419 தூய அந்தோணியார் ஆலயம், நாகக்கோடு


தூய அந்தோணியார் ஆலயம்

இடம் : நாகக்கோடு

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
மறை வட்டம் : புத்தன்கடை

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள் :
1. தூய தோமா ஆலயம், அரமன்னம்
2. இறை பராமரிப்பு ஆலயம், இட்டகவேலி

பங்குத்தந்தை : அருட்பணி. சுதர்சன்

திருத்தொண்டர் டேனியல் ஆபிரகாம்

குடும்பங்கள் : 287
அன்பியங்கள் : 15

திருப்பலி நேரங்கள் :

ஞாயிற்றுக்கிழமை : காலை 07.00 மணிக்கு ஜெபமாலை, காலை 07.30 மணிக்கு திருப்பலி.

முதல் செவ்வாய்க்கிழமை : மாலை 06.00 மணி ஜெபமாலை, மாலை 06.30 மணிக்கு நவநாள், திருப்பலி, திருமுழுக்கு, நற்கருணை ஆசீர்.

மூன்றாம் செவ்வாய்க்கிழமை : குருசடியில் மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை, மாலை 06.30 மணிக்கு நவநாள், திருப்பலி.

செவ்வாய்க்கிழமை : மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை, மாலை 06.30 மணிக்கு நவநாள், திருப்பலி.

சனிக்கிழமை : காலை 06.30 மணிக்கு சிறார் திருப்பலி.

திருவிழா : மே மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை ஆரம்பித்து பத்து நாட்கள்.

மண்ணின் மைந்தர்கள் :

1. அருட்பணி. லியோ அலெக்ஸ்
2. அருட்சகோதரி குளோரி செல்வம்
3. அருட்சகோதரி டெல்மா
4. அருட்சகோதரி ஷைஜி மெர்லின்

வழித்தடம் : மார்த்தாண்டம் -திருவட்டார் -குலசேகரம் சாலையில், நாகக்கோடு சந்திப்பில் மூகாம்பிகா மருத்துவமனையைத் தாண்டி இடப்புறமாக அருமனை சாலையில் அரை கி.மீ தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Location Map : St. Antony's Church, Nagacode Kulasekharam Arumanai Rd, Kulasekharam, Tamil Nadu 629161
https://g.co/kgs/2uZt8M

பங்கு வரலாறு :

இயற்கை எழில் சூழ்ந்த குமரி மாவட்டத்தில் நாகக்கோடு சந்திப்பில் கி.பி 1920 ஆம் ஆண்டுகளில் திட்டைப்பகுதியில் திருமுழுக்கு பெற்ற 10 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணைந்து “உத்தரிக்க மாதா” குருசடியை நிறுவி, இம் முன்னோர்கள் இறைவனை வழிபட்டு வந்தனர்.

கி.பி 1921-களில் ஏற்பட்ட காலரா, வைசூரி போன்ற கொடிய உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு பல உயிர்களை இழந்த நிலையில், இம்முன்னோர் நோய் நீங்க மன்றாடி புனித அந்தோணியார் சொரூபத்தை குருசடியில் வைத்து செபித்து வந்தனர். இக்குருசடி காலப்போக்கில் நாகக்கோடு சந்திப்பில் இருந்து காட்டுக்குளம் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு, புனித அந்தோணியார் குருசடியாக தொடர்ந்து செயல்பட்டு வந்தது. மக்கள் ஜெபமாலை ஜெபித்து அந்தோணியார் நவநாள் புகழ்மாலை, பிரார்த்தனைகள், திருப்பலிகள் என திருவழிபாட்டு கொண்டாட்டங்கள் வழியாக அருள்வாழ்வை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

குருசடி அமைந்துள்ள பகுதி வழிப்பாதை வசதிகளன்றி, சிற்றாலயம் அமைப்பதற்கு போதிய நிலமும் இல்லாத நிலையில் 1961 -ஆம் ஆண்டு, தற்போது ஆலயம் அமைந்துள்ள பகுதியில் புதிய ஆலயம் அமைப்பதற்கு நிலம் கிரயம் செய்து வாங்கப்பட்டது.

1965 ல் சிற்றாலயமும், தூய மிக்கேல் அதிதூதர் குருசடியும் நிறுவப்பட்டு குலசேகரம் பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது.

1975 ம் ஆண்டு பெரிய ஆலயம் கட்டப்பட்டு மேதகு ஆயர் ஆரோக்கிய சாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. இக்காலகட்டத்தில் புனித அந்தோணியார் பாலர் பள்ளி என்ற பெயரில் இப்பகுதி குழந்தைகளின் தொடக்கக் கல்விக்கு உதவி செய்து, சுமார் 30 ஆண்டுகள் கல்வி சேவை செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.

1982 ம் ஆண்டு குலசேகரம் பங்கு பல்லோட்டின் குருக்கள் பொறுப்பில் வழங்கப்பட்டு, அவர்களது வழிகாட்டுதலில் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. 1989 ம் ஆண்டு மறைமாவட்ட கொள்கை முடிவின் அடிப்படையில் ஆலயத்தில் செயல்பட்டு வந்த கமிட்டி முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, பங்கு அருட்பணிப் பேரவை நிறுவப்பட்டு நிர்வாக பொறுப்புகள் வழங்கப்பட்டு செயல்படத் துவங்கியது. இந்நாட்களில் ஆலயத்திற்கு 49 சென்ட நிலம் கல்லறை தோட்டத்திற்காக வாங்கப்பட்டது.

மறைமாவட்ட முதன்மைகள் அழுத்தங்களை பங்களவில் செயல்படுத்திய மக்களின் ஒற்றுமை, ஒத்துழைப்பு, உழைப்பு, ஈடுபாடு இவற்றால் மறைமாவட்டதில் கவனத்தை பெற்ற நாகக்கோடு பங்கு, மேதகு ஆயர் லியோன் தர்மராஜ் அவர்களால் 1995 ஜூலை 17ம் நாள் இட்டகவேலி, அரமன்னம் பங்குகளை கிளை பங்குகளாகக் கொண்டு தனிப்பங்கு நிலைக்கு உயர்த்தப்பட்டது.

பங்கின் முதல் பங்குப்பணியாளராக அருட்பணி. ஆன்ட்ரூ செல்வராஜ் நியமிக்கப்பட்டார். மட்டுமல்லாது மேதகு ஆயர் செல்லும் இடமெல்லாம் நாகக்கோடு திருச்சபையை முன்மாதிரி பங்கு திருச்சபையாக மகிழ்வோடு வெளிப்படுத்தினார்.

திருச்சபை ஜூபிலி 2000 ம் ஆண்டின் நினைவாக மக்களின் கடின உழைப்பால் ஆலயம் குருசு (சிலுவை) வடிவில் விரிவுபடுத்தப்பட்டு, மேற்கூரை அகற்றி காங்கிரீட் கூரைத்தளம் அமைத்து ஜூபிலி ஆண்டு நினைவு திருப்பீடம் நிறுவி, மேதகு ஆயர் லியோன் தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

பங்கு வளர்ச்சியை முழுமையடையச் செய்ய வயது வாரியான பக்தசபை இயக்கங்கள், திட்டமிட்ட பயிற்சிகள் அனைத்து நிலையினருக்கும் வழங்கப்பட்டது. அன்பிய சமூகங்கள், அடித்தள முழுவளர்ச்சி சங்கம் வழியாக மக்களின் அடிப்படை வாழ்வு, விசுவாசத்திலும் பொருளாதாரத்திலும் கட்டியெழுப்ப தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

பங்குமக்களின் சேமிப்பு பழக்கத்தை வளர்க்க அடித்தள முழுவளர்ச்சி சங்கம் வழியாக ஒருங்கிணைக்கப்பட்டது. பங்கு மக்கள் மட்டுமல்லாது இப்பகுதி மக்களின் பொருளாதார தேவைகளுக்கு கடன் வழங்க “கடன் வழங்கும் சங்கம்” சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஆலய வளர்ச்சிப் பணி தேவைகளுக்காக 1.75 ஏக்கர் நிலம் புதிதாக கிரயம் செய்து வாங்கப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்ட மூன்று நிலைகள் கொண்ட குருசடியும், தூய லூர்துமாதா கெபியும் இறைமக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காக கட்டமைக்கப் பட்டுள்ளது.

பங்குமக்கள் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் பொது நிகழ்ச்சி தேவைக்காக ‘புனித அந்தோணியார் சமூக நலக்கூடம்’ செயல்பட்டு வருகிறது. ஆலய சுற்றுப்புறத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் நவீன கழிப்பிட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

பங்கு செயல்பாடுகள் திருவழிபாட்டு நிகழ்ச்சிகளை வெளியூர்வாழ் மக்கள் நலன்கருதி இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 2009-ம் ஆண்டு கன்னியர் இல்லம் துவங்கப்பட்டு பங்குமக்களின் அருள்வாழ்விற்கு நிறைவான பங்களிப்பை தந்து கொண்டிருக்கிறார்கள்.

10.05.2010 அன்று புதிய கல் கொடிமரம் வைக்கப் பட்டது.

17.07.2019 முதல் செயின்ட் ஆன்டணீஸ் நிதி நிறுவனம் துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மென்மேலும் பல வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த தேவையான முயற்சிகளோடு பயணிக்கும் நாகக்கோடு பங்கு திருச்சபையை வழிநடத்திய இம் முன்னோர்கள், அருட்தந்தையர்கள், மேதகு ஆயர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், வேதியர்கள் மற்றும் அனைத்து நல் உள்ளங்களையும் நன்றியோடு தலைவணங்கி நம் பாதுகாவலராம் தூய அந்தோணியாரின் நிறைவான ஆசீருடன் தொடர்ந்து நம்பிக்கையோடு பயணிப்போம்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. சுதர்சன் அவர்கள்.