195 தணிகை புதுமை மாதா திருத்தலம், திருத்தணி


தணிகை புதுமை மாதா திருத்தலம் 

(கிறிஸ்து இம்மானுவேல் ஆலயம்)

மாவட்டம் : திருவள்ளூர் 

மறை மாவட்டம் : சென்னை -மயிலை உயர் மறை மாவட்டம் 

நிலை : திருத்தலம் 

கிளைகள் : 
1. புனித அந்தோணியார் ஆலயம், முருக்கம்பட்டு
2. குழந்தை இயேசு ஆலயம், வேலஞ்சேரி 
3. தூய குழந்தை தெரசாள் ஆலயம், தாழவேடு. 

பங்குத்தந்தை : அருட்பணி. N. சேகர் 

குடும்பங்கள் : 95

அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : காலை 09.30 மணிக்கு 

திங்கள் முதல் வெள்ளி வரை : மாலை 06.15 மணிக்கு ஜெபமாலை தொடர்ந்து திருப்பலி

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 29 ம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 08 ம் தேதி கொடியிறக்கம் என பத்து நாட்கள். 

ஆலய வரலாறு:

தாகத்தை தீர்ப்பவள் தணிகை மாதா…

சிறு குழந்தைக்கு பொம்மைகள் மீது தாகம், படிக்கும் மாணவனுக்கு மதிப்பெண் மீது தாகம், இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கேற்ற வேலையின் மீது தாகம், இளம்பெண்களுக்கு ஏற்ற காலத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்ற தாகம், அப்பாக்களுக்கு தன் கடமை எப்போது முடியும் என்ற தாகம், அம்மாக்களுக்கு தன் பிள்ளைகள் வயதான காலத்தில் தனக்கு ஆதரவு தருவார்களா என்ற தாகம், விவசாயிக்கு விளைச்சலைப் பற்றிய தாகம், முதலாளிக்கு வருமானத்தை கூட்டுவதில் தாகம், தொழிலாளிக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் பற்றிய தாகம். இப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான தாகம். தாகம் என்றால் ஒன்றைப் பற்றிய கவலையாக இருக்கலாம், கனவாக இருக்கலாம், அல்லது எதிர்பார்பாக இருக்கலாம். ஆனால், இத்தகைய தாகங்களின் தீர்வு என்ன? இக்கேள்விக்கு ஒரே பதில் … தணிகை புதுமை மாதா!!!

அனைத்து வகையான தாகங்களையும் தீர்க்கும் ஒரே அருமருந்து நம் அன்னை மரியாள் தான். அதனால் தான் அவரை தாகம் தணிக்கும் தணிகை அன்னை என்று புகழ்கின்றோம். அவரை நாடி வரும் அனைத்து மக்களையும் அரவணைப்பவளாக, அவர்களுக்காக இயேசுவிடம் பரிந்து பேசுபவளாக, புதுமைகள் பல செய்து, தணிகை புதுமை மாதாவாக தணிகை என்னும் திருத்தணியில் வீற்றிருந்து கடந்த 49 ஆண்டுகளாக அருள்புரிந்து வருகிறாள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தின் வரலாற்றை பகிர்ந்து கொள்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம். 

கடந்த 50 ஆண்டுகளாக தன்னிகரற்று விளங்கி  பொன்விழாவைக் கொண்டாடி வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது இத்திருத்தலம். இந்து மத வரலாற்று சிறப்பு மிக்க அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணிகை என்ற, இந்துக்களின் புனித தலமாக தருதப்படுகிறது. திருவள்ளுர்; மாவட்டத்தின் கடை கோடியில், இந்த திருத்தலம் அமையப்பெற்றது. மறைந்த சங்கைக்குரிய அருட்பணி. J. M. பரம்பெட் அடிகளார் என்ற துணிச்சல் மிக்க தீர்க்கதரிசியின் மனப் போராட்டத்தின் விளைவு தான் இந்த ஆலயம். 

மறைதளத்தை உருவாக்கியவர் 

1952 ஆம் ஆண்டு, அருட்பணி. J. M. பரம்பெட் அடிகளார். தனது இறைபணியை தொடங்க சந்தைமேடு (இப்போது K. G. கண்டிகை என்று அழைக்கப்படுகிறது) என்னும் முட்புதர்கள், காடுகள், கொடிய விலங்குகள் போன்ற மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப்பகுதியில் ஒரு குடிசை அமைத்து தன் மறைபரப்பு பணியை ஆரம்பித்தார். தனது அயராத உழைப்பால் அதை சுற்றியுள்ள சுமார் 55 கிராமங்களில் நிலங்களை வாங்கி ஆலயம் அமைத்துக் கொடுத்து மக்களை ஆன்மீகப் பணியில் வழிநடத்தினார்.  இவர் வாழந்து மரித்த புண்ணிய பூமி என்று சொல்லப்படுகிற சந்தைமேடு, 1970க்கு முன்பே K. G. கண்டிகை எனப் பெயர்பெற்றது.

அருட்பணி. J. M. பரம்பெட் அடிகளார் இந்து மக்கள் அதிகம் வாழும் திருத்தணிகையில் ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்று விரும்பி, மறைந்த மேதகு ஆயர் லூயில் மத்தியாஸ் ஆண்டகையின் ஆசியோடும், உதவியோடும், நிலம் வாங்கி ஒரு சிற்றாலயம் கட்டி, இத்திருத்தணிகையின் முதல் அப்போஸ்தலனாய், இம்மண்ணியல் கிறிஸ்தவத்தை விதைத்தார். 

K. G. கண்டிகை பங்கு அதிக துணை பங்குகளை பெற்றிருந்ததால், அப்போது இருந்த வேலூர் மறைமாவட்ட ஆயர் மேதகு. தாவீத மரிய நாயகம் ஆண்டகை அவர்களால் அருட்பணி. ஜேம்ஸ் அடிகளார் உதவி தந்தையாக நியமிக்கப்பட்டு, திருத்தணிக்கு அருகாமையிலுள்ள தெக்கரில் தங்கி, திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிளைப்பங்குகளில், சங்கைக்குரிய அருட்பணி. J. M. பரம்பெட் அவர்களின் வழிகாட்டுதலில, போக்குவரத்து இல்லாத, சாலை வசதிகள் இல்லாத காலத்திலும் நடைபயணமாகவே மக்களை சந்தித்து திருப்பலிகள் நிறைவேற்றினர். 1971 ஆம் ஆண்டு வரை சிறப்பாக பணியாற்றி பணிமாற்றம் பெற்றார். 

திருத்தணி - தனிப்பங்காக உயர்த்தப்படல்:

1971 ஆம் ஆண்டு திருத்தணியானது தனிப் பங்காக உதயமானது. அருட்பணி. தாமஸ் சைமன் அடிகளார் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுபேற்றார். இவரது ஆன்மீகப் பணியானது மக்களால் பெரிதும் போற்றப்பட்டது. இறைமக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அயராது உழைத்ததால் சிந்தனை சிற்பி என்று அன்போடு அழைக்கபட்டார். தான் பொறுப்பேற்ற ஒரு ஆண்டிலேயே (1972 ஆம் ஆண்டு) மேல் திருத்தணி, அமிர்தாபுரம் பகுதியில் கிறிஸ்து இம்மானுவேல் ஆயலமும், பங்குத்தந்தையர் இல்லமும் நிறுவினார். அது மட்டுமல்லாமல், குடிசை ஆலயங்களாக இருந்து கிளைப்பங்கு தளங்களிலும் சிற்றாலயங்கள் நிறுவி, திருத்தணி பங்கின் வளர்ச்சியின் ஊன்றுகோலாய் தூண்டுதலாய் திகழ்ந்தார். இது திருத்தணி பகுதி கிறிஸ்தவ மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. மேலும் ஆலய வளாகத்தில் ஒரு தையல் பள்ளியையும் அமைத்து. ஏழை எளிய இளம் பெண்கள் பயன் பெறவும், வாழ்வில் ஒளி பெறவும் பேருதவி ஆற்றினார். எட்டு ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி மக்களின் நினைவில் நீங்காத இடத்தை பெற்றார்.

திருத்தணியின் முதல் ஆங்கிலப் பள்ளி 

1979 ஆம் ஆண்டு அருட்பணி. P. K. மேத்யூ அடிகளார் அவர்கள் திருத்தணி பங்கின் இரண்டாவது பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். இவர் ஆன்மீக பணியில் மட்டுமல்லாமல், சமூகப்பணி, கல்வி பணியிலும் சிறப்பாக செயல்பட்டடார். இறைமக்களிள் வாழ்வாதாரம் வளர்ச்சி பெற வேண்டுமென்றால் கல்வியில் வளர்ச்சிப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் “புனித மேரீஸ் ஆங்கிலப் பள்ளியை (St. Mary's Matriculation school) திருத்தணியிலேயே முதல் ஆங்கிலப் பள்ளியை நிறுவினார். இப்பள்ளியில் படித்த ஏராளமானோர் இன்று பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கு காரணம் அருட்பணி. P. K. மேத்யூ அவர்கள் தான். 

தணிகை புதுமை மாதா பக்தி முயற்சி:

1988 ஆம் ஆண்டு திருத்தணி பங்கின் மூன்றாவது பங்குத்தந்தையாக அருட்பணி. அந்தோணிராஜ் அவர்கள் பொறுப்பேற்றார். அன்னையின் மீது கொண்ட அதிக பக்தியால் ஈர்க்கப்பட்டு, தணிகை புதுமை மாதாவின் புகழை எல்லா இடங்களிலும் பரப்பினார். ஓவ்வொரு வருடமும் செப்டம்பர் 08 ஆம் தேதி அன்னையின் விழாவை கொண்டாடுவதில் இவரது முயற்சியும், ஆர்வமும் தான் அடிப்படை காரணம். இவரது காலத்தில் தான் ஏராளமான பக்தர்கள் வந்து போகும் இடமாகவும், புனிதத் தலமாகவும் இந்த ஆலயம் உருவெடுத்தது. இவர் செல்லும் இடமெல்லாம் தணிகை புதுமை அன்னையின்பால்  மக்களை ஈர்த்தார். திருத்தணியிலுள்ள தணிகை புதுமை மாதா ஆலயத்தில் பல்வேறு புதுமைகள் நடக்கிறது என்று, தான் சென்று திருப்பலி நிறைவேற்றிய அனைத்து ஆலயங்களிலும் போதித்து, பல இடங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்லும் அளவிற்கு தணிகை புதுமை மாதாவின் புகழை அனைவரும் அறியச் செய்தார். 

அதன்பிறகு (1995 – 1996) ஓராண்டு காலம் அருட்பணி. அமல்ராஜ் அவர்கள் திருத்தணி பங்கின் நான்காவது பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். இவர் பணி செய்த காலங்களில் இளைஞர்களை சந்திப்பது. ஏழைகளை சந்திப்பது, நோயுற்றோரை சந்திப்பது என்ற எளிய வாழ்வை மேற்கொண்டார். திருத்தணி இந்து மக்களின் புனித தலமாக இருப்பதால், தூய வேளாங்கண்ணி மாதா கெபியை சித்தூர் பிரதான சாலையில் நிறுவி அன்னையின் பக்தி முயற்சியை பிற மதத்தினர் உளத்தில் விதைத்தார். 

வெள்ளி விழா ஆண்டான 1996 ஆம் ஆண்டு அருட்பணி. இருதயராஜ் அவர்கள் பொறுப்பேற்றர். இவருடைய பணிக்காலத்தில் தான் இப்பங்கின் 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழா ஆண்டை மிகச் சிறப்பாக பொண்டாடப்பட்டது. முகிச்சிறிய ஆலயமாக இருந்த இவ்வாலயம் இவருடைய சீரிய முயற்சியால் விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. பங்கு மக்களை ஒருங்கிணைக்கும் பாலமாக அருட்தந்தை இருந்தார். இவருடைய பணிகாலத்தில் தான் தமமணிகை புதுமை மாதா ஆலயம் புதுப்பொலிவு பெற்று பல்வேறு மாற்றங்கள் செய்யபட்டு, ஆலய கோபுரம் சீரமைக்கப்பட்டு அழகாய் உருவாக்கப்பட்டது.

அதன்பிறகு (2002 – 2003) ஓராண்டு காலம் அருட்தந்தை M. பாலசாமி அவர்கள் பணியாற்றினார். பிறகு 2003 ஆம் ஆண்டு அருட்தந்தை. அருட்செல்வம் பொறுபேற்றார். அன்னையின் புகழுக்கு வலு சேர்க்கும் விதமாக, தணிகை அன்னைக்கு மூன்று அடுக்குகள் கொண்ட மகிப்பெரிய மாதா கெபி அமைத்து, திருத்தணி பங்கின் வளர்ச்சிக்கு வித்திட்டடர். அதுமட்டுமின்றி புதிய பங்குத்தந்தையர் இல்லமும் கட்டப்பட்டது. தணிகை புதுமை மாதாவின் எழில்மிகு கெபியானது, ஏராளமான பக்தர்கள் அருள் பாலிக்கும் இடமாக புதுமைகள் நிகழ்கின்ற புண்ணிய தளமாக திகழ்கின்றது. 

2007 முதல் 2011 ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் அருட்தந்தை. ஜேக்கப் ஆல்பர்ட் பணியாற்றினார். ஒவ்வொரு மாதம் 8 ம் தெதி அன்னையின் நவநாள் திருப்பலிகள் நிறைவேற்ற ஏதுவாக அழகான மேடை அரங்கம் இவரால் கட்டப்பட்டது. இதன் பயனால் ஆலய வளாகத்தில் ஆயிரம் மக்கள் திருப்பலி காண வழிவகை செய்யப்பட்டது. இது இந்த தணிகை புதுமை மாதா திருத்தலத்தின் வளர்ச்சி பாதையில் இன்னொரு மைல் கல்லாகும். அதோடு பங்கின் சார்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் பள்ளியின் மேல்த்தள கட்டிடம் அமைத்து பல்வேறு ஏழை மாணவர்கள் கல்வி பயில உதவினார். 

2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அருட்பணி. P. A. பிரான்சிஸ் சேவியர் பணிபுரிந்தார். இவரும் ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். ஆலய பள்ளி வளாகத்தில் சுற்று சுவர் அமைத்து மாணவர்களின் பாதுகாப்பு நலனில் பெரிதும் துணையாக இருந்தார். இவரின் பணிகாலத்தில் ஏராளமாக பக்தர்கள் வழிபட பல்வேறு புதிய பக்தி முயற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் இன்னும் அதிகமாக தணிகை அன்னையின் புகழ் பரவ தொடங்கியது.

2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரை 2 ஆண்டுகள் அருட்பணி. Y. S. ஆரோக்கியராஜ் பணிபுரிந்தார். ஆன்னையின் பெயர் கொண்டதால் என்னவோ, அன்னையின் புகழை பரப்புவதிலே பல்வேறு புதிய நிகழ்வுகளை கையாண்டார். ஒவ்வொரு மாதமும் நற்கருணை ஆராதனையும், தியான நிகழ்வுகளையும் நிகழ்த்தி பல்வேறு மக்கள் புதுமைகள் பெற்று கொள்ள வழி செய்தார். ஆலயத்தின் உட்புறத்தை புதுப்பித்து அழகுப்படுத்தினார்.

2018 ஆம் ஆண்டு முதல்  அருட்பணி. சேகர் பங்குத்தந்தையாக பொறுபேற்று, தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இந்த ஆலயத்தை சின்ன வேளாங்கண்ணியாக, திருத்தலமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு அல்லும் பகலுமாக உழைத்து வருகிறார். அதன் முத்தாய்பாக ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி கண்விழிப்பு ஆராதனையை ஆரம்பித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கெடுத்து செபித்து, நலன்களையும், தீய சக்திகளிலிருந்து விடுதலையையும் பெற்று செல்கின்றனர். 

அன்னையின் பெருவிழாவானது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 29 ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும். செப்டம்பர் 7 ஆம் தேதி அன்னையின் தேர்த்திருவிழாவும் 08 ஆம் தேதி கொடியிறக்க நிகழும் நடைபெறும். இதில் ஏராளமாணோர் கலந்து கொண்டு அன்னையின் அருளை பெற்று செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் 08ஆம் தேதி அன்னைக்கு தேர்பவனியும் சிறப்பு நவநாள் திருப்பலியும் நற்கருணை வழிபாடும் நடைபெறும். இதிலும் நிறைய பக்தர்கள் பங்கேற்று சாட்சியங்கள் அளித்து அன்னையின் அருளை பெற்று செல்கின்றனர். 

அதுமட்டுமல்லாமல் 50 ஆம் ஆண்டு பொன்விழா (1971- 2021) நினைவாக 50 மணி நேர செபமாலை, 50 மணி நேர ஆராதனை, 50 மணி நேர இறைவார்த்தை வாசித்தல், சிறப்பு தியானம் என்று பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் திட்டமிடபட்டு நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் விசுவாச கோபுரம் அமைத்தல், பொன்விழா வளைவு அமைத்தல், பங்கின் மேடை புதுப்பித்தல், ஆலயத்தைச் சுற்றி பேவர் பிளாக் கற்களை பதித்தல், ஆலயத்திற்கு முன்பு பார்கிங் டைல்ஸ் அமைத்தல் என்று பல்வேறு ஆலய வளர்ச்சி பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

சிறப்பு தகவல்கள் : 

சமய வேறுபாடுகள் இன்றி பிற சமய மற்றும் பிறசபை மக்களும் இவ்வாலயத்திற்கு வந்து புதுமை மாதாவிடம் ஜெபித்து இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்கின்றனர். 

ஒவ்வொரு மாதமும் 08- ம் தேதி மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை, அன்னையின் தேர்பவனி, திருப்பலி, நற்கருணை ஆராதனை, சாட்சியப்பகிர்வு, மந்திரித்த எண்ணெய் நெற்றியில் பூசுதல் போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது. இதில் பல்வேறு மக்களும் கலந்து கொள்கின்றனர். 

தணிகை புதுமை மாதா வழியாக பெற்றுக் கொண்ட நன்மைகளை மக்கள் சாட்சியப் பகிர்வின் வழியாக நன்றியுணர்வுடன் தெரிவிக்கின்றனர். 
பௌர்ணமி முழு இரவு ஜெபம் இரவு 09.30 மணி முதல் விடியற்காலை 03.30 மணி வரையிலும் நடக்கின்றது. 

வழித்தடம் : திருப்பதி செல்கின்ற பிரதான சாலையில், திருப்பதிக்கு முன்பாக 60 கிமீ - ல் இவ்வாலயம் திருத்தணியில் அமைந்துள்ளது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. சேகர்