374 தூய காவல் தூதர்கள் ஆலயம், மேல்புறம்


தூய காவல் தூதர்கள் ஆலயம்.

இடம் : மேல்புறம், பாகோடு (PO)

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
மறை வட்டம் : திரித்துவபுரம்

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள் :
1. தூய சவேரியார் ஆலயம், வட்டவிளை
2. தூய லூர்து அன்னை ஆலயம், பரக்கோணம்

பங்குத்தந்தை : அருட்பணி M. ஆல்வின் விஜய்

குடும்பங்கள் : 310
அன்பியங்கள் : 10

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு

புதன் மாலை 05.45 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி

சனி காலை 06.15 மணிக்கு சிறார் திருப்பலி.

திருவிழா : அக்டோபர் மாதம் 02 -ம் தேதி.

மண்ணின் மைந்தர்கள் :
Fr மேரி ஜாண்
Fr மரிய செல்வராஜ்
Fr சவரிநாதன் (late)

Sr பியூலா பிளாரன்ஸ் சிசிலியா.

ஆலய இணையதளம் : http://www.holyguardianangels.com

வழித்தடம் : மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து தடம் எண் 86C, 86B, 86G, 86, 85D இறங்குமிடம் மேல்புறம்.


வரலாறு :

"இறையருளின் இல்லமாய்...
இறையுணர்வின் அடையாளமாய்...
உறவுகளின் சங்கமமாய்...
உயர்ந்து நிற்பதே ஆலயம்.. "
என்னும் வார்த்தைக்கேற்ப, 97 ஆண்டுகளுக்கு முன்னர் மேல்புறம் மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாய் தோன்றிய தூய காவல் தூதர்கள் ஆலயத்தையும் அதன் சிறப்புகளையும் காண்போம்..!

இந்தியத் திருநாட்டின் தென்கோடியில் முக்கடலும் சங்கமிக்கும், காலையும் மாலையும், சூரியனும் சந்திரனும் சந்திக்கும் கண்கொள்ளா காட்சிதனை தன்னகத்தே கொண்டுள்ள குமரி மாவட்டத்தில், முக்கனிகள் சூழ்ந்திருக்கும், தமிழும் மலையாளமும் கூடிக் குலவும், எழில் கொஞ்சும் விளவங்கோடு வட்டத்தில், இடைக்கோடு, பாகோடு, மருதங்கோடு, வெள்ளாங்கோடு ஆகிய பேரூர்களின் எல்லையாகவும் மையமாகவும், வளம் கொழிக்கும் வற்றாத நீர்நிலைகள், வயல்வெளிகள், பசும் மரச் சேலைகளின் ஊடே உலா வரும் தென்றல் என அழகான ஊராம் மேல்புறத்தில், முன்னோர்களின் நற்றவத்தால், உழைப்பால் குமரி மாவட்டத்தில் காவல் தூதர்களின் பெயரால் தோன்றிய முதல் ஆலயமும் இதுவே.

ஆலய தோற்றம் :

திரித்துவபுரம் மறை வட்டத்தின் திரித்துவபுரம் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை இன்னாசென்ட் அவர்களின் முழுமுதற் முயற்சியாலும் அயரா உழைப்பாலும், தூய காவல் தூதர்கள் ஆலயம் கட்டப்பட்டு 02-10-1923 அன்று அருட்தந்தை இன்னாசென்ட் அவர்களாலேயே அர்ச்சிக்கப் பட்டது.

இவ்வாலயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போது அருட்தந்தை இன்னாசென்ட் அவர்கள்...
"சொந்த தேசம் இத்தாலி..
சுற்றும் தேசம் மேல்புறம்..
கட்டும் கோவில் ஐப்புறம்..
கடவுள் வாசம் மேல்புறம்.. " -என்ற பாடலை பாடிக் கொண்டே ஆலய கட்டுமானப் பணிகளை கவனிப்பாராம்.

ஆலய அமைப்பு :

ஆலயச் சுவர்கள் கருங்கல்லால் ஆனது. ஆலய பீடத்தின் பின்புற சுவற்றில் கட்டப்பட்டிருக்கும் துணித் திரையில் இத்தாலி நாட்டு கலை நயத்துடன் வண்ணம் தீட்டப்பட்ட தூய காவல் தூதர்கள் அழகோவியமானது, காலமாற்றத்தால் சுவர் ஓவியமானது.

தனிப்பங்கு :

1936 -ல் பாக்கியபுரம் தனிப்பங்காக உயர்த்தப்பட்ட போது மேல்புறம் அதன் கிளைப் பங்கானது. 1967 ல் கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு ஆஞ்ஞி சுவாமி அவர்களால் மேல்புறம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, மஞ்சாலுமூடு (லூர்துகிரி), பிலாவிளை ஆலயங்கள் மேல்புறத்தின் கிளைப்பங்குகளாயின.

1975 -ல் மஞ்சாலுமூடு (லூர்துகிரி) தனிப்பங்கான போது பிலாவிளை அதன் கிளைப்பங்கானது.

மேதகு ஆயர் ஆரோக்கிய சாமி அவர்களால் திரித்துவபுரத்தின் கிளைப்பங்குகளாக இருந்த வட்டவிளை, பரக்கோணம் ஆலயங்கள் மேல்புறத்தின் கிளைப் பங்குகள் ஆயின.

புதிய ஆலயம் :

ஆலயத்தின் பவளவிழா (75ஆண்டுகள்) 1998 -ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் ஆலயத்தின் பழமை, பங்கின் வளர்ச்சி காலமாற்றத்தின் காரணமாக புதிய ஆலயம் அமைக்கும் எண்ணம் மக்களின் மனதில் தோன்ற, அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி ச. மரிய இராஜேந்திரன் அவர்களால் 30-01-2000 அன்று நடந்த பங்கு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 10-06-2000 அன்று பேரருட்பணி தேவசகாயம் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டு, கட்டுமானப் பணிகள் ஆரம்பமானது.

பங்கு மக்களின் பேராதரவும், உடனுழைப்பும், அர்ப்பண உள்ளமும் ஆலயப் பணிகளை துரிதப்படுத்தின.

மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மத ஒற்றுமைக்குச் சான்றாக ஆலயத் தோற்றம் அழகுற அமைக்கப்பட்டு 2012- ம் ஆண்டு அக்டோபர் 02 -ம் தேதி மேதகு ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்களின் நல்லாசியுடன், மறை மாவட்ட குருகுல முதல்வர் அருட்பணி ஜான் குழந்தை அவர்களால் புதிய ஆலயம் அர்ச்சிக்கப் பட்டது.

15-06-2006 முதல் அருட்பணி ஜோசப்ராஜ் அவர்களும்,
21-10-2006 முதல் அருட்பணி மரிய செல்வராஜ் அவர்களும்
03-06-2007 முதல் அருட்பணி ஜெனிபர் எடிசன் அவர்களும்,
05-06-2013 முதல் அருட்பணி பிரைட் சிம்சராஜ் அவர்களும் சிறப்பாக பணிபுரிந்து பங்கை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்தினார்கள்.

தற்போது 03-05-2018 முதல் அருட்பணி ஆல்வின் விஜய் அவர்கள் பங்குத்தந்தையாக செயல்பட்டு பல ஆக்கப் பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

Holy Angel's Matric school ( LKG to 10th std ) சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இன்று மேல்புறம் பங்கு பல்வேறு பயிற்சிகளாலும், முயற்சிகளாலும் முதிர்ச்சி பெற்று கல்வி, கலை, ஆன்மீகம் என அருட்பணியாளர்களின் அர்ப்பண செயல்களாலும் தழைத்தோங்கி உயர்ந்து நிற்கிறது. தொடர்ந்து தூய காவல் தூதர்களின் அருட்துணையும் தூய அன்னை மரியாவின் இடைவிடா வேண்டலும் இறை இயேசுவின் உடனிருப்பும் மேல்புறம் பங்கினை என்றென்றும் வழிநடத்திச் செல்லட்டும்..!