159 வியாகுல அன்னை ஆலயம், கொன்னக்குழிவிளை


புனித வியத்தகு வியாகுல அன்னை ஆலயம்

இடம் : கொன்னக்குழிவிளை.

மாவட்டம்: கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : பங்குதளம்
கிளை : புனித நிக்கோலஸ் ஆலயம், ஆளூர்.

பங்குத்தந்தை : அருட்பணி பிரான்சிஸ் சேவியர்

குடும்பங்கள் : 345
அன்பியங்கள் : 13

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு
திருவிழா : ஆகஸ்ட் மாதத்தில்.

கொன்னக்குழிவிளை ஆலய வரலாறு :

கொன்னக்குழிவிளை 1920 ல் குமரி மாவட்ட 99% மக்களுக்கே தெரியாத ஓர் குக்கிராமம். கல்வியிலும், கலாச்சாரத்திலும், பொருளாதாரத்திலும் பெரும் பள்ளத்தாக்கில் வீழ்ந்து கிடந்த கிராமம். 1933 ல் வியத்தகு வியாகுலத்தாய் வருகைக்குப் பின் குன்றின் மேல் உள்ள விளக்காக கொன்னக்குழிவிளையை உலகம் அறிந்தது.

கொன்றை மரங்களால் நிறைந்து காணப்பட்ட பகுதியாய் ஒரு காலத்தில் இருந்ததால் இவ்வூர் கொன்னக்குழிவிளை எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்பர்.

ஆரம்ப காலத்தில் ஊரின் கிழக்குப் பகுதியில் தற்போதைய கல்லறைத் தோட்டத்தை ஒட்டியே மக்கள் வாழ்ந்து வந்தனர். 1920 ஆம் ஆண்டை ஒட்டி சுமார் 50 கிறிஸ்தவ குடும்பங்களும், சுமார் 100 பிற சமய குடும்பங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.

இங்குள்ள மக்கள் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு திருப்பலி மற்றும் பிற சமய சடங்குகளுக்கு சென்று வந்தனர்.

வழிபாட்டு தலங்கள் :

சுமார் 1920 ல் கிறிஸ்தவர்கள் கொன்னக்குழிவிளையில் தற்போதைய கல்லறைத் தோட்டத்தை ஒட்டி தனியார் நிலத்தில் குருசடி அமைத்து அதில் வழிபட்டனர். ஆனால் இவர்கள் மாடத்தட்டுவிளை ஆலய பங்கு உறுப்பினர்களாக இருந்தனர். கிறிஸ்துமஸ் மற்றும் உயிர்ப்பு விழாக்களை குருசடியில் கொண்டாடினர். பின்னர் ஏற்பட்ட சூழ்நிலை மாற்றங்களால் குருசடி தற்போதைய ஆலய இருப்பிடத்திற்கு மாற்றப்பட்டது.

இப்பகுதி கிறிஸ்தவர்கள் பள்ளி மற்றும் படிப்பகத்திற்காக வாங்கப்பட்ட 4 சென்ட் நிலத்தில் 1922 ல் கிறிஸ்துமஸ் விழாவன்று பனங்கம்பால் செய்யப்பட்ட ஒரு சிலுவையை தற்போதைய ஆலயம் இருக்கின்ற பின் பகுதியில் நட்டனர். அப்போது மாடத்தட்டுவிளை பங்குத்தந்தையாக அருட்பணி பத்றோஸ் பெர்னாண்டஸ் அடிகளார் அவர்கள் இருந்தார்கள். அந்த குருசடியை ஆலயமாக மாற்ற எண்ணி சிலுவை இருந்த பகுதியில் 1931 ம் ஆண்டு ஓலைக்கூரை அமைத்தார்கள். சில நல்லுள்ளங்கள் 1932 ம் ஆண்டில் தானமாக கொடுத்த நிலம் கல்லறைத் தோட்ட பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

பின் அருட்பணி தாமஸ் பெரைரா பணிக்காலத்தில் தற்போது ஆலய கோபுரத்தில் உள்ள "தேவமாதா" சொரூபம் மாடத்தட்டுவிளையிலிருந்து மேள தாளங்களுடன் கொண்டு வரப்பட்டு ஓலைப்புரை ஆலயத்தில் வைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தற்போதைய குருசடி வரை சுமார் 20 சென்ட் நிலம் வாங்கப்பட்டு ஆலய வளாகம் விரிவாக்கப் பட்டது.

புதிய ஆலயங்கள் எழுப்ப தடை இருந்த போது அருட்பணி S. T மத்தியாஸ் அவர்கள், எர்ணாகுளம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்று 1942 ல் மேற்படி சுமார் 20 சென்ட் நிலத்தில் 'L' வடிவில் ஒரு சிறிய ஓட்டுக்கூரை ஆலயம் அமைத்தனர். அவ் ஆலயத்தில் வழிபாடுகள் நடத்தப்பட்டு, கழுகு மர கொடிமரத்தில் கொடியேற்றி 3 நாட்கள் திருவிழா கொண்டாடி மகிழ்ந்தனர்.

அருட்பணி M. தனிஸ்லாஸ் 1943 ல் முதல் உதவி பங்குத்தந்தையாக மாடத்தட்டுவிளையில் பொறுப்பேற்றார். ஆதலால் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை திருப்பலி கொன்னக்குழிவிளைக்கு கிடைத்தது.

ஞாயிறு மறைக்கல்வியும் துவக்கப்பட்டது. பங்கு மக்களின் எண்ணிக்கை உயரவே அருட்பணி D. C ஆன்றனி காலத்தில் 1945 ல் 'L' வடிவ சிற்றாலயம் அகற்றப்பட்டு '7' வடிவ ஓட்டுக்கூரை ஆலயம் கட்டப்பட்டது. மாதம் இரு ஞாயிறு திருப்பலி நிறைவேற்றப் பட்டது.

1946 முதல் ஆலய ஆளுமை பங்குத்தந்தை வசம் ஒப்படைக்கப் பட்டது. முடுதம், கணக்குப்பிள்ளை பதவிகள் உருவானது.

அருட்பணி சூசை மிக்கேல் அவர்கள் 1951 ல் பங்குத்தந்தையாக பதவியேற்றார். ஒரு சிறிய ஆலய மேடை கட்டினார். 1964 ல் வயல் அறுவடை செய்பவர்கள் நன்கொடையால் கல் குருசடி ஒன்று அமைக்கப் பட்டது. தற்போது அது கல்லறைத் தோட்ட முகப்பில் உள்ளது.

1965 முதல் ஞாயிறு தோறும் திருப்பலி அமலானது. ஆலயம் வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் அருட்பணி ஜோசப்பாத் மரியா காலத்தில் மறை மாவட்டம் மற்றும் பங்கு மக்களின் நன்கொடையில் இரண்டாம் ஓட்டுக்கூரை ஆலயத்திற்கு அடிக்கல் நிறுவப்பட்டு, அருட்பணி A. ஜோக்கிம் காலத்தில் பணி நிறைவு பெற்று மேதகு ஆயர் ஆரோக்கியசாமி அவர்களால் 27-03-1978 ல் அர்ச்சிக்கப்பட்டது.

1983 ல் அன்பியங்கள் துவக்கப் பட்டது. முடுதம் கணக்குப்பிள்ளை ஆளுமை அகற்றப்பட்டு பங்குப் பேரவை முறை 1984 ல் அருட்பணி A. யூஜின் குழந்தை காலத்தில் அமல் படுத்தப்பட்டது. இக்காலத்தில் இணை பங்குத்தந்தை யாக இருந்த அருட்பணி ஜார்ஜ் பொன்னையா அவர்களால் கல் கொடிமரம் அடிக்கல் நாட்டப்பட்டு, 7-09-1989 ல் அருட்பணி யூஜின் குழந்தை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

1991 ல் 'வியாகுல அன்னை ஆரம்பப்பள்ளி' அருட்பணி A. M ஹிலரி காலத்தில் ஆரம்பிக்கப் பட்டது.

அருட்பணி ஆன்றனி M முத்து காலத்தில் சத்துணவு மையம் செயல் படத் துவங்கியது.

அருட்பணி இயேசு மரியான் காலத்தில் செப்டம்பரில் நடந்து வந்த ஆலய ஆண்டுத் திருவிழா, 1997 முதல் ஆகஸ்ட் மாதத்திற்கு மாற்றப் பட்டது.

அருட்பணி சேவியர் புரூஸ் பணிக்காலத்தில் 2001 ல் அன்னை கலையரங்கம்.

மேலும் ஆலயம் கட்ட அருட்தந்தை அவர்கள் புதிய ஆலயம் கட்ட வெளிநாட்டு உதவிக்கு விண்ணப்பித்து, உதவி பெற்று 2009 ல் நிதி வந்தபோது அதனை பயன்படுத்தி புத்தாலயம் கட்ட அன்றைய பங்குப்பேரவை தீர்மானித்தது.

அருட்பணி சாலமோன் பணிக் காலத்தில் கல்லறைத் தோட்டத்தில் ஆன்மாக்கள் திருப்பலி நடத்த ஒரு மேடை அமைக்கப்பட்டது.

அருட்பணி ஜேசு மரியான் இணை பங்குத்தந்தை யாக கொன்னக்குழிவிளையில் தங்கி இருந்த போது பங்குப்பேரவை இல்லம் கட்டப்பட்டு 27-07-2007 ல் மறை மாவட்ட பரிபாலகர் பேரருட்பணி P. மரியதாசன் அவர்களால் திறக்கப் பட்டது.

11-04-2009 அன்று கொன்னக்குழிவிளை தனிப் பங்காக உயர்ந்தது. முதல் பங்குத்தந்தை யாக அருட்பணி ஜேசு மரியான் அவர்கள் நியமிக்கப் பட்டார்.
ஆளூர் இதன் கிளைப் பங்காக சேர்க்கப் பட்டது.

2009 ல் ஜான் அகஸ்டஸ் பணிக்காலத்தில், அருட்தந்தை சேவியர் புரூஸ் அவர்கள் ஆலய விரிவாக்கப் பணிக்காக கோரப்பட்ட வெளிநாட்டு உதவியின் முதல் கட்ட நிதியில் 2010 ல் குருகுல முதல்வர் பேரருட்பணி P. மரியதாசன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் பணிகள் நிறைவு பெற்று 12-12-2012 ல் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

மத்திய அரசின் நிதி உதவியுடன் சத்துணவுக்கூடம் கட்டப்பட்டு 23-02-2014 ல் அருட்பணி ஜான் அகஸ்டஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறக்கப் பட்டது.

அருட்பணி பென்சிகர் பணிக்காலத்தில் பெரிய தேர் அமைக்கப்பட்டு 23-2-2016ல் மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் பக்தசபை இயக்கங்கள் சீர்திருத்தம் பெற்றன. ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து 2017 மே மாதத்திலிருந்து தற்போது வரைக்கும் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் அவர்கள் பங்கை எல்லா நிலைகளிலும் வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்து செல்கிறார். 2017 ஆகஸ்ட் 15 ல் வியாகுல அன்னை ஆரம்பப்பள்ளி இரண்டாவது மாடி கட்டி முடிக்கப்பட்டு அருட்பணி பிரான்சிஸ் சேவியர் அவர்கள் தலைமையில், கூட்டாண்மை பள்ளிகளின் மேலாளர் அருட்பணி சுரேஷ்குமார் அவர்களால் திறந்து வைக்கப் பட்டது.

மண்ணின் இறை அழைத்தல்கள் :

1. Fr ஆரோக்கிய ஜோஸ்
2. Fr டோமி லிலில் ராஜா

1920 முதல் 2018 வரையிலும் பங்கில் இறைபணியாற்றிய அருட்தந்தையர்கள் பட்டியல் :

1. Fr பத்ரோஸ் பெர்னாண்டஸ் (1920-1933)
2. Fr. B. தாமஸ் பெரைரா (1933-1938)
3. Fr. J வில்வராயர் (1938-1940)
4. Fr. S. T மத்தியாஸ் (1940-1944)
5. Fr D. C ஆன்றனி (1944-1951)
6. Fr சூசை மிக்கேல் (1951-1969)
7. Fr ஜோசப்பாத் மரியா (1969-1975)
8. Fr A. ஜோக்கிம் (1975-1979)
9. Fr J. N சீசர் (1979-1983)
10. Fr A. யூஜின் குழந்தை (1983-1989)
11. Fr Arul. N ஹிலரி (1989-1994)
12 Fr. ஆன்றனி M. முத்து (1994-1996)
13. Fr A. ஜேசு மரியான் (1996-1999)
14. Fr R. சேவியர் புரூஸ் (1999-2002)
15. Fr S. சாலமோன் (2002-2003)
16. Fr A. மரிய வின்சென்ட் (2003-2006)
17. Fr டோமினிக் M. கடாட்சதாஸ் (2006-2008)

2008 ல் தனிப் பங்காக உயர்வு பெற்ற பின்னர் :

18. Fr A. ஜேசு மரியான் (2008-2009)
19. Fr ஜான் அகஸ்டஸ் (2009-2014)
20. Fr பென்சிகர் (2014-2017)
21. Fr பிரான்சிஸ் சேவியர் (2017 முதல்.......)