352 புனித பிரான்சிஸ் போர்ஜியார் ஆலயம், தண்டேயர்விளை

   

புனித பிரான்சிஸ் போர்ஜியார் ஆலயம்

இடம் : தண்டேயர்விளை, புறையூர் அஞ்சல்.

தாலுகா : திருச்செந்தூர்

மாவட்டம் : தூத்துக்குடி

மறை மாவட்டம் : தூத்துக்குடி

நிலை : கிளைப்பங்கு

பங்கு : புனித லூசியாள் ஆலயம், குறும்பூர்

பங்குத்தந்தை : அருட்பணி அமல்ராஜ்

குடும்பங்கள் : 25

அன்பியங்கள் : இல்லை

மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணிக்கு.

திருவிழா : 
செப்டம்பர் மாத இறுதியில் ஆரம்பித்து அக்டோபர் முதல் வாரத்தில் நிறைவடைகின்ற வகையில் பத்து நாட்கள்.

மண்ணின் மைந்தர்:
அருட்பணி செல்வராஜ்.

வழித்தடம் : 
தூத்துக்குடி - இடையன்விளை.
நாசரேத் - இடையன்விளை.
குரும்பூர் - இடையன்விளை.

இடையன்விளையிலிருந்து சுமார் அரை கி.மீ தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

வரலாறு :

சில்லென்று வீசும் காற்றின் தாலாட்டில், அழகுற அமைந்த தண்டேயர்விளை -யில் புனித பிரான்சிஸ் போர்ஜியார் ஆலயம் அமைந்துள்ளது.

திருச்செந்தூர் -அம்மன்புரம் அருகேயுள்ள மூலக்கரையிலிருந்து ஒரு குடும்பத்தினர், குரும்பூர் அருகேயுள்ள அழகப்பபுரத்தை வந்தடைந்து கத்தோலிக்க மறையைத் தழுவியுள்ளனர். இந்த குடும்பத்தினர் பல்கிப் பெருகி அருகேயுள்ள புனித லிசேந்தியப்பர் ஆலயத்தில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆண்ட அக்காலத்தில் சாலை போடும் போது, அந்தந்த ஊர் மக்களை அடிமைகளாகக் கொண்டு, சாலையோரத்தில் மரங்களை நட்டு தண்ணீர் ஊற்றச் செய்துள்ளனர்.

அன்புக்காக ஏங்கி நின்ற இம்மக்கள், ஆங்கிலேயரின் அடிமைத்தனத்தைக் கண்டு அழகப்பபுரத்தை விட்டு குடிபெயர்ந்து முதலில் ஐயர்விளையிலும், பின்னர் தண்டேயர்விளையில் வந்து வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறு வந்து வாழ்ந்த குடும்பத்தினர் தங்களுக்கு இறைவனை வழிபட ஓர் ஆலயம் வேண்டும் என்பதற்காக, தற்போது ஆலயம் இருக்கும் இடத்திற்கு தெற்கே ஓலைக்குடில் ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தனர். ஆனால் இந்த ஓலைக்குடில் ஆலயம் தீயில் கருகி போனது. மனந்தளராத முன்னோர், புதிய ஆலயம் கட்ட தீர்மானித்து பல ஆண்டுகளாக கடுமையாக பாடுபட்டு ஆலயத்தை கட்டியெழுப்பினர். ஆனால் இவ்வாலயம் கட்டியெழுப்ப உழைத்த பலர் அப்போது மாண்டு போயிருந்தனர்.

1932 -ஆம் ஆண்டில் ஆயர் மேதகு ரோச் ஆண்டகை அவர்களால் புனித பிரான்சிஸ் போர்ஜியோவை பாதுகாவலாக கொண்டு ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. அர்ச்சிப்பு நாளில் பெருமழை பெய்தது, மக்கள் மனங்களும் மேதகு ஆயர் பெருந்தகையும் மகிழ்ந்தார். ஆரம்பத்தில் புனிதரின் புகைப்படம் மட்டுமே வைக்கப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் சுரூபம் கொண்டு வரப்பட்டது.

தற்போது புனிதரின் பரிந்துரையால் இம்மக்கள் வாழ்வில் நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்து வருகின்றனர்.

புனித பிரான்சிஸ் போர்ஜியாவின் வரலாறு :

புனித ஃபிரான்சிஸ் போர்ஜியா, அக்டோபர் 28, 1510 ஆம் ஆண்டு வாலென்சியா அரசு, ஸ்பெயின் (Kingdom of Valencia, Spain) என்னும் இடத்தில் பிறந்தார். இவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஸ்பெயின் நாட்டு கனவானும், சேசு சபை துறவியும், சேசு சபைச் சமூகத்தின் மூன்றாம் பெரும்தலைவரும் ஆவார்.

இவரது தந்தையின் பெயர், "ஜுவான் போர்ஜியா" (Juan Borgia) ஆகும். இவரது தாயார், "ஜுவானா" (Juana) ஆவார்.

சிறு வயதிலேயே பக்தி மார்க்கத்தில் நாட்டம் கொண்டிருந்த ஃபிரான்சிஸ், துறவு பெறுவதில் ஆவலாயிருந்தார். ஆனால், இவரது பெற்றோர் இவரை இவரது விருப்பத்திற்கு மாறாக புனித ரோமப்பேரரசர் ஐந்தாம் சார்லசிடம் கல்வி கற்க அனுப்பினார்.

1529ல் இவர் "எலீனர்" (Eleanor) என்னும் போர்ச்சுகீசிய உயர்குடியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார். இவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தனர். பேரரசர் ஐந்தாம் சார்லஸ் இவரை பல உயர் பதவிகளில் அமர்த்தினார்.

1539ல் இவர் "கடலோனியாவின் வைசராயாக (Viceroy of Catalonia) நியமிக்கப்பட்டார்.

1543ல் "காண்டியா (Gandía) மாநிலத்தின் மூன்றாம் பிரபுவாக இருந்த இவரது தந்தையார் மரணமடையவே, ஃபிரான்சிஸ் "காண்டியா" மாநிலத்தின் நான்காம் பிரபுவாக பதவியேற்றார்.

1546ல் இவரது மனைவியான 'எலீனர்' (Eleanor) மரணமடையவே, இவர் புதிதாய் தொடங்கப்பட்டிருந்த சேசு சபையில் இணைய முடிவெடுத்தார்.

1551ல் சேசு சபை குருவாக குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

ஒருமுறை, ஃபிரான்சிஸ் 'பெரு' (Peru) நாட்டிற்கு பயணித்துவிட்டு திரும்புகையில், அப்போதைய திருத்தந்தை மூன்றாம் ஜூலியஸ் (Pope Julius III) அவர்கள், போர்ஜியாவைப் பற்றி கேள்விப்பட்டு, அவரை கர்தினாலாக உயர்த்த முடிவு செய்தார். ஆனால், இதைக் கேள்வியுற்ற போர்ஜியா இதிலிருந்து மீளும் வகையில் புனித இக்னேஷியசுடன் (St. Ignatius) செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறி "பாஸ்கு நாடு" (Basque Country) செல்ல முடிவெடுத்தார். தனிமையே ஜெபிக்க உதவும் என முடிவெடுத்தார்.

1554ல், போர்ஜியா ஸ்பெயின் நாட்டின் சேசு சபையின் தலைமைப் பொறுப்பேற்றார். அங்கே அவர் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளை நிறுவினார். இரண்டே வருடங்களின் பின்னர், கிழக்கு மற்றும் மேற்கிந்திய நாடுகளிலும் கல்வி மற்றும் சமய பணிகளை மேற்கொள்ள பொறுப்புகள் கிடைக்கப்பெற்றார்.

1565-1572 ஆகிய வருடங்களுக்கிடையே அவர் கண்ட வெற்றிகளால், புனித இக்னேஷியசின் மறைவிற்குப் பிறகு போர்ஜியா பெருந்தலைவராக்க சரித்திரவியலாளர்களை முடிவெடுக்க வைத்தன. பின்னாளில், "கிரகோரியன் பல்கலைக்கழகமாக" (Gregorian University) பல்கலையை நிறுவிய பெருமையும் ஃபிரான்சிஸ் போர்ஜியாவையே சேரும். இவர் அரசர்கள் மற்றும் திருத்தந்தையருடன் நெருக்கமாக காணப்பட்டார். அவர்களுக்கு ஆலோசகராகவும் செயல்பட்டார்.

அனைத்து அதிகாரங்களும் இருந்தும் ஃபிரான்சிஸ் போர்ஜியா தாழ்ச்சியான வாழ்வையே வாழ்ந்தார். உணவு பந்தியில் தாழ்ச்சியோடு தன் கையால் அனைவருக்கும் உணவு பரிமாறினார். அதன்பின்னர் மண்டியிட்டு மற்ற குருக்களிடம் உணவு தருமாறு கெஞ்சிகேட்டு வாங்கி உண்டார். இவருடன் இருந்த குருக்கள், பல வழிகளில் இவரை கோபமூட்டினர். ஆனால் ஃபிரான்சிஸ் கோபம் கொள்ளாமல், அனைவரிடத்திலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் அன்பாகவே நடந்துக்கொண்டார். அவர் தனது குருத்துவ வாழ்வில் ஒரு முறை மட்டும் பிறர் தனக்கு மரியாதை கொடுத்த காரணத்திற்காக கோபப்பட்டுள்ளார். இவரது தாழ்ச்சியின் வாழ்கை முறையால், சேசு சபை ஸ்பெயின், மற்றும் போர்த்துக்கல் நாடு முழுவதிலும் பரப்பியது. இவரின் அற்புதமான, அழகான பணிகளைக் கண்டு, அந்நாட்டு இளைஞர்கள் பலர் அச்சபையில் சேர்ந்து குருவாகி ஃபிரான்சிசைப் போலவே வாழ்ந்தனர். இவரின் எளிமையான வாழ்வால், பலருக்கு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். இவரின் வழிகாட்டுதலில், சேசு சபை உலகம் முழுவதிலும் பரவியது. இயேசுவின் இறைப்பணியை திருச்சபையில் சிறப்பாக ஆற்றினர். இவ்வெற்றி அனைத்தும் ஃபிரான்சிஸ் போர்ஜியாவையே சார்ந்தது.

புனித ஃபிரான்சிஸ் போர்ஜியா செப்டம்பர் 30, 1572 ஆம் ஆண்டு (அகவை 61) ரோம் நகரில் இறந்தார். திருத்தந்தை எட்டாம் அர்பன் 23 நவம்பர் 1624 ஆம் ஆண்டு இவருக்கு முக்தி பேறு பட்டம் அளித்தார். திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட் 20 ஜூன் 1670 ஆம் ஆண்டு இவருக்கு புனிதர்பட்டம் வழங்கினார். பூகம்பத்திலிருந்து, ரோட்டா, மரியானா மற்றும் போர்த்துக்கல் நாடுகள் ஆகியவற்றிக்கு பாதுகாவலராக உள்ளார். இவருடைய நினைவுத் திருநாள் அக்டோபர் 10 ஆகும்.

பதிவு செய்ய உதவியவர் : திரு ஜெயக்கொடி, தண்டேயர்விளை. மனமார்ந்த நன்றிகள்..!