306 புனிதர்கள் இராயப்பர் சின்னப்பர் ஆலயம், ஆரிய நெல்லூர்


புனிதர்கள் இராயப்பர் சின்னப்பர் ஆலயம்.

இடம் : ஆரியநெல்லூர்

மாவட்டம்: திண்டுக்கல்
மறை மாவட்டம்: திண்டுக்கல்

நிலை: பங்குத்தளம்
கிளைக்கிராமம்: புனித அந்தோனியார் ஆலயம், கலிக்கம்பட்டி

பங்குத்தந்தை: அருட்தந்தை J. ஆரோக்கிய சுனில் CSC

அன்பியங்கள் : 15
குடும்பங்கள் :650+

ஆலயச் சிறப்பு : புனித இராயப்பரின் நிழல் பிடித்தல்(இதை பற்றிய முழு விபரங்களுக்கு கீழே பார்க்கவும்)

திருப்பலி நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு
செவ்வாய், வியாழன் திருப்பலி : காலை 06.30 மணிக்கும்

மற்ற வார நாட்களில் மாலை 07:00 மணிக்கும் திருப்பலி நடைபெறும்...

சனிக்கிழமை தோறும் மாலை 07.00 மணிக்கு புனித இராயப்பரின் நவநாள் திருப்பலி நடைபெறும்..

 புனிதர்களின் ஆடம்பர பெருவிழா:

ஜூன் மாதம் 19-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை புனிதர்களின் பெருவிழா நவநாள் திருப்பலி நடைபெறும்....

25-ஆம் தேதி இரவு புனிதர்களின் உருவம் தாங்கிய கொடியேற்ற புனித நிகழ்வு நடைபெறும்...

26 மற்றும் 27_ஆம் தேதிகளில் புனிதர்களின் வேண்டுதல் இரதபவனி நடைபெறும்..

ஜூன் 28, 29 ஆகிய தினங்களில் புனிதர்கள் இராயப்பர் சின்னப்பர் பெருவிழா நடைபெறும்.

மண்ணின் மைந்தர்கள் :

1)Fr.சவரிமுத்து
2)Fr.லாசர்
3)Fr.அந்தோணி சந்தியாகு
4)Fr.ஜோசப்
5)Fr.அந்தோணி அலெக்சாண்டர்
6)Fr.சேவியர்
7)Fr.மரிய லூயிஸ்
8)Fr.பால்ராஜ்
9)Fr.ஜெரோம்
10)Fr.வின்சென்ட்
11)Fr.சாமுவேல்
12)Fr.ஜோ
13)Fr.அந்தோணி ராஜ்
14)Fr.அந்தோணி ஆரோக்கிய சாமி
15)Fr.லாரன்ஸ்
16)Fr.ராயப்பன்
17)Fr.அமல்ராஜ்
18)Fr.ஜான் செல்வராஜ்
19)Fr.பிரான்சிஸ்
20)Fr.ரிச்சர்ட்

அருட் சகோதரிகள்: 40+

பக்த சபைகள் :
புனிதர்கள் இராயப்பர் சின்னப்பர் இளைஞர் மன்றம்...
ஆவே மரியா இளம்பெண்கள் இயக்கம்...
பாலர் சபை..
நற்செய்தி தம்பதியர்கள்...
மாதா சபை...

பேருந்து வழித்தடம் :
திண்டுக்கல் - செம்பட்டி சாலை, பேருந்து எண்.. 7, 7B, 7c, 7D, 7E, 7G, 8A...

ஆரிய நெல்லூர் பிரிவு..
திண்டுக்கல்லில் இருந்து 8 கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

புனித இராயப்பர் புனித சின்னப்பர் திருத்தலம், ஆரிய நெல்லூர்-624 303, திண்டுக்கல் மறை மாவட்டம்.

ஆரிய நெல்லூர் ஆலய வரலாறு :

ரோமப் பேரரசின் இரண்டாம் தளமாம் நெல்லூர் தளத்தை தேர்ந்தெடுத்து, இயேசுவின் இறைநாமத்தை மக்களிடம் விதைக்க தேர்ந்தெடுத்த இரும் பெரும் புனிதர்களை கொண்ட ஆலயமான புனிதர்கள் இராயப்பர் சின்னப்பர் ஆலயம், ஆரிய நெல்லூர் பற்றிய வரலாற்றினை காண்போம்....

கிறிஸ்தவ மக்கள் காவேரி ஆற்றின் வடகரையை பூர்வீகமாக கொண்டிருந்தனர்..

ஏறத்தாழ 350 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில் நிமித்தம் காரணமாகவும், அங்கு நேர்ந்த இயற்கை சீற்றம் காரணமாகவும்...

வளமான, செழிப்பான இடத்தை நோக்கி வந்த, இந்த இடம் தான் ஆரிய நெல்லூர்.

இம்மண்ணில் அதிகளவில் நெற்கதிர்கள் விளைவிக்கப் பெற்றதால் இவ்வூருக்கு ஆரிய (நெல்லூர்) என பெயர் பெற்றது...

தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலை காரணமாக இங்கு நெல் விவசாயம் கைவிடப்பட்டது வேதனைக்குரியது.!

பல வருடங்களாக தேடிக் கிடைக்கப்பெறாத புனிதர்களின் ஆலயம் இம்மண்ணில் உருவாகிய தொடக்க காலத்தின் வரலாற்று பதிப்புகள் இவ்வருடம் இவ்வாலய பங்குத்தந்தை அருட்பணி J.ஆரோக்கிய சுனில் அவர்களின் மூலம் தேடிக் கிடைக்கப் பெற்றது.

அதில் உள்ள தகவலின் முழு விவரம் பின்வருமாறு...

250 ஆண்டுகளுக்கு மேலாக கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசமானது இங்கு இருக்கின்றது...

இம்மக்கள் தங்களின் பாதுகாவலர்களாக புனிதர்கள் இராயப்பர் சின்னப்பர்- ஐ கொண்டு அவர்கள் வழியாக இறைவனை வழிபட்டு வந்தனர்.🗝🗡

இவ்விரு புனிதர்களுக்கும் ஆலயம் கட்ட எண்ணிய மக்கள், 1802-ஆம் ஆண்டு புனிதர்களுக்கான சிறிய அளவிலான ஆலயம் கட்டினர்...

(1802_ஆம் ஆண்டுக்கு முன்பே புனிதர்களின் ஆலயம் அமைய பெற்றிருக்கலாம்... ஆனால் அதை பற்றிய துல்லியமான தகவல் கிடைக்காததால் இங்கு பதிவிடவில்லை)

அவ்வாண்டில் இருந்து இன்று வரை புனிதர்களின் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது..

இவ்வரலாற்றின் படி 216 ஆண்டுகள் கடந்து இவ்வருடம் 217 -ஆம் ஆண்டு புனிதர்களின் பெருவிழா கொண்டாடப்படுகிறது.

பின் 1905-ஆம் ஆண்டு புனிதர்களின் சிறு குருசடியை இடித்து விட்டு ஆலயமாக மாற்றினர்..

அதன் பின்பு இவ்வூரில் கத்தோலிக்க இறைமக்களின் எண்ணிக்கை அதிகமான காரணத்தாலும், ஆலயத்தில் போதிய இடவசதி இல்லாததாலும்...

08.09.1974 அன்று பழைய ஆலயத்தை இடித்து விட்டு, அப்போது சின்னாளபட்டி பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை சூசை மைக்கேல் ராஜ் அவர்களின் தலைமையில் ஊர் பொதுமக்கள் சேர்ந்து பெரிய அளவிலான இடத்தில் 07-10-1974 அன்று புனிதர்களின் ஆலய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, அனைவரின் ஒத்துழைப்புடன் இப்பணிகள் நிறைவு பெற்று 25-06-1980 அன்று புதிய ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.

1990 -ஆண்டுக்கு பின் ஊர் முக்கியஸ்தராக இருந்த திரு சார்லஸ் அவர்களுடைய தலைமையில், அப்போது சின்னாளபட்டி பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி ஜார்ஜ் ஸ்டீபன் அவர்களுடன் இணைந்து... 110 அடி உயரம் கொண்ட புனிதர்களின் ஆலய கோபுரம் கட்டும் பணியானது தொடங்கப்பட்டு, 1999-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

அதன் பின்னர் 01-01-2011 அன்று இவ்வாலய பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை அலெக்ஸ் ஆரோக்கியசாமி அவர்களால் ஆலயத்தை புதுப்பிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது..

அதுவரை ஆலயத்தின் மேற்பகுதி சிமெண்ட் கூரையாக இருந்து. பின்னர் அவை அகற்றப்பட்டு கான்கிரீட் தளமாக மாற்றப்பட்டு, 28-06-2013 அன்று இவ்வாலயம் பயன்பாட்டு நிலைக்கு வந்தது...

அதன் பின் ஆலய பலிபீடம் சிறந்த கலை நயத்துடனும், இறைவிசுவாசத்தை ஆழப்படுத்தும் விதமாக அழகுற அமைக்கப்பட்டு 20-05-2016 அன்று மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு அந்தோணி பாப்புசாமி அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

புனிதர்களின் பெருவிழா அன்று ஊரை வலம் வரக்கூடிய மூன்று பெரும் தேர்களும் சுமார் 150 வருடங்கள் பழமையானவை.

இவை அக்காலத்திலேயே இவ்வாலய முன்னோர்களால் அழகிய கலைநயத்துடன் உருவாக்கப்பட்டவை.

அவை இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கின்றது.

2003-ஆம் ஆண்டுக்கு பின் மதுரை உயர் மறைமாவட்டத்தில் இருந்து பிரிந்து திண்டுக்கல் மறைமாவட்டம் உருவானது.

2004-ஆம் ஆண்டு வரை சின்னாளபட்டியின் கிளைப்பங்காக நமது ஆலயம் இருந்தது.

2005-ஆம் ஆண்டு புதிய பங்கு ஆலயமாக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி சகாய ராஜ் அவர்கள் பொறுப்பேற்றார்.

ஆலய தனிச்சிறப்பு :

புனித இராயப்பர் நிழல் பிடித்தல் :

தூய இராயப்பர் நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல் நலமற்றோரையும் கட்டில்களிலும், படுக்கைகளிலும் கிடத்தி சுமந்து கொண்டு வந்து வீதிகளில் வைத்தார்கள். எருசலேமைச் சுற்றி இருந்த நகரங்களில் மக்கள் உடல் நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாக கூடி வந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர்.(தி.ப.5:15-16)

இந்த இறைவார்த்தையின் அடிப்படையில் ஆரிய நெல்லூரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நோயாலும், பல்வகை துன்பங்களாலும் துயரப்படுபவர்கள்,வாழ்வில் நம்பிக்கை இழந்தவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நடக்க முடியாத குழந்தைகள் என எண்ணற்றவர்கள் தூய இராயப்பரின் சுரூபத்தை சுற்றி நிழல் பிடித்து, நலமும் வரமும் பெற்றுச் செல்கின்றனர்..

இத் தூயவர்களை நம்பிக்கையோடு நாடிவரும் பக்தர்களுக்கு இறைவனின் அருளும் ஆசீரும், நலனும் நிறைந்து கிடைக்க ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 07:00 மணிக்கு சிறப்பு நவநாள் திருப்பலியும், குணமளிக்கும் வழிபாடும், புனிதர்களின் திருஎண்ணெய் பூசுதலும் நடைபெறுகிறது,

நிழல் பிடிப்பதன் சிறப்பு:

மூன்று வாரங்கள் சனிக்கிழமை மாலை வந்து புனித இராயப்பர் சுரூபத்தை முழங்கால் படியிட்டு தங்களுடைய குழந்தைகள் உடன் புனித இராயப்பரை சுற்றி வருகின்றனர்..

இது போன்று மூன்று வாரங்கள் வந்து புனித இராயப்பரின் நிழல் பிடிக்கின்றனர்... மூன்றாவது வாரமே அக்குழந்தையானது இராயப்பர் சுரூபத்தை சுற்றி நடக்கின்றது...

குழந்தைகள் மட்டுமல்லாது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் தங்களுடைய உடல் கோளாறுகள் சரியாகிட, புனித இராயப்பர் சுரூபத்தை சுற்றி வந்து நலன் பெற்று செல்கின்றனர்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 02.00 மணி முதல் இரவு 08.00மணி வரை இராயப்பரின் நிழல் பிடித்து செல்கின்றனர்.

தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அவர்களின் குறைகளை நிறைகளாக்கி, புதுமைகள் பல புரியும் ரோமப் பேரரசின் வேத சாட்சிகளான புனிதர்கள் இராயப்பர் சின்னப்பரின் ஆலயத்திற்கு வந்து அவர்களின் பரிந்துரையால் இறைவனின் அருள் ஆசீர் பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கின்றது ஆரியநெல்லூர் தலத்திருச்சபை..