175 புனித காணிக்கை மாதா ஆலயம், இரவிபுதூர்கடை

    

புனித காணிக்கை மாதா ஆலயம்

இடம் : இரவிபுதூர்கடை

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம்: குழித்துறை 

மறைவட்டம் முளகுமூடு

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : புனித சூசையப்பர் ஆலயம், மஞ்சாடி

பங்குத்தந்தை அருட்பணி. ஜோஸ் பிரசாந்

குடும்பங்கள்: 88

அன்பியங்கள்: 4

ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி 

செவ்வாய்க்கிழமை மாலை 06:30 மணி புனித அந்தோணியார் குருசடியில் திருப்பலி. 

திருவிழா: மே மாதம் மூன்றாவது வாரத்தில் புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறும் வகையில் 5 நாட்கள்

மண்ணின் இறையழைத்தல்:

அருட்பணி. பிரடின், OMD

வழித்தடம்: நாகர்கோவில் -திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில், இரவிபுதூர்கடை சந்திப்பிலிருந்து இடதுபுறமாக, பயணம் ஊர் செல்லும் வழியில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Location map: Our Lady Of Presentation Church

https://g.co/kgs/K4JJ9SG

வரலாறு:

இரவிபுதூர்கடை என்னும் உள்நாட்டு மீனவ கிராமத்தில் அமைந்துள்ள, புனித காணிக்கை மாதா ஆலய வரலாற்றைக் காண்போம்..

கடற்கரை கிராமங்கள், இறைவன் கொடுத்த சொத்தாகிய கடலிலிருந்து பிடித்து வரும் மீன்களை, உள்நாட்டின் மீனவர் வாங்கி வந்து விற்றுப்பிழைத்து வரும் காலங்களில், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் ஓர் நாள் இரவிபுதூர்கடை முன்னோர் மீன்வாங்க குளச்சலுக்குச் சென்ற போது, பேழை ஒன்று கடலிலே மிதந்து, அலைகளிலே தவழந்து வருவதை, கடற்கரை கிராமங்களும் மீன்வாங்கச் சென்ற அனைத்து கிராம மக்களும் பார்த்து இரசித்த வண்ணம் நின்றிருந்தனர்.

சற்று நேரத்தில் பேழையானது கரைநோக்கி நகர்ந்து வருவதைக் கண்ட மக்கள் எல்லோரும், அதனைப் பிடிக்கும் ஆர்வத்தில் கடலிலே இறங்கினார்கள். கைகளுக்கருகில் வருவது போல் வந்து வந்து எவர் கைக்கும் பிடிகொடுக்காமல் அலைகளிலே அசைந்தாடிக் கொண்டிருந்தது அந்த அற்புதப் பேழை.

குளச்சல் மக்களும் கடலிலே இறங்கி பேழையைப் பிடிக்க பலமுறை முயன்றனர், முடியாமல் திகைத்தனர். அப்போது தான்அதிசயம் ஒன்று நிகழத் தொடங்கியது. ஆம்! இரவிபுதூர்க்கடையிலிருந்து சென்ற மக்களும் கடலிலே இறங்கி பேழையைப் பிடிக்க முயன்றனர். என்னே அன்னையின் அருள்? அடுத்த நொடிப்பொழுதே கைக்குக் கிடைத்த பேழையுடன் கரையை அடைந்தனர். காத்திருந்தோர் அனைவர் முன்பாகவும் பேழை திறக்கப்பட்டது. கண்கொள்ளா அற்புதக் காட்சி! பேழையினுள் அன்பு அன்னையின் அழகிய சுருபம்.

ஒவ்வொரு ஊராரும் தனக்கு தனக்கு என்று ஆரவாரம் செய்தனர். குளச்சல் மக்களோ தமக்குத் தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடத் தொடங்கினர். தமது கையால் கிடைக்கப்பெற்றது தமக்குத் தான் என்று இரவிபுதூர்க்கடை மக்கள் வாதாடினர். ஆக போட்டியும் வலுப்பெறவே, அங்கிருந்த அனைத்து மக்களின் ஊர்பெயரையும் எழுதி, சீட்டுப்போட்டு குலுக்கல் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மீண்டும் அதிசயம் நிகழத் தொடங்கியது. ஆம்! குலுக்கி எடுத்த சீட்டும் இரவிபுதூர்க்கடை என்றே கிடைக்கப்பெற்றது. கண்டு வியந்த மக்கள், வேறுவழியின்றி அனைவரும் ஆமோதிக்க அன்னை, காணிக்கை அன்னையாக இரவிபுதூர்க்கடையில் குடிபுகுந்தாள். 

கடல் கடந்து இந்த ஊரைத் தேடி ஓடி வந்த அன்பின் அன்னைக்கு, இரவிபுதூர்கடை முன்னோர் அனைவரும் இணைந்து சிற்றாலயம் ஒன்று அமைத்து வழிபடத் தொடங்கினர்.

அந்த நாள் முதல் இங்கு வாழ்ந்து வந்த ஏழைகள் ஏற்றம் பெற்றனர். நோய்கள் நீங்கப்பெற்றனர். பேய்கள் ஓடி ஒழிந்தன. மனங்கள் தெளிவுப்பெற்று குடும்பங்கள் பெருகின. பள்ளியாடி பங்குத்தளத்தில் பத்தில் ஒன்றாக விளங்கிய ஆலயம், 1980-ஆம் ஆண்டு காஞ்சிரகோடு தலத்திருச்சபையோடு இணைக்கப்பட்டது. I.M.S. சபைக்குருக்களின் வழிகாட்டலில் படிப்படியாக வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்தது.

அருட்பணியாளர். ரூபன் அடிகளார் சிந்தனையில் காணிக்கை அன்னைக்கு அழகியதோர் ஆலயம் எழுப்புதல் பற்றிய எண்ணங்கள் கனிந்திட, இறைமக்களின் துணையோடு கட்டி எழுப்பப்பட்ட ஆலயமானது, எதிர்பாராத விதமாக மழையின் தாக்கத்திற்கு உள்ளாகிய சுவரின் நிலை கண்டு, 2013-ஆம் ஆண்டு ஆலய கூரையை மாற்றி, காங்கிரீட் கூரையும், சற்று அகலமாக்கிட சுவற்றுக்கு வெளியே தூண்களும் அமைத்து நிலை நிறுத்தப்பட்டது.

ஆண்டுகள் உருண்டோடின. 2014 ஆம் ஆண்டு குழித்துறை மறைமாவட்டம் மலர்ந்தது. ஊருக்கும் புதிய வாழ்வு புலர்ந்தது. அருட்பணியாளர். சுஜின் வருகை பங்கில் புத்தெழுச்சியைத் தந்தது. ஆலயத்தை முழுமை ஆக்கிட அனைவரையும் சந்தித்து ஆர்வமூட்டப்பட்டது.

24.05.2017 அன்று மஞ்சாடி புனித சூசையப்பர் ஆலயம் தனிப் பங்காக ஆனபோது, இரவிபுதூர்கடை ஆலயமானது மஞ்சாடியின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி. ஏசுரெத்தினம் அடிகளாரின் வருகை தூய காணிக்கை அன்னையின் அளவிடற்கரிய அற்புதம், இறைமக்களின் பங்களிப்புடன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் அழகிய ஆலயம் கட்டப்பட்டு, 13.05.2018 அன்று மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் கரங்களால் அர்ச்சிக்கப்பெற்றது.

30-05-2018 அன்று முதல் அருட்பணி. ஜார்ஜ் கிளமென்ட் அவர்களின் பொறுப்பிலும், தொடர்ந்து 2022 ஜூன் முதல் அருட்பணி. ஜோஸ் பிரசாந் அவர்களின் வழிகாட்டலிலும், புனித காணிக்கை அன்னையின் பாதுகாவலிலும், பராமரிப்பிலும் ஆன்மீகப் பாதையில் பயணித்து வருகிறது இரவிபுதூர்கடை இறைசமூகம். 

ஆலய பங்கேற்பு அமைப்புகள்:

மரியாயின் சேனை

மீனவர் சங்கம்

அடித்தள முழுவளர்ச்சி சங்கம்

பாலர் சபை

இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

இளைஞர் இயக்கம்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ஜோஸ் பிரசாந் அவர்கள்.