672 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், தாளார்குளம்

       

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்

இடம்: தாளார்குளம், முக்கூடல் வழி, சிங்கம்பாறை அஞ்சல், 627601

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: அம்பாசமுத்திரம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்: 

1. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், வேளார்குளம்

2. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், ஓடைமறிச்சான்

3. உடையாம்புளி (ஆலயம் இல்லை)

பங்குத்தந்தை : அருள்பணி. S. சந்தியாகு

குடும்பங்கள்: 464 (பங்கு 398, கிளைப்பங்குகள் 66)

அன்பியங்கள்: 20 (பங்கு 18, கிளை2)

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08.00 மணி

செவ்வாய், வெள்ளி திருப்பலி: மாலை 07.00 மணி

திங்கள், புதன், வியாழன், சனி திருப்பலி: காலை 06.00 மணி

பங்குத் திருவிழா: நவம்பர் 24-ம் தேதி கொடியேற்றம் டிசம்பர் 3-ம் தேதி திருவிழா என பத்து நாட்கள்.

மண்ணின் இறையழைத்தல்:

அருட்சகோதரி. பவுல் செபஸ்தியாயி, அமலோற்பவ மாதாசபை மதுரை

வழித்தடம்: முக்கூடல் -ஆலங்குளம் சாலையில், முக்கூடலிலிருந்து வலப்புறமாக சுமார் ஒரு கி.மீ சென்றால் தாளார்குளம் வந்தடையலாம்

Location map: https://g.co/kgs/W88fxH

ஆலய வரலாறு:

"ஆண்டவர் நல்லவர்; அவர்தம் படைப்புகளை அறிவார். அவற்றை அவர் விட்டுவிடவில்லை. கைவிடவுமில்லை; மாறாகப் பாதுகாத்தார்" சீராக்கின் ஞானம் 17:21

தாளார்குளம் கிராமமானது சுமார் 160 ஆண்டுகளுக்கு முன்பே கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசம் நிறைந்த ஊராக விளங்கி வந்தது. கி.பி 1973-ம் ஆண்டு மதுரை உயர் மறைமாவட்டத்திலிருந்து பிரிந்து, பாளையங்கோட்டை மறைமாவட்டம் உதயமான போது சிங்கம்பாறை பங்கின் கிளைக்கிராமமாக தாளார்குளம் இருந்து வந்தது. 

உழவு மற்றும் பனைமரத் தொழில் செய்து வந்த முன்னோர்கள் புனித பிரான்சிஸ் சவேரியாருக்கு பனை ஓலையால் வேயப்பட்ட ஆலயம் அமைத்து இறைவனை வழிபட்டு வந்தனர்.‌ சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட தீ விபத்தில் ஆலயக் கூரை எரிந்து போகவே, இறைமக்கள் ஓடு வேய்ந்த கூரை அமைத்தனர்.

சிங்கம்பாறை பங்குத்தந்தையாக அருள்பணி. S. L. அருளப்பன் அடிகளார் (1978-1986) பணியாற்றிய போது, அவரது வழிநடத்துதலில் இறைமக்களின் ஒத்துழைப்புடன் ஆலய வெளிப்புறச் சுவர் பூசுதல், ஆலய சுற்றுச்சுவர் அமைத்தல், ஆலயத்தில் மொசைக் தளம் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. மேலும் 1954 ம் ஆண்டு துவக்கப்பட்ட ஆர்‌.சி தொடக்கப்பள்ளியை 1982-ம் ஆண்டு ஆர்.சி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினார்.  மேலும் பள்ளிக்கூடத்திற்கு ஆலய வளாகத்திலேயே புதிய கட்டிடம் அமைத்துக் கொடுத்தார். இந்த கட்டிடமானது அப்போதைய பாளை மறைமாவட்ட ஆயர் மேதகு S. இருதயராஜ் D.D.,D.C.L, அவர்களால் 30.11.1985 ல் திறந்து வைக்கப்பட்டது. பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட அருள்பணி. S. L. அருளப்பன் அடிகளாரின் பணிக்காலத்தை தாளார்குளத்தின் பொற்காலம் என்று இறைமக்களால் கூறப்படுகிறது.

1986 -ம் ஆண்டு பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருள்பணி. ம. அம்புரோஸ் அடிகளார் பணிக்காலத்தில் இறைமக்களின் நிதியுதவியுடன் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட புனித சவேரியார் வளாகம் (தற்போதைய ஆர்.சி நடுநிலைப்பள்ளியும், பங்குத்தந்தையின் குடியிருப்பும் உள்ள பகுதி) வாங்கப்பட்டது. மேலும் இளையோர்களின் வாழ்வில் வெளிச்சத்தையும் ஏற்படுத்தினார். 

அருள்பணி. S. A. அன்னாசாமி பணிக்காலத்தில், அப்போதைய ஓடு வேய்ந்த ஆலயமானது இறைமக்கள் இணைந்து திருப்பலியில் பங்கேற்க போதுமான இடவசதியின்றி இருந்ததால், புதிய ஆலயம் கட்ட வெளிநாட்டு உதவிக்கு விண்ணப்பிக்கப்பட்டு, நிதியுதவி கிடைக்கப் பெற்றது.

அருள்பணி. S. S. J. லாரன்ஸ் அடிகளார் பணிக்காலத்தில், மறைமாவட்ட பொருளர் அருள்பணி. M. S. அந்தோணிசாமி அடிகளார் பொறுப்பில் தற்போதைய புதிய ஆலயம் கட்டப்பட்டு, 21.11.2007 அன்று பாளை மறைமாவட்ட ஆயர் மேதகு A. ஜூடு பால்ராஜ் D.D அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

அருள்பணி. L. அலோசியஸ் துரைராஜ் பணிக்காலத்தில் புனித சவேரியார் வளாகத்தில் தற்போதைய ஆர்.சி நடுநிலைப்பள்ளி கட்டிடம் வெளிநாட்டு உதவியுடன் மறைமாவட்ட பொருளர் அருள்பணி. P. மரிய பிரான்சிஸ் அடிகளார் மேற்பார்வையில் கட்டப்பட்டு 05.06.2013 அன்று திறந்து வைக்கப்பட்டது.

அருள்பணி. A. ஜெயபாலன் பணிக்காலத்தில் தாளார்குளம் தனிப்பங்காக ஆவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, மேதகு ஆயர் A. ஜூடு பால்ராஜ் D.D அவர்களால் 08.06.2013 அன்று தாளார்குளம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. S. ஜோசப்ராஜ் அடிகளார் பணிப் பொறுப்பேற்றார். இவரது பணிக்காலத்தில் பள்ளிக்கூட விளையாட்டு மைதான புனித சவேரியார் வளாகத்தில் ஏராளமான பல்வகை மரக்கன்றுகள் நடப்பட்டு, அவற்றை பராமரிப்பதற்காக ஒரு ஆழ்குழாய் கிணறு மற்றும் ஆங்காங்கே  தண்ணீர் இணைப்புக் குழாய்களும் அமைக்கப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளிக்கூட அறை ஒன்றும், பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து இரண்டு வகுப்பறைகளும் கட்டப்பட்டன.

தொடர்ந்து பணியாற்றிய அருள்பணி. A. அந்தோணி சேவியர் பணிக்காலத்தில், பங்குத்தந்தை குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு, 28.08.2016 அன்று பாளை மறைமாவட்ட ஆயர் மேதகு A. ஜூடு பால்ராஜ் D.D அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பல இடங்களில் நடந்து வந்த ஆர்.சி பள்ளியின் வகுப்புகள் அனைத்தும் ஒரே வளாகத்தில் கொண்டுவரப் பட்டன. பள்ளிக்கூட கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டன.

தாளார்குளம் பங்கின் மூன்றாவது பங்குத்தந்தையாக 11.06.2017 அன்று பொறுப்பேற்ற அருள்பணி. S. சந்தியாகு அடிகளாரின் முயற்சியால் பங்குத்தந்தையர் குடியிருப்பு பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. மக்களின் நிதியுதவி, மறைமாவட்ட உதவி, பள்ளிக்கூட ஆசிரியர்கள் உதவியுடன் பங்குத்தந்தை இல்லப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பங்குத்தந்தை இல்ல விருந்தினர் அறையை, பங்குத்தந்தை இல்ல நன்கொடையாளரான பிரான்ஸ் நாட்டிலுள்ள Rodez Cedex மறைமாவட்ட ஆயர் மேதகு பிரான்சிஸ்கோஸ் போன்லப்ட் (Francois Fonlupt) அவர்கள் 28.12.2017 அன்று அர்ச்சித்து திறந்து வைத்தார்.

பங்கில் உள்ள கெபிகள்:

1. புனித அந்தோணியார் கெபி: புனித அந்தோணியார் சங்கத்தால் விழா நடத்தப்படுகிறது. ஜூன் 13-ம் தேதி கூட்டுத் திருப்பலியுடன் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

2. புனித ஜார்ஜியார் கெபி:

3. செபமாலை மாதா கெபி:

கத்தோலிக்க சேவா சங்கத்தினரால் திருவிழா மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது. அக்டோபர் மாதம் 7-ம் தேதியை உள்ளடக்கி,  கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, திருப்பலி, தேர்வனி என பத்து நாட்கள் கெபி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது .

திரு இருதய அருட்சகோதரிகள் (தூத்துக்குடி): 

பங்குத்தந்தை அருள்பணி. S. சந்தியாகு அவர்களின் பணிக்காலத்தில், அவர் பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. A. ஜூடு பால்ராஜ் D.D அவர்களுடன் ஆலோசனை செய்து அனுமதிபெற்று, தாளார்குளம் பங்கிற்கு அருட்சகோதரிகளை அழைத்து வர ஏற்பாடு செய்தார். அதனடிப்படையில் தூத்துக்குடி திருஇருதய சபை அருட்சகோதரிகள் தாளார்குளம் வந்து பார்வையிட்டு இங்கு பணிபுரிய சம்மதம் தெரிவித்தனர்.

மதுரை உயர்மறைமாவட்ட பேராயரும், பாளை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகருமான பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி D.D.,STD, அவர்களின் நல்லாசியுடன் 31.05.2019 அன்று முதல் அருட்சகோதரிகள் இப்பங்கில் இறைப்பணியை தொடங்கியுள்ளார்கள். தொடக்க நாட்களில் இரண்டு பேரும், கடந்த 2020 ஆம் வருடம் பெப்ரவரியிலிருந்து மூன்று பேரும், 2020 ஆம் வருடம் ஜூன் மாதத்திலிருந்து நான்கு பேருமாக, ஊரார் ஏற்பாட்டின்படி, ஊரிலேயே தற்காலிகமாக ஒரு வீட்டில் தங்கியிருந்து ஆன்மீகப்பணி, நற்செய்திப்பணி, கல்விப்பணி செய்துவருகிறார்கள். மேலும், அருட்சகோதரிகளின் ஏற்பாட்டிலேயே ஊருக்குள் மருத்துவப் பணிக்காக, ஒரு சுகாதார மையம் (Dispensary) கட்டவும், அருட்சகோதரிகள் தங்கிட நிரந்தர இல்லம் (CONVENT) கட்டிடவும் போதுமான இடத்தை ஊரிலுள்ள கத்தோலிக்க சேவா சங்கம் அருட்சகோதரிகளுக்கு நன்கொடையாக பதிவு செய்து கொடுத்துள்ளது.

பங்குத்தந்தை இல்லத்திலுள்ள நற்கருணை சிற்றாலயமும், அதனைக் குறித்த பங்குத்தந்தை அருட்பணி. சந்தியாகு அவர்களின் நினைவலைகளும் ஒருபார்வை....

பாரம்பரியமாகவே ஒரு பங்குத்தளத்தில், அடிப்படையாக இருக்கும் கட்டமைப்புக்களில், பங்காலயமும் பங்குத்தந்தை இல்லமும் அருகருகே ஒரே வளாகத்தில் இருப்பதைத்தான் நாம் கண்டிருப்போம். விதிவிலக்காக, ஒருசில இடங்களில் ஆலயமும் பங்குத்தந்தை இல்லமும் வெவ்வேறு வளாகத்தில் தனித்தனியே இருப்பதையும் கண்டிருப்போம். இவையிரண்டும் இவ்வளவு அருகாமையில் இருந்திட பல காரணங்கள் உண்டு. அவற்றில் மிக முக்கியமானதாக இருப்பது, பங்குத்தந்தையின் ஆன்ம வாழ்வுக்கு ஊட்டம் தருபவர் நற்கருணை ஆண்டவர். அவரின் நற்கருணைப் பிரசன்னத்திற்கு, பங்குப்பணியாளர் அடிக்கடி செல்ல வேண்டும் . . . ; செபிக்க வேண்டும் . . . ; ஒரு பங்குப்பணியாளர் செபிக்கின்றவராக இருக்க வேண்டும் . . . ; ஒரு பங்குப்பணியாளர் மறுகிறிஸ்வாக மாற வேண்டும் போன்ற காரணங்கள். 

தாளார்குளம் பங்கின் பொறுப்பேற்ற 2017 ஜூன் முதலே, பங்காலயம் சற்று அதிக தொலைவில் இருப்பதாக உணர்ந்தேன். தூரம்தான் ஒரு பிரச்னை. திருப்பலி தவிர நற்கருணை சந்திப்பு, இதர காலை, மதியம், மாலை, இரவு செபங்கள் என்ற தேவைக்கோ அல்லது தனிப்பட்ட ஓர் அவசர மனநிலையின் தேவையை முன்னிட்டு, ஒரு நாளில் இத்தனை தடவை நற்கருணை பிரசன்னம் தேடிச் செல்வது . . . சில வேளைகளில் முயன்றும், அது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக இருந்ததை உணர்ந்தேன். எனவே, மதுரை உயர்மறைமாவட்ட பேராயரும் நம் பாளை. மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகருமான மேதகு அந்தோணி பாப்புசாமி D.D., STD அவர்களிடம் பேசி தீர்வு கண்டேன்: அதன்படி பங்குத்தந்தை இல்லத்தை ஒட்டியே (Near to bed room) ஒரு அறையை கட்டியெழுப்பி, அதை பங்குத்தந்தையின் தனிப்பட்ட செப அறையாக / நற்கருணையுடன் கூடிய      சிற்றாலயமாக அமைத்துக் கொள்ள அனுமதி அளித்தார்கள். அதனைத்தொடர்ந்து, என் தனிப்பட்ட நண்பர்கள், உறவினர்களின் பொருளாதார உதவிகளுடன், பங்குமக்களின் தாராள காணிக்கைகளையும் பயன்படுத்தி நற்கருணை சிற்றாலயத்தை கட்டிமுடித்தேன். ஆயர் அவர்களும் அதை  10.02.2019 அன்று அதை மந்திரித்து கொடுத்தார்கள்.

பங்குத்தந்தையின் இல்லத்தோடு இணைந்துள்ள இந்த நற்கருணை சிற்றாலயம், கூடுதல் நேரம் நற்கருணை பிரசன்னத்தில் நேரத்தை செலவிட உதவுகிறது. மன உழைச்சலின் மற்றும் தளர்ச்சியின் போது மிகவும் ஆறுதலாக இருக்கிறது. எதிர் காலத்தில் வரும் அனைத்து பங்குத்தந்தையர்க்கும் அவர்களின் ஆன்மீக வாழ்வுக்குப் பயன்தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

பங்கில் உள்ள பள்ளிக்கூடம்:

ஆர்.சி. நடுநிலைப்பள்ளி

அரசு நியாயவிலைக் கடை ஒன்று பங்கில் உள்ளது.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. கத்தோலிக்க சேவா சங்கம்

2. இளம் பெண்களின் அமலோற்பவ மாதா சபை

3. பாலர்சபை

4. புனித வின்சென்ட் தே பவுல் சபை

5. மறைக்கல்வி குழுக்கள்

6. பாடகற்குழு 

7. பீடப்பணியாளர் குழு

8. திருவழிபாட்டுக் குழு

9. Couples for Christ

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. S. ஜோசப்ராஜ் (2013-2016)

2. அருள்பணி. A. அந்தோணி சேவியர் (2016-2017)

3. அருள்பணி. S. சந்தியாகு (11.06.2017 முதல்...)

தாளார்குளம் புனித சவேரியார் ஆலயம் வாருங்கள் இறைவனின் ஆசீர்வாதங்களைப் பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருள்பணி. S. சந்தியாகு அவர்கள்