664 புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம், தென்காசி

       

புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம் 

இடம் : தென்காசி 

மாவட்டம் : தென்காசி 

மறைமாவட்டம் : பாளையங்கோட்டை

மறைவட்டம் : தென்காசி 

நிலை : திருத்தலம் 

கிளைப்பங்குகள் : 

1. தமத்திருத்துவ ஆலயம், குத்துக்கல் வலசை

2. தூய செங்கோல் அன்னை ஆலயம், செங்கோல்நகர் 

3. புனித சவேரியார் ஆலயம், சுந்தரபாண்டியபுரம்

4. புனித சூசையப்பர் ஆலயம், குற்றால குடியிருப்பு

ஆலயம் இல்லாத கிளைப்பங்குகள்:

1. மேலகரம்

2. கீழபுளியூர்

3. குற்றாலம்

4. வேட்டைக்காரன்குளம்

5. கீழகுடியிருப்பு

6. ஆசாத்நகர்

7. காசிமேஜர்புரம்

8. இலஞ்சி

9. அழகப்பபுரம்

10. திருச்சிற்றம்பலம்

11. இளத்தூர்

12. ஹவுசிங் போர்டு

13. அய்யாபுரம்

பங்குத்தந்தை : அருள்பணி. P. போஸ்கோ குணசீலன்

இணைப் பங்குத்தந்தை : அருள்பணி. அ. சதீஷ் செல்வதயாளன்

குடும்பங்கள் : 450

அன்பியங்கள் : 25

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணி, மாலை 06.30 மணி

திங்கள், செவ்வாய், புதன் : காலை 05.45 மணி 

வியாழன், வெள்ளி மாலை 06.30 மணி

சனி காலை 11.00 மணி புனித மிக்கேல் அதிதூதர் நவநாள், குணமளிக்கும் வழிபாடு, திருப்பலி. மாலை 06.30 மணி திருப்பலி 

சிறப்பு வழிபாடுகள் :

ஆங்கில மாதத்தின் முதல் சனி : காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை உபவாச தியானம், நவநாள் திருப்பலி, அசனம். 

மாலை 06.30 மணி கெபியில் திருப்பலி

தமிழ் மாத முதல் சனி : காலை 11.00 மணி குணமளிக்கும் வழிபாடு, நவநாள் திருப்பலி, அசனம்.  மாலை 06.30 மணி திருப்பலி 

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.30 மணி திருமணி ஆராதனை, இறைஇரக்கத்தின் செபமாலை, திருப்பலி 

அமாவாசை இரவு 12.00 மணி முதல் அதிகாலை 03.00 மணிவரை கட்டுகளை அவிழ்க்கும் முழு இரவு செபம், திருப்பலி. 

திருவிழா : செப்டம்பர் மாதம் 20ம் தேதி கொடியேற்றம், 29ம் தேதி பெருவிழா, 30ம் தேதி கொடியிறக்கம். 

வழித்தடம் : திருநெல்வேலி-> ஆலங்குளம் -> சத்திரம்> தென்காசி

மதுரை>> திருமங்களம்-> இராஜபாளையம் >> புளியங்குடி-> தென்காசி

Location map : https://g.co/kgs/FBTAqo

வரலாறாய் வாழும் வரலாறு:

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் என்று ஆணையிட்ட இறைமகனின் குரலுக்குச்

செவிசாய்த்து, கி.பி முதல் நூற்றாண்டிலேயே அதாவது கி.பி 52ஆம் ஆண்டிலேயே மலபார் கடலோர பகுதியான முசிறியில் இயேசுவின் சீடருள் ஒருவரான தூய தோமையார் தமது திருப்பாதங்களைப் பதித்தார். மலபாரி என்பது தமிழ் மொழியையும் தமிழனையும் குறிக்கும். தூய தோமையார் கிறிஸ்துவின் அன்பை இந்தப் புண்ணிய பூமியில் விதைப்பதற்கு தனது உடலையும், வளர்ப்பதற்குத் தன் குருதியையும் அர்ப்பணித்தார். 

அதன்பின் கிறிஸ்தவம் தென்பாண்டி திருநெல்வேலிக்கு வந்து சேர பதினைந்து நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. எனவே தென்காசி திருமண்ணிலும் 17-ம் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவம் தழைத்தோங்கியிருந்தது என்பதை கி.பி 1662-1665 வரை உள்ள சரித்திர சான்றுகளாய் உள்ள கடிதங்கள் மூலம் அறியலாம். 1662-ல் மறைத்திரு. அந்தோணி தே புரோவிங்காவும் 1663-ல் மறைத்திரு. பல்தசா தே கோஸ்தாவும் நற்செய்தியினையும், வானதூதர் அளித்த காட்சியினையும் அறிவித்து மக்களிடையே கிறிஸ்தவ நம்பிக்கையை வளர்த்தனர்.

அருட்பணியாளர்கள் அருளிய நற்செய்தினால் பாளையம் என்ற இடத்தில் வாழும் வேலன் என்பவர் மனம் மாறி திருமுழுக்கு பெற்று இராயப்பன் என்ற பெயர் மாற்றிக் கொண்டார். பின் தென்காசியில் உபதேசியராய்ப் பணியாற்றினார். அந்த சமயத்தில் தென்காசியில் ஒரு கிறிஸ்தவ தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ஒன்று இறந்து போனது. அடுத்த குழந்தையோ உடல் நிலை மோசமாகி சாவை எதிர்நோக்கியிருந்தது. சிறிது காலத்திற்கு முன்னர் தான் திருமுழுக்குப் பெற்றிருந்ததால் குழந்தையின் நிலை கண்டு கலங்கியும் உறவினர்களின் ஏச்சுப் பேச்சுக்களினால் துயருற்றும் அந்த தம்பதியர் கொண்ட விசுவாசத்தில் சற்றே பின்வாங்கிப் போயினர். அந்த நேரத்தில் மனத் தளர்ச்சியுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள், வலுவற்றோருக்கு உதவுங்கள் என்ற வேதவாக்கின் படி இராயப்பன் தாமாகவே முன்வந்து அவர்களுக்கு ஆறுதல் கூறிக் குழந்தையையும் கவனித்துக் கொண்டார். 

அவ்வாறு ஒருநாள் நள்ளிரவு ஆனபடியால் அருகிலுள்ள கிறிசோஸ்தம் என்பவரது வீட்டு முற்றத்தில் சற்றே ஓய்வெடுக்கச் சென்றார். அந்த முற்றத்தில் பந்தல் வேயப்பட்டிருந்தது. அந்தப் பந்தலுக்கு கீழ்தான் அந்த வழியாய்ச் செல்லும் அருட்தந்தையர் திருப்பலி நிறைவேற்றுவர். அந்த இடத்தில் கண் அயர்ந்த இராயப்பன் அசாதரணமான ஒளி வெள்ளத்தைக் கண்டு வீடுதான் தீப்பற்றிக் கொண்டதோ என்று அஞ்சி உதவிகோரி குரல் எழுப்பினார்.

ஆனால் கணநேரத்தில் சுய உணர்வு பெற்று அருகில் இருந்த மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்த இரண்டு வானுலக இளைஞர்களைக் கண்டார். தூய்மையான தங்கத்தைப் போன்ற ஒரு பளபளப்பான நிறத்தை கொண்டவர்களாய் ஒருவர் கையிலே கிதார் போன்ற இசைக்கருவியும் மற்றொருவர் கையிலே ஒரு சுருளும் கொண்டவர்களாய் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தென்புறமாய் குனிந்து சிலுவை அடையாளம் வரைந்தார். பின் இருவரும் இராயப்பன் அருகில் வந்த போது, அவர்களை நோக்கி நீங்கள் யாரென்று வினவினார் இராயப்பன். ஆனால் அவரை அமைதி காக்குமாறு பணித்துப் பின், சுகவீனமான அந்தக் குழந்தையின் பெயரைச் சொல்லி அழைத்து உயிர்ப்பித்தார். 

இராயப்பர் தான் கண்ட காட்சியினைக் கிறிசோஸ்தம் மற்றும் பிற கிறிஸ்தவர்கள் அந்த பெற்றோர் எல்லார் முன்னிலையிலும் விளக்கமாய்க் கூறினார். கிறிசோஸ்தமும் வானதூதர் சிலுவை அடையாளம் வரைந்த இடம் இறந்த குழந்தை புதைக்கப்பட்ட இடமென்று கண்டு கொண்டார். இந்த செய்திகளையெல்லாம் கி.பி 1666 ஆகஸ்ட் 15-ல் அந்தோணி பவோன்கா எழுதிய கடிதத்திலிருந்து அறிய முடிகிறது. 

வானவர் வரைந்த சிலுவை அடையாளத்தைத் தன்னகத்தே கொண்ட பழைய பீடமானது இன்றளவும் புதிய ஆலயத்தில் பொலிவுடன் காணப்படுகிறது.

1666 -ல் மறைத்திரு. மனுவேல் ரொட்ரிகஸ் என்பவர் தென்காசியில் உள்ள நாயக்கன் கனகத்தான் என்பருடைய வீட்டில் கிறிஸ்து பிறப்பின் பெருவிழாவைக் கொண்டாடினார். கலந்து கொண்டவர் பலர் திருமுழுக்குப் பெற்றனர். பலருக்கு அருட்தந்தை திருவருட்சாதனங்கள் வழங்கினார். பின் தமது தலைமைப் பொறுப்பாளர் அழைப்பிற்கிணங்க அருட்தந்தை மனுவேல் ரொட்ரிகஸ் தென்காசியிலிருந்து புறப்பட்டு கட்டப்பாளையம் என்ற ஊருக்குச் சென்றார். அங்கும் அவர் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கினார். 

கி.பி 1714 ல் காணப்படும் கடிதக் குறிப்புகளிலிருந்து, தென்காசி கிறிஸ்தவம் காமநாயக்கன்பட்டி அருட்தந்தையர்களின் மேற்பார்வையில் தான் இருந்திருக்கிறது. 

கி.பி 1714 ல் அருட்தந்தை பெஸ்கி (வணக்கத்துக்குரிய வீரமாமுனிவர்) காமநாயக்கன்பட்டி மற்றும் திருநெல்வேலி முழுவதற்கும் பொறுப்பாளராய்ப் பணியாற்றினார். 

1714 டிசம்பர் 21ம் தேதி வீரமாமுனிவர், இயேசு பெருமான் பிறந்ததை நினைவூட்டும் குடில் ஒன்றைக் கோவிலில் அமைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கே முகாமிட்டிருந்த மதுரை மன்னனின் படைத்தளபதி சில போர் வீரர்களை அனுப்பி அருட்தந்தையைக் கைது செய்து விலங்கிட்டு வரும்படி ஆணை பிறப்பித்தான். அதே போன்று கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் அதிகமிருந்ததால் இரண்டு கோயில்களைக் கொண்ட தென்காசியிலும் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர். பின் சங்கரநாயக்கன் என்ற நல்லோன் தலையீட்டால் எல்லா வகையான துன்புறுத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கி.பி 

1716, 1717ம் ஆண்டுகளிலும் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர். கிறிஸ்தவர்களுக்கு பிற மதத்தினரது துன்புறுத்தல் மட்டுமல்லாது கிறிஸ்தவ மக்களிடமிருந்து கூட எதிர்ப்புகளும் துன்பங்களும் வரத்தொடங்கின. 

தென் மேற்கு மாவட்டங்களின் ஒரு பகுதியாக இருந்த தென்காசி, ஒரு தனித்த பங்காக உருவாகும் முன்பு, புதிய மறைபரப்பு பகுதியில் உள்ளவர்களால் பார்வையிடப்பட்டு வந்தது. பின்னர் காமநாயக்கன்பட்டி அருட்தந்தையால் பார்வையிடப்பட்டது. அதன் பின்னர் ஆண்டிப்பட்டியோடு சேர்க்கப்பட்டது. இறுதியாக 1878 லிருந்து 1902 வரை சேர்ந்தமரம் பங்கின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது. அப்போது பொறுப்பாளராயிருந்த அருட்தந்தை இஞ்ஞாசி என்பவர் அதன் சுற்றுப் பகுதிகள் எல்லாவற்றிற்கும் சென்று கவனித்துக் கொண்டார். 

கி.பி 1902 லிருந்து 1906 வரை அருட்தந்தை மரியலூயிஸ் என்பவர் தென்காசி மற்றும் வீரவநல்லூரின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். இறுதியில் 1906 ல் தென்காசி பங்கினை மட்டும் கவனிக்கும் பொறுப்பினை அருட்தந்தை கௌசானல் அடிகளார் ஏற்றுப் பணியாற்றினார். 

கத்தோலிக்கக் கிறிஸ்தவத் துறவிகள் தம் சமயத்தைப் பரப்பியதோடு நின்றுவிடவில்லை. மக்கள் நோயினால் வாடியபோதும் வறுமையால் துயருற்ற போதும், அடிமை வாழ்வில் அல்லலுற்றபோதும் குரல் கொடுத்தார்கள், போராடினார்கள். அதனால் தான் தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம் சர்வேசுவரன் ஆலயம் என்று அனைத்து சமயத்தாராலும் போற்றிப் புகழப்படுகிறது. தன்னலமற்று உழைத்த அருட்தந்தையரின் ஆன்மாக்களின் கூட்டுக் கலவையாய் இமயமாய் நிமிர்ந்து இறைவனுக்கு சாட்சியாய் புகழ்பரப்பிக் கொண்டிருக்கிறது அதிதூதர் மிக்கேல் தேவாலயம்.

தற்போதைய புதிய ஆலயமானது பங்குத்தந்தையர் அருட்பணி. T. A. பெர்க்மான்ஸ், அருட்பணி. M. சூசைமாணிக்கம் ஆகியோரின் பணிக்காலத்தில் கட்டப்பட்டு, பாளை மறைமாவட்ட ஆயர் மேதகு ச. இருதயராஜ் D.D.D.C.L அவர்களால் 27.09.1985 அன்று அர்ச்சித்து புனிதப்படுத்தப் பட்டது.

திருத்தல மகிமையின் வரலாறு: 

தென்காசியில் கிறிஸ்தவத்தின் தோற்றம் கி.பி. 1663 இல் ஆரம்பமானது. இந்த ஆண்டில் தென்காசியில் ஒரு கிறிஸ்தவத் தம்பதியர் வாழ்ந்து வந்தனர். பெரும்பான்மை சமயத்தவரின் நெருக்கடிகளுக்கிடையில் விசுவாசத்தைத் தளரவிடாமல் இக்குடும்பம் விசுவாசத்தைப் பேணி வந்தனர். இச்சூழலில் இடி விழுந்தாற்போன்ற நிகழ்வொன்று இவர்களின் வாழ்வில் நிகழ்ந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள். ஒரு குழந்தை நோய்வாய்ப்பட்டு இறந்து போனது. இறந்த குழந்தையை வீட்டிற்கு அருகே அடக்கம் செய்தனர். முதல் குழந்தை இறந்த சிறிது காலத்திலேயே அடுத்த குழந்தையும் கொடிய நோயினால் மரணத்தை எதிர்கொண்டிருந்தது. இத்தகைய கொடுமையான சூழல் கிறிஸ்தவ மறையைத் தழுவியதாலேயே இவர்களுக்கு ஏற்பட்டது என இவர்களது உறவினர்களும் சுற்றத்தாரும் எள்ளி நகையாடினர். இந்தச் சூழல் இத்தம்பதியரை விசுவாசத்தில் சற்றே பின்வாங்கச் செய்தது.

அந்நாளில் அங்கிருந்த பந்தல் போன்ற சிறிய ஆலயத்தின் உபதேசியாராக இருந்த இராயப்பன் இக்குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி வந்தார். ஒரு நாள் இரவு வேளையில் இராயப்பன் இக்குடும்பத்தினரைச் சந்தித்துவிட்டு அவர்கள் வீட்டு அருகிலேயே கண்ணயர்ந்து தூங்கி விட்டார். கண்ணயர்ந்த சில நிமிடங்களில் விந்தையாக நடந்த நிகழ்வொன்று அவரை விழித்தெழச்செய்தது.

அவர் தூங்கிக்கொண்டிருந்த இடத்தைச் சுற்றி ஒளிவெள்ளம் சூழ்ந்து கொண்டது. வீடுதான் தீப்பற்றியதோ என்று அஞ்சி உதவிகோரிக் குரல் எழுப்பினார். ஆனால் கணநேரத்தில் அந்த ஒளிவெள்ளம் மறைந்து அருகில் இருந்த மரத்தின் கீழ் இரண்டு வானுலக இளைஞர்களைக் கண்டார். மின்னும் தங்கம் போன்ற நிறம் கொண்டவராய் ஓர் இளைஞன் கையில் கிதார் போன்ற இசைக்கருவியும் மற்றொருவர் கையில் ஒரு சுருளும் கொண்டவர்களாய் இருவரும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் ஓர் இளைஞன் தென்புறமாய் குனிந்து சிலுவை அடையாளம் வரைந்தார். சிலுவை அடையாளம் வரைந்த அந்த இடத்திலேதான் இறந்துபோன தங்கள் மகனை அந்த தம்பதியினர் அடக்கம் செய்திருந்தனர். என்னே ஆச்சிரியம் அடக்கம் செய்த இடத்திலிருந்து இறந்து போன குழந்தை உயிருடன் எழுந்து வந்தான்.

உபதேசியார் இராயப்பன் அவ்விரு இளைஞர்களையும் அணுகி அவர்கள் யார் என வினவிய போது அந்த இளைஞர்கள் அவரை அமைதிகாக்கச் சொல்லி சுகவீனமான குழந்தையின் பெயரைச் சொல்லி அழைத்தனர். சுகவீனமாய் இருந்த குழந்தை சுகம் பெற்று துள்ளிக் குதித்து வீட்டிலிருந்து வெளியே வந்தது. அவ்விரு குழந்தைகளின் கரங்களில் எரியும் திரிகளை தந்து விட்டு அவ்விரு இளைஞர்களும் வானகம் சென்றனர். இறந்து போன குழந்தை உயிர்பெற்று எழுந்ததையும், நோய்வாய்ப்பட்டுக் கிடந்த குழந்தை நலமடைந்ததையும் கண்ட பெற்றோர் மட்டில்லா மகிழ்ச்சியடைந்தனர். இந்நிகழ்ச்சி தென்காசி சுற்றுப்புறமெங்கும் பரவியது.

இந்நிகழ்வை இக்குழந்தைகளின் பெற்றோர், உபதேசியார் இராயப்பன் அந்நாட்களில் அங்கு திருப்பலி நிறைவேற்ற வந்துகொண்டிருந்த அருட்தந்தையர்கள் அந்தோணி தே புரோலிங்கா மற்றும் பல்தசா தே கோஸ்தா ஆகியோர் எங்கும் பறைசாற்ற ஆரம்பித்தனர். இந்நிகழ்வை கி.பி. 1666 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அருட்திரு. அந்தோணி பவோன்கா என்ற குருவானவர் எழுதிய கடிதமொன்றிலிருந்து நாம் அறிய முடிகிறது.

வானவர் வரைந்த சிலுவை அடையாளத்தைத் தன்னகத்தே கொண்ட பழைய பீடமானது இன்றளவும் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தினுள் பொலிவுடன் உள்ளது. அண்டி வந்தோரின் அனைத்துப் பிணிகளையும் போக்குபவராக இத்திருத்தல நாயகன் இருப்பதால் எல்லா மதத்தினரும் வருகை தரும் புனிதத் தலமாக இத்திருத்தலம் திகழ்கிறது. பிற சமயத்தைச் சார்ந்தவர்கள் இந்த ஆலயத்தை சர்வேசுரன் கோவில் என இன்றும் பெருமையுடன் கூறி மகிழ்கின்றனர்.

இன்றும் நம்பிவரும் அனைவருக்கும் நலன்களையும் வளங்களையும் சுகங்களையும் இறைவனிடமிருந்து பெற்றுத் தருபவராகப் புனித மிக்கேல் அதிதூதர் விளங்குகிறார்.

"நீங்களும் வாருங்கள் அதிதாதரின் அருள் பெறுங்கள்''

புனித மிக்கேல் அதிதூதரின் புகழ்பரப்பும் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது.

வீரமாமுனிவர் உயர்நிலைப் பள்ளிக்கூடம் பங்கில் உள்ளது.

அமலவை அருள்சகோதரிகள் இப்பங்கில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. மரியாயின் சேனை

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை

3. பீடச்சிறுவர்கள்

4. பெஸ்கி ஆசிரியர் கூட்டமைப்பு 

5. தூதனின் வாள்கள் -இளையோர்

6. தூதனின் கொலுசுகள் இளம் பெண்கள்

7. மறைக்கல்வி 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. Fr. Causanel SJ. 

2. Fr. A. Adaikalam 

3. Fr. J. Michaelnathar 

4. Fr. M. Pappaya SJ. 

5. Fr. A. Deur SJ. 

6. Fr. S. Iruthayam 

7. Fr. J.S. Jeyapathy SJ.

8. Fr. V.M. Joseph SJ. 

9. Fr. M.S. Salette 

10. Fr. T.A. Berchmans

11. Fr. S.L. Josephraj 

12. Fr. S. Arulraj 

13. Fr. A. Amirtharaja Sundar 

14. Fr. Antonyraj

15.  Fr. Viagapparaj N.

16. Fr. Sahaya Chinnappan 

17. Fr. Bosco Gunaseelan P

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. போஸ்கோ குணசீலன் அவர்களின் வழிகாட்டுதலில் உதவிப் பங்குத்தந்தை அருள்பணி. சதீஷ் செல்வதயாளன் அவர்கள்.