551 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், உத்தமர்சீலி

  

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் 

இடம் : உத்தமர்சீலி, கல்லணைசாலை, திருச்சி -05 

மாவட்டம் : திருச்சி 

மறைமாவட்டம் : கும்பகோணம்

மறைவட்டம் : இலால்குடி

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : அமல ஆசிரமம், ஸ்ரீரங்கம்

பங்குத்தந்தை : அருள்பணி. ஆ. தைனிஸ், கப்புச்சின் சபை

இணைப்பங்குத்தந்தை : அருள்பணி. இ. டேனியல் தயாபரன், கப்புச்சின் சபை

குடும்பங்கள் : 60

அன்பியங்கள் : 2

(புனித கிளாராள், புனித செபஸ்தியார்) 

இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் மாலை 07.30 மணிக்கு திருப்பலி. 

திருவிழாக்கள் :

ஆலயத் திருவிழா : மே மூன்றாம் வாரம். 

இதர விழாக்கள் : புனித ஆரோக்கிய அன்னை திருப்பயண விழா. 

வழித்தடம் : திருச்சி சத்திரம் -கல்லணை 

நிறுத்தம் : உத்தமர்சீலி. 

Location map : St. XAVIER CHURCH Uttamarseeli, Tamil Nadu 620005

https://maps.app.goo.gl/eieodCTGyniU6cJB9


வரலாறு :

மூன்று அண்ணன்மார்கள்:

உத்தமணன், அரியணன், பெரியணன்  என்ற மூன்று பேரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் குடும்பம் பெருகவே உத்தமணன் வாழ்ந்த ஊருக்கு உத்தமர்சீலி எனவும், அரியணன் வாழ்ந்த இடத்திற்கு அரியவர்சீலி என்றும், பெரியணன் வாழ்ந்த இடத்திற்கு பெரியவர்சீலி என்றும் பெயர் வழங்கப் பட்டது. இந்த மூன்று ஊருக்கும் பெரியவர்சீலி பங்காக இருந்தது. திருவானைக் கோவிலுக்கு கிழக்கே 10கி.மீ தூரத்தில் சோழ மன்னன் கரிகால பெருவளத்தானால் கட்டப்பட்ட கல்லணை அணைக்கட்டிற்கு மேற்கே, 4கி.மீ தூரத்தில் காவிரி கரைக்கு வடக்கிலும், கொள்ளிடம் கரைக்கு தெற்கிலும் உள்ள நிலப்பரப்பில் உத்தமர்சீலி என்ற அழகிய பசுமையான சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூர் காவேரி கரைக்கு அருகே உள்ளதால் அடிக்கடி வெள்ளப் பெருக்குக்கு உள்ளானது. அவ்வாறு 1924 ஆம் ஆண்டு உருவான வெள்ளப் பெருக்கானது காவேரி கரையை உடைத்துக் கொண்டு ஊருக்குள் புகுந்தது. இதனால் மக்கள் பெரும் துன்பத்திற்குள்ளானார்கள். தென்னை மரத்தில் பரணி கட்டி அமர்ந்து தங்களது உயிர்களை காப்பாற்றிக் கொள்ளுமளவிற்கு சூழ்நிலை ஏற்பட்டது. அன்றைய பெரியவர்சீலி பங்குத்தந்தை அருள்பணி. சிங்கராயர் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் கூறிச் சென்றார்.

புனித சவேரியார் புதிய ஆலயம் :

அதன்பிறகு பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பங்குத்தந்தையிடம் ஒரு புதிய ஆலயம் கட்டித் தரும்படி கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையை ஏற்று புதிய ஆலயத்திற்கு 1931 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப் பட்டது. அன்றிலிருந்து மக்கள் எல்லோரும் சேர்ந்து இரண்டு செங்கல் காலாவைப் போட்டு கல் சேகரித்து, சுண்ணாம்புக் கலவையால் ஆலயத்தைக் கட்டி, மேற்கூரை ஓடு வேய்ந்து பணிகள் நிறைவு பெற்று அர்ச்சித்து புனிதப் படுத்தப் பட்டது. மூன்று தேர்கள் பவனியோடு ஆலய அர்ச்சிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

ஆலய மேற்கூரைக்கு ஓடு போடப்பட்டிருந்ததால் மழைநீர் பட்டு, கைமரம் வளைந்து ஓடுகள் கீழே விழுந்து பழுதடைந்ததால் கிராம மக்கள் எல்லாரும் சேர்ந்து பங்குத்தந்தை அருள்பணி. வின்சென்ட் பெரர் அவர்களைப் பார்த்து கடிதம் பெற்றுக் கொண்டு, அன்றைய குடந்தை மறைமாவட்ட ஆயரைப் பார்த்து புதிய ஆலயம் கட்ட கோரிக்கை கடிதத்தைக் கொடுத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று அதற்கான பணிகள் ஆரம்பிக்கப் பட்டன. மக்களின் வரிப்பணத்துடன் மறைமாவட்ட நன்கொடையையும் சேர்த்து புதிய ஆலயம் மிக நேர்த்தியாக எழுப்பப்பட்டது. 05.06.1994 அன்று குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் புதிய ஆலயம் அர்ச்சிக்கப் பட்டது. அமல ஆசிரமம் பங்கு நிறுவப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த பிறகு தான் உத்தமர்சீலி கிளைப்பங்கு, பெரியவர்சீலி பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, அமல ஆசிரமத்தோடு இணைக்கப் பட்டது. 

1999 மே 30 அன்று பங்குத்தந்தை அருள்பணி. பெ. அருள்தாஸ் அவர்களின் பெருமுயற்சியால் உத்தமர்சீலியில் புதிய சமூகப்பணிக்கூடம் அமைக்கப்பட்டு, அவராலேயே புனிதப் படுத்தப் பட்டது. உதயம் கப்புச்சின் பல்நோக்கு சமூகப்பணி மையத்தின் மூலம் மாலை நேர இலவச வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 

மக்களின் ஆன்மீக வாழ்வு:

மாதம் இருமுறை சனிக்கிழமைகளில் மாலை நேரத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப் படுகிறது. 150 க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ மக்கள் இங்கு வாழ்கின்றனர். பங்கேற்கும் மக்கள் திருப்பலிக்கு தகுந்த ஏற்பாடு செய்வது, சிறப்பாக பாடல்கள் பாடுவது, பலி பீடத்தில் பணிகள் செய்வது என அவர்களின் செயல்பாடு பாராட்டுக்குரியது. தொடர்ச்சியாக மறைக்கல்வி வகுப்புகள் நடைபெறாவிட்டாலும், அவ்வப்போது நடைபெற்று மறையறிவு புகட்டப்படுகிறது. பிரான்சிஸ்கன் பொதுநிலையினர் இயக்கத்தில் 21 பேர் உள்ளனர். அவர்களும் மாதம் ஒருமுறை கூடி செபிப்பது, ஆலயப் பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. பங்கில் நடைபெறும் விழாக்கள், போட்டிகள் மற்றும் பணிகளில் இங்குள்ள இளையோர்களின் பங்களிப்பு கவனத்திற்கு உரியதாக உள்ளது. 

அமல ஆசிரமம் பங்கில் உத்தமர்சீலி இணைந்த காலம் முதல் அதற்கு முன்பிருந்தும் கப்புச்சின் சபை துறவிகள் மிகுந்த ஆர்வத்துடன் இறைப்பணியாற்றி வருகின்றனர். திருப்பலிக்கு மக்களை தயாரிக்க, இறைப்பாடல் பயிற்றுவிக்க, இல்லங்களை சந்தித்து ஜெபிக்க என கப்புச்சின் இறையியல் சகோதரர்கள் சிறப்பான பணிகளை செய்து வருகின்றனர். 10 க்கும் மேற்பட்ட நடுத்தர வயதுப் பெண்கள் அப்போஸ்தலிக்க என்ற பெந்தேகோஸ்த் சபையில் அங்கத்தினர்களாக உள்ளனர். அவர்களில் வெகு ஒருசில பெண்களைத் தவிர மற்றவர்கள் கத்தோலிக்க / பெந்தேகோஸ்த் சபைக்கு வருவதும் போவதுமாக உள்ளனர். இவர்கள் எல்லாம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் சென்றவர்கள். புதிதாக யாரும் செல்வது இல்லை. ஆழமான ஆன்மீகமும் பக்தியும் இங்கு காணப்பட்டாலும், அதை எடுத்து செல்வதில் ஒருசில குறைபாடுகள் இருப்பதால், ஏதோ ஒரு ஆன்மீகத் தேக்கம் இருப்பதுபோல் தோற்றமளிக்கிறது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற கூற்றை உணர்ந்தால் உத்தமர்சீலி "விசுவாசத்தின் மாதிரி கிராமம்" என்ற பெருமையைப் பெறும். 

மீண்ட ஊர்த்திருவிழா:

ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் உத்தமர்சீலி பாதுகாவலர் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத் திருவிழா நடைபெறாமல் இருந்தது. ஒருசில தேவையற்ற நிகழ்வுகளால் திருவிழா நின்று போனது. அது பல்வேறு தடங்கல்களால் நீண்டு கொண்டே போனதால் மக்கள் அனைவருக்கும் மிகுந்த மனவருத்தத்தை தந்தது. திருவிழா நடைபெற வேண்டும் என்ற ஏக்கம் அனைவரின் உள்ளத்திலும் உதித்தது. அதற்கான செயல்களில் இறங்கி செயலாற்றியது பாராட்டுக்குரியது. முன்னாள் உதவிப் பங்குத்தந்தை அருள்பணி. ஆ. தைனிஸ், 2017 ஆம் ஆண்டு அனைவரையும் ஒருங்கிணைத்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழா கொண்டாடுவதற்கு துணை நின்றார். அனைவரும் ஒற்றுமையுடன் திருவிழாவைக் கொண்டாடியது ஆசீர்வாதமாக அமைந்தது. ஊரின் பாதுகாவலர் புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா அன்றும், வேளாங்கண்ணி நடைபயணத்திற்காகவும் சிறப்புத் திருப்பலிகள் நிறைவேற்றப் படுகின்றன. இல்லங்கள் சந்திக்கப்பட்டு, அன்பியங்களுக்கு புத்துயிர் தரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இங்கு ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்படும் என்ற புதிய நம்பிக்கை எழுந்துள்ளது. 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. ஆ. தைனிஸ் க. ச