உத்திர பிரதேசம் மீரட்அன்னை மரியா பேராலயம்


அருள் வழங்கும் அன்னை மரியா பேராலயம் (Basilica of Our Lady of Graces) என்பது இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் மீரட் நகருக்கு வடமேற்காக 19 கிமீ தொலையில் இருக்கின்ற சர்தானா நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற உரோமன் கத்தோலிக்க வழிபாட்டிடம் ஆகும்.

கோவிலின் வரலாறு

இக்கோவில் இயேசுவின் தாய் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதைக் கட்டுவித்தவர் பேகம் சம்ரு என்பவர் ஆவர்.

பேகம் சம்ரு காஷ்மீரத்தைச் சார்ந்த ஓர் இசுலாமியப் பெண். அவருடைய இயற்பெயர் ஃபர்சானா செபுனிஸ்ஸா (Farzana Zeb un-Nissa) என்பதாகும். 1751ஆம் ஆண்டளவில் பிறந்த அவர் நடனக் கலையில் சிறந்தவர். 

அவர் லக்சம்பர்க் நாட்டைச் சார்ந்தவரும் இந்தியாவில் போர்வீரராக செயல்பட்டவருமாகிய வால்ட்டர் ரைன்ஹார்ட் சோம்ப்ரு (Walter Reinhardt Sombre) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அப்போது பேகம் சம்ரு 14 வயதினராகவும் வால்ட்டர் 45 வயதினராகவும் இருந்தனர். 

வால்ட்டரின் தலைமையின்கீழ் சுமார் 80 ஐரோப்பிய இராணுவத்தினரையும் சுமார் 4000 இந்தியப் போர்வீரர்களையும் கொண்ட ஒரு போர்ப்படை இருந்தது. அவர் தேவைக்கு ஏற்ப தனது படையை இந்திய மற்றும் ஐரோப்பிய ஆளுநர்களுக்குப் பணியமர்த்தி வந்தார்.

1781இல் பேகம் சம்ரு கத்தோலிக்க சமயத்தைத் தழுவினார். திருமுழுக்கின்போது அவருக்கு வழங்கப்பட்ட பெயர் ஜோவான்னா நோபிலிஸ் (Joanna Nobilis) என்பதாகும்.

1778இல் தம் கணவரின் மரணத்திற்குப் பின் பேகம் சம்ரு அவருடைய சொத்துகளுக்கு வாரிசு ஆனார். மேலும் அவர் தம் கணவரின் படைவீரர்களைப் போர்களுக்கு நடத்திச் சென்றார். சிறிய உருவத்தினர் ஆன அவர் தலைச் சீரா அணிந்து குதிரை மேல் அமர்ந்து பலமுறை போர்களில் பங்கெடுத்திருக்கிறார். தில்லி மன்னராக இருந்த இரண்டாம் ஷா ஆலம் (en:Shah Alam II) என்பவருக்கு இராணுவ உதவி அளித்தார்.

அதற்குக் கைம்மாறாக தில்லி மன்னர் மீரட் பகுதியில் பெரும் நிலப்பகுதிகளை பேகம் சம்ருவுக்கு அளித்தார்.

கோவிலின் அமைப்பு

பெரும் சொத்துக்கு வாரிசான பேகம் சம்ரு சர்தானா நகரில் அன்னை மரியாவுக்கு பிரமாண்டமான அளவில் ஒரு கோவில் கட்ட எண்ணினார். அக்கால மதிப்புப்படி கோவில் கட்டடத்திற்கு நான்கு இலட்சம் ரூபாய் செலவானது.

கோவிலின் அருகே காணப்படுகின்ற இரு பெரும் ஏரிகள் அக்காலத்தில் நிலமாக இருந்தவை. கோவில் கட்டுவதற்கு அங்கிருந்து மண் தோண்டப்பட்டதால் அந்த ஏரிகள் உருவாயின.

கோவிலின் முன்வாசலில் இலத்தீனில் உள்ள கல்வெட்டு, அக்கோவில் 1822ஆம் ஆண்டு அர்ப்பணிக்கப்பட்டதாகக் கூறுகிறது. கோவில் வேலை 1809இல் தொடங்கியதாகத் தெரிகிறது.

சர்தானா கோவிலைக் கட்டிய கட்டடக் கலைஞர் இத்தாலியைச் சார்ந்த அந்தோனியோ ரெகெல்லீனி என்பவர் ஆவர். அவர் இத்தாலியின் விசென்சா நகரத்தைச் சார்ந்தவர். அவர் அன்னை மரியாவுக்கு சர்தானாவில் கட்டிய கோவில் உரோமையில் அமைந்துள்ள புனித பேதுரு பெருங்கோவிலின் வடிவில் அமைய வேண்டும் என்று விரும்பிய பேகத்தின் ஆவலை நிறைவேற்றினார்.

பல்லாடியோ மற்றும் இந்தியக் கட்டடக் கலைகளின் தாக்கமும் அக்கோவிலில் உண்டு. கோவிலின் மையப் பீடமும் அதைச் சுற்றியுள்ள தூயகமும் பளிங்குக் கற்களால் ஆனவை. அவற்றில் நிறக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. கோவிலின் உட்பகுதி பெரும்பாலும் பளிங்குக் கல்லால் மிகுந்த கலை நுட்பத்தோடு ஆக்கப்பட்டுள்ளது. கோவிலின் மேல் கூரையின் குவிமாடத்தில் எண்கோண வடிவில் ஒரு பெரிய துளை வழியாக சூரியக் கதிர்கள் கோவிலினுள் புகுந்து ஒளிபாய்ச்சுகின்றன.

இந்த அழகிய கோவிலைக் கட்டி முடிக்க ரெகெல்லீனி பதினொரு ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். கோவிலின் முன் நுழைவுப் பகுதி கிரேக்க கலைப்படி அமைந்த உயர்ந்த தூண்களை கொண்டுள்ளது. கோவிலின் மையக் கூரையில் அமைந்த பெரிய குவிமாடத்தின் இருபக்கங்களிலும் இரு சிறு குவிமாடங்களும், இரு உயர்ந்த கோபுரங்களும் பிரமாண்டமான தோற்றத்தை அளிக்கும் வகையில் உள்ளன.

தூயகத்தின் அருகே பேகம் சும்ருவின் கல்லறை அமைந்துள்ளது. அதன்மேல் 18 அடி உயரக் கட்டட அமைப்பு உள்ளது. இத்தாலிய சிற்பியான அதாமோ தாதோலீனி என்பவர் செதுக்கிய எழில்மிகு சிற்பங்கள் அதில் உள்ளன. அச்சிற்பங்கள் இத்தாலியில் உருவாக்கப்பட்டு, கப்பலில் கொல்கத்தா வந்து இறங்கியவை. அங்கிருந்து அவற்றை மாட்டு வண்டிகளில் ஏற்றி சர்தானாவுக்குக் கொண்டுவந்தனர்.

அச்சிற்பங்களில் பேகம் சம்ரு ஓர் அரியணையில் அமர்ந்துள்ளார். அவரைச் சுற்றி ஐரோப்பியரும் இந்தியரும் உள்ளனர். தில்லி அரசர் இரண்டாம் ஷா ஆலம் பேகம் சும்ருவுக்கு சர்தானா பகுதியைப் பரிசாக அளிக்கும் காட்சி உள்ளது. மேலும் பேகம் தத்தெடுத்த மகனான டேவிட் டைஸ் சோம்ப்ரு என்பரும், பேகத்திற்கு திவானாகப் பணியாற்றிய ரே சிங் என்பவரும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ரே சிங் என்பவர் ஜவகர்லால் நேருவின் தந்தையான மோதிலால் நேருவின் கொள்ளுப்பாட்டனார் என்று சொல்லப்படுகிறது.

1961, திசம்பர் 13ஆம் நாள் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் சர்தானா கோவிலை "இணைப் பெருங்கோவில்" (Minor Basilica) என்னும் நிலைக்கு உயர்த்தினார். இடைக்காலத்தில் ஒருமுறை சர்தானா மறைமாவட்டமாக அறிவிக்கப்பட்டு அங்கு ஓர் ஆயரும் பணிபுரிந்தார். தற்போது சர்தானா கோவில் மீரட் மறைமாவட்டத்தின் பகுதியாக உள்ளது.

உலக பாரம்பரியக் களம்

வரலாற்றுச் சிறப்பும் கலையழகும் மிக்க இக்கோவிலை ஐ.நா உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது