ஜார்க்கண்ட் ராஞ்சி உல்கத்து இறை அன்னை பேராலயம்

இறை அன்னை மரியா பேராலயம் (Basilica of the Divine Motherhood of Our Lady) என்பது இந்தியாவில் கத்தோலிக்க திருச்சபையின் ராஞ்சி உயர் மறைமாவட்டத்தில் ராஞ்சி நகருக்கு அருகே உல்கத்து (Ulhatu) பகுதியில் அமைந்துள்ள இணைப் பெருங்கோவில் (minor basilica) ஆகும்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோவில் 2004, நவம்பர் 30ஆம் நாள் "பெருங்கோவில்" நிலைக்கு உயர்த்தப்பட்டது.

வரலாற்றுக் குறிப்புகள்

இக்கோவிலின் வரலாறு 1903இல் கவாலி (Kawali) என்ற சிற்றூரிலிருந்து தொடங்குகிறது. அந்த ஊரில் ஒரு தொடக்கப் பள்ளிக்கூடம் 1903இல் தொடங்கப்பட்டு ஒரு வேதியரின் கண்காணிப்பில் விடப்பட்டது. 1907இல் அங்கு ஒரு சிறு கோவில் கட்டப்பட்டது. அக்கோவில் 1948இல் பூத்தாத்தாவுர் (Bhuthataur) என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. அங்கும் ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. அக்கோவிலில் ஒரு கத்தோலிக்க குரு திருப்பலி நிறைவேற்றுவது வழக்கம். அந்தக் காலக்கட்டத்தில் உல்கத்து பகுதி ராஞ்சி மறைமாவட்டக் கோவிலின் கீழ் இருந்தது.

உல்கத்து கோவில் கட்டப்படுதல்

உல்கத்து பகுதி மக்களின் ஆன்ம தேவைகளைக் கவனித்துக்கொண்டு ஒரு குடிசையில் வாழ்ந்துவந்த பெல்சிய நாட்டு மறைப்பணியாளர் அருள்திரு தேஃப்ரைன் (Rev. Defrijn) என்பவர் அங்கு ஒரு கோவிலுக்கும் பள்ளிக்கூடத்திற்கும் 1952இல் அடிக்கல் நாட்டினார். கோவில் 1953இல் வழிபாட்டுக்காகத் திறந்து விடப்பட்டது. விரைவிலேயே திருப்பயணிகள் அக்கோவிலுக்குச் சென்று வழிபடத் தொடங்கினர்.

பெல்சியத்தின் ஹால்லே (Halle) நகரிலிருந்து கொண்டுவரப்பட்ட அன்னை மரியா திருவுருவம் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது.

அதிசய மரியன்னை உருவம்

இக்கோவிலில் மரியன்னைக்கு வணக்கம் வளர்ந்தது பற்றி பல வரலாறுகள் உள்ளன. ஒரு வரலாற்றுப்படி, ஒரு முறை இக்கோவிலை எதிரிகள் தாக்க முற்பட்டனர். மக்கள் எதிரிகளின் கைகளிலிருந்து தம்மை விடுவிக்குமாறு அன்னை மரியாவை வேண்டினர். மக்களை நோக்கி எதிரிகள் சுட்ட குண்டுகள் அனைத்தையும் அன்னையின் திருவுருவம் தடுத்து, மக்கள் காப்பாற்றப்பட்டனர். குண்டுகள் துளைத்ததால் அன்னை மரியாவின் சிலை கருப்பு நிறம் அடைந்தது.

மற்றொரு வரலாறு, ராஞ்சி பகுதியில் மறைப்பணி ஆற்றி பல்லாயிரக்கணக்கான தொல்குடி மக்களைக் கிறித்தவத்திற்குக் கொணர்ந்த காண்ஸ்டன்ட் லீஃபென்சு (Constant Lievens) என்ற பெல்சிய இயேசு சபைத் துறவியின் வாழ்க்கையோடு இணைந்தது. லீஃபென்சு சிறுவயதினராய் இருந்தபோது தமது பெல்சிய நாட்டின் ஹால்லே என்ற இடத்தில் இருந்த புனித மரியா திருத்தலத்திற்குச் சென்று வேண்டிக்கொண்டாராம். கடவுள் தம்மைத் துறவற வாழ்வுக்கும் மறைபரப்புப் பணிக்கும் அழைக்கிறார் என்று உணர்ந்த லீஃபென்சு இந்தியாவின் ராஞ்சி பகுதிக்குச் செல்ல கடவுள் தம்மை அழைத்ததை உணர்ந்தார். அவர் ராஞ்சியின் அருகிலிருந்த 1889இல் கவாலி ஊருக்குச் சென்றார். அங்கு எதிரிகளின் கைகளிலிருந்து தொல்குடி மக்களின் உயிரைக் காத்தார். இதனால் பலர் கத்தோலிக்கராக மாறினர்.

கடுமையாக நோய்வாய்ப்பட்ட லீஃபென்சு பிறந்த நாடாகிய பெல்சியத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று, மீண்டும் இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லீஃபென்சு பெல்சியத்தின் லுவேன் நகரில் 1893இல் இறந்தார்.

லீஃபென்சு அடிகளார் உடல் பெல்சியத்தில் அடக்கப்பட்டது. பின்னர், 1993ஆம் ஆண்டில் அவருடைய உடலின் மீபொருள்கள் அவர் மறைப்பணி ஆற்றிய ராஞ்சிக்குக் கொண்டுவரப்பட்டு, மறைமாவட்டக் கோவிலில் அடக்கம் செய்யப்பட்டன.

உல்கத்து அன்னை மரியா கோவில் 1995இல் அர்ச்சிக்கப்பட்டது.

கோவிலும் நிறுவனங்களும்

உல்கத்து நகரில் அமைந்துள்ள இறை அன்னை மரியா பெருங்கோவிலின் கீழ் வேறு பல கோவில்களும் சிற்றாலயங்களும் உள்ளன. அங்கு பல கன்னியர் மடங்களும் செயல்படுகின்றன.