845 புனித ஆசீர்வாதப்பர் திருத்தலம், பத்திநாதபுரம்

    

புனித ஆசீர்வாதப்பர் திருத்தலம் (St Benedict Church)

இடம்: பத்திநாதபுரம், வடக்கன்குளம் வழி, கோலியான்குளம் அஞ்சல்

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: வடக்கன்குளம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித அந்தோனியார் ஆலயம், சிதம்பராபுரம்

2. புனித அந்தோனியார் ஆலயம், கீழ்க்குளம்

பங்குத்தந்தை அருட்பணி.‌ G. சேகரன்

ஜெபதேவைக்கு: +91 94884 07022

குடும்பங்கள்: 220

அன்பியங்கள்: 7

ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி

நாள்தோறும் திருப்பலி காலை 06:00 மணி

வியாழன் மாலை 06:30 மணி நவநாள் திருப்பலி

மாதத்தின் முதல் வியாழன் காலை 11:00 மணி நவநாள், ஆராதனை, திருப்பலி. தொடர்ந்து அசன விருந்து

திருவிழா: ஜூலை மாதம் 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள்

ஆலய வரலாறு:

பத்திநாதபுரம் ஊர் தோன்றிய வரலாறு:

கி.பி. 1889 ஆம் ஆண்டுக்கு முன்னர் இராமலிங்கபுரம் பகுதியில் வாழ்ந்த பலர் தீர்வை (வரி) செலுத்தாமையால் தங்களது சொத்துக்களை இழந்துள்ளனர். சில பணம் படைத்த முதலாளிகள் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வரி செலுத்தி, அந்த நிலங்களையும் தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டனர். சில முதலாளிகள் சிறிய கூலி கொடுத்து, கூலி கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டி சம்பாதித்து வந்தனர். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் தான் இராமலிங்கபுரம்  இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள். 

இவ்வாறிருக்க அருள்தந்தை பத்திநாதர் சுவாமிகள் சே.ச இராமலிங்கபுரம் மக்களின் வாழ்க்கை நிலையைக் கண்டு மனமிரக்கம் கொண்டு, 1889 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி திரு. பெரிய பூமி அளந்த பெருமாள் அவர்களிடமிருந்து இரண்டு ஏக்கர் நிலத்தை ரூ.45 க்கு வாங்கி பத்திரப்பதிவு செய்து, இராமலிங்கபுரத்தில் இருந்து 10 குடும்பங்களையும், கோலியான்குளத்தில் இருந்து 2 குடும்பங்களையும், வாங்கப்பட்ட நிலத்தில் குடியேற்றம் செய்து வாழச் செய்தார். இந்த நிலத்தில் ஓலைக் குடிசை ஆலயம் அமைத்துக் கொடுத்தார். அவரின் நினைவாக இவ்வூர் "பத்திநாதபுரம்" என்று பெயர் பெற்றது.

சங்கைக்குரிய பத்திநாதர் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு:

10.10.1837 அன்று பிரான்ஸ் நாட்டில் பிறந்தார்.‌ இவரது இயற்பெயர் வில்லியம் புக்கே என்பதாகும்.

12.11.1857 அன்று சேசு சபையில் சேர்ந்தார். படித்து, குருவானார்.

02.10.1871 அன்று தமிழகத்தில் உள்ள மதுரை மிஷனுக்கு வந்தார்.

1873-1874 வரை வடக்கன்குளம் பங்குத்தந்தையாக பணிபுரிந்தார்.

பின்னர் 1882-1894 வரை 12 ஆண்டுகள் வடக்கன்குளம் பங்குத்தந்தையாக பணிபுரிந்தார்.

09.10.1894 அன்று இயற்கை எய்தினார். அவரது உடல் பாளையங்கோட்டை மறைமாவட்டம், பாளையங்கோட்டை புனித அந்தோனியார் ஆலய கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

புனித ஆசீர்வாதப்பர் ஆலயம்:

அருள்பணி. கௌசானல் அவர்கள் 1910 ஆண்டு வடக்கன்குளம் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். அவரிடம் சென்று பத்திநாதபுரம் மக்கள், ஆலயம் அமைத்துத் தரவேண்டும் என்று கேட்டனர். 

அருட்தந்தை கௌசானல் அடிகளாரும் மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு புதிய ஆலயம் அமைத்துக் கொடுத்து, அப்போது திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்ட 15 ஆம் ஆசீர்வாதப்பர் நினைவாக, "ஆசீர்வாதப்பர் ஆலயம்" எனப் பெயரிடப்பட்டது.

புனிதரின் சுரூபம்:

1919 ஆம் ஆண்டு அருள்பணி.‌ ஆனந்தநாதர் (பொனேர்) மற்றும் அவரது உதவிப் பங்குத்தந்தை அருள்பணி. லூர்துநாதன் இவர்களின் பணிக்காலத்தில் புனித ஆசீர்வாதப்பர் சுரூபம் வைக்கப்பட்டு, முதல் திருப்பலி நிறைவேற்றப் பட்டது.

1920 ஆம் ஆண்டு நீண்ட மூங்கில் கொடிமரம் நிறுவப்பட்டது.

1921 ஆம் ஆண்டு அருள்பணி. பொனேர் அவர்களால் நற்கருணை ஸ்தாபகம் செய்யப்பட்டது.

தற்போதைய புதிய ஆலயமானது 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 

தனிப் பங்கு:

நீண்ட நெடுங்காலமாக வடக்கன்குளம் பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்த பத்திநாதபுரமானது,  மேதகு ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் 22.05.2002 அன்று தனிப் பங்காக உயர்த்தப்பட்டு,  அருட்பணி.‌ விக்டர் சாலமோன் அவர்களை முதல் பங்குத்தந்தையாக நியமித்தார்.

திருவிழா:

தொடக்க காலத்தில் மார்ச் மாதம் 21 ஆம் தேதியன்றும், பின்னர் ஜூலை மாதம் 15 ஆம் தேதியன்றும் திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. இரண்டாம் வத்திக்கான் சங்கமானது ஜூலை 11 ஆம் தேதியை புனித ஆசீர்வாதப்பர் தினமாக அறிவித்தது. இதன் பிறகு ஜூலை 11 ஆம் தேதி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆலய வளாகத்தில் உள்ள வேப்பமரம், நோய் தீர்க்கும் அருமருந்தாக உள்ளது.

பங்கில் உள்ள கெபிகள்:

1. லூர்து மாதா கெபி

2. வேளாங்கண்ணி மாதா கெபி

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. திருக்குடும்ப சபை

2. அமலோற்பவ மாதா சபை

3. மரியாயின் சேனை

4. புனித வின்சென்ட் தே பவுல் சபை

5. சூசையப்பர் சபை

6. ஆசீர்வாதப்பர் இளையோர் சபை

7. நற்கருணை வீரர்

8. பாலர் சபை

9. மறைக்கல்வி

பங்கில் உள்ள பள்ளிக்கூடங்கள்:

1. புனித ஆசீர்வாதப்பர் நடுநிலைப்பள்ளி, பத்திநாதபுரம்

2. புனித ஜோசப் தொடக்கப்பள்ளி, கீழ்க்குளம்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. Rev.Fr. விக்டர் சாலமோன் (2002-2003)

2. Rev.Fr. மரிய தாஸ் (2003-2007)

3. Rev.Fr. வியாகுலமரியான் (2007-2011)

4. Rev.Fr. S. சேசு நசரேன் (2011-2013)

5. Rev.Fr. S. ராஜன் (2013-2017)

6. Rev.Fr. பபியான் ஜோசப் (2017-2018)

7. Rev.Fr. G. ஜோசப் (2018-2021)

8. Rev.Fr. G. சேகரன் (2021---)

புனித ஆசீர்வாதப்பர் (பெனடிக்ட்):

புனித பெனடிக்ட் இத்தாலியில் நூர்சியா என்ற இடத்தில் கி.பி. 480-ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ரோமில் கல்வி பயின்றபோது இளைஞர்கள் மத்தியில் காணப்பட்ட கெட்ட பழக்கங்கள் மற்றும் அவர்கள் செய்த நீதிக்குப் புறம்பான செயல்கள் இவரை அதிரவைத்ததுடன், இவரை அங்கிருந்து வேறு இடத்துக்கு செல்லுமளவு மனம் வெறுத்துப்போனார். ஆனால், அப்படிப்பட்ட சூழலில் அவர் தம்மை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணிக்கத் திட்டமிட்டார். அதன்படி ஒரு மலை உச்சிக்குச் சென்றவர் அங்கே எம்மானூஸ் என்ற முனிவரைச் சந்தித்தார். அவர் காட்டிய வழியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவரும் முனிவரானார்.

இவரது இந்த தவ வாழ்க்கையை அறிந்த மக்கள் பலரும் அங்கே சென்று இவரைச் சூழ்ந்துகொண்டு இவர் சொல்லும் போதனைகளைக் கேட்கத் தொடங்கினர். அப்போது உருவானதே `புனித பெனடிக்ட் துறவற சபை'. சபை உருவானதையடுத்து அவர் தனது சபை துறவிகளிடம் இயேசு கிறிஸ்துவிடமிருந்து எவராலும் பிரிக்கமுடியாத உறவுகொள்ளக் கற்றுத்தந்தார்.

இவர், துறவு வாழ்வுக்கு எழுதிய விதிமுறைகள், அக்காலத்தில் உருவான புதிய துறவு சபைகளுக்கு ஒளிவிளக்காக அமைந்தன. இவர், இறைவேண்டலும், உழைப்பும், ஒன்றே என உறுதிசெய்தார். மொத்தத்தில் அன்றாட வாழ்வின் ஆன்மீகத்திற்குத் தேவையான  அடிப்படை கூறுகளை வழங்கியவர், புனித பெனடிக்ட்.

இவர் ஒரு தனிமைவிரும்பி என்றபோதிலும் அடிக்கடி மக்களைச் சந்தித்து வந்தார். இறைவனின் வல்லமையால் நோயாளிகளைக் குணமாக்கினார். வறுமையில் வாடியவர்களுக்கு உணவு, உடை அளித்தார். இப்படியாக பல்வேறு நற்காரியங்கள் செய்து வந்த இந்தப் புனிதர் தனது இறப்பை 6 நாள்களுக்கு முன்பே அறிவித்தார். அத்துடன் அவர் தன்னைப் புதைக்க கல்லறைக் குழியையும் தோண்டி வைத்தார். இந்தநிலையில் ஒருநாள் சிற்றாலயத்தில் நின்றபடி திருப்பலி நிறைவேற்றும்போது, தனது கைகளை உயர்த்தி ஜெபித்துக்கொண்டிருந்தபோது அவரது உயிர் பிரிந்தது. 

புனித பெனடிக்டின் பதக்கமானது முதன்முதலில் புனித பெனடிக்டின் பாதுகாவலுக்காக அணியப்பட்டது. இந்தப் பதக்கத்தின் ஒரு பக்கத்தில் அவரது உருவமும், மறுபக்கத்தில் சிலுவையும் அதைச் சுற்றியும் அதன்மீதும் லத்தீன் எழுத்துகளும் பொறிக்கப்பட்டிருக்கும் விதத்தில் அமையப்பெற்றுள்ளது. இந்தப் பதக்கமானது முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட காலம் சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் 1880-ஆம் ஆண்டு இவரது பிறந்த தினத்தின் நினைவாக வெளியிடப்பட்டது முதல் மக்களிடையே புகழ்பெறத் தொடங்கியது.

இவரது உடன்பிறந்த சகோதரி புனித ஸ்கொலஸ்டிகா ஆவார்.

புனித ஆசீர்வாதப்பரின் வழியாக இறையாசீர் பெற்றுச் செல்ல பத்திநாதபுரம் வாருங்கள்.....

வழித்தடம்: வடக்கன்குளம் -ராதாபுரம் வழித்தடத்தில் பத்திநாதபுரம் அமைந்துள்ளது.

Location map: St.Benedict Church Pathinatha Puram 063791 46667

https://maps.app.goo.gl/yiR63BcmTSkFMymc6

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. G. சேகரன் அவர்கள்.