642 புனித யூதா ததேயு ஆலயம், மகாராஜாநகர்

    

புனித யூதா ததேயு ஆலயம் 

இடம் : 666 சிவந்திபட்டி சாலை, EB காலனி, மகாராஜாநகர், 627011

மாவட்டம் : திருநெல்வேலி 

மறைமாவட்டம் : பாளையங்கோட்டை

மறைவட்டம் : பாளையங்கோட்டை

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள் :

1. புனித தோமையார் ஆலயம், இராஜகோபாலபுரம்

2. தூய லூர்து அன்னை ஆலயம், சிவந்திபட்டி

3. புனித சூசையப்பர் ஆலயம், பற்பநாதபுரம் 

பங்குத்தந்தை : அருள்பணி. S. ஜோசப் ஜான்சன் 

உதவிப் பங்குத்தந்தை : அருள்பணி. J. அருள் மரியநாதன் 

குடும்பங்கள் : 350 (கிளைப்பங்குகள் சேர்த்து 500)

அன்பியங்கள் : 11 (கிளைப்பங்குகள் சேர்த்து 13)

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி காலை 06.45 மணி

வாரநாட்களில் திருப்பலி காலை 06.00 மணி

வியாழன் மாலை 06.30 மணி புனித யூதா ததேயு நவநாள், திருப்பலி

வெள்ளி திருப்பலி : மாலை 06.30 மணி 

மாதத்தின் முதல் வியாழன் மாலை 06.30 மணி குணமளிக்கும் வழிபாடு, நற்கருணை ஆசீர், நவநாள், திருப்பலி

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.30 மணி நற்கருணை ஆசீர், திருப்பலி. 

திருவிழா : அக்டோபர் 28 ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள். 

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருள்பணி. அமிர்தராஜ சுந்தர் 

2. அருள்பணி. ரெக்ஸ் 

3. அருள்பணி. அடைக்கலராசா, SDB

வழித்தடம் : பாளையங்கோட்டை - A R Line - தியாகராஜநகர் அரசு மருத்துவமனை அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 

Location map : https://g.co/kgs/7BCYpr

Church Email: maharajanagarparish2020@gmail.com

Church Website:

www.saintjudeschurch.com

Church Facebook page:

https://www.facebook.com/stjudeschurchmaharajanagarparish/

YouTube channel:

https://www.youtube.com/channel/UCY0yZIrV-988iTUz9CAEB6g

வரலாறு :

பாளையங்கோட்டை நகரில் மக்கள்தொகை அதிகரித்த நிலையில், அதனை அடுத்துள்ள பகுதிகளில் மக்கள் குடியேறத் துவங்கினார்கள். அதனால் மகாராசாநகர், மின்வாரியக் குடியிருப்பு, தியாகராஜநகர், ஐ. ஓ. பி காலனி, டி. வி. எஸ் நகர், அன்புநகர், பொன்விழா நகர் எனப்பல குடியிருப்புகள் உருவாகின. 

இந்த குடியிருப்பு பகுதியில் வாழ்ந்த கத்தோலிக்க இறைமக்களின் ஆன்மீகத் தேவையை பூர்த்தி செய்ய இப்பகுதியில் ஒரு ஆலயம் இல்லாத காரணத்தால், வழிபாடுகளுக்கு புனித சவேரியார் கதீட்ரல் பேராலயம் மற்றும் புனித சவேரியார் கலைமனைகளிலுள்ள (கல்லூரி வளாகம்) ஆலயத்திற்கு தான் செல்ல வேண்டியிருந்தது. ஆகவே இந்தப் பகுதி மக்கள் அனைவரும் புனித சவேரியார் கதீட்ரல் பேராலய பங்குத்தந்தையிடம், இந்தப் பகுதியில் தங்களுக்கு ஞாயிறு திருப்பலி நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

சிவந்திப்பட்டிக்கு செல்லும் பாதையில், தமிழ்நாடு மின்சாரவாரிய தலைமை அலுவலகத்திற்கு அருகில் பாளை பங்குத்தந்தையாக இருந்த அருள்பணி. துரைராஜ் அடிகளார் அவர்களால் வாங்கப்பட்ட 12 சென்ட் நிலத்தில், அப்போதைய 

புனித சவேரியார் பேராலய பங்குத்தந்தை அருள்பணி. மரிய மிக்கேல் அடிகளார் மக்களின் தேவையை உணர்ந்து, இந்த நிலத்தில் ஒரு குடிசை அமைத்து அதில் திருப்பலி நிறைவேற்ற ஆரம்பித்தார்.

இந்த குடிசை ஆலயத்தில் 25.12.1981 அன்று அதிகாலை இரண்டு மணிக்கு கிறிஸ்து பிறப்பு திருப்பலி முதல் திருப்பலியாக நிறைவேற்றப் பட்டது. இந்தப் பகுதி மக்கள் அனைவரும் திருத்தூதரான புனித யூதா ததேயுவிடம் மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருந்ததால், குடிசை ஆலயம் புனித யுதா ததேயு ஆலயமாக மாற்றப்பட்டு ஞாயிறு காலை 06.30 மணிக்கு திருப்பலியும், 1982 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வியாழக்கிழமை மாலை 06.30 மணிக்கு புனித யூதா ததேயு நவநாள் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டு வந்தது. 

ஆலயத்தில் நடந்த புதுமைகள் :

"நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர்". 

திருப்பாடல்கள் 32:7

அந்த நாட்களில் ஆலயம் வந்து நம்பிக்கையுடன் வேண்டிய மக்களுக்கு வேண்டுதல்கள் நிறைவேறின. புதுமைகளும் நடந்து வந்தன. 

மணப்பாட்டை சேர்ந்த திரு. ஞானதீபம் என்பவர் தலையில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, புனித யூதா ததேயுவிடம் வேண்டி முழுசுகம் பெற்றார். இதற்கு நன்றியாக புனிதரின் சுரூபம் ஒன்றை காணிக்கையாக கொடுத்தார். இந்த சுரூபம் தான் இப்போதும் ஆலயத்தில் உள்ளது. 

அரசு மருத்துவமனையில் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த சிறுவன் ஜேம்ஸ் -க்கு அவரது தந்தை புனித யூதா ததேயுவிடம் நம்பிக்கையுடன் வேண்டி, புனிதரின் பாதம் கழுவிய தண்ணீரை மகனுக்கு கொடுத்தார். மருத்துவர்களே வியக்கும் வண்ணம் சிறுவன் பூரண நலம் பெற்றார். 

தச்சு வேலை செய்யும் பிற சமயத்தை சேர்ந்த சகோதரர் ஒருவர் நடக்க முடியாத நிலையில், ஆலயம் வந்து நம்பிக்கையுடன் வேண்டிய போது நல்ல விதமாக நடக்க ஆரம்பித்தார். 

இவ்வாறு புனிதரின் வழியாக எண்ணற்ற புதுமைகள் நடந்து வந்தன. 

முதல் ஆலயம் :

பாளை பங்குத்தந்தை அருள்பணி. சலேத் அடிகளாரின் முயற்சியாலும், மறைமாவட்ட பொருளராக இருந்த அருள்பணி. ம. சூசைமரியான் அடிகளாரும் இணைந்து பாளை மறைமாவட்ட ஆயர் மேதகு இருதயராஜ் அவர்களின் ஆசியுடன் குடிசை ஆலயத்தை, கல்நார் அட்டை கூரை (ஆஸ்பெஸ்டாஸ்) கொண்ட சிறிய ஆலயமாக மாற்றினர். இறைமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் ஆலயத்தை பெரிதாக்கினர். இந்த ஆலயமானது மேதகு ஆயர் ஆ. இருதயராஜ் அவர்களால் 19.12.1993 அன்று அர்ச்சிக்கப் பட்டது. 

மக்களின் ஆன்மீக வளர்ச்சியையும், திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபாட்டையும் கண்ணுற்ற மேதகு ஆயர் அவர்கள், மகாராஜாநகரை 04.06.1998 அன்று தனிப்பங்காக உயர்த்தினார். அக்கால கட்டத்தில் இந்த ஆலயத்தின் பொறுப்பாளராக இருந்த அருள்பணி. ம. சூசை மரியான் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பணிப் பொறுப்பேற்றார். இவரது பணிக்காலத்தில் ஆலயமானது பல நிலைகளிலும் வளர்ச்சி பெற்று வந்தது. 

புனிதரின் புதுமைகள் தொடர்ந்திடவே திருப்பலியில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. எனவே ஆலயத்திற்கு அருகிலேயே ஆயரின் ஆசியுடன் 50 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, புதிய ஆலயத்திற்கு 18.02.2001 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 22.12.2002 அன்று மேதகு ஆயர் ஜூடு பால்ராஜ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டு, அனைத்து மக்களுக்கும் புனித யூதா ததேயுவின் வழியாக இறைவனின் அருளை பெற்றுத்தருகிற ஆலயமாகத் திகழ்கிறது. 

அருள்பணி. வி.கே.எஸ். அருள்ராஜ் (2003 -2007) அவர்கள் மக்களை அன்பியங்கள் வாயிலாக கட்டியெழுப்பி புனிதரின் புகழை எங்கும் விளங்கச் செய்தார். 2003 ம் ஆண்டு கொடிமரம், 2004 -ல் ஆலயமணி, 2005 ம் ஆண்டு உரோமை புனித பேதுரு பெருங்கோவிலில் உள்ள புனித யூதா ததேயுவின் எலும்பில் ஒரு சிறு பகுதி (அருளிக்கம்), மேதகு ஆயர் அவர்களால் கொண்டுவரப்பட்டு, நாடி வருவோருக்கு புதுமை விளங்கும் அடையாளமாக ஆலயத்தில் வைக்கப்பட்டது. 

பேரருள்பணி. அந்தோனிசாமி அவர்களின் பணிக்காலத்தில் புனிதரின் புதிய நவநாள் புத்தகம் வெளியிடப்பட்டது. 

அருள்பணி. செயபாலன் பணிக்காலத்தில் கிறிஸ்து பிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டதின் 30 ஆண்டு நினைவாக நுழைவாயில் ஒன்றை அமைத்தார். 

அருள்பணி. அ. த. பாக்கிய செல்வன் அடிகளார் பணிக்காலத்தில் ஆலய பீட முற்றமானது அழகுற புதுப்பிக்கப்பட்டு மேதகு ஆயர் ஜூடு பால்ராஜ் அவர்களால் 07.05.2017 அன்று அர்ச்சிக்கப் பட்டது. 

2018 ம் வருடம் ஆலய சுற்றுப் பகுதிகள் முழுவதிலும் கல்தளம் (பேவர் பிளாக்) அமைக்கப்பட்டது. 2019 ஆம் வருடம் ஆலயப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆலயத்தின் முன் பகுதியில் இரண்டு சென்ட் நிலம் வாங்கப்பட்டது.  இதன் மூலம் ஆலயத்தின் முன் பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டு பூந்தோட்டங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பங்கு மக்களின் தகவல்கள் கணிப்பொறியில் ஏற்றப் பட்டுள்ளது. வலை தளம், பேஸ் புக், யூ டுயுப், வாட்ஸ்சப் உருவாக்கப் பட்டுள்ளது. கணினி மூலம் விவிலிய வினா விடை போட்டி மற்றும் குழந்தைகளின் திறமைகளை வளர்க்கும் விதமாக பல்வேறு களங்கள் உருவாக்கப் பட்டுள்ளது.

1982 ஜனவரி 7ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட புனித யூதா ததேயுவின் நவநாள் திருப்பலியானது இன்றுவரை இரண்டாயிரம் நவநாட்களைக் கடந்து புனிதரின் புகழை எங்கும் பரப்பி வருகிறது. 

இன்றும் இவ்வாலயத்தை நாடி வருபவர்கள், குறிப்பாக புனித யூதா ததேயுவின் நவநாள் பக்தி முயற்சியின் வழியாக தங்கள் தேவைகளை பெற்று வருகின்றனர். நம்பி வருகிறவர்கள் நலம் பல பெற்றுச் செல்கின்றனர்.

பங்கில் 

மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கூடம், ஆனையார்குளம் 

St. Ann's மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி & முதியோர் இல்லம், St. Thomas road  

புனித அன்னாள் அருள்சகோதரிகள் இல்லம் ஆகியவை உள்ளன. 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

2. வெரோணிக்கா இளம் பெண்கள் இயக்கம் 

3. சாவியோ இளையோர் இயக்கம் 

4. புனித யூதா ததேயு நலவாழ்வு இயக்கம் 

5. அன்னைதெரசா பெண்கள் இயக்கம் 

6. மூத்தோர் இணையம் 

7. பீடப்பணியாளர் 

8. மறைக்கல்வி மன்றம் 

9. பாலர்சபை 

10. மரியாயின் சேனை பெண்கள் 

11. மரியாயின் சேனை ஆண்கள் 

12. தூய செசிலி பாடகற்குழு 

13. கத்தோலிக்க நற்செய்தி குழு 

14. பங்கு அருட்பணிப் பேரவை

15. பங்கு நிதிக்குழு.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. M. சூசைமரியான் (1998-2003)

2. அருள்பணி. V. K. S. அருள்ராஜ் (2003-2007)

3. அருள்பணி. S. அந்தோணிசாமி (2007-2009)

4. அருள்பணி. அ. செயபாலன் (2009-2012)

5. அருள்பணி. ச. பாக்கிய செல்வன் (2012-2017)

6. அருள்பணி. ச. ஜோசப் ஜான்சன் (2017 முதல் தற்போது வரை)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. S. ஜோசப் ஜான்சன்.