250 ஆரோக்கிய அன்னை ஆலயம், இராஜாக்கமங்கலம்துறை

புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்

இடம் : இராஜாக்கமங்கலம் துறை

மாவட்டம் : கன்னியாகுமரி

மறை மாவட்டம் : கோட்டார்

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு நசரேன் சூசை
பங்குத்தந்தை : அருட்தந்தை C. ராஜ்

நிலை : பங்குதளம்
கிளை : புனித சூசையப்பர் ஆலயம், காரவிளை.

குடும்பங்கள் : 2000
அன்பியங்கள் : 33

ஞாயிறு திருப்பலி : காலை 05.30 மணி மற்றும் காலை 07.30 மணி

நாள்தோறும் திருப்பலி : காலை 06.30 மணிக்கு

மாதத்தின் முதல் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் : மாலை 05.30 மணிக்கு செபமாலை, திருப்பலி

ஒவ்வொரு மாதமும் 08 - ம் தேதி (மாதாவின் பிறந்தநாள் நினைவாக) மாலையில் நவநாள், திருப்பலி, சப்பரபவனி

திருவிழா : செப்டம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து பத்து நாட்கள் நடைபெறும்.

அமைவிடம் :

The Church is located at about 10 Kms from Nagercoil, 22 Kms from Kanyakumari, 13 Kms from Suchindram, 21 Kms from Boothapandi, 8 Kms from Kattuvilai, 10 Kms from Muttom, 13 Kms from Mandaikadu, 17 Kms from Colachel, 18 Kms from Thuckalay, 14 Kms from Eraniel, 18 Kms from Kumaracoil, 18 Kms from Padmanabhapuram and 76 Kms from Thiruvananthapuram. Nearest Railway Station is located at Nagercoil and Nearest Airport is located at Thiruvananthapuram.

வரலாறு :

இராஜாக்கமங்கலம் துறை, பழங்காலத்தில் இவ் ஊரின் சிறிது வடக்கே நெடும் பாதை ஒன்று மேற்கிலிருந்து கிழக்காக அமைந்திருந்தது. இதன் வழியாக அன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டு வந்த இராசாக்கள் கால் நடையாக நடந்து வந்து வழி நெடுக தம் மக்களை சந்தித்துப் பேசி மகிழ்வது வழக்கமாக இருந்தது. இதனால் இந்த பாதை இராச பாதை என்று அழைக்கப்பட்டது. இந்த பாதை இந்த ஊர் வழியாகச் சென்றது அதனால், முதலில் இவ்வூர் இராசாக்கள் மங்கலம் என்று அழைக்கப்பட்டு, காலம் செல்லச் செல்ல இராசாக்க மங்கலம் என்று மருவி சமீப காலத்தில், இது ஓர் அழகிய கடற்கரை கிராமமாதலால், இராஜாக்கமங்கலம் துறை என்று வழங்கப்பட்டு வருகிறது.

ஆலயமும் பாதுகாவலும்:

இம் மண் வீரம் செறிந்த மண். இங்கு வாழ்ந்த முன்னோர் இணையில்லா வீரமும், இறைப்பற்றும், அறிவும், ஆற்றலும் உடையவர்கள். அதனால் மிக்க ஆர்வத்தோடு ஊரின் நடுவே அழகியதோர் ஆலயம் எழுப்பத்திட்டமிட்டு கி.பி 1570-ம் ஆண்டு இவ்வூரில் தேவ அன்னையை பாதுகாவலியாகக் கொண்டு ஒரு சிறு ஆலயம் அமைக்கப்பட்டது.

பின்னர் அத்தேவாலயத்தை விரிவு படுத்த சுமார் 167 ஆண்டுகளுக்கு முன் (கி.பி. 1852) அரும்பாடுபட்டு, பளுவான பொருட்களைக்கூட நெடுந்தொலைவிலிருந்து தங்கள் வீரமிக்க தோள்களிலே சுமந்து கொண்டு வந்து தேவ அன்னையின் ஆலயம் அமைத்தனர். ஆலயத் திருப்பணியில் ஊர் மக்கள் அனைவரும் பங்கெடுத்த பாங்கு பெரிதும் பாராட்டத்தக்கது.

ஆலயம் அமைக்கும் செலவிற்காக மீன் குத்தகை, தெரிப்பு, சஞ்சாயம், மகமை, புன்னை மற்றும் தென்னைப்பாட்டம் மூலம் பணம் சேர்த்தனர்.

மக்கள் அனைவரும் ஒரே மனதாக, அவ்வாலயத்தில் அன்னை மரியாளை அரியணையேற்றி, அத்தாயிடமே இந்த கிராமத்தை ஒப்படைத்து, அன்னையின் பாதுகாவலில் வாழ்ந்து அவ்வன்னையையே வழிபட்டு வந்தனர்.

காலப்போக்கில் மக்கள் தொகை பெருகவே ஆலயத்தை பெரிதாக்க வேண்டிய தேவை வந்தது எனவே, மக்கள் அனைவரும் ஒன்றாகக்கூடி புதியதோர் தேவாலயம் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி புதிய ஆலயத்திற்கு மேன்மை தங்கிய கோட்டார் ஆயர் ரோக் ஆஞ்ஞி சுவாமி ஆண்டகை அவர்கள் 20-03-1955-ல் அடிக்கல் நட்டு அர்ச்சித்தார்கள். ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆலயத்திருப்பணி நடைபெற்றது, அத்திருப்பணியானது கோட்டார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்கள் இப்பங்கின் பங்குத்தந்தையாக பணியாற்றிய போது, அடிகளாரது அரும் பெரும் முயற்சியால் கட்டப்பட்டு , அருட்பணி ஏ. செல்வராஜ் அடிகளாரது இடைவிடாத உழைப்பால் முழுமையடைந்து 08-09-1976-ல் மேன்மை தங்கிய கோட்டார் ஆயர் மரியானுஸ் ஆரோக்கிய சுவாமி ஆண்டகை அவர்களால் புதிய கோவில் மந்திரித்து அர்ச்சிக்கப்பட்டது.

அதுமுதற்கொண்டு இவ்வூர் தேவ அன்னை ஆலயம், புனித ஆரோக்கிய அன்னை ஆலயமாக மாற்றம் பெற்று அவ்வாலயத்தில் புனித ஆரோக்கிய அன்னையையே மிகுந்த மரியாதையோடு குடி அமர்த்தி வழிபட்டு வருகின்றார்கள்.

இவ்வாலயம் தென்னிந்தியாவில் கொத்துக்கல்லால் கட்டப்பட்ட கோபுரங்களில் மிக உயர்ந்தது என பலராலும் பேசப்படுகின்றது. சுமார் 110 அடி உயரம் கொண்டது கோபுரம்.

தற்போது காணப்படும் ஆலயமானது மூன்றாவது ஆலயமாகும்.

பெரியகாடு, புனித அந்தோணியார் திருத்தலமானது இவ்வாலயத்தின் கிளைப்பங்காக இருந்து பின்னர் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.

மண்ணின் இறை அழைத்தல்கள் :

பல குருக்களும், 15 க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகளும் மண்ணின் மைந்தர்களாக மறைபரப்பு பணிக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

இவர்களில் இருவர் ஆயர்களாக இருப்பது முக்கியமானது.

மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்கள் கோட்டார் மறை மாவட்ட ஆயராகவும், மேதகு ஆயர் யூஜின் ஜோசப் அவர்கள் வட இந்தியாவில் உள்ள வாரணாசி மறை மாவட்டத்தின் ஆயராகவும் இருந்து இறைபணி செய்வது இம்மண்ணுக்கு மேலும் மேலும் பெருமை சேர்க்கின்றது.

இவ்வாலயத்தின் மிக முக்கியமான நிகழ்வு ஒன்று உள்ளது. அதாவது தவக்காலத்தின் நான்காவது வார சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நற்கருணைப் பெருவிழாவாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் முன்னோர்களால் துவக்கப்பட்ட இந்த நிகழ்வு இன்றளவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்வார்கள்.

மேலும் ஊரின் முக்கிய தெருக்களில் அழகிய நான்கு குருசடிகள் உள்ளன.

அவை
1. புனித அந்தோணியார் குருசடி
2. புனித சகாய மாதா குருசடி
3. புனித சவேரியார் குருசடி
4. புனித செபஸ்தியார் குருசடி

இந்த குருசடிகளில் அந்தந்த புனிதர்களின் விழா நாட்களில் பத்து நாட்கள் திருவிழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது. பத்தாம் திருவிழாவின் போது ஆடம்பர திருப்பலி, சப்பரபவனி, சமபந்தி விருந்தும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

தபால்வசதி, சாலைவசதி, போக்குவரத்து வசதி என எல்லா வசதிகளையும் இங்கு முன்னோர்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

எழில்மிகுந்த இராஜாக்கமங்கலம்துறை ஆலயமானது அழகிய கடற்கரை பகுதியில் அமைந்துள்ளதால் பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் வருகை தருவதால், சுற்றுலா தலம் போன்று மக்களின் வருகையால் நிறைந்து இவ்வாலய வளாகம் எப்போதும் காணப்படுகிறது.

வழித்தடம் :

நாகர்கோவிலிலிருந்து வர இரண்டு சாலை வழிகள் உள்ளன அவை,

1. ஈத்தாமொழி வழிச் சாலை
2. இராஜாக்கமங்கலம் வழிச் சாலை.

நாகர்கோவிலிலிருந்து அரசு பேருந்து மூலம் வரும் வழி:

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் அரசாங்க பேருந்து வழித்தட எண்கள் 38B, 38E, 39A, 40, 54.

இவ்வாறு சுமார் நானூறு ஆண்டுகளுக்கு மேலான பழமையான வரலாற்றையும், மண்ணின் மைந்தர்களாக இரண்டு ஆயர்களையும், அழகிய கம்பீரமாக காட்சியளிக்கும் ஆலயத்தையும், பல்வேறு வேண்டுதல்களுடன் வருகின்ற மக்களுக்கு, அவர்களின் தேவையை நிறைவேற்றும் அன்புத்தாயாக திகழும் புனித ஆரோக்கிய அன்னையை பாதுகாவலியாகவும் கொண்டு வாழும் இராஜாக்கமங்கலம்துறை ஆலயத்தை எமது பதிவின் 250 வது ஆலயமாக இறைவன் பாதம் சமர்ப்பிக்கின்றோம்.