குறைகள் தீர்க்கும் குழந்தை மாதா அருள்தலம்
இடம் : காங்கேயம்
மாவட்டம் : திருப்பூர்
மறை மாவட்டம் : கோவை
மறை வட்டம் : தாராபுரம்
நிலை : அருள்தலம்
கிளைப்பங்குகள் :
1. தூய மிக்கேல் ஆலயம், சின்னம்மன் கோயில் பாளையம்.
2. தூய அமல அன்னை சிற்றாலயம், நெல கவுண்டன்பாளையம்
3. தூய அந்தோனியார் சிற்றாலயம், திட்டம்பாளையம்.
பங்குத்தந்தை : அருட்தந்தை A. சேவியர் கிளாடியஸ்
பங்குத்தந்தையின் தொடர்பு எண் : 9865499359
அருட்தல தொடர்பு எண்கள் : +91 97906 85733, +91 90954 74336
குடும்பங்கள் : 80
அன்பியங்கள் : 4
ஆராதனை & திருப்பலிகள் :
ஞாயிறு காலை 10.00 மணிக்கு ஆராதனை, 10.30 மணிக்கு திருப்பலி.
மாலை 05.30 மணிக்கு ஆராதனை, 06.00 மணிக்கு திருப்பலி.
தினமும் காலை 06.00 மணி முதல் 06.30 மணி வரை நற்கருணை ஆராதனை
செவ்வாய் & வெள்ளி திருப்பலி : காலை 06.20 மணிக்கு.
திங்கள் மாலை 06.00 மணி முதல் 08.15 மணி வரை சிறப்பு ஆராதனை, குழந்தை மாதா நவநாள் & அபிஷேகத் திருப்பலி.
புதன், வியாழன், சனி திருப்பலி : மாலை 07.00 மணிக்கு.
சிறப்பு நிகழ்வுகள் :
மாதத்தின் முதல் ஞாயிறு காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை குடும்பங்களை அர்ப்பணிக்கும் உபவாச செபக்கூட்டம் நடைபெறும்.
மாதத்தின் 08 -ஆம் தேதி இறையாசீர் தினமாக காலை 06.00 மணி முதல் 11.00 மணி வரை அமைதியில் நற்கருணை ஆராதனையும், காலை 11.00 மணி முதல் துதி ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெறும்.
மாலை 06.00 மணி ஆராதனை, தொடர்ந்து இறைச்செய்தி, மரிவலம், இதனைத் தொடர்ந்து அபிஷேகத் திருப்பலி நடைபெறும்.
மதியம் நோன்புக் கஞ்சியும், இரவு அன்பின் உணவும் வழங்கப்படும்.
அருட்தல திருவிழாவும் சிறப்பு நிகழ்வுகளும் :
அருட்தலத்தில் ஆண்டுதோறும் நான்கு சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகிறது.
1. ஜனவரி 15 ஆம் தேதி அருட்தல அபிஷேக தினத்தை திருவிழாவாக சிறப்பித்து, மாநாட்டின் வழியாக குழந்தை மாதாவின் பக்தியில் வளர வழிவகை செய்யப் படுகிறது.
2. தவக்காலத்தில் குருத்து ஞாயிறன்று மதியம் 02.00 மணிக்கு காடையூர் -இல் துவங்கி 09 கி.மீ தூரம் பரிகார நடைபயணமாக வந்து, பாவ பரிகார சடங்குகளுடன் ஆயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறும். தொடர்ந்து அன்பின் விருந்து நடைபெறும்.
3. ஆகஸ்ட் 15 ஆம் தேதி இலங்கை முகாம் மக்களின் பாதுகாவலியான மடு அன்னையின் பெருவிழா. தமிழகத்தின் புலம் பெயர்ந்துள்ள இலங்கை தமிழ் மக்கள் இணைந்து பெருவிழாவாக மதியம் 03.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை சிறப்பிக்கிறார்கள்.
4. செப்டம்பர் 08 -ஆம் தேதி மாபெரும் இறையாசீர் தினம். குழந்தை மாதாவின் பிறப்புப் பெருவிழா ஆடம்பரமாக காலை 06.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை என்று தொடர்ச்சியாக பதினான்கரை (14.30) மணி நேரம் ஆராதனை, திருப்பலிகள் நடைபெறும். இது வேறெந்த ஆலயங்களிலும் காணாத தனிச்சிறப்பு.
மண்ணின் மைந்தர் :
அருட்பணி. அலோசியஸ் சேவியர்.
Location map : Coimbatore Rd, Kangeyam, 638701
https://g.co/kgs/o5PUay
வரலாறு :
சுமார் நாற்பது ஆண்டுகளாக காங்கேயத்தில் உள்ள கார்மெல் அருட்சகோதரிகள் இல்லத்தில் அருட்பணியாளர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. ஆலயம் இல்லாத சூழ்நிலையில் முதிய குருவானவர்கள் ஓய்வுக்காக இவ் இல்லத்தில் தங்கி, திருப்பலி நிறைவேற்றி வந்தனர்.
இவ்வாறு சுமார் நாற்பது ஆண்டுகளாக ஈரோடு, திருப்பூர், குமாரபாளையம், வெள்ளகோயில், சின்னதாராபுரம் ஆகிய பங்குகளின் கிளைப் பங்காக காங்கேயம் செயல்பட்டு வந்தது. பின்னர் 2016 ஆம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப் பட்டது.
அனைத்து மக்களும் திருப்பலியில் பங்கு பெற வேண்டும் என்கிற நோக்கத்தில், பல்வேறு தடைகளையும் தாண்டி, மக்களின் ஒத்துழைப்புடன் அழகிய ஆலயம் கட்டப்பட்டு 15.01.2016 அன்று அர்ச்சிக்கப்பட்டு, குழந்தை மாதாவிற்கு அர்ப்பணிக்கப் பட்டது.
குழந்தை மாதாவின் அருளால் எண்ணற்ற அற்புதங்கள் நடந்திட, ஆலயம் கட்டப்பட்ட ஏழு மாதங்களிலேயே திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் மூன்றே மாதத்தில் அருட்தலமாக உயர்த்தப் பட்டது.
அருட்தல சுரூபங்கள் :
குழந்தை மாதாவின் சுரூபமானது, இத்தாலி நாட்டின் மிலான் நகரில் இருந்து கொண்டு வரப்பட்டது. இந்த திருசுரூபமானது நம்மை பார்த்துக் கொண்டே இருக்கிறபடியாக வெகு நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
திருச்சிலுவை இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்டது.
பங்குத்தந்தை அருட்பணி. சேவியர் கிளாடியஸ் அவர்கள் இலங்கையின் மடுவில் மறையுரையாற்ற சென்ற போது, திருத்தல அதிபர் அவர்களால், இலங்கையின் பாதுகாவலியான மடு அன்னையின் சுரூபத்தை, இந்தியாவில் வாழும் ஈழ மக்களின் நலனுக்காகக் கொடுத்தார். அதனை இவ்வருட்தலத்தில் காணலாம்.
புனித அந்தோணியார் சுரூபமானது, பதுவை நகரிலிருந்து கொண்டு வரப்பட்டது.
புனித ரோசா மிஸ்ட்டிகா வின் மரச் சுரூபமானது அவருடைய தேசத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.
21 புனிதர்களின் திருப்பண்டம் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
அருட்தலத்தின் சிறப்பு :
தமிழகத்தில் மட்டுமல்லாது, ஆசியாவில் குழந்தை மாதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே ஆலயம் இவ்வாலயம் தான் என்பது தனிச்சிறப்பு.
திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் தமது அலுவலக மேசையில் எப்போதும் குழந்தை மாதாவின் திருசுரூபம் வைத்திருப்பார். மேலும் அன்னையின் பிரசன்னம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கே அன்பு, அமைதி, ஆரோக்கியத்தை அள்ளித் தருகின்ற அரவணைக்கும் தாயாக இருக்கின்றார் என்று குறிப்பிடுகிறார்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இவ்வருட்தலம் வந்து குழந்தை மாதாவின் கருணையால் குழந்தை பாக்கியம் பெறுவது மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்கு சான்றாக ஆறாயித்திற்கு மேற்பட்ட நன்றி சாட்சிகளும் உள்ளன. வெறும் மூன்று ஆண்டுகளில் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் 672 தம்பதியர் என்பது குறிப்பிடத் தக்கது.
செப தளங்கள்:
அழகிய ஆராதனை ஆலயம் நோவாவின் பெட்டகத்தைப் போன்று அமைந்திருப்பது, திருப்பயணிகளை வெகுவாக கவர்ந்து, ஜெபிக்கும் ஆவலை அதிகரிக்கச் செய்கிறது.
ஆலய முன்புறம் அற்புத ஆரோக்கிய அன்னையின் கெபி அமைக்கப்பட்டு, ஜெபிக்கும் மக்களுக்கு அருள் வரங்களை அள்ளித் தருகிற தளமாக அமைந்துள்ளது.
ஆலயத்தின் பின்புறமாக அழகிய குழந்தை மாதா கெபி அமைக்கும் பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது.
திருப்பயணிகளுக்கான வசதிகள் :
முன்னறிவிப்போடு வருகிற திருப்பயணிகளுக்கு (குறைந்தது 5 நபர்கள்) திருப்பலி, நற்கருணை ஆராதனை ஏற்பாடு செய்யப்படும். அருட்தலத்தில் குழந்தைகளுக்கு காது குத்துகிற, மொட்டையடிக்கிற வசதிகள் உள்ளன. வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனேக திருப்பயணிகள் இங்கு வந்து குழந்தை மாதாவின் தொட்டிலில் குழந்தைகளை கிடத்தி ஜெபித்து வேண்டுதல்களை நிறைவேற்றிச் செல்கின்றனர்.
திருப்பயணிகள் தங்கும் வகையில் இரண்டு பெரிய விடுதிகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட தனியறைகள் உள்ளன. இத்துடன் சுத்தமான குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள், வாகனங்கள் நிறுத்த விசாலமான பார்க்கிங் வசதிகள் என்று சிறப்பாக அனைத்து வசதிகளும் உள்ளன.
திருத்தல அங்காடி:
திருப்பயணிகளுக்குத் தேவையான திருவிவிலியம், மெழுகுதிரி, செபமாலை, குழந்தை மாதாவின் படங்கள், ஆசீர்வதிக்கப்பட்ட எண்ணெய் என அனைத்து ஆன்மீகப் பொருட்களும் இங்கு கிடைக்கின்றன.
கல்விக்கூடங்கள் :
புனித கார்மெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
புனித கார்மெல் நர்சரி பள்ளி.
மெர்சி மெட்ரிக் பள்ளி
சிநேகா சமூக சேவை மையம்.
பங்குத்தந்தையின் சிறப்பு செய்தி மற்றும் அழைப்பு :
இத்தாலி நாட்டில் மிலான் பேராலயமானது குழந்தை மாதாவிற்கென அர்ப்பணிக்கப் பட்டதாகும்..! அதனைத் தொடர்ந்து நம் காங்கேயத்தில் குழந்தை மாதா திருத்தலம் அமைந்துள்ளது. அனேக திருப்பயணிகளின் கண்ணீர் துடைக்கப்பட்டதால், மக்கள் வைத்த பெயர் தான் குறைகள் தீர்க்கும் குழந்தைத் தாய்.
உங்கள் குறைகள்..! கண்ணீர்..! கலக்கங்கள்..! கவலைகள்..! துடைக்கப்பட..! மாற்றம் பெற....! ஆசீர் பெறுக..! வருக..! குழந்தைத்தாய் வழியாக இறைவனின் ஆசீரை நிறைவாய் மிதமாய் பெறுக..! பாசத்தோடு அழைக்கும்..! பங்குத்தந்தை, பங்கு மக்கள், திருப்பயணிகள், குழந்தை மாதா அருட்தலம், காங்கேயம்.
தகவல்கள் மற்றும் ஆக்கம் : பங்குத்தந்தை அருட்பணி. சேவியர் கிளாடியஸ் அவர்கள்.