210 புனித செபஸ்தியார் ஆலயம், ராஜ்பவன், சென்னை


புனித செபஸ்தியார் ஆலயம்

இடம் : ராஜ்பவன் (ஆளுநர் மாளிகை), சென்னை -22

மாவட்டம் : சென்னை

மறை மாவட்டம் : சென்னை -மயிலை உயர் மறை மாவட்டம்

நிலை : கிளைப்பங்கு (சிற்றாலயம்)

பங்கு : தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், சின்னமலை.

பங்குத்தந்தை : அருட்தந்தை P. J லாரன்ஸ் ராஜ்

குடும்பங்கள் : 18
அன்பியம் : 1

ஞாயிறு திருப்பலி : இல்லை

ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை மாலை 06.30 மணிக்கு செபமாலையும் அதனை தொடர்ந்து திருப்பலியும் நடைபெறும், பின் முடிவில் நேர்ச்சை கஞ்சியுடன் இரவு உணவு வழங்கப்படும்.

திருவிழா : ஜனவரி 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் நவநாள் சிறப்பிக்கப்பட்டு 20-ம் தேதி அன்று ஆடம்பர தேர் பவனியுடன் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கொடியிறக்கத்துடன் முடிவு பெறும்.

வரலாறு :

நமது பாரத நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு , தமிழக ஆளுநர்கள் ஆறு மாதங்கள் ஊட்டியிலும், ஆறு மாதங்கள் சென்னையிலிருந்தும் ஆட்சி புரிந்தனர்.

1931-ம் ஆண்டு ஊட்டி ராஜ்பவன் ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் அம்மை நோயினாலும், கடும் காய்ச்சலினாலும் அவதியுற்றனர்.

புனித செபஸ்தியாரிடம் வேண்டினால் இந்த கொள்ளை நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று விசுவாசம் கொண்டு, ஒரு சிறு ஜெபக்குழுவால், கேரளா மாநிலத்தின் ஆலயம் ஒன்றிலிருந்து புனித செபஸ்தியார் சுரூபம் கொண்டு வரப்பட்டது.

ஊட்டி தூய இருதய ஆலயத்தில் நிறுவப்பட்ட இந்த சுரூபம், பின்னர் ஊட்டி ராஜ்பவனில் கட்டப்பட்ட சிற்றாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. எல்லா மதத்தினரும் புனித செபஸ்தியாரை வழிபட்டு, அவரின் பரிந்து பேசுதலால் இறைவன் வழியாக சுகம் பெற்றனர்.

1951 -ல் சுதந்திர இந்தியாவின் முதல் ஆளுநர், கிண்டி ராஜ்பவனில், ஊட்டியிலிருந்து புனித செபஸ்தியார் சுரூபத்தை கொண்டு வந்து ஒரு குடியிருப்பு வீட்டில் வைத்து வழிபட அனுமதித்தார்.

2000 மாவது ஆண்டில் இவ்வாலய ஜூபிலி ஆண்டை முன்னிட்டு ஆளுநர் டாக்டர். சென்னா ரெட்டி அவர்களிடம், சுவாமி தேவ் என்று அன்பாக அழைக்கப்படும் பங்குத்தந்தை தேவநேசன் அவர்கள் புதிய ஆலயம் கட்ட அனுமதி பெற்று, அருட்தந்தை அவர்களின் அயராத முயற்சிகளின் பயனாகவும் மக்களின் ஒத்துழைப்புடனும் புதிய ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

இங்கு பணிபுரிந்த அனைத்து அருட்பணியாளர்களும் இவ்வாலய வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்து சிறப்பாக செயல்பட்டனர்.

தற்போது அருட்தந்தை P. J லாரன்ஸ் ராஜ் அவர்கள் இவ்வாலய வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தி, வழிநடத்தி வருகிறார்கள்.

மேலும் ராஜ்பவனில் பல்சமய மக்களும் வசித்து வருவதுடன், நட்புடனும் விழாக்காலங்களில் பங்கேற்று சிறப்பு செய்து வருகின்றனர்.

2019 ஜனவரி மாதத்தில் இவ்வாலயத்தின் 88- வது ஆண்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.