751 தூய சகாய மாதா மலங்கரை கத்தோலிக்க ஆலயம், குழித்துறை

  

தூய சகாய மாதா மலங்கரை கத்தோலிக்க ஆலயம்

இடம்: குழித்துறை

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: மார்த்தாண்டம்

மறைவட்டம்: மார்த்தாண்டம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்

பங்குத்தந்தை: அருட்தந்தை. கெபின்

Contact no: +91 96268 88393

குடும்பங்கள்: 40

அருள் வாழ்வியங்கள்: 3

ஞாயிறு காலை 06:30 மணி காலை ஜெபம், 07:00 திருப்பலி

புதன் மாலை 06:30 மணி திருப்பலி

திருவிழா: மே மாதம் கடைசி வாரத்தில்

மண்ணின் இறையழைத்தல்:

அருட்சகோதரி. சீமா, SOC

வழித்தடம்: நாகர்கோவில் -திருவனந்தவபுரம் நெடுஞ்சாலையில் குழித்துறை பேருந்து நிறுத்தம்.

Location map:

https://g.co/kgs/dDp38H

வரலாறு:

குழித்துறை தூய சகாய மாதா ஆலயத்திற்கான முதல் முயற்சியாக, 1958 ஆம் ஆண்டு மலங்கரை  கத்தோலிக்க திருச்சபையின் திருவனந்தபுரம் மறை மாநிலத்திற்கு உட்பட்ட, மார்த்தாண்டம் கிறிஸ்துராஜபுரம் பங்கில் பணியாற்றிய மறைப்பரப்பு பணியாளர் அருள்தந்தை. மோண்சிஞ்ஞோர். ஜோசப் குழிஞ்ஞாலில் அவர்களால் ஆலயத்திற்கான நிலம் வாங்கப்பட்டது.

அன்று வாங்கிய நிலத்தில் முழுவதும் கட்டிமுடிக்கப்படாத ஒரு கட்டிடம் காணப்பட்டது. அந்த கட்டிடத்தை பத்து ஆண்டுகளுக்கு பின்னர் சீர்செய்து, 1968 ஆம் ஆண்டு அழகான கட்டிடமாக மாற்றப்பட்டது. இந்த கட்டிடத்தின் முன்பக்கமுள்ள இரண்டு பெரிய அறைகளைக் இணைத்து, ஒரே தளமாக மாற்றி அதில் ஒரு பலிபீடம் அமைத்து வழிபாடுகள் நடத்துவதற்கு ஏதுவாக அமைக்கப் பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட இவ்வாலயத்தின் முதல் பங்குத்தந்தையாக அருள்தந்தை. தோமஸ் விளையில் அவர்கள் நியமிக்கப்பட்டு, சனிக்கிழமை மாலை நேரத்தில் திருப்பலி நடைபெற்று வந்தது.

அருள்தந்தை. தோமஸ் விளையில் அவர்களைத் தொடர்ந்து, அருள்தந்தையர்கள் மேத்யூ கடகம்பள்ளி, ஜான், தோமஸ் பூவன்னால், வர்கீஸ் மாவேலில், சக்கரியாஸ், சாமுவேல் என்னூர், மரிய அற்புதம், பீட்டர் ஆனந்த், பாபுராஜ், ஜெரோம், தேவதாஸ், ஜோஸ்பின்ராஜ், டார்பெல்லோ ஆகியோர் தொடர்ந்து குழித்துறை பங்கின் வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்தனர்.

புதிதாக உருவான மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் முதல் ஆயர் மேதகு லாரன்ஸ் மார் எப்ரேம் அவர்கள், HOM என்ற அமைப்பை குழித்துறையில் அமைத்து செயல்பட்டு வந்த வேளையில், குழித்துறை பங்கு மக்களோடும், பங்கோடும் மிக நெருக்கமான முறையில் செயலாற்றினார். இவ்வாலய வளர்ச்சியில் அருள்தந்தையர்கள், ஆயர்கள் மட்டுமல்லாது மேரி மக்கள் சமூகத்தைச் சேர்ந்த பல அருட்சகோதரிகளின் தன்னலமற்ற கடின உழைப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மார்த்தாண்டம் மறைமாவட்ட முதல் ஆயர் மேதகு லாரன்ஸ் மார் எப்ரேம் ஆண்டகையின் மறைவிற்குப் பிறகு, இரண்டாவது ஆயராக பொறுப்பேற்ற மேதகு ஆயர் யூகானோன் மார் கிறிஸோஸ்டோம் அவர்களிடம், குழித்துறை பங்கு மக்களின் நீண்ட நாள் மனக்குறையான, புது ஆலய கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு, முறையாக தமிழக அரசின் அனுமதிக்காக 14.09.2004 அன்று விண்ணப்பிக்கப் பட்டு, 3 ஆண்டுகளுக்கு பிறகு 12.05.2007 அன்று தமிழக அரசின் அனுமதி கிடைத்தது. 

ஆயர் அவர்களின் பெரும் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட ஆலய கட்டுமானப் பணி நிறைவடைந்த எழில்மிகு தூய சகாய மாதா மலங்கரை கத்தோலிக்க ஆலயத்தை, மேதகு ஆயர் யூகானோன் மார் கிறிஸோஸ்டோம் ஆண்டகை அவர்கள் தமது திருக்கரங்களால் 28.02.2010 அன்று அர்ச்சித்து திறந்து வைத்தார்.

ஆலயம் அர்ச்சிப்பு விழா நடைபெற்று 5 ஆண்டுகளுக்கு பின்னர், ஆலயத்தின் முன்புறம் தூய சகாய அன்னை குருசடி பல நல்லுள்ளங்களின் ஆதரவுடன் கட்டப்பட்டு, மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் ஆண்டகை அவர்களால் 19.12.2015 அன்று அர்ச்சிக்கப்பட்டது. இந்த குருசடியில் நாள்தோறும் பலர் அன்னையிடம் தங்களது வேண்டுதல்களை முறையிட்டு ஆசி பெற்று செல்கின்றனர். 

அருட்பணி. அலெக்ஸ் குமார் பணிக்காலத்தில் ஆலய பீடம் மற்றும் ஆலய உட்புறம் சீர்செய்யப்பட்டதோடு, ஆலய முன்புறம் அழகிய கொடிமரம் நிறுவப்பட்டு 15.09.2017 அன்று மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

குழித்துறையில் செயல்படும் HOM நிறுவனத்தின் அருகாமையில், அன்னை வேளாங்கண்ணி குருசடியும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கல்பாலத்தடி செல்லும் குறுக்குச் சாலையில் புனித அந்தோனியார் குருசடியும், ஸ்ரீதேவிகுமாரி மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் புனித செபஸ்தியார் குருசடியும் குழித்துறை பங்கின் வழியாக அமைக்கப்பட்டு அவ்வழியாகச் செல்லும் பலருக்கு இறையருள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆலய பொன்விழா (1968-2018) 23-05-2018

அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆலய பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மலங்கரை கத்தோலிக்க இளையோர் இயக்கம் (MCOM)

2. மலங்கரை கத்தோலிக்க இயக்கம் (MCA)

3. பங்குப்பேரவை

4. மறைக்கல்வி

5. பாடகற்குழு

6. புனித வின்சென்ட் தே பவுல் சபை

7. தாய்மார் சங்கம்

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. கெபின் அவர்கள்.