543 தூய சகாய மாதா ஆலயம், செக்கடி

      

தூய சகாய மாதா ஆலயம் 

இடம் : செக்கடி, அருமநல்லூர் (PO) 

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : கோட்டார் 

மறைவட்டம் : தேவசகாயம் மவுண்ட். 

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்கு : தூய அந்தோணி மரிய கிளாரட் ஆலயம், கிளாரட் மௌண்ட் 

பங்குத்தந்தை : அருள்பணி. ஜாண் மில்டன் 

குடும்பங்கள் : 130

அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 08.20 மணிக்கு 

புதன் மாலை 07.00 மணிக்கு சகாய மாதா நவநாள் திருப்பலி 

வெள்ளி மாலை 07.00 மணிக்கு திருப்பலி (புனித மிக்கேல் அதிதூதர் குருசடி) 

சனி மாலை அன்பியங்களில் திருப்பலி (வாரத்திற்கு ஒரு அன்பியம்) 

திருவிழா : மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறும் வகையில் பத்து நாட்கள். 

வழித்தடம் : நாகர்கோவில் -தெரிசனங்கோப்பு -செக்கடி

பேருந்துகள் : நாகர்கோவிலில் இருந்து 4C, 4N.

location map : St.Sahaya Matha Church, Chekkadi.Armanallur Road, Chekkadi, Tamil Nadu 629851

https://maps.app.goo.gl/uDUMNeiPZSUnCzER6


வரலாறு :

கன்னியாகுமரி மாவட்டத்தின் வடக்கே, மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் நிறைந்த அருமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட செக்கடி என்ற கிராமத்தில், 1971 -ஆம் ஆண்டுக்கு முன்னர் கிறிஸ்தவ ஆலயம் இல்லாத நிலை இருந்தது. 

செக்கடி -யில் பிற சமய மக்கள் வாழ்ந்து வந்தனர். பின்னர் ஒரு சில கிறிஸ்தவ குடும்பங்கள் வெளியூர்களில் இருந்து  இங்கு வந்து வசித்தனர். இந்த கிறிஸ்தவ மக்கள் ஆலயம் செல்லவேண்டுமெனில் எட்டாமடை அல்லது தடிக்காரன்கோணம் ஆகிய ஊர்களில் உள்ள ஆலயங்களுக்குத் தான் ஆறு, வயல், காடுகளைக் கடந்து 3 மைல் தூரம் நடந்து செல்ல வேண்டும். இவ்வாறு சென்று வருவது சிரமமாக இருந்தது. 

இவ்வாறிருக்க 1971 -ஆம் ஆண்டில் மார்த்தால் பங்கிலிருந்து எட்டாமடை தனிப்பங்காக ஆனது. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. மாசிலாமணி அவர்கள் பொறுப்பேற்றார்கள். 

செக்கடி -யில் ஓர் ஆலயம் அமைக்க வேண்டும் என சில நல்லுள்ளங்கள் பங்குத்தந்தையிடம் தெரிவித்து, ஆலயம் அமைக்க இடம் தேடும் பணி நடந்து வந்தது. இறுதியில் தற்காலிகமாக ஓரிடத்தில் ஓலை கூரை அமைத்து 21.11.1971 ஞாயிறன்று காலை 07.00 மணிக்கு பங்குத்தந்தை திருப்பலி நிறைவேற்றினார். அப்போது 11 குடும்பங்கள் இருந்தன. இவ்வாறு செக்கடி தூய சகாய மாதா கிளைப்பங்கு உருவானது. 

செக்கடியில் திருப்பலி ஆரம்பித்தது முதல் இறைமக்கள் அதிகமாக ஆர்வமும், ஈடுபாடும் கொண்டு தற்காலிக ஓலைகூரை ஆலயத்தை மாற்ற ஆவல் கொண்டனர். ஆகவே புதிய இடம் வாங்கி ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டு, 30.12.1973 அன்று இந்த தற்காலிக ஆலயத்தை ஆயர் அவர்கள் பார்வையிட வந்த போது தங்கள் புதிய ஆலய கோரிக்கையை தெரிவித்தனர். 

பின்னர் 14.05.1974 -இல் 15 சென்ட் நிலம் விலைக்கு  வாங்கப்பட்டு, இவ்விடத்தில் புதிதாக ஓலை கூரை ஆலயம் அமைத்து, 11.12.1974 அன்று திருப்பலி நடத்தப்பட்டது. அப்போது 45 குடும்பங்கள் இருந்தன. மேலும் பல குடும்பங்கள் ஆலயத்திற்கு வர ஆரம்பித்தனர். 

தொடர்ந்து அருள்பணி. பால்மார்க் அவர்கள் எட்டாமடை பங்குத்தந்தை ஆனார்.  

புதிதாக கட்டப்பட்ட ஆலயம் மிகத் தாழ்வான பகுதியாக இருந்ததால் மழைக்காலங்களில் நீரூற்று ஏற்பட்டு, ஆலயத்தினுள் தண்ணீர் வடிந்தமையால்    திருப்பலி நேரங்களில் மிகச் சிரமம் ஏற்பட்டது. ஆகவே புதிய ஆலயம் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டது. 

பிரான்சிஸ்கன் சபையை சேர்ந்த அருள்சகோதரர். கிரகோரி மற்றும்  அருள்சகோதரர். ரெமிஜியுஸ் அவர்களும் இணைந்து எட்டாமடை பங்கிலுள்ள அனைத்து கிளைப் பங்குகளுக்கும் சென்று நலிந்த மக்களுக்கு உதவியும், இறைப்பற்றுதலில் ஆர்வத்தையும் ஏற்படுத்தினார்கள். அவ்வாறே செக்கடி கிளைப்பங்கிலும் மறைக்கல்வி துவக்கப் பட்டதுடன் கலைப்பயிற்சி, ஆன்மீக மற்றும் சமூக வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப் பட்டன. 

1977 -ஆம் ஆண்டு அருள்பணி. தேவசகாயம் அடிகளார் எட்டாமடை பங்குத்தந்தை ஆனார். செக்கடி இறைமக்கள் அவரிடம் புதிய ஆலயம் கட்ட கோரிக்கை வைக்க, கோரிக்கையை ஏற்று அவர், பெல்ஜியம் நாட்டிலிருந்து வந்த தம்பதிகளை, கிளைப்பங்காகிய செக்கடி -க்கும் அழைத்து வந்து, ஆலயத்தின் நிலையைக் காண்பிக்கவே, பெல்ஜியம் தம்பதிகள் ஆலயத்திற்கு உதவி செய்வதாக உறுதியளித்துச் சென்றனர். 

இவ்வாறாக பெல்ஜியம் தம்பதிகள் செய்த நிதியுதவிகளாலும், அருள்சகோதரர். கிரகோரி அவர்கள் குடுத்த நிதியுதவிகளாலும், செக்கடி மக்களின் நிதியுதவியையும் கொண்டு ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப் பட்டன. மக்களின் கடின உழைப்பு, இறையாசீர் வழியாக ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 26.08.1981 அன்று மேதகு ஆயர் ஆரோக்கியசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

குருசடி:

1976 ல் புனித மிக்கேல் அதிதூதர் குருசடி கட்டப்பட்டு, அருள்பணி. மாசிலாமணி அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

சாலை மட்டம் உயர்ந்ததாலும், புதிய ஆலயம் கட்டும் போது தரை மட்டம் உயர்ந்ததாலும் இந்த குருசடி பள்ளத்தில் இருந்ததால் பழுதடைந்தது. ஆகவே புதிய குருசடி கட்ட தீர்மானித்து அருள்தந்தை. ராபின்சன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு புதிய மூன்றடுக்கு கொண்டதாக குருசடி கட்டப்பட்டு, 

புனித மிக்கேல் அதிதூதர், வேளாங்கண்ணி மாதா, கிறிஸ்து அரசர் சொரூ பங்கள் வைக்கப்பட்டு,  02.11.2012 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

பல்நோக்கு கட்டிடம் :

பிரான்சிஸ்கன் சபை அருள்சகோதரர்களின் நிதியுதவியுடன் 11.12.1983 ல் பிரான்சிஸ்கன் சபை Provincial Bro. Maximin CMSF அவர்களால் அடுக்கல் நாட்டப்பட்டு, கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 30.06.1984 அன்று அப்போதைய குருகுல முதல்வர் பேரருள்பணி. ப. சூசைமரியான் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

பங்கு அருட்பணிப் பேரவை :

அருள்பணி. ஜோக்கிம் பணிக்காலத்தில் 17.05.1987 அன்று பங்கு அருட்பணிப் பேரவை துவக்கப் பட்டது.

மணிக்கூண்டு :

ஆலயத்திற்கு மணிக்கூண்டு அமைக்க தீர்மானிக்கப்பட்டு,  பூ சீட்டு (சிறுசேமிப்பு) துவக்கப்பட்டு, அதன் வழியாக வந்த வருவாய் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் 27.02.1991 அன்று மணிக்கூண்டுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 20.07.1991 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

கிளரீசியன் சபை அருள்பணியாளர்கள்:

1987 முதல் 2005 வரை 18 ஆண்டுகள் இச்சபையின் அருள்பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு செக்கடி இறைமக்களை வழிநடத்தி வந்தார்கள். இவர்களின் பணிக்காலத்தில் ஆலயத்திற்கு புதிதாக மின் இணைப்பு செய்யப்பட்டு, ஒலிபெருக்கி புதிதாக வாங்கப் பட்டது. கோவில்விளை கல்லறைத்தோட்ட வழி விரிவு படுத்தப் பட்டது. மேலும் 33 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு முதல் கிளரீசியன் சபையினரிடமிருந்து, ஆலய பொறுப்பு மீண்டும் மறைமாவட்டத்தின் கீழ்  வந்தது.

தொடர்ந்து சிறப்பாக ஆன்மீகப் பாதையில் பயணித்து வந்த செக்கடி ஆலயத்தில் இறை மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததாலும், மக்களின் ஈடுபாடு சிறப்பாக இருந்ததாலும் பங்காக உயர்த்தினால் சிறப்பாக இருக்கும் என்ற நோக்குடன் அப்போதைய பங்குத்தந்தை அருள்பணி. அலோசியஸ் ம. பென்சிகர் அவர்கள் முழு முயற்சி செய்ய, மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் 20.06.2006 அன்று தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. கிங்ஸ்லி P. ஜோண்ஸ் அவர்கள் பொறுப்பேற்றார். 

அப்போதைய ஆலயம் பழுதடைந்த காரணத்தால் புதிய ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டு, செக்கடி மக்களின் நன்கொடை மற்றும் தன்னலமற்ற கடின உழைப்பு, ஆயர் இல்ல உதவி, பல்வேறு ஆலய இறைமக்களின் நன்கொடை உதவி இவற்றுடன் பங்குத்தந்தை அருள்பணி. கிங்ஸ்லி P. ஜோண்ஸ் அவர்கள் பங்கு அருட்பணிப் பேரவையுடன் இணைந்து எடுத்த பெரும்முயற்சிகளாலும் புதிய ஆலயம் கட்டப்பட்டு, 21.04.2010 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

சமூக நலக்கூடம் :

சமுதாய நலக் கூடம் கட்டுமானப் பணி 2013 -ஆம் ஆண்டு அருள்பணி. ராபின்சன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தது. அருள்பணி. ஜாண் தமஸ்க் அவர்களின் பணிக்காலத்தில் பணிகள் நிறைவுற்று தரைத்தளம் 31.05.2017அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களாலும், முதல் தளம் 04.05.2019 அன்று மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்களாலும் திறந்து வைக்கப்பட்டது.

வேளாங்கண்ணி மாதா குருசடி :

இப்பங்கு அன்பியங்களில் ஞாலம் அன்பியமானது, ஆலயத்திலிருந்து 2கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு வாழும் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 25 குடும்பங்கள் மட்டுமே கத்தோலிக்கர்கள். இங்கு மறைப்பரப்பு பணியை கருத்தில் கொண்டு சிறிய வேளாங்கண்ணி மாதா குருசடி கட்டப்பட்டு 23.12.2016 அன்று அருள்பணி. ஜாண் தமஸ்க் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. தற்போது அவ்விடத்தில் சிற்றாலய வடிவில் புதிய குருசடி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.


பங்கில் உள்ள சபைகள் மற்றும் இயக்கங்கள் :

1. பங்கு அருட்பணிப்பேரவை

2. மறைக்கல்வி 

3. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

4. மரியாயின் சேனை 

5. கத்தோலிக்க சேவா சங்கம் 

6. இளங் கிறிஸ்தவ மாணவர் இயக்கம் 

7. இளைஞர் இயக்கம் 

8. பாலர் சபை

9. திருவழிபாட்டுக் குழு

10. பீட பூக்கள் 

11. பாடகற்குழு 

12. அன்பிய ஒருங்கிணையம்

13. பங்கு வளர்ச்சி மன்ற குழு (சிறுசேமிப்பு திட்டம்). 


பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. கிங்ஸ்லி P. ஜோண்ஸ் (20.06.2006 -21.05.2011)

2. அருள்பணி. T. ராபின்சன் (22.05.2011 -28.05.2013)

3. அருள்பணி. மரிய ரோமரிக் ததேயுஸ் (29.05.2013 -18.05.2014)

4. அருள்பணி. ஜாண் தமஸ்க் (19.05.2014 -19.05.2019)

5. அருள்பணி. ஜாண் மில்டன் ( 20.05.2019 முதல் தற்போது வரை..)


தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் அருட்பணிப்பேரவை செயலர் திரு. மைக்கேல் அவர்கள்.