மாவட்டம் : தர்மபுரி
மறைமாவட்டம் : தர்மபுரி
மறைவட்டம் : அரூர்
நிலை : பங்குத்தளம்
பங்குத்தந்தை : அருள்பணி. A. B. அருள்ஜோதி
குடும்பங்கள் : 750
அன்பியங்கள் : 20
திருவழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு : காலை 06.30 மற்றும் 08.30 மணிக்கு திருப்பலி
திங்கள், புதன், வெள்ளி : காலை 06.15 மணிக்கு திருப்பலி
வியாழன் : மாலை 06.30 மணிக்கு திருப்பலி
முதல் வெள்ளி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி
செவ்வாய் : மாலை 06.30 மணிக்கு புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் திருப்பலி
புனித லூர்து அன்னை திருத்தலம்:
புதன், சனி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி
முதல் சனி : காலை 07.00 மணிக்கு மற்றும் மாலை 06.30 மணிக்கு திருப்பலி
பங்குத்திருவிழா : ஜூலை 16
புனித லூர்து அன்னை திருத்தல ஆண்டுப்பெருவிழா : பாஸ்கா காலத்தின் இரண்டாம் வெள்ளி, சனி, ஞாயிறு
மண்ணின் இறையழைத்தல்கள் :
அருள்பணியாளர்கள்:
1. அருள்பணி. செல்வரத்தினம், SJ
2. அருள்பணி. அமலநாதன் (Late)
3. அருள்பணி. அகஸ்டின் நாதன், SDB
4. அருள்பணி. R. அதிரூபன், தருமபுரி மறைமாவட்டம்
5. அருள்பணி. A. வேதநாயகம், Ofm. Cap.
6. அருள்பணி. M. லூர்து சுரேஷ்குமார், HGN
7. அருள்பணி. பரத் சின்னப்பன், SDB
8. அருள்பணி. பரத் நாயகம், OMI
9. அருள்பணி. மோசஸ், தருமபுரி மறைமாவட்டம்
10. அருள்பணி. ஆபிரகாம், SDC
11. அருள்பணி. இன்பன்ட் டோனி பால், தருமபுரி மறைமாவட்டம்
12. அருள்பணி. பாண்டியன், SDC
அருள்சகோதரர்கள்:
1. அருள்சகோதரர். பிரேம் ஆனந்த்
2. அருள்சகோதரர். குபேந்திரன்
3. அருள்சகோதரர். பாஸ்கர்
4. அருள்சகோதரர். அகஸ்டின்
அருள்சகோதரிகள்:
1. அருள்சகோதரி. கல்யாணி
2. அருள்சகோதரி. மார்கிரேட்
3. அருள்சகோதரி. விக்டோரியா
4. அருள்சகோதரி. ஜெசிந்தா
5. அருள்சகோதரி. அருள் செசிலி கிளாடியா
6. அருள்சகோதரி. அமலராணி
7. அருள்சகோதரி. மேரி சங்கீதா
8. அருள்சகோதரி. மரிய அலெக்ஸியா
9. அருள்சகோதரி. அருள் ஜோதி
10. அருள்சகோதரி. மேரி ஜாக்குலின்
11. அருள்சகோதரி. அமலோற்பவ மேரி
12. அருள்சகோதரி. மோட்ச அலங்காரம்
13. அருள்சகோதரி. சுபா
14. அருள்சகோதரி. கிளேசியா
15. அருள்சகோதரி. தூயநாயகி
16. அருள்சகோதரி. ஜெனிபர்
Location map: https://maps.app.goo.gl/PCwEEx6ZgTgWCqpp7
வழித்தடம் :
Train route : சென்னை - சேலம் வண்டி
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை வழி இறங்குமிடம் பொம்மிடி.
Bus route : சேலம் - தருமபுரி பேருந்து வழி பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி இறங்குமிடம் B. பள்ளிப்பட்டி.
சென்னை - சேலம் பேருந்து : அரூர், ஊத்தங்கரை வழித்தடம் சாமியாபுரம் கூட்ரோடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து பொம்மிடி பேருந்தில் பயணித்து, B. பள்ளிப்பட்டியில் இறங்கினால் இவ்வாலயத்தை வந்தடையலாம்.
ஆலய வரலாறு :
பள்ளிப்பட்டியில் கிறிஸ்தவ விசுவாசத்தை விதைத்தவர்கள், மைசூர் மறைப்பணித்தளத்தை சேர்ந்த இயேசு சபை மறைப்பணியாளர்களே ஆவர். 1750 ஆம் ஆண்டுக்கு முன்னரே கிறிஸ்தவர்கள் பள்ளிப்பட்டியில் வாழ்ந்ததாக வரலாற்று சான்றுகள் உள்ளன. 1750 ஆம் ஆண்டில் இலளிகம் (லலிகம்) என்ற ஊரில் தங்கி, கோவிலூர் பங்கைச் சேர்ந்த மக்களுக்காக பணியாற்றியவர் அருள்பணி. திமோத்தி சேவியர் என்ற இயேசு சபை குருவானவர். அவர் பொறுப்பில் இருந்த ஊர்களின் பட்டியலில் பள்ளிப்பட்டியும் உள்ளது.
1843-1844 ஆம் ஆண்டில் கோவிலூரில் உதவிப்பங்குத்தந்தையாக பணியாற்றியவர் அருள்பணி. மரியோன் பிரசியாக், MEP அவர்கள், தாம் பயணம் செய்த ஊர்களின் பட்டியலில் பள்ளிப்பட்டியையும் குறிப்பிடுகிறார். 1850 ஆம் ஆண்டு கணக்குப்படி, பள்ளிப்பட்டியில் 288 கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததாக குறிப்புகள் உள்ளன. 1858 ஆம் ஆண்டில் சேலம், தருமபுரி பகுதிகளில் பணியாற்றிய அருள்பணி. குயோன் (Pierre Gouyon) அடிகளாரின் முயற்சியால், ஏழு குடும்பங்கள் திருமுழுக்கு பெற்றனர். 1861-1864 ஆம் ஆண்டுகளில் கோவிலூர் பங்குதந்தை அருள்பணி. திரியோன் அடிகளாரின் முயற்சியால், 23 பேர் பள்ளிப்பட்டியில் திருமுழுக்குப் பெற்றனர். இவ்வாறு வளர்ந்து வந்த பள்ளிப்பட்டி, கும்பகோணம் மறைமாவட்டத்தில் இருந்து சேலம் மறைமாவட்டம் பிரிக்கப்பட்டபோது, 04.08.1930 அன்று தனிப்பங்காக உருவாக்கப்பட்டது. அப்போது, பொம்மிடி, தென்கரைக்கோட்டை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மோரூர் ஆகிய பகுதிகள் கிளைப்பங்குகளாக பிரிக்கப்பட்டது. தற்போது, அப்பகுதிகள் அனைத்தும் தனிப்பங்குகளாக செயல்பட்டு வருகிறது.
1930 ஆம் ஆண்டு கணக்குப்படி, பள்ளிப்பட்டியில் 102 கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குடும்பங்கள் இருந்தது. கும்பகோணம் மறைமாவட்டத்தில் பணியாற்றிய பாரீஸ் மறைபரப்பு சபை குருக்கள், சேலம் மறைமாவட்டத்தோடு தங்களை இணைத்துக் கொண்டனர். கும்பகோணம் மறைமாவட்டத்தில் கொணலை என்ற பங்கில் பணியாற்றிய அருள்பணி. சார்லஸ் டெவின் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். கல்விப்பணிக்கு முன்னுரிமை கொடுத்த அருள்பணி. சார்லஸ் டெவின் அவர்கள், 02.06.1932 அன்று தூய மரியாள் துவக்கப்பள்ளியைத் துவங்கினார். பிறகு, பள்ளிப்பட்டியில் புதிய ஆலயமானது கட்டப்பட்டு, 18.11.1938 அன்று அர்ச்சிக்கப்பட்டது. 15 ஆண்டுகள் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய இவர், 11.03.1945 அன்று இறைவனடி சேர்ந்தார். 14.03.1945 அன்று அவர் கட்டியெழுப்பிய ஆலயத்தின் இடப்புறமே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
1952 முதல் 1958 வரை பங்குத்தந்தையாக பணியாற்றிய அருள்பணி. T. C. ஜோசப் அடிகளாரின் முயற்சியால் 1952 ஆம் ஆண்டில் தூய மரியாள் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
1932 ஆம் ஆண்டில் துவக்கப்பள்ளி, 1952 ஆம் ஆண்டில் நடுநிலைப்பள்ளி என வளர்ந்த தூய மரியாள் பள்ளி, 1992 ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, தூய மரியாள் தொடக்கப்பள்ளி என்றும், தூய கார்மேல் உயர்நிலைப் பள்ளி என்றும் செயல்பட ஆரம்பித்தது. தூய கார்மேல் உயர்நிலைப் பள்ளி 2008 ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
அருள்பணி. M. அருள்சாமி அவர்களின் முயற்சியால் 19.01.2001 அன்று புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, அதே ஆண்டில் 16.11.2001 அன்று புதிய பங்கு ஆலயமும், பங்குத்தந்தை இல்லமும் கட்டிமுடிக்கப்பட்டு தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
அருள்பணி. D. தேவசகாயம் அவர்களின் பணிக்காலத்தில் நன்கொடையாளர்களின் உதவியுடன் அழகிய கனவின் புனித சூசையப்பர் கெபி கட்டப்பட்டு, 07.11.2023 அன்று மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும், நன்கொடையாளர்களின் உதவியுடன் ஆலய வளாகத்தில் சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட்டு, புதிய கழிப்பறைகள் அமைக்கப்பட்டு 26.05.2024 அன்று பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது. மேலும், அருள்பணி. D. தேவசகாயம் அவர்களின் முயற்சியாலும், அருள்பணி. A. B. அருள்ஜோதி அவர்களின் முயற்சியாலும், நன்கொடையாளர்களின் உதவியாலும் ஆலய மணிக்கோபுரத்திற்கு 11.02.2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிமுடிக்கப்பட்டு, 16.07.2024 அன்று மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
அருள்பணி. A. B. அருள்ஜோதி அவர்களின் முயற்சியால் ஆலய திருத்தூயகம் அழகுற புதுப்பிக்கப்பட்டு 29.05.2025 அன்று மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
புனித லூர்து அன்னை திருத்தலம்:
பி. பள்ளிப்பட்டியின் பங்குத்தந்தை அருள்பணி. T. C. ஜோசப் (1952-1958) அவர்களின் சீரிய முயற்சியால் லூர்து அன்னையின் காட்சிகளின் நூற்றாண்டு நினைவாக, மல்லிகார்ஜூனா மலையின் மேற்குப் பகுதியில் (மசபியேல் மலை) நான்கு அடி உயரம் கொண்ட லூர்து அன்னையின் சுரூபத்துடன் கூடிய கெபியானது நிறுவப்பட்டு, 20.06.1958 அன்று சேலம் ஆயர் மேதகு செல்வநாதர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து பங்குத்தந்தையாக 1958 செப்டம்பர் மாதம் பணிப்பொறுப்பேற்ற அருள்பணி. மத்தேயு புலிக்கல் (1958-1965) அவர்களின் சீரிய முயற்சியால் கோவையில் உருவாக்கப்பட்ட 11 அடி மாதா சுரூபம், சிலுவைப்பாதை நிலைகள் மற்றும் செபமாலை படிக்கட்டுகள் போன்றவற்றால் மசேபியேல் மலை மெருகூட்டப்பட்டு 29.04.1960 அன்று சேலம் ஆயர் மேதகு செல்வநாதர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
அருள்பணி. தாமஸ் கீராஞ்சிரா (1965-1972) அவர்கள் மசேபியேல் மலையின் அருகில் லூர்துபுரம் என்ற ஊரை அமைத்தார். 11.02.1969 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் சேலம் ஆயர் மேதகு செல்வநாதர் அவர்கள் லூர்துபுரத்தை திறந்து வைத்தார். 1970 ஆம் ஆண்டு மாசற்ற இரத்தம் என்ற இயேசுவின் வரலாற்று நாடகம் முதன்முறையாக நடிக்கப்பட்டது.
அருள்பணி. R. சேவியர் (1972-1978) அவர்களின் முயற்சியால் மலையுச்சியில் உயிர்த்த ஆண்டவரின் திருவுருவம் நிறுவப்பட்டது. மேலும், மாசற்ற இரத்தம் நாடகமானது 1976 ஆம் ஆண்டில் ஒளி - ஒலி காட்சிகளாக அரங்கேற்றம் செய்யப்பட்டது.
பிறகு, பொறுப்பேற்ற அருள்பணி. S. இருதயசெல்வம் (1978-1979) அவர்களால் மாசற்ற இரத்தம் ஒளி - ஒலி காட்சிகள் மசேபியேல் மலையில் திறந்தவெளிக் காட்சிகளாக நடித்து வழங்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டில் அருள்பணி. A. சார்லஸ் (1989-1995) அடிகளாரின் சீரிய முயற்சியால், மசேபியேல் மலைப்பகுதியில் 12 ஏக்கர் நிலம் திருத்தலப் பயன்பாட்டிற்காக வனத்துறையால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
1997 ஆம் ஆண்டில் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருள்பணி. M. ஜெகராஜ் (1995-1998) அவர்களின் முயற்சியால் செபமாலைப் படிகளில் தியானிக்க, செபமாலை மறையுண்மைகள் நிறுவப்பட்டது. அருள்பணி. D. தேவசகாய சுந்தரம் (2010-2013) அவர்களின் பணிக்காலத்தில் அருள்பணி. மத்தேயு புலிக்கல் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் உதவியுடன் மசபியேல் மலையில் கீழ்பகுதியில் லூர்து அன்னை கெபி கட்டப்பட்டு 07.05.2011 அன்று மேதகு ஆயர் ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
குருத்துவ பொன்விழா நினைவாக பங்குத்தந்தை அருள்பணி. M. ஜெகராஜ் (1968-2018) அவர்களின் முயற்சியாலும், குருத்துவ வெள்ளிவிழா நினைவாக அருள்பணி. ஜோசப் A. ரொசாரியோ (1986-2011) அவர்களின் முயற்சியாலும், நன்கொடையாளர்களின் உதவியாலும் செபமாலை நிலைகள் புதுப்பொலிவுடன் கட்டப்பட்டு, 09.12.2017 அன்று மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டுமுதல் பணியாற்றிய பங்குத்தந்தையர்களின் முயற்சியாலும், அருள்பணி. D. தேவசகாயம் (2019-2024) அவர்களின் சீரிய முயற்சியாலும், நன்கொடையாளர்கள் மற்றும் பங்குமக்களின் உதவியாலும் மசபியேல் மலையின் அடிவாரத்தில் அழகிய பொலிவுடன் லூர்து அன்னை செபக்கூடமும், நற்கருணை ஆராதனை சிற்றாலயமும் கட்டப்பட்டு, 28.04.2022 அன்று மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் துரைராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
🌹மேலும், நன்கொடையாளர்களின் உதவியுடன் லூர்து அன்னை கெபிக்கு நுழைவுவாயில், மேலே வாகனங்கள் செல்வதற்கு சிமெண்ட் சாலை, சாலையின் இருபுறங்களிலும் கருங்கல் சுவர், நவீன மின்விளக்குகள், கெபியின் தரைத்தளங்களில் சிமெண்ட் கற்களாலான தரைகள் ஆகிய மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 15.08.2023 அன்று மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. மேலும், நன்கொடையாளரின் உதவியுடன் திருத்தலத்தில் வானளாவிய புதிய கொடிக்கம்பம் 04.04.2024 அன்று நிறுவப்பட்டது.
தொடர்ந்து, திருத்தலத்தில் பல்வேறு பக்திமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரந்தோறும் புதன் மற்றும் சனி ஆகிய நாட்களில் மாலை 06.30 மணிக்கு திருப்பலியும், குறிப்பாக, மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் காலை 07.00 மணிக்கும், மாலை 06.30 மணிக்கும் திருப்பலிகள், நற்கருணை ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
மாசற்ற இரத்தம் : பாஸ்கா நாடகம்
பி. பள்ளிப்பட்டி பங்கின் அடையாளமாகத் திகழும் "மாசற்ற இரத்தம்" நாடகம், தமிழக கத்தோலிக்க திருஅவையின் கலை வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகும். இது இயேசு கிறிஸ்துவின் பாடுகளைச் சித்தரிக்கும் ஒரு பிரம்மாண்டமான விவிலிய நாடகமாகும்.
1970 ஆம் ஆண்டு முதன்முதலாக மாசற்ற இரத்தம் என்ற தலைப்பில் பாஸ்கா நாடகம் நடித்து வழங்கப்பட்டது. தொடக்கத்தில் சிறிய அளவில் நடத்தப்பட்ட இது, காலப்போக்கில் ஒரு மாபெரும் கலை நிகழ்ச்சியாக உருவெடுத்தது. சேலம் மூவேந்தர் அருள்பணி நிலையத்தின் உதவியோடு 1976 ஆம் ஆண்டில் இந்நாடகம் ஒளி ஒலி காட்சிகளாக நடித்து வழங்கப்பட்டது.
1979 ஆம் ஆண்டில் பங்குத்தந்தையாக இருந்த அருள்பணி. S. இருதய செல்வம் அவர்களின் முயற்சியால், இந்நாடகம் மசேபியேல் மலையின் அடிவாரத்தில் ஒரு பிரம்மாண்டமான திறந்தவெளி நாடகமாக மாற்றப்பட்டது.
நாடகத்தின் தனித்துவம்:
இயற்கையான மேடை: இந்த நாடகம் ஒரு மூடிய அரங்கிற்குள் நடக்காது. மலையின் சரிவுகளையும், பாறைகளையும், சமவெளியையும் மேடையாகப் பயன்படுத்தி இயற்கைச் சூழலில் நடத்தப்படுகிறது. இந்த நாடகம் நடைபெறும் இடம் 'மசேபியேல் மலை' என்று அழைக்கப்படுகிறது. வனத்துறையிடம் இருந்து பெறப்பட்ட நிலத்தில், இந்த நாடகத்திற்கெனப் பிரத்யேக மேடை அமைப்புகளும், மக்கள் அமர்ந்து பார்ப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
கலைஞர்கள்:
இந்தப் பங்கில் உள்ள சாதாரண மக்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் போன்றோர் எனப் பலர், இதற்கான பயிற்சியைப் பெற்று நடிகர்களாக மாறுகிறார்கள். தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட பாத்திரங்களை ஏற்று நடிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
காட்சிகள்: கடவுள் உலகைப் படைத்தது முதல், இயேசுவின் பிறப்பு, அவர் செய்த புதுமைகள், சிலுவைப் பாடுகள், இறப்பு மற்றும் மகிழ்வான உயிர்ப்பு வரை அனைத்துக் காட்சிகளும் தத்ரூபமாகச் சித்தரிக்கப்படுகின்றன.
இது பொதுவாக ஈஸ்டர் பெருவிழாவிற்கு பிறகு வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி அதிகாலை வரை நடைபெறும். அச்சமயம் பல்லாயிரக்கணக்கான மக்கள் தர்மபுரி மட்டுமல்லாது சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடகாவிலிருந்தும் இதைக் காண வருகிறார்கள்.
அருள்சகோதரிகள் :
2003 ஆம் ஆண்டு SMMI சகோதரிகள் பள்ளிப்பட்டி, லூர்து புரத்தில் ஆங்கிலப் பள்ளி ஒன்றை நிறுவினர். 2005 ஆம் ஆண்டுவரை பொம்மிடி கன்னியர் இல்லத்திலிருந்து வந்து பள்ளியை நிர்வகித்தனர். 2005 ஆம் ஆண்டுமுதல் லூர்துபுரத்தில் கன்னியர் இல்லத்தை அமைத்து, மருத்துவமனை ஒன்றையும் நிறுவினர்.
பங்கில் உள்ள பக்தசபைகள் :
1. பங்குப்பேரவை
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை (ஆண்கள் / பெண்கள்)
3. மரியாயின் சேனை
4. கார்மேல் அன்னை இளையோர் குழு
5. பாலர்சபை
6. பாடற்குழு
7. பீடப்பணியாளர்கள் குழு
பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள் :
1. தூய மரியன்னை துவக்கப்பள்ளி, B. பள்ளிப்பட்டி (மறைமாவட்ட நிர்வாகம்)
2. Mount Mary Higher Secondary School, B. Pallipatty (மறைமாவட்ட நிர்வாகம்)
3. St. Mary's Matric Higher Secondary School, B. Pallipatty (SMMI Sisters Management)
பங்கில் உள்ள துறவற இல்லங்கள் :
1. SMMI Convent (Congregation of Salesian Missionaries of Mary Immaculate)
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. அருள்பணி. சார்லஸ் டேவின் (1930-1945)
2. அருள்பணி. P. T. ஜோசப் (1945-1947)
3. அருள்பணி. T. C. ஜோசப் (1952-1958)
4. அருள்பணி. மத்தேயு புலிக்கல் (1958-1965)
5. அருள்பணி. தாமஸ் கீராஞ்சிரா (1965-1972)
6. அருள்பணி. R. சேவியர் (1972-1978)
7. அருள்பணி. S. இருதய செல்வம் (1978-1979)
8. அருள்பணி. S. ஜான் ஜோசப் (1979-1983)
9. அருள்பணி. பீட்டர் கரியத்தரா (1983-1989)
10. அருள்பணி. A. சார்லஸ் (1989-1995)
11. அருள்பணி. M. ஜெகராஜ் (1995-1998)
12. அருள்பணி. M. அருள்சாமி (1998-2002)
13. அருள்பணி. K. மரிய ஜோசப் (2002-2004)
14. அருள்பணி. S. மைக்கேல்ராஜ் (2004-2005)
15. அருள்பணி. S. சகாயநாதன் (2005-2007)
16. அருள்பணி. J. ஆரோக்கியராஜ் (2007-2008)
17. அருள்பணி. J. ஆரோக்கியசாமி (2009-2010)
18. அருள்பணி. D. தேவசகாய சுந்தரம் (2010-2013)
19. அருள்பணி. M. அந்தோணிசாமி (2013-2014)
20. அருள்பணி. M. ஆல்பர்ட் வில்லியம் (2014-2017)
21. அருள்பணி. M. ஜெகராஜ் (2017-2018)
22. அருள்பணி. L. சக்கரையாஸ் (2018-2019)
23. அருள்பணி. D. தேவசகாயம் (2019-2024)
24. அருள்பணி. A. B. அருள்ஜோதி (2024- தற்போது வரை...)
தூய கார்மேல் அன்னையின் வழியாக இறையாசி பெற்றுச் செல்ல பி.பள்ளிபட்டி வாருங்கள்..
தகவல்கள்: பங்குதந்தை அருட்பணி. அருள்ஜோதி அவர்கள்.


















