புனித எஸ்தாக்கியார் ஆலயம்
இடம் : மிட்டாதார்குளம்
மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி
பங்குத்தந்தை : அருட்தந்தை ஜோசப் ஸ்டாலின்
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித பிரகாசியம்மாள் ஆலயம், அணைக்கரை
குடும்பங்கள் : 450
அன்பியங்கள் : 12
ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு
வியாழன் திருப்பலி : மாலை 06.00 மணிக்கு
மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மாலையில் நவநாள் இரவு 07.00 மணிக்கு திருப்பலி, அசனவிருந்து
திருவிழா : செப்டம்பர் மாதம் 11- ம் தேதி கொடியேற்றம் 20 -ம் தேதி பெருவிழா என பத்து நாட்கள் நடைபெறும்.
எஸ்தாக்கியார் பற்றிய மரபுக் கதை இதோ:
கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் பிலாசிது (Placidus) என்னும் பெயர் கொண்ட உரோமைப் படைத் தலைவர் ஒருவர் இருந்தார். அவர் திரையானு (Trajan) என்ற உரோமைப் பேரரசனின் கீழ் பணிபுரிந்துவந்தார். தம் மனைவியோடும் இரு பிள்ளைகளோடும் காட்டில் வேட்டையாடச் சென்ற அவர் அழகிய கலைமான் ஒன்றைக் கண்டு அதைப் பிடிப்பதற்காக துரத்திச் சென்றார். அதன் கொம்புகளுக்கு நடுவே ஒளிமயமான ஒரு சிலுவை தோன்றியதைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துபோனார்.
கிறித்தவ சமயத்தைத் தழுவ கடவுள் தம்மை அழைக்கின்றார் என்று உணர்ந்த அவர் திருச்சபையில் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெற்று "எஸ்தாக்கு" என்னும் பெயரைச் சூடிக்கொண்டார். அவருடைய குடும்பத்தாரும் கிறித்தவராயினர்.
மகிழ்ச்சியோடு குடும்பம் நடத்திய எஸ்தாக்கியாருக்குத் துன்பங்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன. விவிலியத்தில் வருகின்ற "யோபு" (Job) என்னும் நேர்மையாளருக்கு நேர்ந்ததுபோல எஸ்தாக்கியாரின் செல்வமெல்லாம் பறிபோயிற்று; அவருடைய மனைவியாரைப் பிடித்துக்கொண்டு போயினர்; தம் இரு பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு ஓர் ஆற்றைக் கடந்துசென்ற வேளையில் அவர்தம் அன்பு மக்களை ஓநாயும் சிங்கமும் இழுத்துச் சென்றுவிட்டன. இத்துயரங்களுக்கு நடுவிலும் எஸ்தாக்கியார் கடவுள் மீது கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையை இழக்கவில்லை. இறுதியாக, கடவுளின் திருவருளால் அவர் தாம் இழந்த அனைத்தையும் திரும்பப் பெற்றார்.
எஸ்தாக்கு/எஸ்தாக்கியார் என்னும் பெயருக்கு இணையான ஆங்கில வடிவம் Eustace/Eustachius/Eustathius (Greek: Ευστάθιος Eustathios, "good stability" or "fruitful")என்பதாகும்.
வழித்தடம் :
வள்ளியூர் - திருச்செந்தூர் வழித்தடத்தில் மிட்டாதார்குளத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.