கேரளா கொச்சி அன்னை மரியா பேராலயம்


கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பேராலயம்.

புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பேராலயம்(St. Mary's Syro-Malabar Catholic Cathedral Basilica) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கத்தோலிக்க கோவில் ஆகும். இது சீரோ-மலபார் வழிபாட்டு முறையைச் சார்ந்தது.

புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பேராலயம்

இப் பேராலயமானது 1112-ல் நிறுவப்பட்டது. இது "துறைமுகங்களின் அன்னை மரியா"வுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதற்கு "நசரேனி பள்ளி", "அஞ்சுகைமால் பள்ளி", "தெக்க பள்ளி" என்ற பெயர்களும் உண்டு.

இன்றைய கோவில் கட்டடம்

தற்போது உள்ள கோவில் கட்டடம் இருபதாம் நுற்றாண்டின் தொடக்க காலத்தில் எழுந்தது. இதைக் கட்டுவித்தவர் ஆயர் மார் அலோசியுஸ் பழப்பரம்பில் ஆவார்.

இக்கோவிலை "இணைப் பெருங்கோவில்" (minor basilica) நிலைக்கு திருத்தந்தை ஆறாம் பவுல் 1974ஆம் ஆண்டு, மார்ச்சு 20-ம் நாள் உயர்த்தினார். இக்கோவில் இந்தியாவில் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கியமான ஒரு திருப்பயணத் தலமும் ஆகும்.

எர்ணாகுளம்-அங்கமாலி மறைமாவட்டக் கோவில்

இக்கோவில் எர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தின் தலைமை இடமாக உள்ளது.

அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவில் மிகுந்த விரிவும் உயரமும் கொண்டது. திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1986ஆம் ஆண்டு பெப்ருவரி 7-ம் நாள் இக்கோவிலின் மைய நடுப்பீடத்தில் வழிபாடு நிகழ்த்தினார். அப்பீடத்தில் இயேசு கிறித்துவின் பிறப்பு, சிலுவைச் சாவு, உயிர்த்தெழுதல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

கோபுரங்கள்

கோவிலின் முன் பக்கத்தில் 68 அடி உயரத்தில் இரு கோபுரங்கள் எழுகின்றன. ஒரு கோபுரத்தின் உச்சியில் புனித பேதுரு, மற்ற கோபுரத்தின் உச்சியில் புனித பவுல் ஆகியோரின் திருச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

மணிக்கூண்டு

கோவிலின் மணிக்கூண்டு தனியாக உள்ளது. அது 88 அடி உயரம் கொண்டது. அந்த மணிக்கூண்டின் உச்சியில் புனித தோமா உருவச்சிலை உள்ளது. மேலும் இயேசு புனித தோமாவுக்குக் காட்சியளிக்கின்ற சித்திரமும் உள்ளது.