933 புனித சூசையப்பர் ஆலயம், சேலையூர்

     

புனித சூசையப்பர் ஆலயம்

மகாலட்சுமி நகர், சேலையூர் பங்கு  

தாம்பரம் மறைவட்டம், செங்கல்பட்டு மறைமாவட்டம்

பங்குத்தந்தை அருள்பணி. G. தாமஸ் பிரேம் குமார்

உதவி பங்குத்தந்தை அருள்பணி. ஹெல்சன் விஷால்

குடும்பங்கள்: 950+

அன்பியங்கள்: 22

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி (ஆங்கிலம்), காலை மறைக்கல்வி திருப்பலி (தமிழ்), காலை 08:30 மணி, காலை 11:00 மணி, மாலை 06:00 மணி (தமிழ் திருப்பலிகள்) 

வாரநாட்களில் திருப்பலி காலை 06:30 மணி, மாலை 06:30 மணி

புதன் மாலை 06:15 மணி புனித சூசையப்பருக்கு சிறப்பு வணக்கம், திருப்பலி

சனி மாலை 06:15 மணி இடைவிடா சகாய மாதா நவநாள், நற்கருணை ஆராதனை, திருப்பலி

மாதத்தின் முதல் புதன் மாலை 06:15 மணி திருச்செபமாலை, நவநாள், திருப்பலி, தேர்பவனி, நற்கருணை ஆராதனை

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06:30 மணி நற்கருணை ஆராதனை, திருப்பலி

திருவிழா: மே மாதம் 01-ம் தேதி

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. Fr. John Berkmans

2. Fr. Joseph Orlando, OSB

3. Sr. Stefina Rose

4. Bro. Vikesh Joseph, SDB 

வழித்தடம்: தாம்பரம் -வேளச்சேரி சாலையில், 5 கி.மீ தொலைவில் மகாலட்சுமி நகர், சேலையூர் அமைந்துள்ளது.

Location Map: https://g.co/kgs/BiF9LU

வரலாறு:

மகாலட்சுமி நகர் பகுதியில் 1975-ஆம் ஆண்டு வரை 12 கத்தோலிக்க குடும்பங்கள் மட்டும் வசித்து வந்தனர். இந்த 12 குடும்பங்களும் தாம்பரம் புனித பாத்திமா அன்னை ஆலயப் பங்கின் உறுப்பினர்களாய், திருப்பலி மற்றும் அனைத்து ஆன்மீகக் காரியங்களுக்கும் தாம்பரம் பங்குத்தந்தை அருட்பணி. ஜோசப் தைப்பரம்பில் அவர்களை நாடிச்சென்று வந்தனர். 

இந்த 12 குடும்பங்களும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தாம்பரம் புனித பாத்திமா அன்னை ஆலயத்திற்கு திருப்பலிக்குச் செல்வதோடு, இவர்களில் எவரேனும் ஒருவரது இல்லத்தில் கூடி செபித்தும் வந்தனர். நாளடைவில் இம்மக்கள் தாங்கள் வாழும் இப்பகுதியில் தங்களுக்கான ஆலயம் அமைய வேண்டிய தேவையை உணர்ந்து, தங்கள் ஆவலை பங்குத்தந்தையிடம் வெளிப்படுத்தினர். மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பங்குத்தந்தை, அதற்கான சிறந்ததோர் இடம் அமைய வேண்டிய கருத்தினை முன்வைத்து தொடர்ந்து தினமும் தவறாது செபிக்கும்படி மக்களை கேட்டுக் கொண்டார்.

ஏற்கனவே சோப்புக் கம்பெனி ஒன்று இருந்த இப்பகுதியை அறிந்த மக்கள், இந்த இடம் ஆலயம் அமைந்திட ஏற்புடைய இடம் என்பதைக் கண்டறிந்து பங்குத்தந்தையை சந்தித்து ஒருமனதாக தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர். எவ்வித தயக்கமும் இன்றி பங்குத்தந்தையும், அவர்களோடு  இடத்தின் உரிமையாளரை நேரில் சந்தித்து, இப்பகுதியிலுள்ள கிறிஸ்தவ மக்கள் கூடி இறைவனைத் தொழுவதற்கு வழிபாட்டுத்தலம் அமைப்பதற்கு, உங்களது கட்டிடமும் அதன் அருகிலுள்ள இடமும் தேவை என்று கேட்டபோது உரிமையாளர் (SVL) மிகுந்த மகிழ்ச்சியுடன் ரூ.25,000/- க்கு விற்பதாக ஒப்புதல் அளித்து பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்த கட்டிடத்தையும் இடத்தையும் கிரயம் செய்து கொடுத்தார். நிலம் வாங்கப்பட்டபின் ஆலயத்திற்கு என்ன பெயர் வைக்கலாமென்று அனைவரும் கூடி ஆலோசித்து,  பங்கின் பாதுகாவலராக புனித சூசையப்பர் விளங்குவதே சாலச் சிறந்தது என்று தீர்மானிக்கவே, புனித சூசையப்பர் ஆலயம் என்று பெயர் சூட்டப்பட்டது. 1976-ஆம் ஆண்டு மக்களின் ஆன்மீகத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகத் திருப்பலி நிறைவேற்றவும், மக்கள் ஒன்றுகூடி செபிக்கும் இடமாகவும் இவ்வாலயம் புனிதப்படுத்தப்பட்டது.

1976-1984 ஆம் ஆண்டுவரை அருட்பணி. ஜோசப் தைப்பரம்பில் ஞாயிறுதோறும் திருப்பலி நிறைவேற்றி வந்தார். மக்கள் காலையிலும் மாலையிலும் கூடி செபித்து வந்தனர். இறைமக்களின் ஆர்வத்தாலும், அருட்பணி. தைப்பரம்பில் அவர்களது விடா முயற்சியாலும், மேதகு ஆயர் அருளப்பா அவர்கள் 1984 ஆம் ஆண்டு இப்பங்கை தனிப்பங்காக அறிவித்தார். அருட்பணி. தேவசியா அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.  

அருட்பணி. A. தேவசியா:

முதலாவதாக பங்குத்தந்தை தங்குவதற்கென்று ஒரு சிறிய இல்லத்தைக் கட்டி முடித்தார். பங்குப்பேரவை, பக்த சபைகள் (புனித வின்சென்ட் தெ பவுல்சபை, மரியாயின் சேனை) போன்ற அமைப்புக்களை உருவாக்கி ஏழை எளிய மக்களின் ஆன்மீக, பொருளாதார தேவைகளை நிறைவு செய்தார். ஏற்கெனவே வாங்கப்பட்ட நிலத்தின் அருகில் ஒரு கிரவுண்ட் இடத்தை வாங்கினார். ஆனால் வாங்கிய இடங்களுக்கு இடைப்பட்ட ஒரு கிரவுண்ட் இடத்தை அவரால் வாங்க இயலவில்லை.

சித்தாலப்பாக்கத்தின் அருகில் அரசன் கழனிப் பகுதியில் வசித்து வந்த கல்லுடைக்கும் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களின் ஆன்ம நலன் கருதி, அங்கே புனித அந்தோணியார் சிற்றாலயத்தை உருவாக்கினார்.

ஏழை மக்களின் வீடுகளில் இறப்பு ஏற்படும்போது அடக்கச் செலவிற்கு மக்கள் படும் துயரத்தை உணர்ந்து அவர்களது துயர் துடைக்க, பங்கு மக்களின் சிறு பங்களிப்பைக் கொண்டு "Death Relief Fund" (இறப்பு அடக்க நிதி) உருவாக்கினார்.

வாங்கிய இடங்களுக்கு இடைப்பட்ட ஒரு கிரவுண்ட் இடத்தை வாங்க இயலாத நிலையில், ஆலயம் கட்டவேண்டுமென்று அவர் மேற்கொண்ட முழுமுயற்சி பலனளிக்கவில்லை. எனவே அந்த இடத்தை நோக்கியபடி ஒரு சிலுவையை நட்டு வைத்து தொடர்ந்து செபிக்க மக்களை ஊக்குவித்தார். அந்த சிலுவைதான் இன்று ஆலய முகப்பிலுள்ள கல்வாரி நிழற்குடையின் கீழ் உள்ள சிலுவை.

அருட்பணி‌. சிரியாக் இல்லிமூட்டில்:

தந்தையவர்கள் பொறுப்பேற்றபோது 450 குடும்பங்கள் மட்டுமே பங்கில் இருந்தது. சான்று பகரும் சிறுசமூகக் கூட்டங்களின் வழியாக, பங்கு மக்களை நல்லுறவில் வாழ வழிகாட்டியதோடு, நற்செய்தி அறிவிக்கும் பணி சிறப்பாக நடைபெற்றது. 

பங்குப் பேரவையின் ஒத்துழைப்பாலும், தந்தையின் விடாமுயற்சியாலும், எதிர்பார்த்திருந்த இடைப்பட்ட நிலம் குறைந்த விலைக்கே கிடைத்தது. அதன்பின்தான் ஆலயம் கட்ட முனைப்புடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இறைவனின் துணைகொண்டு ஆலய கட்டுமானப்பணிகள் எவ்வித தொய்வுமின்றி நடைபெற்று, 16.11.1997 அன்று அன்றைய பேராயர் மேதகு அருள்தாஸ் ஜேம்ஸ் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது.

தந்தையவர்களின் காலத்தில் வளன் நகர் தனிப்பங்காக பிரித்துக் கொடுக்கப்பட்டது. மேடவாக்கத்தில் ஆலயம் கட்டுவதற்கென்று ஒரு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. மக்களின் வழிபாட்டுக்காக ஒரு சிற்றாலயமும் கட்டப்பட்டது. ஆலய சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

இரட்சகர் சபை குருக்கள் (1998–2001)

அருட்பணி. டேனியல் ஜெயசிங் அவர்கள் 1998-ஆம் ஆண்டு பங்குத்தந்தையாக பெறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பணி செய்தார். ஆன்மீக மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்கள் இரட்சகர் சபை குருக்கள் இவர்களின் மறையுரைகள், தியானச் செய்திகள், ஆன்மீக கருத்தரங்குகள் மக்களை ஆன்மீக வாழ்வில் பெரும் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

அருட்பணி. டேனியல் ஜெயசிங் அவர்களால் அன்பியங்கள் உருவாக்கப்பட்டன. பங்கு மக்களிடையே அன்பும், நல்லுறவும், ஒற்றுமையும் ஏற்பட வாய்ப்பாய் இருந்தது. அன்பியங்களில் “உணவுப் பகிர்வு” சமத்துவ, சகோதரத்துவத்துக்கு அடித்தளமாய் அமைந்தது. ஒவ்வொரு ஆண்டும் அன்பிய ஆண்டு விழா பங்கின் குடும்ப விழாவாகக் கொண்டாடப்பட்டது.

லூர்து மாதா கெபி கட்டுவதற்கான முதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அருட்தந்தை யேசுதாஸ் அவர்கள் 2000-2001 பங்குத்தந்தையாக சிறப்பாக பணி செய்தார். லூர்து அன்னை கெபி முழுமை பெற்று, உதவி ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது.

அருட்பணி. ஜார்ஜ் பாலக்காட்டுக் குன்னல்:

இரட்சகர் சபை குருக்களின் நிர்வாகத்திலிருந்து மீண்டும் மறைமாவட்ட குருக்களிடம் பங்கு நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டு, அருட்பணி. P. ஜார்ஜ் 2001 ஆம் ஆண்டு பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். 

அன்பியங்கள் சிறப்பாக இயங்கியன. அன்பிய ஆண்டு விழாக்கள் தொடர்ந்து நடைபெற்றன. அன்பியங்கள் ஒன்றிணைந்து நிதிதிரட்டி, பங்கில் ஓலைக்குடிசையில் வாழ்ந்த 40க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆஸ்பெஸ்டாஸ் வீடுகள் கட்டித் தரப்பட்டன. 

ஐந்தாவது, அன்பிய ஆண்டுவிழா நினைவாக ஏழை மாணவர்களுக்கென "கல்விநிதி" உருவாக்கப்பட்டு ஆயர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

தவக்கால உண்டியல் கொடுக்கப்பட்டு, அதன் மூலம் கிடைத்த தொகை ஏழை மாணவர்களின் கல்வி நிதியில் சேர்க்கப்பட்டது. சந்தோஷபுரத்தில் மாதா கெபி கட்டப்பட்டது. மேடவாக்கம் சிற்றாலயம் விரிவுபடுத்தப்பட்டது. வேங்கைவாசலில் ஆலயம் கட்டுவதற்கென 19 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. மேடவாக்கத்தில் ஏற்கெனவே வாங்கப்பட்ட நிலத்திற்கு அருகில் மேலும் 25 சென்ட் நிலம் வாங்கப்பட்டது.

தந்தையின் முயற்சியால் மேடவாக்கம் தனிப்பங்காகப் பிரிக்கப்பட்டது. பல்நோக்கு மண்டபம் கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பழைய கோவில் இடிக்கப்பட்டு புதிய மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிட வேலை ஆரம்பிக்கப்பட்டது.

அருட்பணி. P. சிங்கராயர்:

தந்தையவர்களின் பெருமுயற்சியால் பங்கு மக்களின் நீண்டநாள் ஆசையான பல்நோக்கு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. புதன் கிழமைகளில் சூசையப்பர் நவநாள், தேர்பவனி தொடங்கி மக்களின் ஆன்மீக காரியங்களை சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார். நற்கருணை ஆலயம் திறக்கப்பட்டது.

அருட்பணி. பேட்ரிக் பூந்தோட்டா:

மிகவும் குறுகிய 2 ஆண்டுகள் மட்டுமே பங்குத்தந்தையாகப் பணி செய்தார். தந்தையவர்கள் தனது நீண்ட கால அனுபவத்தால் பங்கு மக்களிடையே நிலவிய அசாதாரண நிலைமையை மாற்றி அமைதிச் சூழலை உருவாக்கினார். 

அருட்பணி. அதிரூபன்:

அன்னைக்கு கெபி கட்டப்பட்டது. ஆலய சுற்றுச்சுவர் பராமரிக்கப்பட்டு, விவிலிய வார்த்தைகள் எழுதப்பட்டன. கல்வாரியை நினைவுகூரும் வகையில் நிழற்குடை, ஆலய விரிவாக்கம் மற்றும் ஆலயத்தின் பீடம் புதுப்பிக்கப்பட்டது. ஆலயத் தரை முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டது. ஆலய முகப்பு கோபுரங்கள் எழுப்பப்பட்டன. புனித சூசையப்பரின் வாழ்க்கையை சித்திரிக்கும் பீடம் அழகுற அமைக்கப்பட்டது.

தந்தையவர்களின் முயற்சியால் செங்கை மறைமாவட்ட முதன்மைக் குரு அருட்பணி. ஞா. பாக்கிய ரெஜிஸ் அவர்களின் உதவியோடு "மகாலட்சுமி நகர் பங்கு" என்பது "சேலையூர் பங்கு" என்று பெயர் மாற்றம் பெற்றது.

அருட்பணி. ராஜன் துரை பாபு:

தந்தையவர்கள் திட்டமிட்டு வைத்திருந்த பணிகள் கொரோனா பெருந்தொற்று நோய் காரணமாக செய்ய இயலாமல் போயின. இரண்டு ஆண்டுகள் (2020-2022) அனைத்துப் பணிகளுமே முடங்கிப்போன நிலையில், ஏழை எளிய மக்கள்மீது அக்கறை கொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்து துணை நின்றது மறக்க முடியாத ஒன்று. கடினமான சூழலிலும் ஆலயத்திற்கும் ஆலய வளாகத்திற்கும் புதிய ஜெனரேட்டர் வாங்கப்பட்டது. பல்நோக்கு மண்டபத்தின் முதல் மாடியில் AC பொருத்தப்பட்டது. பங்கின் கனவாக இருந்த தேர்கள், இயேசுவின் இறுதிச் சடங்கு பெட்டி அமைத்தது, வெள்ளிவிழா தயாரிப்புகள் - புதிய நூலகம், பங்குத் தந்தையர் அலுவலகம் புதுப்பித்தல் என்று பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டன. 

அருட்பணி. தாமஸ் பிரேம் குமார்:

2023 ஜூன் மாதம் முதல் தந்தையவர்கள் பணி பொறுப்பேற்று, சேலையூர் இறைச்சமூகத்தை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தி வருகின்றார். அமைதியும், ஆன்மீகமும் தவழும் அவர் பணியால் இறைமக்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆலயம் நாடி வருவது தொடர்கிறது.  

1975 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை இப்பங்கிற்காக உழைத்த பங்குத் தந்தையர்கள், 12 அருட்பணியாளர்கள். பங்குப்பேரவை, பக்தசபை உறுப்பினர்கள் அன்பியப் பொறுப்பாளர்கள், பங்கின் வளர்ச்சியில் பங்குகொண்ட அனைவரையும் பாராட்டுகிறோம். வாழ்த்துகிறோம்...

அருட்சகோதரிகள்:

மரியின் ஊழியர் சபையினர் பெண்கள் விடுதி, செம்பாக்கம்

நூலகம்:

புனித குழந்தை தெரசாள் நூலகம்

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. பங்கு நிர்வாகக் குழு

2. பங்குப் பேரவை

3. புனித வின்சென்ட் தே பவுல் சபை

4. மரியாயின் சேனை

5. இளையோர் இயக்கம்

6. பாடகர் குழு (தமிழ்/ஆங்கிலம்)

7. பீடச்சிறார் 

8. மறைக்கல்வி (தமிழ்/ ஆங்கிலம்)

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. Fr. Joseph Thy Parampil (1976) founder

2. Fr. Devasiya (1984-1991)

3. Fr. Cyriac Illi Moottil (1991-1998)

4. Fr. Daniel Jeyasingh, CSSR (1998-2000)

5. Fr. Jesudas, CSSR (2000-2001)

6. Fr. George Palakattu Kunnal (2001-2008)

7. Fr. P. Singarayar (2008-2011)

8. Fr. Patrick (2011-2013)

9. Fr. Athiruban (2013-2018)

10. Fr. Rajan Durai Babu (2018-2023)

11. Fr. Thomas Prem Kumar (2023 June.....)

தகவல்கள்: பங்குத்தந்தை அருள்பணி. தாமஸ் பிரேம் குமார் அவர்கள்

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பில் உதவி: பங்குத்தந்தையின் வழிகாட்டலில் ஆலய உறுப்பினர் திருமதி. கிளாரா அவர்கள்.