இடம் : தெற்கு இராமனாதிச்சன்புதூர்
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித இஞ்ஞாசியார் ஆலயம், வடக்கு இராமனாதிச்சன்புதூர்.
பங்குத்தந்தை : அருட்பணி ஜான் பெல்லார்மின்
குடும்பங்கள் : 320
அன்பியங்கள் : 9
ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணிக்கு
வியாழன் திருப்பலி : மாலை 06.00 மணிக்கு
திருவிழா : ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் ஆரம்பித்து பத்து நாட்கள் நடைபெறும்.
மண்ணின் மைந்தர்கள் :
Fr. Jesu Rajan OCD,
Bro. Jio Jonics,
Bro. Antony Jose,
Bro. Antony Jaison.
வழித்தடம் : நாகர்கோவில் - இராமனாதிச்சன்புதூர்.
பேருந்து எண் 30B.
இராமனாதிச்சன்புதூரில் கிறிஸ்தவம்
இராமனாதிச்சன்புதூர் ஊரானது பசும் புல்வெளிகளையும், உயரமான தென்னை மரங்களையும், நீண்ட நதியையும், உயரமான மலையையும் சுத்தமான நீரையும், புத்துணர்ச்சி தரும் தூய்மையான காற்றையும் கொண்டு விளங்குகின்ற அழகிய ஊராகும்.
இங்கு வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவமக்கள், இரு புனிதர்களால் ( St. Ignatius - புனித இஞ்ஞாசியார் மற்றும் St. Roch - புனித ஆரோக்கியநாதர் ) ஆசிர்வதிக்கப்பட்டு வழி நடத்தப்படுகின்றனர்.
இராமனாதிச்சன்புதூர் கத்தோலிக்க கிறிஸ்தவம் மிகப் பழமையான வரலாற்றைக் கொண்டது. முன்பு நாஞ்சில் நாடு என்றழைக்கப்பட்ட இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் மற்றும் இராமபுரம் ஊர்களுக்கு இடையே இருந்து, தற்போது அழிந்துவிட்ட வண்டிக்காரன்புதூர் என்னும் ஊரைச் சேர்ந்த, நரசிங்கம்பிள்ளை 1690 (இவரின் மகனான நல்லதம்பியாபிள்ளை தான் இராமனாதிச்சன்புதூரில் முதன்முதலில் குடியேறியவர்) மேலும் தற்போதைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் காமநாயக்கன்பட்டி பகுதி குருவிநத்தம் ஊருக்கு அருகேயுள்ள செக்காரக்குடியைச் (செக்காலைக்குடி) சேர்ந்த செட்டிப்பிள்ளைமார் இனத்தின் தவிடன் செட்டியார் 1660, மற்றும் பாளையங்கோட்டைக்கு அருகில் உள்ள விட்டில்லாபுரம் ஊரைச் சேர்ந்த சிதம்பரம்பிள்ளை 1720 (முதன்முதலாக வடக்கன்குளத்தில் குடியேறியவர் - மறைசாட்சி தேவசகாயம் பிள்ளையின் ஞானத்தந்தை) இம்மூன்று பிற சமய நபர்கள் தான் இவ்வூரின் ஆதி மூதாதையர்கள்.
நரசிங்கம்பிள்ளையின் மகன் நல்லதம்பி பிள்ளையின் மனைவி சுவாமியடியாள். இவர் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த வாலியூர் கருங்குளம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் சகோதரர்கள் 8 பேர். அவர்கள் மதம் மாறவில்லை. நல்லதம்பியா பிள்ளையின் மகன் சவரிமுத்துபிள்ளை மற்றும் நல்லுப்பிள்ளை என்கிற நல்லதம்பி பிள்ளை. சவரிமுத்துப்பிள்ளை தவிடன் செட்டியார் பேத்தியாகிய மாதவடியாளை மணந்து குருவிநத்தத்தில் குடியேறினார்.
அவரின் சந்நதிகள் வழியாக குருவிநத்தத்தில் குடும்பங்கள் பெருகின. அடுத்து நல்லுப்பிள்ளை என்கிற நல்லதம்பிபிள்ளை குடும்பத்தோடு வடக்கன்குளத்தில் குடியேறினார். நல்லதம்பிபிள்ளையின் முதல் மனைவி பெயர் அன்னமரியாய். இவர்களுக்கு 11 குழந்தைகள்.
இரண்டாம் மனைவி சவரிமுத்து. இவர் தேரூர் உடையார் போத்தியின் மகள்.
நல்லதம்பிபிள்ளை சவரிமுத்து தம்பதியருக்கு 10 குழந்தைகள் ஆக மொத்தம் 21 குழந்தைகள்.
இவர்களில் பலரின் குடும்பம் மீண்டும் இராமனாதிச்சன்புதூருக்கு குடி வந்திருக்கவேண்டும். அதேபோல் வடக்கன்குளம் சிதம்பரம்பிள்ளையின் (ஞானப்பிரகாசம் பிள்ளை) வாரிசுகளோடு சம்பந்தம் கலந்து பல்கி பெருகியது. நாளடைவில் இவரது அண்ணன் சவரிமுத்துப் பிள்ளையின் குடும்பமும் இவரோடு சேர்ந்தது. இராமனாதிச்சன்புதூரில் முதல் கிறிஸ்தவரான நரசிங்கம்பிள்ளையின் மகன் நல்லதம்பியாபிள்ளை குடியேறும் முன்பாகவே அங்கு பிற சமய குடும்பங்கள் இருந்தன என்பது செவிவழி வரலாறு.
இராமன் ஆதித்தன் (அல்லது இராமன் ஆதிச்சன்) என்னும் அரசனால் தோப்பூரில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயில் (அன்றைய காலத்தில் மருங்கூர்) எழுப்பப்பட்டு அதை பராமரிக்க அரசனால் அவர் பெயராலே (இராமனாதிச்சன்புதூர்) ஒரு ஊர் உருவாக்கப்பட்டு, அங்கு அரசனால் கோயில் பணிகளை செய்வதற்காக மக்கள் குடியமர்த்தப்பட்டனர். இவர்களோடு நல்லதம்பியாபிள்ளையின் குடும்பமும் சேர்ந்து பலுகி பெருகியிருக்க வேண்டும்.
நாளடைவில் அருகில் உள்ள ஊர்களான இராமபுரம் இராஜாவூர் போன்ற ஊர்களுக்கும் சென்று குடியேறியிருக்க வேண்டும். இவை இந்த நல்லதம்பி பிள்ளையின் குடும்பத்தோடு சேர்ந்து ஏற்கனவே இராமனாதிச்சன்புதூரில் இருந்தவர்களும் கிறிஸ்தவ வேதத்தை ஏற்றனர். இவர்களுக்கும் வடக்கன்குளம் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தையர்கள் மேய்ப்புப் பணியாற்றி வந்தனர்.
இன்று பழைய ஆலயம் இருக்கும் இடத்தில் மரியன்னையின் பெயரில் இவர் காலத்தில் ஓலைக் குடிசைக் கோவில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து இராமபுரம், இராஜாவூர் ஆகிய இடங்களில் மாதா ஆலயங்கள் அமைக்கப்பட்டன.
தொடந்து வந்த கால கட்டங்களில் கோட்டாறிலிருந்து குருக்கள் வந்து இராமனாதிச்சன்புதூரில் மேய்ப்புப் பணிகளை செய்தனர். அருட்தந்தை பெர்னாட் டி சூசா இயேசு சபை மாகாணத் தலைவரால் திருவிதங்கோட்டின் உள் பகுதிகளில் மறைப்பரப்பு பணிக்காக அனுப்பப்பட்டிருந்தார்.
அருட்தந்தை பெர்னாட் டி சூசா வடக்கன்குளத்தை முதல் தலைமையிடமாகக் தெரிந்து கொண்டார். அது மதுரை அரசுக்கும் திருவிதாங்கோடு அரசுக்கும் எல்லையாக இருந்தது. இதனால் இருபுறத்திலிருந்தும் துன்புறுத்தப் படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என அவர் கருதினார். அந்த பகுதியில் இருந்த சின்ன தலைவர் சிறுவல்லி பிள்ளையிடம் அனுமதி பெற்று அந்த காலத்தில் பிரபலமாக இருந்த மருங்கூரில் ஒரு ஆலயமும், இல்லமும் கட்டினார்.
இந்த மையத்திலிருந்து 1699 ஆண்டு ஒரு சிலரை கிறிஸ்தவர்களாக்கி புதிய மலபார் மறைப்பரப்பு தளத்திற்கு கொண்டுவந்தார். 1705 ஆம் ஆண்டு அருட்தந்தை பீட்டர் மார்டீன் அடிகள் அவர்கள், அருட்தந்தை பெர்கீஸ்-க்கு பதிலாக மருங்கூர் வந்தார். 1705 ஆம் ஆண்டு நேமம் ஒரு தனி மறைப்பரப்பு தளமாக உருவாக்கப்பட்டது. மருங்கூர் மற்றும் வடக்கன்குளம் ஆகிய இரண்டும் மதுரை மறைப்பரப்பு தளத்திலிருந்து நேமம் மறைப்பரப்பு தளத்தோடு இணைக்கப்பட்டன.
1708-க்கும் 1709-க்கும் இடைப்பட்ட காலத்தில் அருட்தந்தை சைமன் டி கார்லோ பணியாற்றிய வேளையில் இராமனாதிச்சன்புதூர் ஓலை குடிசை ஆலயமும் மருங்கூர் இல்லமும் தீக்கிரையாக்கப்பட்டது. (இதுவே மருங்கூர் மிஷன் என அழைக்கப்படுகிறது.) அந்த நேரத்தில் 3000 கிறிஸ்தவர்கள் இருந்தார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பின் அருட்தந்தை மார்டீன் அவர்கள் ஆலயத்தையும் பங்குத்தந்தை இல்லத்தையும் கட்டுவதற்கு இயேசு சபையினரால் இப்பகுதிக்கு அனுப்பப்பட்டார். மக்கள் ஒன்று கூடி சுண்ணாம்புக் கலவையுடன் அமைந்த புதிய ஓட்டுக் கோவிலை கட்டியெழுப்பினர். 1760-களில் இவ்வாலயம் லூர்து அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தொடர்ந்து வந்த இயேசு சபை குருக்களின் தாக்கத்தால் இவ்வாலயம் 1898-ல் யேசு சபை நிறுவனராகிய புனித லொயோலா இஞ்ஞாசியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
தெற்கு இராமனாதிச்சன்புதார் :
அருட்தந்தை இக்னேசியஸ் மரியா அவர்கள், தெற்கு இராமனாதிச்சன்புதூரில் புனித ஆரோக்கியநாதர் ஆலயம் அமைத்தார். அதன் பிறகு தான் தெற்கு இராமனாதிச்சன்புதூர் என்று அழைக்கப்பட்டது. அதற்கு முன்னர் மந்தை விளை என்றே அழைக்கப்பட்டது.
இப் பகுதியிலுள்ள மாட்டு மந்தைகளை ஒரே இடத்தில் (விளையில்) கூட்டிச் சேர்த்து அதன் பின் மலைக்கு மேய்ப்பதற்காக கோனார் ஓட்டிச் சென்றதால், அந்த விளை இருந்த இடம் 'மந்தைவிளை' என ஆனது. அந்த விளையில் குடியிருந்த தற்போதைய தெற்கு இராமனாதிச்சன்புதூர் மக்களின் முன்னோர் குடும்பங்கள். மந்தைவிளை-யை, பின்னர் பங்கு நிர்வாக வசதிக்காகவும், ஊர் வளர்ச்சி பெற்று மக்கள் அதிகமானதாலும், தெற்கு இராமனாதிச்சன்புதூராக மாற்றினர்.
புனித ஆரோக்கியநாதர் ஆலயமானது 1915 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் மக்கள் ஒன்று கூடி, ஒரு சிறிய குருசடியில் வைத்து புனித ஆரோக்கியநாதரிடம் ஜெபம் செய்து அதன் வழியாக இறைவனின் ஆசீர்வாதங்களைப் பெற்றனர்.
பின்னர் மக்களின் விசுவாசத்தின் காரணமாக அவ்குருசடியை சிறிய ஒரு ஆலயமாக கட்டியெழுப்பப் பட்டு, குருசடி புனித அந்தோணியார் ஆலயத்தின் கிளையாக ஆனது.
பின்னர் குருசடி பங்கிலிருந்து இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் கிளையாக மாற்றப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பின்னர் இராஜாவூரிலிந்து பிரிக்கப்பட்டு வடக்கு இராமனாதிச்சன்புதூர் ஆலயத்தின் கிளையாக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அருட்தந்தை தாமஸ் பெர்னாண்டஸ் அடிகளார் அவர்கள் 1976 -ஆம் ஆண்டில் இவ்வாலயத்தை விரிவாக்கம் செய்தார்.
அருட்பணி அமல்ராஜ் அவர்களின் பணிக்காலத்தில் 1995 -ஆம் ஆண்டு புதிய ஆலயப் பணிகள் ஆரம்பமானது. மக்களின் தன்னலமற்ற உழைப்பு, நன்கொடைகளால் பணிகள் நிறைவு பெற்று 08-08-1997 ல் மேதகு ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
03-07-2005 அன்று அருட்பணி ஜோசப் காலின்ஸ் பணிக்காலத்தில் கெபி கட்டப்பட்டு, அருட்தந்தை ஜோக்கிம் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
தற்போது பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது தெற்கு இராமனாதிச்சன்புதூர் இறை சமூகம்.