822 புனித சூசையப்பர் ஆலயம், தோளூர்ப்பட்டி

                 

புனித சூசையப்பர் ஆலயம்

இடம்: தோளூர்ப்பட்டி 

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி

மறைமாவட்டம்: கும்பகோணம்

மறைவட்டம்: லால்குடி

நிலை: கிளைப்பங்கு

பங்கு: தூய ஜெயராக்கினி மாதா ஆலயம், தொட்டியம்

பங்குத்தந்தை: அருட்பணி. U. S. ஆரோக்கிய சாமி

குடும்பங்கள்: 65

ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி

திருவிழா: மே மாதம் 01ஆம் தேதி

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. முனைவர். துரைசாமி

2. அருட்பணி.‌ இராபர்ட் செல்வன்

வரலாறு:

பெயர்க்காரணம்:

அனைவரும் கூடி நின்று இறைவனை தொழுது வந்ததால் 'தொழுவோர்பட்டி' எனப் பெயர் பெற்ற இவ்வூர், பின்னர் மருவி "தோளூர்ப்பட்டி" என ஆனது. 

கி.பி. 1665 ஆம் ஆண்டில் தோளூர்ப்பட்டி பகுதி மக்கள் கத்தோலிக்க திருமறையை ஏற்றனர்.

இயேசு சபை குருக்கள் தோளூர்பட்டிக்கு அருகாமையில் உள்ள, சேர்வைக்காரன்பட்டி ஊரில் தங்கியிருந்து இப்பகுதியில் இறைப் பணியாற்றினர்.

பரமானந்த சுவாமிகள்:

Rev.Fr. Antoine De Proenca (பரமானந்த சுவாமிகள்) போர்ச்சுக்கல் நாட்டின் இரமேலா என்னும் ஊரில் பிறந்தார். 1663 ஆம் ஆண்டு இயேசு சபையின் குருவாகி, இந்தியாவிற்கு வந்து 'மதுரை மிஷன்'-இல் பணிபுரிந்தார். திருச்சியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் பணிசெய்த பரமானந்த சுவாமிகள், 1663 முதல் 1665 வரை தொட்டியம் பகுதியில் நற்செய்திப் பணியாற்றினார். 42 ஆம் வயது வரை நற்செய்திப் பணியாற்றியவர் 14.12.1666 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அவரது உடல் காவிரிக்கரையின் தென்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல நாட்களுக்குப் பிறகு அவருக்கு ஆலய வளாகத்தில் கல்லறை அமைக்க ஊர் மக்கள் ஒன்றிணைந்து அவரது உடலை தோண்டி எடுத்து போது, உடல் அழியாமல் இருந்ததைக் கண்ட, பிறமதத்தினரும் அவர் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு மன்றாட ஆரம்பித்தனர். மகேந்திரமங்கலம் என்னும் கிராமத்தின் காகித ஆலைக்கு மேற்புறத்தில் உள்ள நிலத்தில் அவரது உடலை அடக்கம் செய்தனர்.‌ கல்லறைக்கான 29 சென்ட் நிலத்தின் பட்டாவானது "சர்வேஸ்வரன் கோவில் பட்டா" என்ற பெயரில் உள்ளது.

கி.பி 1673 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தோளூர்ப்பட்டியின் அருகில் உள்ள சேர்வைக்காரன்பட்டியில் புனித அருளானந்தர், சே.ச (ஜான் டி பிரிட்டோ) ஒரு வாரம் தங்கியிருந்து, இப்பகுதியில் இறைப் பணியாற்றியுள்ளார். பின்னர் இங்கிருந்து நாமக்கல், புதன்சந்தை, கால்காவேரி ஊர்களுக்கு சென்று விட்டு, எடப்பாடி அருகில் உள்ள RC ரெட்டியூர் என்னும் ஊருக்குச் சென்றதாக கூறப்படுகிறது. 

1717 ஆம் ஆண்டு அருட்பணி. சவேரியார் அடிகளாரால் திருச்சி மாவட்டம் கோட்டப்பாப்பாளையம் ஊரில் ஆலயம் கட்டப்பட்டது. தோளூர்ப்பட்டி, தொட்டியம் ஊர்கள் கோட்டப்பாளையம் பங்கின் கீழ் செயல்பட்டு வந்தன.

1832 ஆம் ஆண்டில் தோளூர்ப்பட்டியில் சிறிய புனித சூசையப்பர் ஆலயம் கட்டப்பட்டது. இப்பகுதியில் பள்ளிக்கூட வசதிகள் இல்லாததால், பள்ளிக்கூடத்தின் தேவையை கருத்தில் கொண்டு, 1868 ஆம் ஆண்டு பழைய ஆலயத்தை மாற்றி, புதிதாக கட்டி, பள்ளிக்கூடமாகவும், ஆலயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

1864 ஆம் ஆண்டு கோட்டப்பாளையம் பங்கில் இருந்து பிரிக்கப்பட்டு தோளூர்ப்பட்டி தனிப் பங்காக உயர்த்தப்பட்டது.  தோளூர்ப்பட்டி பங்கின் கிளைப் பங்குகளாக தொட்டியம், நாமக்கல், மோகனூர், கால்காவேரி (காக்காவேரி), கொசவம்பட்டி, புதன்சந்தை ஆகியன செயல்பட்டு வந்தன. இவையனைத்தும் தற்போது தனிப் பங்குகளாக செயல்பட்டு வருகின்றன.

அருட்பணி. பரமானந்தம் சுவாமிகள் பணிக்காலத்தில் சுமார் 1890 ஆம் ஆண்டு இந்த ஆலயத்தை இடித்து விட்டு, புதிய பெரிய ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப் பட்டது. 

அருட்பணி. மரிய பிரகாசம் பணிக்காலத்தில் 1900 ஆம் ஆண்டில் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றது. அவர் இறந்த போது, உடல் தோளூர்ப்பட்டி ஆலயத்தின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

அருட்பணி. லூர்து சேவியர்:

தோளூர்ப்பட்டி பங்குத்தந்தையாக அருட்பணி. லூர்து சேவியர் அவர்கள் கூவத்தூர் பங்கில் இருந்து பணிமாற்றம் பெற்று, 1948 முதல்1955 வரை பணியாற்றினார். பின்னர் இங்கிருந்து பணிமாற்றம் பெற்று பூண்டி சென்று, பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதாவின் புகழை பாரெங்கும் எடுத்துச் சென்றார்.

அருட்பணி. லூர்து சேவியர் அவர்கள் தோளூர்ப்பட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய போது, பல்வேறு பணிகளையும், அற்புதங்களையும் செய்தார். 

வருக்கு மருத்துவம் தெரிந்ததால், எப்போதும் தோளூர்ப்பட்டியில் நோயாளிகள் வந்தவண்ணமாகவே இருப்பர். புதுவை, தஞ்சை, திருச்சி என்று பல பகுதிகளில் இருந்தும் மக்கள் சிகிச்சை பெற வருவார்கள். ஒருமுறை பாம்பு கடித்து ஒருவர் மரக்கட்டை போன்ற விறைத்து கிடந்தார். அவரை பரிசோதித்த அருட்தந்தை அவர்கள், பாம்பு கடிபட்டவரின் வாயில் மருந்தை ஊற்றி, ஜெபித்தார். என்ன ஆச்சரியம்!!! அவர் நலம் பெற்று எழுந்தார். 

தோளூர்ப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் தொழுநோயாளர்கள் அதிகமாக காணப்பட்டதால், அருட்பணி. லூர்து சேவியர் அவர்களால்  தொழுநோயாளர் மருத்துவமனை அமைக்கப்பட்டு, 30.01.1950 அன்று DR. T.S.S. Rajan (Minister for Public Health) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலர் நோயிலிருந்து நலம் பெற்றனர். தகுந்த பராமரிப்பு இல்லாததால் 1970 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை மூடப்பட்டது. 1991 முதல் 1993 வரை இலங்கையில் இருந்து அகதிகளாக தஞ்சம் வந்த மக்களுக்கு அடைக்கலமாக இந்தக் கட்டிடம் இருந்தது. தற்போது இந்தக் கட்டிடம் பழுதடைந்து செயல்பாட்டில் இல்லை.

இங்கிருந்து கிளைப் பங்குகளுக்கு அருட்பணி. லூர்து சேவியர் அவர்கள் மாட்டு வண்டியில் சென்று திருப்பலி நிறைவேற்றி வந்தார். 

அக்காலத்தில் தோளூர்ப்பட்டி பகுதியில் அவ்வப்போது தீப்பிடித்து குடிசைகள் எரிந்து வந்தது. ஒருமுறை இதுபோல் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்தபோது, அருட்பணி. லூர்து சேவியர் அவர்கள் உடனே ஓடிச் சென்று, திருச்சிலுவையை எடுத்து வந்து ஜெபிக்க, தீயானது அந்தகணமே அணைந்து போனது. இதனை நேரில் கண்டு சாட்சியம் பகிர்ந்த திரு. சாமிராஜ் ஆசிரியர் (வயது90) அவர்களே உண்மையான சாட்சி.

ஆர்.சி பள்ளிக்கூடத்தை, 1951 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு வரை உயர்த்தினார். 

இவ்வாறு ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகள் பல செய்து இப்பகுதி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற அருட்பணி. லூர்து சேவியர் அவர்களை, தோளூர்ப்பட்டி இறைசமூகம் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறுகின்றது. 

போக்குவரத்து வசதி போன்ற காரணங்களால் 1956 ஆம் ஆண்டு தொட்டியம் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. தோளூர்ப்பட்டி ஆலயமானது, தொட்டியம் பங்கின் கிளைப் பங்காக மாற்றப் பட்டது. 

அருட்பணி. சாந்தப்பநாதர் பணிக்காலத்தில் (1964-1969), அவரின் முயற்சியால் ஆலய கோபுரம் அமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது.

அருட்பணி.‌ S. ஜான் கென்னடி பணிக்காலத்தில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு 12.08.2007 அன்று கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது .

மேலும் தோளூர்ப்பட்டி ஆலயத்தை பராமரித்து வந்த ஊர் பெரியவர்கள், குறிப்பாக நீண்ட காலமாக பராமரித்து வந்தவரும், பள்ளிக்கூட தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்தவருமாகிய திரு. S. லூர்துசாமி அவர்களின் பணிகளும் குறிப்பிடத் தக்கது.

சிங்கப்பூரை சேர்ந்த ஜேன் மற்றும் டேவிட் ஜான்ஸ் ஆகியோரின் நிதியுதவியுடன் தூய லூர்து மாதா கெபி எழுப்பப்பட்டு, 06.02.2010 அன்று பேரருட்பணி C. பீட்டர் பிரான்சிஸ் அவர்களால் மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.

தோளூர்ப்பட்டியில் புனித வனத்து சின்னப்பர் சிற்றாலயம் மற்றும் புனித செபஸ்தியார் ஆலயமும் உள்ளன.

பள்ளிக்கூடம்:

ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை ஆர்.சி பள்ளிக்கூடத்திற்கு 03.07.1926 அன்று அனுமதி பெறப்பட்டது. 1938 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு தொடங்கப்பட்டு, 1941 ஆம் ஆண்டு அரசு அனுமதி பெறப்பட்டது. 

19.01.1948 அன்று அரசு அனுமதி பெற்று ஆறாம் வகுப்பு தொடங்கப்பட்டது.

அருட்பணி. லூர்து சேவியர் அவர்களால் பள்ளிக்கூடமானது, எட்டாம் வகுப்பு வரை உயர்த்தப்பட்டு 1951 ஆம் ஆண்டு அரசு அனுமதி பெறப்பட்டது. 

அருட்பணி. V. I. பீட்டர் பணிக்காலத்தில் (1994-2001) பழைய பள்ளிக்கூடம் அகற்றப்பட்டு, புதிய பள்ளிக்கூடம் கட்டப் பட்டது. இந்த பள்ளிக்கூடத்தில் தோளூர்ப்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள பலர் படித்து பட்டம் பல பெற்று இன்று பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர் என்பது பெருமிதத்திற்குரியது.

தலைமலை:

தொட்டியத்தில் இருந்து சுமார் 10கி.மீ தொலைவில், நாமக்கல் மாவட்டம் செவிந்திப்பட்டியை ஒட்டியுள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதி தான் தலைமலை. இங்கு வனத்துறை கட்டியுள்ள சிறிய நீர்த்தேக்கம் அருகே பாறைகளால் அமைந்த மலைக்குகை ஒன்று உள்ளது. இக்குகையில் 1948 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் சாம்பல் புதன் முதல் புனித வெள்ளி வரை 40 நாட்களுக்கு தங்கி இரவும் பகலும் தவமிருந்தவர் தான் தலைமலை வாழ் தவமுனி அந்தோணிசாமி. இவர் விழித்திருக்கும் போதெல்லாம் குச்சியால் செய்த சிலுவையை கையில் வைத்துக் கொண்டு, இயேசுவின் சிலுவைப் பாடுகளை தியானித்து ஜெபித்துக் கொண்டிருந்தார். இவரது தவத்தைக் கண்ட மக்கள் தோளூர்ப்பட்டி பங்குத்தந்தை அருட்பணி.‌ லூர்து சேவியர் (1948-1955) அவர்களிடம் தெரிவித்துள்னர். 

1983 ஆம் ஆண்டு சகோதரர் இ. சூசைநாதன், அருட்பணி. சொலோனாராயன் ஆகியோர் இந்தக் குகைக்குச் சென்று ஜெபம் செய்தனர். 

திருத்தந்தை இரண்டாம் சின்னப்பர் அவர்களின் ஆசியுடன் 1990 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்பட்ட மாதா சுரூபமானது 1992 ஆம் ஆண்டு மலையின் அடிவாரத்தில் இருந்து குகைக்கு திருப்பவனியாக கொண்டு செல்லப்பட்டது. மேலும் 1990 ஆம் ஆண்டு தொட்டியம் பங்குத்தந்தை அருட்பணி. தாவீது அவர்களால் இங்குள்ள மற்றுமொரு சிறிய குகையில் புனித அந்தோனியார் சுரூபம் வைக்கப்பட்டு திருப்பலி நிறைவேற்றப் பட்டது.

இவ்விடத்தில் சென்று ஜெபிப்பவர்களுக்கு இறைவன் எண்ணில்லா வரங்களை நல்கி வருகிறார். ஒவ்வொரு வருடமும் தவக்காலத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமை பங்கு மக்கள், சுற்று வட்டாரங்களில் உள்ள பங்கு இறைமக்களுடன் இணைந்து, தலைமலைக்கு திருப்பயணம் மேற்கொண்டு, திருச்சிலுவைப்பாதையும், திருப்பலியும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

ஆலய முகவரி: 

புனித சூசையப்பர் ஆலயம், மாதா கோவில் தெரு,  தோளூர்ப்பட்டி அஞ்சல்,  தொட்டியம் வட்டம்,  திருச்சிராப்பள்ளி மாவட்டம், அஞ்சல் எண் - 621215

மின்னஞ்சல்: tholurpatty2014@gmail.com

முகநூல்:  https://www.facebook.com/tholurpatty?mibextid=ZbWKwL

வலையொளி: https://youtube.com/@tholurpattytholurpatti8328

வழித்தடம்: தொட்டியத்தில் இருந்து 6கி.மீ -தோளூர்ப்பட்டி

Location map: https://maps.app.goo.gl/faWNjXRWKFXoyoNz5

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ஆரோக்கிய சாமி, மண்ணின் மைந்தர் அருட்பணி. இராபர்ட் செல்வன், திரு. சாமிராஜ் (90) ஆசிரியர், மற்றும் ஆலய உறுப்பினர்கள்.

ஆலய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சேகரிப்பில் உதவி: செல்வன். P. மோகன்ராஜ்.