150 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், காரங்காடு


புனித ஞானப்பிரகாசியார் ஆலயம்

இடம் : காரங்காடு

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : பங்குதளம்
கிளைகள் :

1. தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், குழிவிளை
2. புனித அந்தோணியார் ஆலயம், நுள்ளிவிளை.

குடும்பங்கள் : 800
அன்பியங்கள் : 18

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு

ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி V. விக்டர்

திருவிழா : ஜூன் மாதத்தில் பத்து நாட்கள்.

வரலாறு :

இயேசு கிறிஸ்துவுக்குப் பின் 46 வது ஆண்டில் அவருடைய பன்னிரு சீடருள் ஒருவராகிய புனித தோமையார் இந்திய நாட்டிற்கு கிறிஸ்துவின் போதனைகளை பரப்ப வந்தார். அப்போது கொண்டோபர்னஸ் என்ற அரசன் வடமேற்கு இந்தியாவை ஆண்டு வந்தான். புனித தோமையார் வட இந்தியப் பகுதிகளிலும் மேற்கு கடற்கரை, கிழக்கு கடற்கரைப் பகுதிகளிலும் கிறிஸ்துவின் போதனைகளைப் போதித்தார். பல ஆலயங்களையும் கட்டினார். கி.பி 52 ல் வேணாட்டிற்கு வந்தார். (வேணாடு என்பது கொல்லம் முதல் நாஞ்சில் நாடு வரையுள்ள பகுதியாகும்) பலரையும் கிறிஸ்தவ மறையில் சேர்த்தார்.

குமரி மாவட்டம் முட்டத்தில் புனித தோமையார் ஆலயத்தின் முன்புறமுள்ள குருசடி அவரால் எழுப்பப் பட்டது என்பர். இப்பகுதியில் வாழும் மக்களுக்கும், உள்நாட்டு மக்களுக்குமிடையே ஏற்பட்ட வாணிபத் தொடர்பால் இயேசு கிறிஸ்துவை, இப்பகுதி மக்களும் அறிய வாய்ப்பு பெற்றிருக்கலாம். கி.பி 72ல் புனித தோமையார் சென்னையிலுள்ள சின்னமலையில் வேத சாட்சியாக உயிர் துறந்தார். அவரது கல்லறையை சாந்தோம் பேராலயத்தில் காணலாம்.

வேணாட்டு அரசர்கள் கிறிஸ்தவம் பரவுவதற்கு ஆதரவு அளித்ததால் விரைவில் பரவியது. கி.பி 345 ல் 'தாமஸ்கானா' என்ற சிரியா நாட்டு வியாபாரி வேணாட்டில் ஒரு கிறிஸ்தவ சபையை உருவாக்கினார். அதே ஆண்டில் உரோமையில் மனந்திரும்பிய "தெயோபிலஸ்" என்னும் இந்தியர் நம் நாட்டிற்கு வந்து பல சமய சீர்திருத்தங்களை செய்தார். கிபி 470 ல் கிரேக்க மொழியிலிருந்து, சீரியாக் மொழியியல் வேதநூல் மொழி பெயர்க்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப் பட்டது. 7-8 நூற்றாண்டுகளில் வேணாட்டின் சுற்றுப்புறங்களில் கிறிஸ்தவம் பரவியிருந்தது என்பதற்கு கேரளா மாநிலம் கோட்டயத்தில் காணப்படும் கற்சிலுவை சான்றாகும். 9-ம் நூற்றாண்டில் அய்யனடிகள் என்ற வேணாட்டு அரசர் செப்புப்பட்டயத்தில் நிலங்களை கொல்லம் ஆலயத்திற்கு விட்டுக் கொடுத்ததையும், பாரசீக ஆயர்கள் கொல்லத்தில் திருச்சபையை வளர்த்ததையும் செப்புத் தகடுகளில் காணலாம்.
10 ம் நூற்றாண்டில் சிரியன் கிறிஸ்தவர்களை, கிறிஸ்தவ அரசன் ஒருவன் ஆண்டதாக சிரியா நாட்டு மரபு கூறுகிறது. கி.பி 1129 ல் பாக்தாத் கிறிஸ்தவர்கள் ஆயர் ஒருவரை மலபார் திருச்சபைக்கு அனுப்பியதாக கல்தேயா எழுத்துப் பிரதி எடுத்துக் காட்டுகிறது.

கி.பி 1295ல் நம் நாட்டிற்கு வந்த மார்க்கோபோலோ, அப்போதிருந்த கிறிஸ்தஸர்களைப் பற்றி தமது பயணக் குறிப்பில் எழுதியுள்ளார்.

கி.பி 1305 ல் மோன்டேகோர் வினோலின் ஜான் என்ற பேராயர் சீனா செல்லும் வழியில் இந்தியாவில் சில காலம் தங்கி சிலருக்கு ஞானஸ்நானம் கொடுத்ததையும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் இங்கு வாழ்ந்து வந்ததையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கிபி 1498 ல் போர்த்துகீசிய கப்பல் தலைவன் வாஸ்கோடகாமா கோழிக்கோட்டில் வந்திறங்கினார். இவர்கள் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதையே தலையாயப் பணியாக கருதினார். இதனால் இவர்கள் செல்லுமிடமெல்லாம் குறிப்பாக கடற்கரைப் பகுதிகளில் கிறிஸ்தவம் பரவியது.

கி.பி 1515 ல் பிரான்சிஸ்கன் சபையினர் கொல்லத்தில் ஏராளமான மக்களை மனந்திருப்பினர். அவர்கள் கோவாவிலும், நாகப்பட்டினத்திலும் தங்கள் மடங்களை நிறுவினர். கி.பி 1534 ல் கோவா மறை மாவட்டம் உருவானது. கி.பி 1535 ல் சில பிரான்சிஸ்கன் சபை குருக்கள் முத்துக் குளிக்கும் கடற்கரைப் பகுதிக்கு (குமரி முதல் இராமேஸ்வரம் வரை) அனுப்பப் பட்டனர். இதன் பயனாக குமரி மிஷன் (Cape mission) என்ற அமைப்பு ஏற்பட்டது.
🏵கி.பி 1542 ல் அக்டோபர் 28 -ம் நாளில் புனித சவேரியார் 'குமரி மிஷனுக்கு' வந்தார். ஆயிரமாயிரம் மக்களை மனந்திருப்பினார். ஒரு சிறு மணியை ஒலித்துக் கொண்டே தெருத் தெருவாக சென்றார். மணியோசை கேட்ட மக்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். அவர்களுக்கு மறை உண்மைகளையும், செபங்களையும் கற்பித்தார். அவைகளை ஓலைகளில் எழுதி படிக்கத் தெரிந்தவர்களிடம் கொடுத்தார்.

1544 ல் வேணாட்டை உண்ணிக் கேரளவர்மா அரசர் ஆட்சி செய்யும் காலத்தில், வடுகர்கள் வேணாட்டின் மீது படையெடுத்தனர். புனித சவேரியார் தம் கையிலுள்ள திருச் சிலுவையின் உதவியால் கோட்டார் போரில் வடுகர்களை தோல்வியுறச் செய்தார். இவ்வெற்றி முத்துக் குளித்துறையிலும் அரபிக்கடல் தீரத்திலும் தம் பணியைத் தீவிரமாக நிறைவேற்ற உதவியது. கன்னியாகுமரி, பெருமணல், தாழை, மணப்பாடு, ஆலந்தலை, வீரபாண்டியன் பட்டணம், தூத்துக்குடி முதலிய ஊர்கள் முத்துக் குளித்துறையிலும்; கோவளம், மணக்குடி, பள்ளம், பெரியகாடு, இராஜாக்கமங்கலம், பிள்ளைத்தோப்பு, முட்டம், கடியப்பட்டினம், தூத்தூர் முதலிய ஊர்கள் அரபிக் கடல் தீரத்திலும் புனிதர் பணிபுரிந்த முக்கிய இடங்களாகும். புனித சவேரியார் ஒவ்வொரு ஊரிலும் பல நாட்கள் தங்கி போதித்தார். ஒரு ஊரை விட்டு செல்லும்முன் கிறிஸ்தவர்களை கண்காணித்து வழிநடத்த கணக்காயர்களை நியமித்தார். மக்கள் அவர்களை 'கணக்கப்பிள்ளை' என்றும் 'உபதேசியார்' என்றும் அழைத்தனர். கிபி 1557 ல் கோவா மறை மாவட்டம் மறை மாநிலமாகவும், அதன்கீழ் கொச்சி துணை மறை மாவட்டமாக இருந்தது. நாம் வாழும் பகுதிகள் இத்துணை மறை மாவட்டத்திற்கு உட்பட்டிருந்து.

கி.பி 1604 ஏப்ரல் 26ல் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அரசர் இரவிவர்மா, வேதியர்கள் கிறிஸ்தவ மதம் பரப்பியதே இதற்குக் காரணம் எனக்கூறி கிறிஸ்தவர்களை மதம் மாறவும், கிறிஸ்தவ ஆலயங்களை இடிக்கவும் கட்டாயப் படுத்தினார். பின்னர் கிறிஸ்தவ குருக்களின் வேண்டுதலால் சில ஆலயங்கள் திரும்ப கட்டப்பட்டது.

கி.பி 1606 ல் மதுரையில் சமய குருவாயிருந்த இராபர்ட் தெதோபிலி காவியுடையணிந்து தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு முதலிய மொழிகளைக் கற்று திருமறையைப் போதித்தார். பலரை மனந்திருப்பினார். 1606 ல் மைலாப்பூர் கோவா மறை மாநிலத்தின் துணை மறை மாவட்டமானது.

1701 ல் திருவனந்தபுரத்திற்கருகில் 'நேமம் மிஷன் ' அமைக்கப் பட்டது. 1708 ல் நேமம் மிஷனின் கீழ் மருங்கூர், வடக்கன்குளம் ஆகியவை இருந்தன. 1710 ல் வீரமாமுனிவர் மதுரை வந்து பல இடங்களுக்கும் சென்று மக்களை மனந் திருப்பினார். தமிழில் இலக்கண இலக்கியங்களை எழுதினார். 1741 ல் மறைதிரு ஜான் பாப்பிஸ்டு பூத்தாரி சுவாமிகள் வடக்கன்குளத்தை தலைமையமாகக் கொண்டு பத்தாண்டுகள் மறைபரப்பு பணி செய்தார்கள். 📖"இக் காலத்தில் காரங்காடு மக்கள் கட்டுச்சோறுடன் வடக்கன்குளம் சென்று திருப்பலி கண்டு வருவார்கள். அவ்வாறு திருப்பலி கண்டு வரும் மக்களைப் பெருங்கூட்டம் காரங்காட்டில் 🎉🎈வரவேற்கக் காத்திருக்குமாம். திருப்பலி கண்டு வந்த மக்கள் தங்கள் மகிழ்ச்சியை அவர்களோடு பகிர்ந்து கொள்வார்களாம்".

1741 ஆகஸ்ட் 10 ம் நாளில் நடந்த குளச்சல் போரில் வேணாட்டு மன்னர் மார்த்தாண்டவர்மா மாபெரும் வெற்றி பெற்றார். டச்சுக்காரர்கள் தோல்வியடைந்தனர். இப்போரில் கைதியாக பிடிக்கப் பட்டவர்களில் ஒருவர் தான் டிலனாய். டிலனாய் 37 ஆண்டுகள் மன்னருக்கு பேருதவியாக இருந்தார். இவரது முயற்சியால் தான் மன்னரின் உயர் அதிகாரிகளில் ஒருவரான நீலகண்ட பிள்ளை என்பவரை மனந்திருப்பி, வடக்கன்குளம் மறைதிரு பூத்தாரி சுவாமிகளிடம் ஞானஸ்நானம் பெறச் செய்தார். ஞானஸ்நானம் பெற்றபின் அவர் தேவசகாயம் பிள்ளை (Lazarus) எனப்பட்டார். மன்னர் தேவசகாயம் பிள்ளையிடம் கிறிஸ்து மதத்தை விட்டு விடச் சொன்னார். அவர் மறுக்கவே 1749 ல் சிறைபிடிக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடும் வேதனை அனுபவித்து 1752 ல் ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலையில் சுட்டுக் கொல்லப்பட்டு வேத சாட்சியானார். டச்சுத் தளபதி டிலனாய் 1779 ல் தம் 61 ம் வயதில் இறந்தார்.

காரங்காடு பங்கின் வளர்ச்சி :

1778 ல் இயேசு சபை குருக்களில் ஒருவராகிய மறைதிரு அலோசியாஸ் பால்கா சுவாமிகள் காரங்காட்டில் இப்போதிருக்கும் ஆலயத்தின் முற்பகுதியை கட்டி (60*27*42) பங்காக நிறுவியிருக்கலாமென கருதப் படுகிறது. 1780 ல் சுவாமியவர்கள் திருவிதாங்கோட்டில் மறைப் பணி புரிந்ததாகவும் தெரிகிறது. 1883 ல் புதுப்பிக்கப்பட்ட இயேசு சபையிலுள்ள இரு குருக்கள் 'குமரி மிஷனுக்கு ' வந்தனர். அச் சமயம் கார்மல் சபை குருக்களும் நம் நாட்டில் பல இடங்களில் பணியாற்றினர். 1854 ல் வராப்புழை மறை மாவட்டமானது வராப்புழை, மங்களூர், கொல்லம் என மூன்று மறை மாவட்டங்களாக பிரிக்கப் பட்டது. மறைத்திரு பெர்னார்டைன் போக்கிலினி OCD கொல்லம் மறை மாவட்ட முதல் குருவானார்.

1847 ல் கொல்லம் மறை மாவட்டத்திற்குட்பட்ட பங்குகளின் அட்டவணையில் 9 பங்குகள் குறிப்பிடப் படுகின்றன. அவைகளின்படி 6 கடலோரத்திலும் 3 உள் நாட்டிலும் இருந்தன. 9 பங்குகளிலும் பரப்பளவிலும் மக்கட் தொகையிலும் மிகப் பெரியதாக இருந்தது காரங்காடே என்பது தனிச்சிறப்பு.

அன்று காரங்காடு பங்கானது இரணியல், மாங்குழி, முளகுமூடு, மணலிக்கரை, ஆலஞ்சி, புத்தன்கடை, மாத்திரவிளை, பழையகடை, திருவிதாங்கோடு, மாடத்தட்டுவிளை, முள்ளங்கினாவிளை முதலிய 127 கிராமங்களையும் கொண்ட ஒரு தனிப்பெரும் பங்காக விளங்கியது. ஆனால் அப்போதைய பங்குத்தந்தையர்களைக் குறித்து அறிய முடியவில்லை.

1871 ல் காரங்காட்டிலிருந்து பிரிந்து முளகுமூடு தனிப் பங்காகியது.

1885-1887 Fr இதோர் ஆப் தெரெஸ் சுவாமிகள் பங்குத்தந்தையாக பணிபுரிந்தார். பங்கு வரவு கணக்குகளை (stock register) திட்டமாக எழுதி கையெழுத்திட்டுள்ளார்.

1887-1890 Fr கிரகோரி சுவாமிகள் பல விழாக்கள் நடத்தியுள்ளார்கள்.

1890-1904 Fr எலியாஸ் சுவாமிகள் பங்கு வளர்ச்சிக்கு பல ஆக்கப்பூர்வமான வேலைகள் செய்துள்ளார்.

1904-1908 Fr அனஸ்தாஸ் ஆப் சாந்த மரியா காலத்தில் ஆலயத்தின் பின்பகுதியில் உள்ள மூன்று பாகங்களும் கட்டுவதற்கான திட்டமிடப் பட்டது.

1906 ல் மாங்குழி தனிப்பங்கானது.

1908-1918 "அருட்பணி அகஸ்டின் சுவாமிகள். இப் பங்கின் முதல் இந்திய குரு" இவர் தான். ஆலயப் பணிகள் தீவிரமாக நடந்தது. அருட்பணி அகஸ்டின் அவர்கள் சிறிது காலம் மாடத்தட்டுவிளையில் தங்கியிருந்து காரங்காடு பங்கு காரியங்களை கவனித்தார்கள்.

10-11-1918 ல் மாடத்தட்டுவிளை தனிப் பங்கானது.

1918-1931 அருட்பணி இன்னாசியார் சுவாமிகள். காரங்காடு பாடசாலை கட்டிடத்தைக் கட்டினார். 1927 ல் கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயத்தைக் கட்டினார். காரங்காட்டிலிருக்கும் தேர், கொடிமரம் முதலியன இவர் காலத்தில் அமைக்கப் பட்டதாகும். 1930 ல் கோட்டார் மறை மாவட்டம் உருவாகியது.

1931-1934 அருட்பணி வர்க்கீஸ் சுவாமிகள்.

1934-1944 அருட்பணி D. Cஅந்தோணி சுவாமிகள், பக்தசபைகள் பலவும் நிறுவப்பட்டது. 1941 ல் லூர்து மாதா கெபி கட்டப்பட்டது. ஆலய முன்பக்க மதிற்சுவர் கட்டப்பட்டது.

1939 ல் சரல் தனிப் பங்கானது.

1944 ல் கண்டன்விளை தனிப் பங்கானது .

1944-1954 அருட்பணி Y. லூயிஸ் சுவாமிகள். 1951 ல் தூய பாத்திமா மாதா குருசடி கட்டப்பட்டது.

1954-1961 அருட்பணி R. அந்தோணிமுத்து. கத்தோலிக்க சேவா சங்கம் ஆரம்பிக்கப் பட்டது. திரு இருதய சபையின் பொன்விழா கொண்டாடப் பட்டது. 1958 ல் காரங்காடு பலநோக்கு கூட்டுறவு சங்கம் Y-31 ஆரம்பிக்கப் பட்டது. மகளிர் மன்றம், பாலர் பள்ளி, அம்பர் சர்கா பயிற்சி கூடம் முதலியன அமைக்கப் பட்டன.

1961-1968 அருட்பணி ஜோசப் சுவாமிகள். நுள்ளிவிளையில் 1964 ல் புனித அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டது. 1964 ல் ஆலன்விளையில் ஆலயம் கட்டப்பட்டது. மெழுகு தொழிற்சாலை ஏற்படுத்தப் பட்டது.

1968-1970 அருட்பணி கார்மல் சுவாமிகள்

1968 ல் ஆலன்விளை தனிப்பங்கானது.

1970-1971 அருட்பணி A. பீட்டர் சுவாமிகள்

1971 அருட்பணி சபரிநாதன் சுவாமிகள், அருட்தந்தையவர்கள் இங்கு பணிபுரியும் காலத்திலேயே தமக்கிருந்த நோயையும் கவனியாமல் சிறப்பாக பணிபுரிந்தார்கள். பின்னர் தமது 33ம் வயதில் 29-12-1977 இறந்தார். அவரது கல்லறையானது காரங்காடு கல்லறைத் தோட்டத்தின் நடுநாயகமாக விளங்குகிறது.

1972-1973 அருட்பணி லூக்காஸ் சுவாமிகள். குடிநீர் தொட்டி அமைக்கப் பட்டது.

1973-1975 அருட்பணி J. ஜார்ஜ் சுவாமிகள் பணிக்காலத்தில் தாய்சேய் நல விடுதி அமைக்கப் பட்டது.

1975-1978 அருட்பணி G. அல்போன்ஸ் சுவாமிகள் பணிக்காலத்தில் காரங்காட்டில் புனித ஞானப்பிரகாசியார் மருத்துவ நிலையம் அமைக்கப் பட்டது.

1991 அருட்பணி தொபியாஸ் காலத்தில் ஆலயத்திற்கு மார்பிள் தரை போடப் பட்டது.

1992 அருட்பணி அகஸ்டின் அடிகள் காலத்தில் YCS, இளைஞர் இயக்கம் துவக்கப் பட்டது.

19-06-2002 ல் அரசு பொது நூலக புதிய கட்டிடம் திறப்பு விழா.

15-06-2006 ல் கலையரங்கம் திறப்பு விழா.

அருட்பணி ஜெயப்பிரகாஷ் பணிக்காலத்தில் (2008-2013)17-08-2008 புதிய மேல்நிலைப்பள்ளி திறப்புவிழா. 7-09-2008 ல் புனித அலோசியஸ் சமூக நலக்கூடம் அர்ச்சிப்பு விழா.

22-06-2008 ல் புதிய (தொடக்கப்பள்ளி) பள்ளிக்கூடம் திறப்பு விழா. 2011 ல் மேல்நிலைப்பள்ளி கூடுதல் கட்டிடம் திறப்பு விழா. ஆலய பீடம் புதுப்பிக்கப்பட்டு அழகுபடுத்தப் பட்டது. இவ்வாறு பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் அருட்பணி ஜெயப்பிரகாஷ் பணிக்காலத்தில் செய்யப்பட்டு, பங்கின் வளர்ச்சிக்கு உதவினார்.

04-06-2013 ல் புனித ஞானப்பிரகாசியார் நவநாள் துவங்கப்பட்டது. ஆலய புனரமைப்புப் பணிகள் செய்யப் பட்டது.

அருட்பணி எடிசன் பணிக்காலத்தில் 15-09-2015 ல் நுள்ளிவிளை மதுக்கடையை அகற்ற சத்தியாகிரக போராட்டம் நடத்தப் பட்டது. சிலுவைப்பாதை ஸ்தலங்கள் அமைக்கப்பட்டது.

9-01-2016 ல் குழித்துறை மறை மாவட்டத்தின் காரங்காடு மறை வட்டாரம் உதய விழா சிறப்பாக நடத்தப் பட்டது.

240ஆண்டிற்கு முன்னால் ஆங்கிலேயர்களால் ஆலயத்தினுள்தூண்கள் எதுவும் இல்லாமல் சுண்ணாம்பு பதநீர் கொண்டு அழகிய கலைநயத்தால் கட்டப்பட்ட இவ்ஆலயத்தை தற்போது பங்குத்தந்தை அருட்பணி V. விக்டர் அவர்கள் சிறப்பாக வழி நடத்தி வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்கிறார்.

காரங்காடு பங்கின் இறையழைத்தல்கள் :

1. Fr S.ஜோசப் ஜெயசீலன்
2. Fr S. கிறிஸ்டோபர்
3. Fr F. பிரான்சிஸ் போர்ஜியோ

திருத்தொண்டர் J அஜித் (2019மே மாதத்தில் குருபட்டம் பெற உள்ளார்)
குருமாணவர் G. ஆன்றோ வசந்த்.

அருட்சகோதரிகள்:

1.Sr.பார்பரா மேரி
2.Sr லூர்து
3.Sr டெனிக்னா தெரஸ் மேரி
4.Sr.மேரி பிதலிஸ்
5.Sr.அல்போன்சா
6.Sr. S டிவோட்டா
7.Sr. V கிளீட்டஸ் மேரி
8.Sr.M எடித்
9.Sr.F மைக்கேல் கில்பா றோஸ்
10.Sr.S அமலராணி
11.Sr.S செலின் மேரி
12 Sr.C இனிகோ மேரி
13.Sr.R எலிசபெத்
14.Sr மேரி கொலாஸ்டிக்கா.

இவ்வாறு நீண்ட வரலாற்றைக் கொண்ட காரங்காடு தலத்திருச்சபை வரலாற்றை நமது ஆலயம் அறிவோம் பதிவின் 150 ஆலயமாக பதிவு செய்து இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கின்றோம்.

(1978 ம் ஆண்டு வெளியிடப்பட்ட தூய ஞானப்பிரகாசியார் ஆலயம் காரங்காடு 200வது ஆண்டு விழா சிறப்பு மலர் மற்றும் அதற்கு பிந்தைய நிகழ்வுகள் மண்ணின் மைந்தர் சேகரித்து பங்குத்தந்தையின் ஒப்புதலுடன் கொடுத்ததையும், வாசித்து சுருக்கமாக எழுதியுள்ளோம்)