புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்
இடம்: பாஞ்சைகுடியிருப்பு, 628401
மாவட்டம்: தூத்துக்குடி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: குறுக்குச்சாலை
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், கீழமுடிமன்
பங்குத்தந்தை: அருட்பணி. பென்சிகர் அமல்
குடும்பங்கள்: 54
அன்பியங்கள்: 4
ஞாயிறு திருப்பலி காலை 09:30 மணி
மாதத்தின் முதல் சனிக்கிழமை புனித ஆரோக்கிய அன்னையின் நவநாள், திருப்பலி
திருவிழா: ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 08 ஆம் தேதி வரை.
வரலாறு
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சியில், சிலோன் காலனி என்று அழைக்கப்படும், பாஞ்சை குடியிருப்பு என்னும் சிற்றூர் உள்ளது. இது 1972 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் மியான்மர் (பர்மா) அகதிகள் குடியிருப்பாக தொடங்கப்பட்ட சிற்றூர் ஆகும்.
மியான்மரில் இருந்து வந்த திரு. இன்னாசிமுத்து குடும்பத்தாரும், அருகில் உள்ள ஓட்டப்பிடாரம், தெற்கு பரும்பூர், முப்பிலிவெட்டி, கீழமுடிமன் மற்றும் ஆரைக்குளம் ஊர்களைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், அன்றைக்கு ஊர்த் தலைவர்களாக இருந்த திரு. அம்மாசி, திரு. சுந்தரம் ஆகியோரும், அப்போது கீழமுடிமன் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. சூசை மரியான் அவர்களிடம், மாதா ஆலயம் ஒன்று அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்தனர். அதன்படி மக்களும் பங்குத்தந்தையும் இணைந்து முயற்சி செய்து 1973 ஆம் ஆண்டு ஓலைக் குடிசை ஆலயம் ஒன்று அமைத்தனர். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை மாலையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. இதில் மேற்கண்ட சிற்றூர்களைச் சேர்ந்த இறைமக்கள் தவறாமல் பங்கேற்று வந்தனர்.
1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு திருவிழா நடத்தப் பட்டது.
அதன் பின்னர் கீழமுடிமன் பங்குத்தந்தை அருட்பணி. ரூபர்ட் அருள் வளன் அவர்கள் ஆலயம் அமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். தொடர்ந்து பணிபுரிந்த பங்குத்தந்தை அருட்பணி. ஜூலியன் அவர்களின் முயற்சியாலும், மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களின் பேருதவியாலும் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, 1980 ஆம் ஆண்டு மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
1984 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.
1994 ஆம் ஆண்டு ஆலயத்தைச் சுற்றிலும் மதிற்சுவர் கட்டப்பட்டது.
தொடர்ந்து பணிபுரிந்த கீழமுடிமன் பங்குத்தந்தையர்களின் வழிகாட்டலில் சிறப்புற பயணித்து வருகிறது பாஞ்சை குடியிருப்பு இறைசமூகம்.
மாதத்தின் முதல் சனிக்கிழமை நடைபெறும் நவநாள் திருப்பலியில் அருகில் உள்ள ஊர்களில் இருந்து ஏராளமான இறைமக்கள் பங்கேற்று, ஜெபித்து இறையாசீர் பெற்றுச் செல்கின்றனர்.
தற்போது பங்குத்தந்தை அருட்பணி. பென்சிகர் அமல் அவர்களின் வழிகாட்டலில் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது பாஞ்சை குடியிருப்பு இறைசமூகம்.
வழித்தடம்: தூத்துக்குடியிலிருந்து 24கி.மீ தொலைவிலும், ஓட்டப்பிடாரத்தில் இருந்து 1.30 கி.மீ தொலைவிலும் பாஞ்சை குடியிருப்பு அமைந்துள்ளது.
Location map: https://g.co/kgs/J6MndB
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. பென்சிகர் அமல் அவர்கள்.