179 தூய சவேரியார் ஆலயம், மல்லன்விளை


தூய சவேரியார் ஆலயம்

இடம் : மல்லன்விளை

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

பங்குத்தந்தை : அருட்பணி ஆல்பின் ஜோஸ்

நிலை : கிளைப்பங்கு

பங்கு : புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், #கோழிப்போர்விளை

குடும்பங்கள் : 150
அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : காலை 09.30 மணிக்கு

செவ்வாய் திருப்பலி : மாலை 06.30 மணிக்கு

திருவிழா : டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் பத்து நாட்கள் நடைபெறும்.

மல்லன்விளை ஆலய வரலாறு :

சுமார் 116 ஆண்டுகளுக்கு முன்பு மல்லன்விளை யில் கல்லறைத்தோட்டம் அமைந்துள்ள இடத்தில் சிறிய குருசடி ஆலயம் கட்டப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதற்கு ஆலய பீடவடிவமும், அதில் இருக்கும் ஒரே கல்லால் ஆன T வடிவ திருச்சிலுவையும் சான்றாகும்.

அப்போது முளகுமூடு பங்கின் கிளைப் பங்காக நான்கு குடும்பங்களைக் கொண்டு செயல் பட்டது.

இக் கல்லறைத் தோட்ட குருசடி ஆலயம் இப்போதும் உள்ளது.

முளகுமூடு I.C.M அருட்சகோதரி கொலஸ்டிகா அவர்களும், முளகுமூட்டில் தங்கி பணிபுரிந்த வெளிநாட்டு அருட்சகோதரிகளும், மல்லன்விளை கல்லறைத் தோட்டத்தின் குருசடி ஆலயத்திற்கு முன்னால் அனைத்து பருவ வயதினரையும் அழைத்து வந்து மறைக்கல்வி கற்றுக் கொடுத்து வந்தனர்.

அதன்பின் அருட்சகோதரி ஆகத்தா அவர்கள் 1991 வரை 35 ஆண்டுகள் பணியாற்றி மக்களை இறை பக்தியில் வளர்த்தெடுத்தார்கள்.

தொடர்ந்து 2006 வரை அருட்சகோதரி எட்வின் அவர்கள் இம் மக்களை சிறப்பாக வழி நடத்தினார்கள்.

இவ்வாறு அருட்சகோதரிகள் முளகுமூட்டிலிருந்து நடந்து வந்து ஒவ்வொரு வீடாகச் சென்று மறைக்கல்விக்கும், திருப்பலிக்கும் அழைத்து வந்து, இறை பக்தியை வளரச் செய்து மல்லன்விளை குட்டித் திருச்சபையை உருவாக்கியுள்ளார்கள்.

1955 -ம் ஆண்டு திரு. R அருளப்பன், திரு. S பங்கிராஜ், திரு. S இன்னாசிமுத்து ஆகியோரின் முயற்சியாலும், மக்களின் ஒத்துழைப்புடன் வரி ஒன்றுக்கு 2 அணா வீதம் வசூலித்து 1956 -ம் ஆண்டு 8 சென்ட் நிலம் வாங்கப்பட்டது.

அப்போதைய முளகுமூடு பங்குத்தந்தை அருட்பணி மத்தியாஸ் அவர்களால் அடிக்கல் போடப்பட்டு ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டது.

18-09-1960 அன்று மேதகு ஆயர் ஆஞ்ஞிசுவாமி அவர்களால் புதிய ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.

பின்னர் மக்களின் ஒத்துழைப்புடன் ஆலய கோபுரம், ஆலய மணி ஆகியன உருவாக்கப் பட்டது.

ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது முதல் முளகுமூடு பங்குத்தந்தையர்கள் ஞாயிறு தோறும் திருப்பலி நிறைவேற்றி வந்தார்கள்.

ஆலய வளாகத்தில் உள்ள சாவடியில் நோயாளிகள் தங்கி, தூய சவேரியாரிடம் செபித்து நலம் பெற்று சென்றார்கள்.

அமராவதியில் ஆரோக்கிய மாதா குருசடி கட்டப்பட்டு 04-01-1981 அருட்பணி எரேமியாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

பழைய ஆலயம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் புதிய ஆலயம் கட்ட 20-06-1998 ல் மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அடிக்கல் போடப்பட்டது.

ஆலயத்திற்கருகில் 4.25 சென்ட் நிலம் வாங்கப்பட்டதால், புது ஆலயம் அமைக்கும் இடம் மாற்றப்பட்டு 10-11-2001 அன்று மறை மாவட்ட முதன்மை பணியாளர் பேரருட்பணி ஜான் குழந்தை அவர்களால் அடிக்கல் போடப்பட்டு, அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி ப. ரசல்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலில், பங்கு மக்களின் அயராத உழைப்பு மற்றும் நன்கொடைகளால் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 02-08-2002 ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

கல்லறைத் தோட்டத்தின் குருசடி ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி செபாஸ்டின் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி பபியான்ஸ் பணிக்காலத்தில் தூய சவேரியார் கலையரங்கம் மற்றும் பயிற்சி அரங்கம் கட்டப்பட்டு 02-08-2015 அன்று குழித்துறை மறை மாவட்ட செயலர் அருட்தந்தை ப. ரசல்ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

தூய சவேரியார் அரங்கமானது பங்கு மக்களின் நன்கொடைகளாலும், காணிக்கைகளாலும் மண்ணின் மைந்தர் அருட்பணி வில்லியம் அவர்கள் அயல் நாட்டிலிருந்து பெற்றுத் தந்த நிதி மற்றும் பங்கிலிருந்து வெளியூரில் திருமணமாகிச் சென்ற பெண்களின் குடும்பத்தினர் நிதி இவற்றோடு வெளியூர் மக்களின் நன்கொடைகளாலும் பங்குத்தந்தை அருட்பணி பபியான்ஸ் அவர்களின் அயராத முயற்சிகளாலும் அரங்கம் கட்டப்பட்டு 02-08-2017 ல் குழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஜெறோம் தாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

1960 ல் கட்டப்பட்ட பழைய ஆலயம் அகற்றப்பட்டு , அதன் கற்களும் அரங்கம் கட்ட பயன்படுத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.

அமராவதி, காஞ்சிரவிளை, மாடத்துக்காட்டுவிளை, கைதக்குழி (திருவிதாங்கோடு), புங்கறை, நங்கச்சிவிளை, மல்லன்விளை ஆகிய இடங்களில் பங்கு மக்கள் பரவி வாழ்கின்றனர்.

ஆரம்பத்திலிருந்து 1996 வரை முளகுமூடு பங்கின் கிளைப் பங்காகவும், 1997 முதல் கோழிப்போர்விளை பங்கின் கிளைப் பங்காவும் இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மண்ணின் இறை அழைத்தல்கள் :

அருட்பணி வில்லியம்

அருட்சகோதரி தொசித்தேயா மேரி வெரோணிக்கா

அருட்சகோதரி ரெக்ஸ்லின் ரெஜிஸ்

அருட்சகோதரி லீமா றோஸ்

தற்போது பங்குத்தந்தை அருட்பணி ஆல்பின் ஜோஸ் அவர்களின் சீரிய வழி காட்டுதலில் மல்லன்விளை தூய சவேரியார் ஆலய இறை சமூகம், வளர்ச்சிப் பாதையில் சிறப்பாக முன்னேறி செல்கின்றது.