244 புனித அந்தோணியார் திருத்தலம், இடிந்தகரை


கொடுவாய்முனை புனித அந்தோணியார் திருத்தலம், இடிந்தகரை

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி

நிலை : திருத்தலம்

பங்கு : புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், தூய லூர்து அன்னை ஆலயம், இடிந்தகரை.

பங்குத்தந்தை : அருட்பணி. பிரதீப்
இணை பங்குத்தந்தை : அருட்பணி. வினித்

ஞாயிறு திருப்பலி : இல்லை

வியாழன் திருப்பலி : மாலை 06.00 மணிக்கு

திருவிழா : ஜனவரி மாதத்தில் 3- ஆம் ஞாயிறு நிறைவடைகின்ற வகையில் 13 நாட்கள் நடைபெறும்.

சிறப்புகள் :

இடிந்தகரை ஊரில் 5 சிறிய ஆலயங்கள் உள்ளன அவை:

1)கொடுவாய் முனை, புனித அந்தோணியார் திருத்தலம்.
2)தேழிப்பாய் முனை, புனித சவேரியார் ஆலயம்.
3)வடக்கு- அந்தோணியார் ஆலயம்.
4)புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், வேளை நகர்.
5)திருச்சிலுவை ஆலயம், குருசடி தாவு.

இடிந்தகரை யை விசுவாசத்தின் விளை நிலம் என்று அழைப்பார்கள். காரணம் 40 ற்கும் அதிகமான குருக்கள் மற்றும் 110 ற்கும் அதிகமான கன்னியர்கள். மேலும் இரண்டு ஆயர்கள் இப்பங்கிலிருந்து உருவானதால் இப்படி அழைப்பார்கள்.

இடிந்தகரையின் முதல் ஆலயம் புனித இராயப்பர் மற்றும் சின்னப்பர் பெயரில் கிபி 1552ல் கட்டப்பட்டது. இவ்வாலயம் ஊரின் தென்கிழக்கே கடற்கரை ஓரமாக இருந்தது. இக்கோவில் சிறியதாகவும், பழமையாகவும் இருந்ததாலும், கடல் ஆலயப்பரப்பை நெருங்கியதாலும், சற்று வடமேற்காக பெரிய ஆலயம் ஒன்றைக்கட்ட மக்கள் தீர்மானித்தார்கள். கைவிடப்பட்ட பழைய ஆலயத்தில் புனித வியாகுல அன்னை கன்னியர் மடம் இயங்க ஆரம்பித்தது. பிறகு மடத்தைப் புதுப்பித்த போது, பழமையின் அருமை அறியாமல் கோவிலின் அமைப்பு மாற்றப்பட்டு விட்டது. 1833ல் புதிய கோவிலுக்காக ஊர்ச் செலவில் அந்திரைக்கட்டியார் மகன் தொம்மை சுவானி பட்டங்கட்டியாரிடமிருந்து நிலம் விலைக்கு வாங்கப்பட்டது.

கோவில் கட்டுவதற்கான செலவில் பெரும் பகுதி ஊர் மக்களால் கொடுக்கப்பட்டது. ஒரு சிறு பகுதி மட்டும் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தது. இடிந்தகரை முதலில் போர்ச்சுக்கல் நாட்டு துறவிகளின் பொறுப்பில் இருந்தது. புதிய கோவில் கட்டும் சமயத்தில் பிரான்ஸ் நாட்டு துறவிகளின் பொறுப்பில் இருந்தது. அக்காலத்தில் பிரான்ஸ் நாட்டில் லூர்து மலையில் லூர்து அன்னை காட்சி அருளியதன் காரணமாக உலகெங்கும் லூர்து அன்னை பக்தி பரவியது. இதன் காரணமாக புதிதாக அமைக்கப்பட்ட ஆலயம் லூர்து அன்னைக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இங்கு அமைந்துள்ள புனித அந்தோணியார் திருத்தலம் இவ்வூருக்கு மேலும் புகழையும், இறைவனின் அருள் வரங்களையும் பெற்றுத் தருவது தனிச்சிறப்பு.

வழித்தடம் : நாகர்கோவில் - திருச்செந்தூர் - கூடங்குளம் - இடிந்தகரை.