152 புனித யூதா ததேயு ஆலயம், கொட்டாரம்


புனித யூதா ததேயு ஆலயம் (இறைவனின் இல்லம்)

இடம் : கொட்டாரம்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்
மறை வட்டம் : கன்னியாகுமரி

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், இலங்காமணிபுரம்

பங்குத்தந்தை : அருட்பணி சகாய பிரபு

குடும்பங்கள் : 90
அன்பியங்கள் : 7

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு
நாள்தோறும் திருப்பலி : காலை 06.30 மணிக்கு

வியாழன் மாலை 05.15 மணிக்கு செபமாலை, 05.45 மணிக்கு புனித யூதா ததேயு நவநாள், திருப்பலி, நற்கருணை ஆராதனை.

மாதத்தின் முதல் வியாழன் காலை 10.30 மணிக்கு செபமாலை, 10.45 மணிக்கு நவநாள், இறைவார்த்தை பகிர்வு, திருப்பலி, சிறப்பு குணமளிக்கும் செபவழிபாடு, நற்கருணை ஆசீர், அசனவிருந்து.

திருவிழா : அக்டோபர் 28 ம் தேதியை மையமாகக் கொண்டு பத்து நாட்கள்.

வழித்தடம் : கொட்டாரம் சந்திப்பில் இருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் சாலையில் இடப்புறம் இவ்வாலயம் அமைந்துள்ளது.

நாகர்கோவில் - கன்னியாகுமரி பேருந்து. இறங்குமிடம் கொட்டாரம்.

Location map : ST.JUDES CHURCH Kottaram-Agasteeswaram Rd, Kottaram, Tamil Nadu 629703

https://g.co/kgs/wm5FtL

வரலாறு

கொட்டாரம் பிறசமய சகோதரர்கள் நிறைந்த அழகிய ஊர். இந்த ஊரைச் சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளன. எனவே சுற்றியுள்ள பகுதிகளுக்கு மையப்பகுதியாக கொட்டாரம் விளங்குவதால் கல்வி, வியாபாரம், தொழில் மற்றும் பொழுதுபோக்கிற்காக மக்கள் இங்கு வருவார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஊரில் கி.பி 1950 ல் தொழில் செய்வதற்காக இராமனாதிச்சன்புதூர், கீழமணக்குடி, இராமபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த ஓரிரு கத்தோலிக்க குடும்பங்கள் இங்கே குடியேறினர்.

குடியேறிய மக்கள் ஒன்றிணைந்து இறைவனை வழிபட, ஒரு வாடகை வீட்டை ஜெபக்கூடமாக மாற்றினர். தாமரைக்குளம் பங்கிலிருந்து அருட்தந்தையர்கள் இங்கு வந்து திருப்பலி நிறைவேற்றினர்.

பின்னர் அருட்தந்தை ஆன்ட்ரூ செல்வராஜ் அவர்கள் கோவளம் பங்குத்தந்தையாக இருந்த போது, கொட்டாரத்தை கோவளத்தின் கிளைப்பங்காக மாற்றினார். அருட்தந்தையின் அயராத முயற்சியினால் பிற பங்குகளைச் சேர்ந்த கத்தோலிக்க மக்களின் துணையுடன், புனித யூதா ததேயுவை பாதுகாவலராகக் கொண்டு ஆலயம் கட்டப்பட்டு 21.04.1968 அன்று மேதகு ஆயர் ஆஞ்ஞிசுவாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

பின்னர் வெளியூரிலிருந்து மேலும் சில கத்தோலிக்க குடும்பங்கள் இங்கே குடியேறினர். வியாழக்கிழமை தோறும் புனிதரின் நவநாள் நடத்தப்பட்டு வந்தது. சுற்றியுள்ள கத்தோலிக்க மக்களும் பிற சமய மக்களும் நவநாள் திருப்பலியில் கலந்து கொண்டு புனிதரின் வழியாக இறைவனின் ஆசீர் பெற்று வந்தனர். இவ்வேளையில் கன்னியாகுமரியில் இருந்து ICM அருட்சகோதரிகள் இங்கு வந்து வழிபாடுகளுக்கு உதவி செய்து வந்தனர்.

கொட்டாரம் பங்கு வளர்ந்து வருவதைக் கண்ட மேதகு ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்கள் 15.07.2005 அன்று தனிப்பங்காக உயர்த்தினார். தாமரைகுளத்தின் கிளைப்பங்காக இருந்த இலங்காமணிபுரம் புனித அந்தோணியார் ஆலயம், கொட்டாரத்தின் கிளைப் பங்கானது.

கொட்டாரம் தனிப்பங்கான போது 40 குடும்பங்களே பங்கு உறுப்பினர்களாக இருந்தன. அவர்கள் 5 அன்பியங்களாக செயல் பட்டனர்.

02.04.2006 அன்று ஆயர் மேதகு லியோன் அ தர்மராஜ் அவர்களின் பங்கு சந்திப்பின் போது, கொட்டாரம் - பெருமாள்புரத்தில் அகதிகள் முகாமில் இருக்கும் ஈழ கத்தோலிக்க கிறிஸ்தவர்களை ஒருங்கிணைத்து, பங்கில் சேர்க்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி அங்குள்ள 7 கத்தோலிக்க குடும்பங்களும் பங்கின் 6 வது அன்பியமாக இணைக்கப் பட்டது.

மீண்டும் மேலும் சில குடும்பங்கள் இணைய 2011 ம் ஆண்டில் பங்கில், குடும்பங்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்து. தொடர்ந்து பெருமாள்புரம், பரமார்த்தலிங்கபுரத்தை சேர்ந்த கத்தோலிக்க மக்களும் பங்கில் இணைந்து கொண்டனர். அகஸ்தீஸ்வரம் வடுகன்பற்று பகுதிகளில் வாழும் குடும்பங்களும் இணைந்து 7 ம் அன்பியமாக செயல்பட ஆரம்பித்தன.

தொடர்ந்து வேறு பங்கை சேர்ந்த சில மக்களும் குடியிருப்பு வசதியை முன்னிட்டு இங்கு தங்கியிருப்பதால், அவர்களும் பங்கில் இணைந்துள்ளனர்.

இவ்வாறு மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே ஆலயத்தில் இடநெருக்கடி ஏற்பட்டதால், புதிய ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டு, கொட்டாரம் பங்கின் சிறார்களின் காணிக்கையை மூலதனமாகக் கொண்டு 27.12.2017 அன்று புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப்பட்டு, பங்குத்தந்தை அருட்பணி சகாய பிரபு அவர்களின் முயற்சிகள், பங்கு மக்களின் ஒத்துழைப்பு மற்றும் நன்கொடைகள், பிற மக்களின் உதவிகளுடன் எழில் மிகுந்த அழகிய ஆலயம் (இறைவனின் இல்லம்) கட்டப்பட்டு 02.03.2019 அன்று மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

கைவிடப்பட்டவர்களின் காவலராம், புனித யூதா ததேயுவின் ஆலயத்திற்கு பல பகுதிகளிலும் உள்ள மக்கள் நாள்தோறும் வந்து ஜெபித்து எண்ணிலடங்காத நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்றுச் செல்கின்றனர். ஆகவே இவ்வாலயத்தை 'இறைவனின் இல்லம்' என்று தான் மக்கள் அன்போடு அழைக்கின்றனர்.