79 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வேப்புவிளை


புனித ஆரோக்கியநாதர் ஆலயம்

இடம் : வேப்புவிளை

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், வெள்ளையம்பலம்.

குடும்பங்கள் :140
அன்பியங்கள் : 4

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு.

பங்குத்தந்தை : அருட்பணி எட்வின் ராஜ்.

மண்ணின் மைந்தர்கள் :
1. Fr மரிய அற்புதம்
2. Fr கிறிஸ்து ராஜ்
3. Fr ஜான் பெனட்

1. Sis குளோரி
2. Sis ஏஞ்சல் மேரி

திருவிழா : டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் பத்து நாட்கள்.

வரலாறு :

நூற்றாண்டுகளுக்கு முன்னால் வேப்புவிளை புனித பூமியில் மக்கள் கொள்ளை நோயினால் அவதிப்பட்டு வந்தார்கள். வேப்புவிளையானது புதுக்கடை பரலோக அன்னை ஆலயத்தின் கீழ் செயல்பட்டு வந்த காலம் அது. கொள்ளை நோய் போன்ற கொடிய நோய்களிலிருந்து விடுபட புனித ஆரோக்கியநாதரே தேவை என்பதை உணர்ந்தவர்களாக அக்காலத்து முறைப்படி ஓட்டினால் ஆன புனித ஆரோக்கிய நாதர் திருவுருவச் சிலையை நிறுவி மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டதாகவும், அதனால் அக்காலத்து கொள்ளை நோய்கள் ஊரை விட்டு ஓடியதாகவும் முன்னோர்கள் கூறக்கேட்டுள்ளோம். மக்கள் நோயிலிருந்து விடுபட்டதால் வேப்புவிளையைச் சுற்றி இறை நம்பிக்கை மேலும் தளைக்கத் தொடங்கியது. வழிபாட்டிற்கு வசதியாக சில ஊர்ப்பெரியவர்காளால் குருசடிக்கென சிறு நிலப்பகுதி ஒதுக்கப்பட்டு சிறு குருசடியாக நிறுவப்பட்டது. காலப்போக்கில் இயற்கையின் சீற்றத்தால் இடிந்து விழுந்தது. புனிதரின் திரு உருவச்சிலையானது உடைந்து காணப்பட்டது. புனிதரின் திரு உருவச்சிலையின் தலைப்பகுதியை புதுக்கடை புனித பரலோக மாதா ஆலயத்தின் அன்றைய திருப்பணிக்குழு எடுத்துச் சென்று ஆலய பீடத்தின் அடியில் புதைத்து வைத்துள்ளதாகவும் முன்னோர்கள் கூறக்கேட்டுள்ளோம். புனிதரின் திருவுருவமானது தலையில்லாமல் காட்சியளித்தது. காலப்போக்கில் பராமரிப்பின்றி இருந்ததால் முட்காடு போன்று மாறத்தொடங்கியது. இருப்பினும் மக்கள் ஒளி ஏற்றி வழிபட்டு வந்தனர். காலங்கள் நகர நகர அந்த இடமானது 8 சென்ட் பூமியோடு வேங்கோடு புனித சவேரியார் ஆலயத்தின் பெயரில் எழுதப்பட்டது.

குருசடியின் மறு சீரமைப்பு:

காலங்கள் சில உருண்டோடின; பகுதியில் பனைத்தொழில் செய்யும் மக்கள் பலர் இருந்தனர். அவர்கள் தொழிலை முடித்து வர சுமார் இரவு 1 மணி வரை ஆகும். அப்போது இடிந்து விழுந்திருந்த குருசடியிலிருந்து மெழுகுவர்த்தி ஒளியானது இரவு நேரத்தில் வடக்கு நோக்கி செல்வதாகவும், அது மீண்டும் விடியற்காலை திரும்பவும் குருசடிக்கே வந்து சேர்வதாகவும் பனை மரத்திலிருந்து அம்மக்கள் அடிக்கடி கண்டதாக பரவலாக கூறி வந்தனர். இத்தகவல் அப்போது வேங்கோட்டில் பங்குத்தந்தையாக பணிபுரிந்த அருட்தந்தை ஹிலரி அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பல தடவைகள் இவர்களின் கூற்றைக் கேட்ட தந்தையவர்கள் அங்கே ஒரு குருசடி கட்டுவது என தீர்மானித்தார். குருசடி கட்டப்பட்டு 1997 – ம் வருடம் ஜனவரி மாதம் 2-ம் தேதி அர்ச்சிக்கப்பட்ட்து. தலையில்லாமல் இருந்த புனிதரின் திருவுருவச்சிலை குருசடி பீட்த்தின் அடியில் அடக்கம் செய்யப்பட்டது. தினமும் மாலை ஜெபமாலை மற்றும் புனிதரின் புகழ்மாலை என பல பக்தி முயற்சிகள் நடந்து வந்தன. காலப்போக்கில் புனிதரின் வல்லமையால் நோயாளிகள் நோய் நீங்கப்பெற்றனர். பேய் பிடித்தவர்கள் பேய் நீங்கப்பெற்று நலம் பெற்றனர். நோயுற்ற மக்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புனிதரைத் தேடி கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். கூட்டம் அதிகமானதால் வேப்புவிளை ஊர்மக்கள் ஒன்றிணைந்து நீளமாக ஓடு வேய்ந்த கூரை அமைத்தனர். அதன் பின் வேங்கோட்டில் பொறுப்பேற்ற அருட்பணி. அருள்சுவாமி, அருட்பணி. பெஞ்சமின்லடிஸ்லாஸ், அருட்பணி. சிறில் பெர்னாண்டோ ஆகிய அருட்தந்தையர்கள் வேப்புவிளையை நன்கு கவனித்து வந்தனர்.

முதல் திருப்பலி:

அருட்தந்தை ஞானப்பிறகாசம் அவர்கள் பொறுப்பேற்ற சிறிது காலத்தில் வேப்புவிளை ஆன்ம தாகத்தை தீர்க்கும் வகையில் சனிக்கிழமைகளில் மாலைத்திருப்பலி என்ற முறை கொண்டு வரப்பட்டது. மரணத்திருப்பலி மற்றும் திருமணத் திருப்பலிகளும் நிறைவேற்றப்பட்டன.

கிளைப் பங்காக உதயம்:

இவ்வாறு சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்த வேப்புவிளை இறை சமூக மக்கள் தங்களுக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டு அன்றைய கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு. ஆரோக்கிய சாமி ஆண்டகை அவர்களை வேப்புவிளைக்கு வரவழைத்து ஆலயம் கட்ட வேண்டி ஒரு மனுவும் கொடுத்தனர். அதன் பின் மக்களின் விடாமுயற்சியால் அருட்தந்தை அருள் அவர்களின் வழிகாட்டுதலில் 1995-ம் வருடம் ஆலயத்திற்கென்று பூமி வாங்கப்பட்ட்து

பின் அருட்பணி. அருள் தேவதாசன் பொறுப்பேற்றதும் 27-08-1995 அன்று மேதகு ஆயர். லியோண் தர்மராஜ் அவர்களால் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தந்தையவர்களின் விடாமுயற்சியாலும் ஊர்மக்களின் ஒத்துழைப்பாலும் ஆலயப்பணியானது இனிதாக தொடங்கியது.

அருட்பணி மரியதாசன் பொறுப்பேற்றதும் ஆலயத்தின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு அதன் முழுப்பணிகளும் நிறைவு பெற்றது. 02-01-1999 அன்று கோட்டார் மறை ஆயர் மேதகு லியோண் தர்மராஜ் அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டது.

ஆரம்பத்தில் வேங்கோடு புனித சவேரியார் ஆலயத்தின் கிளைப் பங்காக இருந்தது தற்போது வெள்ளையம்பலம் புனித அந்தோணியார் ஆலயம் தனிப்பங்காக உயர்ந்த நிலையில் அதன் கிளைப் பங்காக இருந்து வருகின்றது.