943 புனித அந்தோனியார் ஆலயம், அழகப்பபுரம்

         

புனித அந்தோனியார் ஆலயம்

இடம்: அழகப்பபுரம், இட்டமொழி வழி,  அழகப்பபுரம் அஞ்சல், திருநெல்வேலி மாவட்டம், 627652

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித ஜெபமாலை மாதா ஆலயம், மன்னார்புரம்

பங்குத்தந்தை அருட்பணி. J. எட்வர்ட்

குடும்பங்கள்: 30 (ஊர் 4, வெளியூர் 26)

மாதத்திற்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 09:30 மணிக்கு திருப்பலி

திருவிழா: இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மே மாதத்தில் 20ம் தேதியை தொடர்ந்து வருகிற செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, 13 நாட்கள் நடைபெறும்.

மண்ணின் இறையழைத்தல்:

அருட்சகோதரி. லீமா ரோஸ், SAT

வழித்தடம்: திருநெல்வேலி -திசையன்விளை -மன்னார்புரம் -அழகப்பபுரம் (இட்டமொழி)

Location Map: https://maps.app.goo.gl/ryBkLV2fnPaz1kWQ9

வரலாறு:

பழைமையும், பாரம்பரியமும், பல புதுமைகளும் நிறைந்த அழகப்பபுரம் புனித அந்தோனியார் ஆலய வரலாற்றைக் காண்போமா...

அழகப்பபுரத்தில் 1806-ஆம் ஆண்டு புனித அந்தோனியார் குருசடி (சிற்றாலயம்) ஒன்று, கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் வாழும் இடத்தின் பிரதான சாலையின் கிழக்கு திசையில் நிறுவப்பட்டது.‌ 

தற்போது காணப்படும் ஆலயமானது 1856 ஆம் ஆண்டு, பிரதான சாலையின் மேற்கு திசையில் கட்டப்பட்டது. ஆகவே 1806 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சிற்றாலயானது, 1856 முதல் 1956 வரை  சிறு பாடசாலையாக (பள்ளிக்கூடம்) செயல்பட்டு வந்தது. தற்போது இந்த சிற்றாலயம் சிதிலமடைந்து, ஒரு விளக்கு மட்டுமே தினமும் இங்கு ஏற்றப்பட்டு வருகிறது. 

ஆலயமும், ஆலய மணியும் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பழைமை வாய்ந்தது ஆகும்.

1890 ஆம் ஆண்டில் சுரூபங்கள் ஆலயத்தில் நிறுவப்பட்டன. இந்த ஆலயமானது திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. 1923 ஆம் ஆண்டு தூத்துக்குடி மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது முதல் அதன்கீழ் செயல்பட்டு வருகிறது. நீண்ட காலமாக சாத்தான்குளம் பங்கின் கீழ் செயல்பட்டு வந்த அழகப்பபுரமானது, 1924 ஆம் ஆண்டு முதல் சோமநாதபேரி பங்கின் கீழ் செயல்படத் தொடங்கியது. 

அருட்பணி. ஆர்தர் ஜேம்ஸ் அவர்களின் பணிக்காலத்தில் 1972 ஆம் ஆண்டு பழைமையான ஆலயமானது புதுப்பிக்கப்பட்டு, இரண்டு மீன்கள் வளைந்து நற்கருணையைத் தாங்கும் வடிவமைப்பு கொண்ட அழகிய பீடமும் அமைக்கப்பட்டு, ஆலயத்தைச் சுற்றிலும் மதிற்சுவரும் கட்டப்பட்டது.

அருட்பணி.‌ சேசு வில்லியம் அவர்களின் உதவியுடன் ஆலயமுன் மண்டபம் கட்டப்பட்டதுடன், சிறிய அளவில் பங்குப் பணியாளர் இல்லம் ஒன்றும் கட்டப்பட்டது.

1982 ஆம் ஆண்டு மன்னார்புரம் தனிப்பங்கான போது, மன்னார்புரத்தின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

அருட்பணி.‌ ராஜா போஸ் பணிக்காலத்தில் 1984 ஆம் ஆண்டு ஆலய தரைக்கு கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு வெண்கலத்தாலான அழகிய கொடிமரம் நிறுவப்பட்டது.

திருவிழா:

1971 ஆம் ஆண்டு முதல் திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது.‌1972 ஆம் ஆண்டு முதல் திருவிழாவின் போது தேர்பவனியும் நடைபெறத் தொடங்கியது. ஆரம்பத்தில் 5 தேர்களுடன் வலம் வந்து,  தற்போது ஒரு தேர் மட்டுமே வலம் வருகிறது.

பழங்காலத்தில் இருந்த மக்கள் அனைவரும் தொழில் தேடி தத்தம் குடும்பங்களோடு வெவ்வேறு இடங்களில் குடியேறினார்கள். பொதுவாக கடற்கரை கிராமங்களான கூத்தெங்குழி, கூடுதாழை, உவரி, இடிந்தகரை போன்ற பல இடங்களில் மக்கள் குடிபெயர்ந்தனர். எனவே 60 குடும்பங்களும் பல இடங்களுக்கும் சிதறி சென்றதால் மக்கள்தொகை ஊரில் குறைவாக காணப்பட்டது. அழகப்பபுரம் கத்தோலிக்க மக்கள் பெரும்பாலானோர் இடம் பெயர்ந்ததால், வருடந்தோறும் கொண்டாடிக் கொண்டு வந்த திருவிழாவானது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. எப்பொழுதும் திருவிழாவானது புனித அந்தோனியாரின் நாளான ஜூன் 1 முதல் 13 வரை நடைபெற்றது.

ஆனால்  ஊரில் இருந்து மும்பை சென்று பணி செய்யக் கூடிய மக்களுக்கு, இந்த தேதிகள் சற்று இடையூறாக இருந்த காரணத்தினால், திருவிழாவானது மே மாத இறுதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி, ஜூன் மாதம் முதல் ஞாயிறு அன்று நிறைவு பெறுகின்றது. ஆலயத் திருவிழாவின் போது அனைவரும் பொதுவாக 6-ம் திருவிழாவின் போது தூய சவேரியார் அசனம் வைப்பது வழக்கம். அதேபோல எல்லா ஆண்டும் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அருகில் உள்ள தூய சவேரியார் பாதம்பட்ட ஊரான, சங்கனாங்குளம் தூய சவேரியார் ஆலயத்தில் வைத்து செபம் செய்த பின்னர், அழகப்பபுரம் ஊரின் ஆலய வீதியில் உள்ள 1806 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய சிற்றாலய அறையில் வைத்து அசனம் நடைபெறும். அழகப்பபுரம் மற்றும் அருகிலுள்ள அனைத்து ஊர்களிலும் இருந்து மக்கள் வந்து, அசனத்தில் பங்கு பெற்றுச் செல்வது மனதிற்கு மகிழ்ச்சி நிறை நிகழ்வாக காணப்படும்.

புதிய பள்ளிக்கூடம்:

1956 ஆம் ஆண்டு, தற்போது பள்ளிக்கூடம் இருக்கும் இடத்தில் ஆர்.சி நடுநிலைப் பள்ளி தொடங்கப்பட்டது.‌ மிகவும் பழுதடைந்து போன பள்ளிக்கூட கட்டிடத்தை மாற்றி விட்டு, அருட்பணி.‌ சகாயராஜ் வல்தாரிஸ் அவர்களின் பெருமுயற்சியால் 2021 ஆம் ஆண்டு புதிய பள்ளிக்கூட கட்டிடம் கட்டப்பட்டது.‌ 

மிகவும் பழைமையான இந்த ஆலயமானது 175 ஆண்டை நோக்கி பயணித்து வருகிற வேளையில், பழுதடைந்தும் காணப்படுகிறது. ஆகவே விரைவில் புதிய ஆலயம் கட்டப்படவும், அதற்கான நிதி ஆதாரங்கள் கிடைக்கப் பெறவும், புனித அந்தோனியார் வழியாக, இறைவனின் அருள் கரங்களை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர் அழகப்பபுரம் இறைசமூகத்தினர். இவர்களின் எண்ணம் ஈடேற நாமும் இணைந்து ஜெபிப்போம்...

வரலாறு: ஆலய 150-வது ஆண்டு விழா மலர்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர்கள் திரு. நிஷாந்த் மற்றும் ஜான்சி மிக்கேலம்மாள் ஆசிரியர் ஆகியோர்.