625 புனித அன்னை தெரசா ஆலயம், வல்லனி

          
புனித அன்னை தெரசா ஆலயம் 

இடம்: வல்லனி, சிவகங்கை அஞ்சல், 630561

மாவட்டம்: சிவகங்கை 

மறைமாவட்டம்: சிவகங்கை

மறைவட்டம்: சிவகங்கை 

நிலை: பங்குத்தளம் 

கிளைப்பங்குகள்:

1. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், காட்டுச்சூரை  

2. வாழவைக்கும் வேளாங்கண்ணி மாதா ஆலயம், நாட்டரசன்கோட்டை 

3. புனித அந்தோனியார் ஆலயம், வந்தவாசி

4. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், குயவன்நடப்பு 

5. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், காட்டுப்புலி

6. சாத்தனி (ஆலயம் இல்லை) 

பங்குத்தந்தை : அருட்பணி. S. லூர்துராஜ் 

ஜெபதேவைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு பங்குத்தந்தையின் கைப்பேசி எண்கள் :

9443498686

6382184058

குடும்பங்கள் : 230 

கிளைப்பங்குகள் :
காட்டுச்சூரை 74,
நாட்டரசன்கோட்டை 15,
வந்தவாசி 12,
குயவன்நடப்பு 3,
சாத்தனி 5,
காட்டுப்புலி 1

அன்பியங்கள்: 10

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி 

செவ்வாய் மாலை 06:00 மணி புனித அந்தோனியார் நவநாள், திருப்பலி 

வியாழன் மாலை 06:00 மணி குழந்தை இயேசு நவநாள், திருப்பலி 

முதல் வெள்ளி மாலை 06:00 மணி நற்கருணை ஆராதனை (ஒரு மணி நேரம்) தொடர்ந்து திருப்பலி 

முதல் சனி மாலை 06:00 மணி திருப்பலி 

கிளைக் கிராமங்களில் தேவையின் அடிப்படையிலும், மாதத்திற்கு ஒரு தடவை வார நாட்களில் (புதன், வெள்ளி, சனி) திருப்பலி நடைபெறும்.

திருவிழா: செப்டம்பர் மாதம் 05 -ம் தேதி. 

வழித்தடம்: சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்து 5கி.மீ தொலைவில் வல்லனி அமைந்துள்ளது. 

சிவகங்கை -தொண்டி சாலையில் -ஆயுதப்படைபிரிவு -வல்லனி 

Location map : https://g.co/kgs/7mGMrZ

வரலாறு :

புனித அன்னை தெரசா ஆலயம் கடந்து வந்த பாதை:

சுமார் 30 ஆண்டுளுக்கு முன்னால் இப்பகுதி முழுவதும் 2கி.மீ சுற்றளவிற்கு கருவேல மரங்கள் நிறைந்த ரோஸ் நகர் பகுதியில் திருவாளர். மத்தியாஸ் அவர்கள் குடியேறி ஒரு சிறிய ஓட்டினாலான தூய ஆரோக்கிய மாதா கெபியை கட்டினார்கள். 1993-ம் அண்டு 4,5 கிறிஸ்தவ குடும்பங்கள் இந்தப் பகுதியில குடியேறின. அப்போது புனித அலங்கார அன்னை பேராலயப் பங்கில் பங்குத்தந்தையாக இருந்த அருள்தந்தை. பிரான்சிஸ் சேவியர் அவர்கள் அப்போதைய ஆயர் மேதகு எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களின் அனுமதியோடு ஞாயிறு திருப்பலி, ஞாயிறு மாலை 05:00 மணிக்கு நிறைவேற்றி வந்தார்கள்.  2005-ல் 40 கிறிஸ்தவ குடும்பங்களுக்கு மேல் வரத் தொடங்கிய நிலையில் இப்பகுதி சிவகங்கை பேராலயத்திற்கு ஒரு சிறிய கிளை கிராமமாக உருவானது. அப்போது 2006-ல் மேதகு ஆயர். செ. சூசைமாணிக்கம் அவர்களிடம், இப்பகுதி மக்கள் ஒன்று கூடி இப்பகுதிக்கு ஒரு சிற்றாலயம் தேவை என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் மக்களின ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்ய அமலவை அருட்சகோதரிகளின் சிற்றாலயத்தில் ஞாயிறு திருப்பலிக்கான ஏற்பாடு செய்தார்கள். அதன் பிறகு கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தன. அதனடிப்படையில், 2015-ல் இந்தப்பகுதிக்கு ஆலயமும், பங்கும் தேவை என்று கருதி கோரிககை வைக்கப்பட்டது. அதனடிப்படையில் காட்டுச்சூரை, குயவநடப்பு, வந்தவாசி, காட்டுப்புளி, சாத்தனி, வல்லனி, நாட்டரசன்கோட்டை மற்றும் ரோஸ்நகர் பகுதியை உள்ளடக்கிய தனிப்பங்காக உருவாக்க ஆவண செய்வதற்கு அருள்தந்தை. ட. அமல்ராஜ் அவர்களை நியமித்தார்கள்.  

ஆயர் அவர்களும் கருணையோடு பரிசீலித்து, 2016-ல் அமலவை அருட்சகோதரிகளின் சிற்றாலயத்தில் மாலையில் நடைபெற்ற ஞாயிறு திருப்பலியில், அப்போதைய பங்குத்தந்தையாக பணிபுரிந்த அருள்தந்தை. டெல்லஸ அவர்கள், ரோஸ்நகர் பகுதிக்கு, புதிய பங்கு உருவாவதற்கு ஆயரின் அனுமதி கிடத்துவிட்டது, என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார்கள். அதற்கு முயற்சி எடுத்த அனைவருக்கும் நன்றிகள் பல. அன்று முதல் வல்லனி பங்கு உருவானது. 29.06.2016-ல் ஆயர் அவர்கள் முறையாக அறிவித்தபின் 03.07.2016-ல் புதிய பங்கு ஆலயமாக, அதுவும் புனித அன்னை தெரசாவின் பெயரில் ஆயர் அவர்களால் உதயமானது. முதல் பங்குத்தந்தையாக அருள்தந்தை. தாமஸ் பரிபாலன் அவர்கள் பொறுப்பேற்றார். 

அதற்குப்பிறகு, 26.05.2018-ல்  அருள்தந்தை. S. லூர்துராஜ் அவர்கள், 2-வது பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்கள்.   

எஸ்ரா 4:3-ல் “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோவில் கட்டுவோம்”, என்ற வலிமை மிகு இறைவார்த்தை 15.09.2019-ல் நிறைவேறிய நாள். அன்று மேனாள் ஆயர் மேதகு செ. சூசைமாணிக்கம் அவர்களின் ஆசீரோடு பேரருள்தந்தை முனைவர். ஜோசப் லூர்து ராஜா அவர்களால், வல்லனி பங்கின் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அன்று கருவாகிய இவ்வாலயம் இன்று உருவாகி உயர்ந்து நிற்கிறது என்பதை பெரு மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றோம். 

1அரசர் 8:13-ல் உள்ளபடி “ நீர் என்றென்றும் தங்கி வாழ உயர் இல்லம் ஒன்றை உமக்காக நான் கட்டியுள்ளேன்” என்ற இறைவார்த்தைக்கு வடிவம் தந்தவர், இதற்காக முழுமூச்சாக உழைத்தவர் பங்கின் பாசமிகு பங்குத்தந்தை அருள்தந்தை. S.லூர்து ராஜ் அவர்கள். தூய பவுல அடியார் தமது மடல்களில் கூறுவதுபோல, ஆறுகளால் இடர்கள், கப்பலில் இடர்கள் என்று பல்வேறு இடர்களை பட்டியல் போடும் பவுல் அடியார் போல, வான் உயர நிமிர்ந்து நிற்கும இவ்வாலயம் கட்டி முடிக்க பல இடர்கள் வந்தது. கொரோனா தொற்றால் ஆலயப்பணி முடக்கப்பட்டது. அதனால், பல நல்ல உள்ளங்களின் மனமும் முடக்கப்பட்டது. தொடர்ந்து விலைவாசி ஏற்றமும் சேர,  மிகப்பெரும் தடுமாற்றம்.  “நொடிப்பொழுது தான் கைவிட்டேன், நானே உங்களை தோளில் தூக்கி சுமப்பேன்” என்ற இறைவார்த்தைக்கேற்ப தகுந்த நேரத்தில், தகுந்த மனிதர்களை இனம் கண்டு, பல நல்ல உள்ளங்கள் மூலம் அழகாய், ஓவியமாய், ஓங்கி உயர்ந்து நிற்கின்றது இந்த அழகிய ஆலயம். 

இறைவன் முதலும்; முடிவுமாய் இருக்கின்றார் என்பதை தெளிவுபடுத்தும் விதத்தில், ஆலயத்தின் பலிபீடத்தின் இருபுறத்திலும், ஆல்ஃபா, ஒமேகா என்ற  குறியீடுகள் பொறிக்கப்ப்ட்டுள்ளது. திருச்சபையின் அடித்தளமாக அமைந்துள்ள 12 திருத்தூதர்களின் திரு உருவங்கள் பொறிக்கப்பட்டு, அன்னை மரியாளை மகிமைப்படுத்தும் விதமாக 20 தேவ இரகசியங்கள் அடங்கியது இத்தேவாலயம். பார்ப்பதற்கு பரவசமூட்டுவதாய், கண்களுக்கு களிப்பூட்டுவதாய், மனங்களுக்கு நிறைவளிப்பதாய், ஜெபிப்பதற்கு இறை வேண்டலின் இல்லமாய், வல்லனி கிராமத்தில் உதித்த வசந்த காலமாய், வலசையாக வந்து செல்லும் ஆன்மீக தாகம் கொண்டவர்களுக்கு நிறைவளித்து அனுப்புவது இவ்வாலயம. 

மேலும், ஆலயத்தில் திருஅவையின் அருள் அடையாளங்களும் மற்றும் ஆலயத்தின் பலிபீடத்தின் முன்பாக  இராஉணவும், ஆலயத்தின் கதவுகளில் புனிதர்களுடைய திரு உருவங்களும், குறிப்பாக ஆலயத்தின் நுழைவுவாயில் கதவுகளில்  பங்கின் பாதுகாவலி புனித அன்னை தெரசாவின் திருமுகமும், நற்கருணை நாதரும் பொறிக்கப்பட்டுள்ளது, நம் கண்களுக்கு விருந்தாகவும், ஆன்மீக  சூழ்நிலையை உருவாக்குவதாகவும் அமைந்துள்ளது. அன்னை தெரசவின் புனிதப்பண்டம் அதாவது, திருப்பண்டம் கல்கத்தாவில் இருந்து கிடைக்கப்பெற்றது, பங்கிற்கு மிகப்பெரும் பெருமையும் பேரும் ஆகும். ஆதனால, எத்தனையோ மக்கள் வந்து போவதற்கும் அன்னையின் ஆசிர் பெறுவதற்கும், இரக்கச்செயல்கள் செய்வதற்கும் ஒரு வாய்ப்பாக உள்ளது. 

பங்குதந்தை அருட்பணி. S. லூர்து ராஜ் அவர்களின் முயற்சியால், வல்லனி இறைசமூகத்தின் ஒத்துழைப்புடன் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 28.09.2023 அன்று மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, சிவகங்கை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு செ. சூசை மாணிக்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

வல்லனி பங்கிலிருந்து தற்போது இறையழைத்தல் பெற்று, பலர் துறவற மடங்களில் பயின்று வருகின்றனர். 

1. சகாய அன்னை 

2. அந்தோனியார் 

3. மிக்கேல் அதிதூதர் 

4. அன்னை தெரசா   

5. பாத்திமா அன்னை, 

6. குழந்தையேசு 

7. ஆரோக்கிய அன்னை, 

8. லூர்து அன்னை 

9. அசிசியார் 

10. அருளானந்தர் -ஆகிய பத்து அன்பியங்களும் பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. பங்குப் பேரவை 

2. அன்பியங்கள் 

3. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

4. மரியாயின் சேனை 

5. அன்னை தெரசா இளையோர் இயக்கம் 

6. அன்னை தெரசா செபக் குழு 

7. குடும்ப நல வாழ்வு பணிக்குழு

8. திருவழிபாட்டு பணிக்குழு

9. இயேசுவின் கண்மணிகள்.

புனித அன்னை தெரசாவின் பொன்மொழிகள்:

நான் பிரார்த்தனையை விட சேவையை நம்புகிறேன். கடவுளை அடைய இதுவே நான் கண்டுபிடித்திருக்கிற சுலபமான வழி.

செபம் செய்து பாருங்கள் நீங்கள் கடவுள் அருகில் போவீர்கள். சேவை செய்து பாருங்கள் கடவுளே உங்களருகில் வருவார். 

ஒவ்வொரு முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களின் திறப்பு விழா என்பது நற்கருணைப்பேழை திறப்பு விழாவிற்கு சமம்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. S. லூர்து ராஜ் அவர்கள்.