புனித ஆரோக்கிய மலைமாதா திருத்தலம்
இடம் : அம்மாசத்திரம், குளத்தூர் தாலுகா, கீரனூர் வழி, 622504
மாவட்டம் : புதுக்கோட்டை
மறைமாவட்டம் : திருச்சி
மறைவட்டம் : கீரனூர்
நிலை : திருத்தலம்
கிளைப் பங்குகள் :
1. புனித சூசையப்பர் ஆலயம், காவிரிநகர்
2. புனித செபஸ்தியார் ஆலயம், சன்னையப்பட்டி
3. புனித செபஸ்தியார் ஆலயம், பைப்பட்டி
4. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், பொம்மாடிமலை
5. புனித வியாகுல மாதா ஆலயம், வெள்ளாளப்பட்டி
6. புனித அந்தோணியார் ஆலயம், இரும்பாளி
7. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், மேலூர்
8. புனித அந்தோணியார் ஆலயம், கல்லம்பட்டி.
அதிபர் & பங்குத்தந்தை : அருட்பணி. ஜேம்ஸ் செல்வநாதன்.
குடும்பங்கள் : 165 (கிளைகள் சேர்த்து)
அன்பியங்கள் : 8
திருத்தல திருவழிபாட்டு நிகழ்வுகள் :
ஞாயிறு காலை 11.00 மணிக்கு மலைக்கோவிலில் நவநாள் திருப்பலி மற்றும் பக்தர்களால் (விசுவாசிகள்) வேண்டுதல் அல்லது நன்றி பொங்கல் வைத்து அனைவருக்கும் பறிமாறப்படும்.
செவ்வாய், வெள்ளி, சனி காலை 11.00 மணிக்கு திருப்பலி.
மாதத்தின் முதல் செவ்வாய் காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை பரிந்துரை ஜெபம்.
மாதத்தின் முதல் சனி மாலை 06.30 மணிக்கு அன்னையின் தேர்பவனி, நற்செய்தி கூட்டம், திருப்பலி.
மாதத்தின் இரண்டாம் ஞாயிறு காலை 10.30 மணிக்கு நற்செய்தி கூட்டம், திருப்பலி, பொங்கல்.
ஒவ்வொரு மாதத்தின் 23 -ஆம் தேதி (மாதா காட்சி கொடுத்த நாள்) காலை 10.30 மணிக்கு அன்னையின் தேர்பவனி, நற்செய்தி கூட்டம், சாட்சி கூறல், திருப்பலி, குணமளிக்கும் நற்கருணை ஆராதனை, மதிய உணவு.
மாதத்தின் பௌர்ணமி நாளில் இரவு 09.30 மணி முதல் மறுதினம் காலை 04.00 மணி வரை முழு இரவு நற்செய்தி கூட்டம், திருப்பலி.
சனி இரவு 09.30 மணி முதல் பரிந்துரை ஜெபம்.
மே மாதம் கடைசி ஞாயிறு அருங்கொடை நாதர் பெருவிழா மற்றும் மலைமாதா பொங்கல் விழா.
மறைகல்வி :I &III ஞாயிறு மாலை 5:00 முதல் 6:00 வரை.
II &IV ஞாயிறு காலை 9:30 முதல் 11:00 வரை.
திருவிழா : ஆகஸ்ட் மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, திருவிழா திருப்பலி, ஆரோக்கிய அன்னையின் தேர்பவனி, இறைமக்களுக்கு அன்னதானத்துடன் இரண்டாம் ஞாயிறு நிறைவுபெறும்.
மண்ணின் இறையழைத்தல்கள் :
1. அருட்சகோதரர். ரோகன்
2. அருட்சகோதரி. ஸ்டெல்லா.
வழித்தடம் : திருச்சியிலிருந்து திருத்தலம் வர....
திருச்சி -கீரனூர். கீரனூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் பேருந்து எண் 6,8,20.
இறங்குமிடம் அம்மாசத்திரம்.
புதுக்கோட்டையிலிருந்து திருத்தலம் வர...
புதுக்கோட்டை -கீரனூர் (பேருந்து எண் 6,8,20) பேருந்துகள். இறங்குமிடம் அம்மாசத்திரம்.
திருத்தலத்தில் பணியாற்றிய அருட்தந்தையர்கள்:
1. அருட்பணி. M. A. அந்தோணி (1986-1996)
2. அருட்பணி K. தேவராஜ் (1996-2002)
3. அருட்பணி A. வின்சென்ட் ஜோசப் (2002-2007)
4. அருட்பணி. B வெண்மனி சில்வெஸ்டர் (2007-2012)
5. அருட்பணி. கபிரியேல் (2012-2017)
6. அருட்பணி. ஜேம்ஸ் செல்வநாதன் (2017 முதல் தற்போது வரை..)
வரலாறு :
புனித ஆரோக்கிய மலைமாதா திருத்தலம் அதிசயங்களும், அற்புதங்களும் நிகழும் ஒரு அருள்தலம் ஆகும். கீரனூரிலிருந்து 5கி.மீ தூரத்தில் புதுக்கோட்டை செல்லும் சாலையில் அம்மா சத்திரம் என்ற ஊரில் உள்ள, இந்திய வனத்துறை (Reserve Forest) கண்காணிப்புக்கு உட்பட்டுள்ள ஆலடி பெரும்முத்துக்காடு என்ற மலைக்குன்றில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
திருத்தலத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை சுரூபமானது 1983 -ஆம் ஆண்டு, புதுக்கோட்டையை சேர்ந்த அடப்பன்வயல் என்கிற ஊரில் வசித்து வந்த திரு. D. V. S குமார் என்ற இந்து சகோதரரால், வேளாங்கண்ணி திருத்தலப் பேராலயத்திலிருந்து வாங்கி வரப்பட்டதாகும்.
தான் ஒரு கிறிஸ்தவராக அல்லாத போதும் மிகுந்த பக்தியோடும், மரியாதையோடும் அன்னையின் சுரூபத்தை வணங்கி வந்தார். ஒருநாள் இவரது இரு மகன்களும் அன்னையின் சுரூபத்தை விளையாட்டு பொம்மை என நினைத்து எடுத்து விளையாடிய போது, சுரூபத்தின் தலையின் பின்புறம் உடைந்து போனது. இதையறிந்தால் தந்தை தங்களை தண்டிப்பார் எனப் பயந்து சுரூபத்தை குப்பைக்குழியில் எறிந்து விட்டனர்.
தந்தை வேலையை முடித்து இரவு தூங்கச் செல்லும் முன்னர், வழக்கம் போல் வேளாங்கண்ணி அன்னையின் சுரூபத்திடம் சென்று வணங்க நின்ற போது, சுரூபத்தைக் காணாமல் திகைத்து, மனைவி மக்களிடம் விசாரித்த போது அவர்கள் குப்பைக்குழியில் போட்டு விட்டதை தயக்கத்துடன் கூறினர்.
அவர் ஓடோடிச் சென்று குப்பைக் குழியிலிருந்து அன்னையின் சுரூபத்தை எடுத்து வந்து, பழையபடி வீட்டில் இருந்த இடத்தில் வைத்து விட்டு தூங்கச் சென்றார். அன்று இரவு தூங்கும் போது மாதா அவரது கனவில் தோன்றி "அன்பு மகனே என்னை எங்கும் எறிந்து விடவேண்டாம். இதோ மறைவான, மலைப்பாங்கான ஒரு இடத்தில் என்னை வைத்து விடவும்" என்று கூறினார். மறுதினம் திரு. குமார் அவர்கள் ஒரு வெள்ளைத்துணியில் சுரூபத்தை பொதிந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மலைப் பகுதிகளையும் சுற்றி வந்ததில், சரியான இடமாக அம்மாசத்திரத்தில் உள்ள பெரும் முத்துக்காடான இம்மலைப் பகுதியை அடைந்தார்.
இப்போது இருக்கும் இந்தப் பகுதியை அடைந்தவுடன் சுயநினைவற்றவராக எங்கு சுரூபத்தை வைக்கிறோம் என்று தெரியாமல், சுரூபத்தை வைத்த பிறகு சுயநினைவு பெற்று திரும்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மறுதினம் வெள்ளாளப்பட்டி ஊரைச் சேர்ந்த ஆடு மாடுகள் மேய்க்கும் சிறுவர், சிறுமியருக்கு மாதா தோன்றி காட்சி கொடுத்துள்ளார். காட்சி கொடுத்த அந்த இடத்தில் மாதா சுரூபம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வை சிறுவர்கள் ஊரிலுள்ள மக்களிடம் கூற, கேள்விப்பட்டவர்கள் 23.07.1983 அன்று ஆலடி பெரும் முத்துக்காடு என்ற மலையில் காட்சி கொடுத்த புனித ஆரோக்கிய மலை மாதாவைக் கண்டனர்.
இந்த காட்சியைக் கண்ட, கேள்விப்பட்ட மக்களில் சிலர் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 05.00 மணிக்கு திருத்தலத்தில் ஒன்று கூடி ஜெபித்து வந்தனர்.
சுமார் 1983 ஆம் ஆண்டுவாக்கில் மலையில் ஆலயமானது அருட்பணி. M.A அந்தோனி அவர்களின் முயற்சியினால் உருவாக்கப்பட்டது.
பின்னர் ஞாயிறு தோறும் காலை 11.00 மணிக்கு திருப்பலி நிறைவேற்றப்பட்டு அன்னையின் அரவணைப்பை மக்கள் அதிகமாக உணர்ந்தனர்.
07.10.1984 அன்று முதலாவது ஆண்டுத் திருவிழா கொண்டாடப் பட்டது. பின்னர் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது ஞாயிறு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
10.04.2005 அன்று புனித ஆரோக்கிய மலைமாதா திருத்தலம் மலைக்கு கீழே பெரிய அளவில் அருட்பணி. வின்சென்ட் ஜோசப் அவர்களின் மேற்பார்வையில் மற்றும் பக்தர்களின் பங்களிப்புடன் கட்டப்பட்டு, திருச்சி ஆயர் மேதகு. அந்தோனி டிவோட்டா அவர்களால் அரச்சிக்கப் பட்டது. அன்னை இல்லம் என்ற பெயரில் குருக்கள் தங்கி பணிபுரிய குருக்கள் இல்லம் கட்டப்பட்டது. 11.07.2007 அன்று கீரனூர் மறைவட்டத்தின் அருங்கொடை இல்லமாக மேதகு ஆயர் அந்தோனி டிவோட்டா DD அவர்களால் உயர்த்தப் பட்டது.
2008 ல் திருத்தல வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது.
24.06.2012 அன்று தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலி முடிந்தவுடன், தங்களின் வேண்டுதல் நிறைவேறியதால் மக்கள் சர்க்கரை பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்குவது இத்திருத்தலத்திற்கே உரிய தனிச்சிறப்பு ஆகும்.
அருட்சகோதரி. ஐவன் : அருட்சகோதரி. ஐவன் (late) அவர்கள் திருத்தலம் துவக்கப்பட்ட காலகட்டம் முதல் சுமார் முப்பது ஆண்டுகளாக இங்கேயே தங்கியிருந்து, மக்களுக்கு நற்செய்தி அறிவித்து, திருத்தலத்தின் வளர்ச்சிக்கு துணை நின்றார் என்பது என்றும் நினைவு கூறத் தக்கது.
மலைமாதா திருத்தலத்திற்கு 1983 -ஆம் ஆண்டு முதல் இன்று வரை மதம் கடந்து அன்னையின் இறைமக்கள் புதுக்கோட்டை, திருச்சி, கீரனூர், தஞ்சாவூர், மதுரை, நாகர்கோவில், சென்னை என்று பல ஊர்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக, பங்கு சமூகமாக, துறவியர் இல்லங்களிலிருந்தும் வந்து மலைமாதாவின் வழியாக இறைவனின் அருள் வரங்களை பெற்றுச் செல்கின்றனர். தியானம் செய்யவும், திருத்தலத்தில் தங்கி ஜெபிப்பதற்கும் இடவசதிகள் உள்ளன. வாருங்கள் அன்னையின் வழியாக இறைவனின் ஆசீர் பெற்றுச் செல்லுங்கள்..
தகவல்கள் : திருத்தல அதிபர் அருட்பணி. ஜேம்ஸ் செல்வநாதன் அவர்கள்.