553 புனித மங்கள அன்னை ஆலயம், திருவளர்சோலை

   

புனித மங்கள அன்னை ஆலயம் 

இடம் : திருவளர்சோலை, கல்லணைசாலை, திருச்சி -05.

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி 

மறைமாவட்டம் : கும்பகோணம்

மறைவட்டம் : இலால்குடி

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : அமல ஆசிரமம், ஸ்ரீரங்கம்

பங்குத்தந்தை : அருள்பணி. ஆ. தைனிஸ், கப்புச்சின் சபை

இணைப் பங்குத்தந்தை : அருள்பணி. இ. டேனியல் தயாபரன், கப்புச்சின் சபை. 

குடும்பங்கள் : 100

அன்பியங்கள் : 4

(புனித பிரான்சிஸ் சவேரியார் 

புனித மங்கள அன்னை 

புனித பதுவை அந்தோனியார் 

திருஇருதய ஆண்டவர்)

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு. 

திருவிழாக்கள் :

ஆலயத் திருவிழா: ஆகஸ்ட் இரண்டாவது வாரம். 

இதர விழாக்கள் : அன்பிய பொங்கல் விழா, மங்கள வார்த்தை திருவிழா (மார்ச் 25) & நன்றி விழா (ஆண்டின் இறுதி ஞாயிறு) 

வழித்தடம் : திருச்சி சத்திரம் -கல்லணை. 

நிறுத்தம் : திருவளர்சோலை. 

location map : Punitha Mangala Annai Church Thiruvalarsolai, Thiruvanaikovil, Tirchy

https://maps.app.goo.gl/i11oxrS5nJakQxzb9


வரலாறு :

அமைவிடம் :

திருச்சி மாவட்டம் திருவரங்கம் தீவில் ஐந்து சிவத்திருத்தலங்களில் நீர்த்தலம் அமையப்பெற்றுள்ள திருவானைக்காவலை அடுத்து மற்றும் முற்கால கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணைக்கு செல்லும் வழியில், திருவளர்சோலை என்ற அழகிய சிற்றூர் அமைந்துள்ளது. தென்கரையில் கொள்ளிடமும், வடகரையில் காவேரியும் என இருபெரும் ஆறுகள் பாயும் கரையில் பசுமையை விரித்து, விழிகளுக்கு விருந்தளிக்கும் இயற்கைச் சோலைதான் திருவளர்சோலை. செங்கரும்பு, செங்கல் இவ்வூரின் சிறப்பாகும். இவை இரண்டும் இங்கு நடைபெறும் முக்கியத் தொழில்களாகும். செங்கரும்பு வாழை நெல் தென்னை ஆகியவை இவ்வூரின் சிறந்த விளைச்சலாகும்.

இந்துக்கள் மத்தியில் கிறிஸ்தவர்கள் :

ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வாழும் திருவளர்சோலையில் ஏறக்குறைய 100 கிறிஸ்தவ குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்கள் மூன்று பகுதிகளாக இந்துக்களின் மத்தியில் ஒற்றுமையாகவும், சகோதர பாசத்துடன் வாழ்வது குறிப்பிடத்தக்கது. இவ்வூரில் நடைபெறும் இந்து மற்றும் கிறிஸ்தவ விழாக்களில் அனைவரும் இணைந்து பணியாற்றுவதும், பங்கேற்பதும், ஊரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. பாலதண்டாயுதசாமி என்ற புதிதாக அழகுற அமையப்பெற்ற கோவில், ஊரின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. மேலும் பிள்ளையார் கோவில், மாரியம்மன் கோவில் மற்றும் சில சிறு கோவில்களும் இங்கு அமைந்துள்ளன. இவ்வூரில் மசூதி இல்லை. ஆனால் ஒரு சில முகமதிய குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்கள் அனைவரும் திருவளர்சோலை புனித மங்கள மாதா & புனித சவேரியார் ஆலய திருவிழாக்களுக்கு நன்கொடையும் பங்களிப்பும் நல்குவது பாராட்டத் தக்கது. 

அடிப்படை வசதிகள் :

மாணவ, மாணவியரின் வசதிக்காக ஓர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் இரண்டு பாலர் பள்ளிகள் உள்ளன. அங்கன்வாடி நிலையங்கள், தபால் நிலையம், தொலைப்பேசி நிலையம், கூட்டுறவு வங்கி போன்ற அரசு அலுவலகங்கள் இவ்வூரில் இயங்குகின்றன. திருச்சி மாநகர எல்லைக்குள் இருப்பதால், அடிப்படை வசதிகள் போன்றவை மக்களுக்கு செய்து கொடுக்கப் பட்டுள்ளன. திருச்சி -கல்லணை அரசுப் பேருந்துகள் இவ்வூரின் வழித்தடத்தில் தான் இயக்கப்படுகின்றன. 

திருவளர்சோலையில் கிறிஸ்தவம்:

திருவளர்சோலை இறைசமூகம் இருநூறு ஆண்டுகள் பழைமையானவை என உறுதியிட்டு நம்பலாம். குடந்தை மறைமாவட்டம், பெரியவர்சீலி பங்கின் கீழ் இவ்வூர் இருந்தது. கொள்ளிடத்தின் வடகரையில் இருந்த பெரியவர்சீலியிலிருந்து ஒவ்வொரு முறையும் குருவானவர் கொள்ளிடத்தைக் கடந்து வந்து மக்களுக்கு ஆன்மீகப் பணியாற்றினர். இவர்கள் பாரீஸ் மறைபோதக குருக்களின் மறைப்பரப்புதலில் கிறிஸ்தவத்தை தழுவியிருக்கலாம். 1943 ஆம் ஆண்டு திருவரங்கத்தில் அமல ஆசிரமம் கப்புச்சின் துறவற இல்லம் அமைந்த பிறகு, இவ்வூரின் ஆன்மீகப் பணியை கப்புச்சின் குருக்கள் ஏற்றனர். அமல ஆசிரம குருக்கள் இவ்வூரில் திருப்பலி மற்றும் திருவருட்சாதனங்களை நிறைவேற்றினாலும், பங்களவில் பெரியவர்சீலியின் ஒருபகுதியாகவே இருந்து வந்தது. 1994 இல் அமல ஆசிரமம் தனிப்பங்காக உயர்ந்த போது, திருவளர்சோலை, பெரியவர்சீலியிலிருந்து பிரிந்து அமலாசிரமத்தின் ஒரு கிளைப் பங்காக இணைந்தது. 

அருள்தந்தை. அத்தனாசியுஸ் மறைப்பணி :

1945 ஆம் ஆண்டு கப்புச்சின் குரு அத்தனாசியுஸ் இவ்வூரின் ஆன்மீகப் பொறுப்பை ஏற்று, மக்களை ஞான வாழ்வில் சிறப்புடன் வழிநடத்தி, வாரந்தோறும் திருப்பலி நிறைவேற்றினார். ஞாயிறு திருப்பலியில் 200 க்கும் மேற்பட்ட கத்தோலிக்க விசுவாசிகள் பங்கேற்று வந்ததாக தனது மடலில் குறிப்பிடுகிறார். இவ்வூரின் பிரதான கிறிஸ்தவ ஆலயமாக புனித மங்கள அன்னை ஏற்கப்பட்டு இன்று வரை ஞாயிறு திருப்பலி  கொடுக்கப் படுகிறது. இவ்வூரில் சவேரியார் கோவில் தெருவில், புனித சவேரியார் சிற்றாலயம் அமைந்துள்ளது. 

புனித மங்கள அன்னை ஆலய அர்ச்சிப்பு :

இன்றைய கோவில் தோப்பில் கற்களால் கட்டப்பட்டு ஓடுகள் வேய்ந்த ஒரு சிற்றாலயம், புனித மங்கள அன்னைக்கு அர்ப்பணிக்கப் பட்டிருந்தது. அமலாசிரமம் தந்தை அத்தனாசியுஸ் இவ்வூரின் பொறுப்பை ஏற்றபோது, அவ்வாலயம் சேதமடைந்தும், மக்களுக்கு போதுமானதாக இல்லாத வகையிலும் இருந்தது. எனவே அருள்தந்தை அவர்கள் பெரும் முயற்சியால் இன்றைய ஆலயத்தை கட்டிட 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அடிக்கல் நாட்டினார். மக்களின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்ட ஆலயத்தை இந்தியா விடுதலையாகும் நாளான 1947 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அர்ச்சிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அழகுற ஆலயம் அமைந்துள்ளதைக் கண்ட பெரியவர்சீலி பங்குத்தந்தை, இவ்வாலயத்தின் பொறுப்பை தாமே ஏற்பதாகக் கூறினார். கப்புச்சின் துறவிகளின் உழைப்பில் உருவான ஆலயத்தில் சொந்தம் கொண்டாடுவதா...? என அருள்தந்தை அந்தனாசியுஸ் அவர்கள் கோபித்துக் கொண்டு, அர்ச்சிப்பு விழாவிற்கு வர மறுத்ததால், அன்று அர்ச்சிப்புவிழா தடை பட்டது. பின்னர் அப்படி ஒரு முடிவு எடுப்பதில்லை என்றும், தொடர்ந்து அருள்தந்தை அத்தனாசியுஸ் & கப்புச்சின் துறவிகளே இவ்வூரின் ஆன்மீகப் பொறுப்பை தொடர்ந்து ஏற்பர் என முடிவு செய்யப்பட்ட பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1947 ஆகஸ்ட் 17 அன்று புதிய ஆலயமானது குடந்தை ஆயர் மேதகு பீட்டர் பிரான்சிஸ் அவர்களால் 

புனிதப் படுத்தப் பட்டது. இவ்விழாவில் அமலாசிரம அதிபரும், இந்தியாவில் கப்புச்சின் துறவிகளுக்கு தலைவருமான பேரருள்பணி. லானர்வள்ளி அர்பன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். 

மக்களின் ஆன்மீக வாழ்வு :

இங்கு வாழும் கிறிஸ்தவர்கள் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியுள்ளார்கள். ஒருசிலர் மட்டுமே பட்டப்படிப்பை முடித்துள்ளனர். வெகு சிலரே அரசு வேலைகளில் உள்ளனர். பெரும்பாலானோர் தினக்கூலிகளாக வயல்களிலும், செங்கல் சூளையிலும் வேலை செய்கின்றனர். ஞாயிறு தோறும் தவறாமல் திருப்பலி கொடுக்கப் பட்டாலும் பெரும்பான்மையோர் திருவிழா கிறிஸ்தவர்கள் மட்டுமே உள்ளனர். 70 ஆண்டுகளுக்கு முன்பு புதிய ஆலயம் கட்டப்பட்ட போது காணப்பட்ட ஆன்மீக எழுச்சி, இப்போது இல்லாதிருப்பது அதிர்ச்சியாகவுள்ளது. மீண்டும் மக்களிடம் ஆன்மீக ஆர்வம் ஊட்டிட அன்பியங்கள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. வாரந்தோறும் இரண்டு மறைக்கல்வி ஆசிரியர்களைக் கொண்டு 50 மாணவ மாணவியர்களுக்கு மறைக்கல்வி போதிக்கப் படுகிறது. 

வரலாற்றில் ஆலயத்தின் வளர்ச்சி :

துவக்கத்தில் அருள்தந்தையர்கள் சனிக்கிழமை மாலையே இங்கு வந்து மக்களைச் சந்தித்து, இரவு தங்கி ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றினர். அவ்வாறு வந்தவர்களில் இன்றும் நினைவு கூறப்படுபவர் கேரளாவைச் சேர்ந்த அருள்பணி. ஜான் பிரிட்டோ. அவரது படத்தை இன்றும் ஒரு சிலரது வீடுகளில் காணலாம். 

அருள்தந்தை. ஜான் அந்தோனி இவ்வாலயத்தின் பொறுப்பை ஏற்றுப் பழுதடைந்த ஆலயத்தை முழுமையாக சீரமைத்துள்ளார். 

அருள்தந்தை. அமரா போஸ் அமலாசிரமத்தில் இறையியல் மாணவராக இருந்த போது தன்னார்வத்தால், மக்களின் உதவியுடன் ஆலயத்திற்கு சிமென்ட் தளம் அமைத்தார். 

அருள்தந்தை. அந்தோனி சாமி தோமை, மங்கள மாதா சுரூபத்திற்கு மரத்திலான கெபியை செய்தார். 

உதவிப் பங்குத்தந்தை ஸ்டான்லி அலெக்ஸ் முயற்சியால், மக்களின் உதவியோடு 2005 ஆம் ஆண்டு மங்கள அன்னை ஆலயப்பீடம் புதுப்பிக்கப் பட்டது. 

ஆலய நிர்வாகக் குழு மற்றும் அருள்பணி. ஆ. தைனிஸ், உதவிப் பங்குத்தந்தை ஆகியோரின் கூட்டு முயற்சியால், நீண்ட கால கனவான ஷெட், ஆலயத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. இது மக்களின் சிறு விழாக்களுக்கு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 

இல்லந்தோறும் மங்கள அன்னை என்ற இலக்கினைக் கொண்டு, மக்களின் ஆன்மீக வாழ்வில் எழுச்சிப்பெற வேண்டி அனைத்து இல்லங்களிலும் மங்கள அன்னை A4 வடிவிலான திருப்படம் நிறுவப்பட்டது. 

பங்குத்தந்தை அருள்பணி. ஆ. தைனிஸ் அவர்களின் தொடர்முயற்சியில் 73 ஆண்டுகள் பழைமையான புனித மங்கள அன்னை ஆலயம், அமல ஆசிரமம் பங்கின் வெள்ளிவிழா நினைவாக முழுமையாக சீரமைக்கப்பட்டது. குறிப்பாக அமல ஆசிரமத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்ட பீடம் எடுக்கப்பட்டு, இங்கு நிறுவப்பட்டது. புனித மங்கள அன்னை மற்றும் புனித பதுவை அந்தோனியாருக்கு புதிய கெபிகள் ஆலயத்தினுள்  இருபுறமும் எழுப்பப்பட்டது. பீடம், ஆலயத் தரைதளம் மற்றும் நான்கடி சுவர் வரைக்கும் டைல்ஸ் பதிக்கப்பட்டது. கதவுகள் புதுப்பிக்கப்பட்டு, ஆலய நுழைவாயிலின் கதவில் இறை அடையாள சின்னங்கள் பொறிக்கப் பட்டன. மின்சார வேலைகளும் பழுது பார்க்கப்பட்டு, புனித மங்கள அன்னை கண்ணாடி ஓவியம் ஆலய உள்முகப்பின் மேலே நிறுவப்பட்டன. மேலும் புனித அசிசி பிரான்சிஸ் மற்றும் புனித மரியாள் இறைவனின் தாய் சுரூபங்களும் பீடத்தில் நிறுவப்பட்டு, 08.12 2019 அன்று குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு F. அந்தோனிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு, தமிழக அமல அன்னை கப்புச்சின் சபை மறைமாநில  அதிபர் பேரருள்பணி. அ. ஜோ. மாத்யூ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

ஆரம்பப் பள்ளியும், ஆலயத் தோப்பும் :

அருள்தந்தை. அத்தனாசியுஸ் அவர்கள் ஆலயம் கட்டுவதற்கு முன்பாகவே, கோயில் தோப்பில் ஒரு ஆரம்பப் பள்ளியை 1946 இல் ஆரம்பித்தார். அரசு பள்ளிக்கே போதுமான மாணவர்கள் இல்லை என அரசு நிர்வாகத்தால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட, ஆரம்பிக்கப்பட்ட ஒரே ஆண்டில் இப்பள்ளிக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தென்னை மரங்கள் நடப்பட்டு, தோப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பழைய ஆலயம் அமைக்கப்பட்ட இடம் இன்று தோப்பாகியுள்ளது. இங்கு தென்னை மரங்கள் உள்ளன. சரியாக பராமரிக்கப்படாத இந்த தோப்பு 2016 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டு, மறைக்கல்வி மாணவச் செல்வங்களுக்கு பயன்பாட்டில் உள்ளது.

ஆலய பங்கேற்பு அமைப்புகள் :

1. புனித மங்கள அன்னை ஆலய நிர்வாகக் குழு 

2. அன்பியங்கள் 

3. புனித கிளாரா பாடகற்குழு 

4. புனித மங்கள அன்னை இளையோர் இயக்கம் 

5. தந்தை ஜான்பீட்டர் ஜெபக்குழு.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. ஆ. தைனிஸ், கப்புச்சின் சபை.