவட்டம் : தஞ்சாவூர்
மறை வட்டம் : பட்டுக்கோட்டை

நிலை : பங்குதளம்

கிளைகள் :
1. புனித சவேரியார் ஆலயம், பூவாணம்
2. குழந்தை இயேசு ஆலயம், ஒட்டங்காடு

சிற்றாலயங்கள் :
1. புனித அந்தோணியார் ஆலயம், புனல்வாசல்
2. புனித வனத்து சின்னப்பர் ஆலயம், புனல்வாசல்

பங்குத்தந்தை : அருட்பணி வின்சென்ட்

இணை பங்குத்தந்தை : அருட்பணி டோமினிக்

குடும்பங்கள் : 650 (கிளைப்பங்குகளை சேர்த்து 800)

அன்பியங்கள் : 8

ஞாயிறு திருப்பலி : காலை 06.15 மணி மற்றும் காலை 08.00 மணிக்கும்.

நாள்தோறும் திருப்பலி : காலை 06.00 மணிக்கு

சனி திருப்பலி : மாலை 06.15 மணிக்கு

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை புனித சவேரியார் தேர்பவனியும் ஜெபமாலை மன்றாட்டு, திருப்பலி தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம்.

திருவிழா : நவம்பர் மாதம் 24 -ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 03-ஆம் தேதி வரை.

வரலாறு :

புனல்வாசல், பட்டுக்கோட்டை - பேராவூரணி வழி துறவிக்காடு என்ற இடத்தில் இருந்து கிழக்கு திசையில் சுமார் இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

புனித சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இவ்வாலயமானது துவக்கத்தில், பாதிரக்குடி பங்கின் கிளையாகவும், பின்னர் கோட்டைக்காடு பங்கின் கிளையாகவும், தொடர்ந்து பட்டுக்கோட்டை பங்கின் கிளையாகவும் இருந்து வந்தது.

பின்னர் தனிப்பங்கானது. முதல் பங்குத்தந்தை அருட்தந்தை குழந்தை அடிகளார். அப்போதைய ஆலயம் போதிய இடவசதிகள் இல்லாததால், இப்பங்கின் மூன்றாவது பங்குத்தந்தை அருட்தந்தை அருள் அவர்களின் முயற்சியாலும் இப்பகுதி மக்களின் ஒத்துழைப்பாலும் தற்போதைய ஆலயம் கட்டப்பட்டது.

பசுமையான மரங்கள் நிறைந்த அமைதியான இயற்கையான சூழலில் அமைந்துள்ள இவ்வாலயமானது, தஞ்சாவூர் மறை மாவட்டத்தில் அதிக கத்தோலிக்கர்களை கொண்ட பங்குகளில் ஒன்று.

புனித சவேரியார் வழியாக எண்ணற்ற அற்புதங்களும், அதிசயங்களும் நடந்து வருவதால் சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களும் இங்கு வந்து இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்று செல்கின்றனர்.

திருவிழாவின் தனிச்சிறப்பு :

இவ்வாலய திருவிழா நவம்பர் மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து டிசம்பர் மாதம் 02-ஆம் தேதி தேர்பவனி திருப்பலியும், 03-ஆம் தேதி திருவிழா திருப்பலி தேர்வனியுடன் இனிதே நிறைவு பெறுகின்றது. இத்திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அதிகமாக வருவது தனிச்சிறப்பு.

டிசம்பர் மாதம் 03- ஆம் தேதி புனித சவேரியார் இறந்த தினம். அவர் இறப்பதற்கு முன்னர் பத்து வெள்ளிக்கிழமைகள் கடும் ஜெபத்தை மேற்கொண்டு மரணமடைந்தார். அந்த நினைவாக டிசம்பர் 03 ம் தேதிக்கு முன்னர் வருகின்ற பத்து வெள்ளிக்கிழமைகளில்முதல் வெள்ளிக்கிழமையிலிருந்து திருவிழா துவக்கம் ஆரம்பமாகிறது. இந்த திருவிழாவிற்காக இவ்வூரை பத்து கரைகளாக பிரித்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு கரையினர் புனித சவேரியார் மன்றாட்டு, ஜெபமாலை, திருப்பலி என்று ஆரம்பித்து பத்தாவது வெள்ளிக்கிழமை பெரிய திருவிழாவாக கொண்டாடுவது எந்த ஊரிலும் காணாத தனிச்சிறப்பு.

மண்ணின் இறை அழைத்தல்கள் :

19 அருட்தந்தையர்களையும், தற்போது இளங்குருமடத்தில் படித்துக் கொண்டிருக்கும் ஆறு அருட்சகோதரர்களையும் மற்றும் பல அருட்சகோதரிகளையும் மறைப்பரப்புப் பணிக்காக தந்துள்ளது புனல்வாசல் இறைசமூகம்.

புனித அன்னாள் அருட்சகோதரிகள் இல்லமானது இங்கு உள்ளது.

புனித அன்னாள் பெண்கள் உயர்நிலைப் பள்ளி சிறப்பாக சுமார் 700 மாணவர்களுடன் இயங்கி வருகிறது.

புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி 49 வருடமாக இப்பகுதி மக்களுக்கு கல்விப் பணி செய்து வருகின்றது. இதன் முதல் தாளாளராக அருட்தந்தை ரஃபேல் அடிகளார் அவர்கள் இருந்து சுமார் 17 ஆண்டுகள் சிறப்பாக இம்மக்களின் கல்விக்காகவும், ஆன்மீக ஞானத்தையும் பெருகச் செய்து அதிகமான இறையழைத்தல்களும் உருவாக காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆலயத்தின் முன்புறம் புனித ஆரோக்கிய அன்னை கெபி, உயிர்த்த ஆண்டவர் கெபி, ஆலயத்தின் பின்புறம் புனித அந்தோணியார் கெபி, குழந்தை இயேசு கெபி, புனித சவேரியார் கெபி என ஐந்து கெபிகள் உள்ளது சிறப்பு. ஆலயத்தை சுற்றிலும் இயேசுவின் பாடுகளின் 14 நிலைகளும் சிறப்பாக கட்டப்பட்டு உள்ளன.

புனல்வாசல் பங்கு மக்கள் புனிதரின் மீது கொண்ட பற்றுதலாலும், அவரின் வழியாக பெற்றுக் கொண்ட அற்புதங்களாலும் நன்றியுணர்வுடன், புனித பிரான்சிஸ் சவேரியார் வணிக வளாகம், புனித பிரான்சிஸ் சவேரியார் மக்கள் மன்றம் என்று பல்வேறு சபைகள் நிறுவனங்கள் இயங்கி வருவது மேலும் சிறப்புக்குரியது.

கடந்த வருடம் நடந்த கஜா புயலில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று புனல்வாசல். கடலிலிருந்து 7 கி.மீ தூரத்தில் இவ்வூர் உள்ளதால் புயல் கரையை கடந்தது இந்த ஊர் வழியாகத்தான்.

புயலில் புனல்வாசலின் விளைநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு பொருட்சேதமும் ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. ஆனால் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படாமல் புனித சவேரியார் இம்மக்களை காத்தருளினார்.

புயல் பாதிப்பின் போது பங்குத்தந்தை அவர்கள் முழுமூச்சாக களத்தில் இறங்கி பல உதவிகளை செய்ததுடன், மக்களுக்கு தேவையான உணவுகள், அத்தியாவசிய பொருட்களை பெற பெரிதும் உதவினார்கள். மற்றும் இப்பங்கின் மண்ணின் மைந்தர்கள், இப்பங்கில் முன்னர் பணிபுரிந்த அருட்தந்தையர்கள், பள்ளிக்கூட தாளாளர் என்று பலரும் இவ்வாலயத்திற்கு மட்டுமல்லாது சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கும் எண்ணற்ற உதவிகளை செய்தது சிறந்த கிறிஸ்தவ பண்பாகும்.

வழித்தடம் :

பட்டுக்கோட்டையிலிருந்து - பேராவூரணி வழி புனல்வாசல் பேருந்துகள் : A6, A6A, 422G, 345, AKN, SFT, SVS கண்ணன்.