998 புனித பாத்திமா அன்னை ஆலயம், கூவைகிணறு

   

புனித பாத்திமா அன்னை ஆலயம்

இடம்: கூவைகிணறு, கலுங்குவிளை அஞ்சல், 628704

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: உலக மீட்பர் ஆலயம், நெடுங்குளம்

பங்குதந்தை அருட்பணி. அ. சேவியர் கிங்ஸ்டன்

குடும்பங்கள்: 37

ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி

திருவிழா: மே மாதம் 13-ம் தேதியை மையமாகக் கொண்டு பத்து நாட்கள்

வழித்தடம்:

சாத்தான்குளம் -கூவைகிணறு (நெடுங்குளம் வழி) 10கி.மீ

பேய்குளம் -கூவைகிணறு (கோமனேரி வழி) 6கி.மீ

நெடுங்குளத்திலிருந்து 3கி.மீ

Location map: Our Lady Of Fatima Church - Koovaikinaru

https://maps.app.goo.gl/EFg8LZYa9KmRfrbN7

வரலாறு:

கோமனேரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள பறசேரி பகுதியில் மக்கள் வசித்து வந்தனர். இருசமூக மக்களிடையே அவ்வப்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது. ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, ஒரு சமூக மக்கள் அங்கிருந்து, சுமார் 1கி.மீ தொலைவில் ஆலமரமும் அதன் அருகில் கிணறு, நீரோடை (வாய்க்கால்) ஓடிக்கொண்டிருந்த பகுதியில் புலம்பெயர்ந்தனர். இந்த ஆலமரத்தில் கூவை என்னும் பறவைகள் வந்து அடையும். இந்த மரத்தின் அருகிலேயே கிணறு ஒன்றும் இருந்தது. ஆகவே கூவை பறவைகள் அடையும் கிணற்றுக்கு அருகில் இவ்வூர் இருப்பதால் பேச்சு வழக்கில் கூவைகிணறு என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் அதுவே ஊரின் பெயராக நிலையானதாயிற்று. 

கூவைகிணறு வந்த மக்களுக்கு, சோமநாதபேரியில் பணியாற்றி வந்த கத்தோலிக்க கிறிஸ்தவ அருட்பணியாளர்களின் அரவணைப்பு கிடைத்து வந்தது. 

1950 ஆம் ஆண்டில் சோமநாதபேரியில் இருந்து பிரிந்து, 27 கிளைப் பங்குகளுடன் சிந்தாமணி தனிப் பங்காக ஆனது. முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி. ஞானப்பிரகாசம் அடிகளார் இந்தப் பகுதியை கடந்து செல்கையில், கூவைகிணறு மக்களோடு அறிமுகம் ஏற்பட்டது. அதன் விளைவாக இங்கு நிலவி வந்த பிரச்சினைகளை தெரிந்து கொண்டு,  இங்கு வசித்து வந்த மக்களுக்கு வழிகாட்டியாகவும், பாதுகாப்பு அரணாவும் விளங்கினார். ஆகவே இந்த மக்களில் ஒருசிலர் இறைவன் மீது கொண்ட விசுவாசம் மற்றும் பாதுகாப்பு ஆகியற்றைக் கருத்தில் கொண்டு, 1950-ம் ஆண்டு அருட்பணி. ஞானப்பிரகாசம் பணிக்காலத்தில் கிறிஸ்தவம் தழுவினர். இவர்களின் ஆன்மீகத் தேவைக்காக அருட்பணி. ஞானப்பிரகாசம் அவர்களால் ஓலைக் குடிசை ஆலயம் ஒன்று கட்டப்பட்டு இறைவனை வழிபட்டு வந்தனர்.

சிந்தாமணி பங்கின் இரண்டாவது பங்குதந்தையாக அருட்பணி. அந்தோனி S. பெர்னாண்டோ அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். கிறிஸ்தவம் தழுவிய இம்மக்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தமது சொந்த முயற்சியால், பொறுப்பேற்றுக் கொண்ட 1952-ம் ஆண்டிலேயே புனித பாத்திமா அன்னையின் இரண்டு சுரூபங்களை (ஒன்று 2அடி உயரம், மற்றொன்று 6அடி உயரம்) போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து வாங்கிக்  கொடுத்துள்ளார். இவற்றில் 2 அடி பாத்திமா மாதா சுரூபமானது,  திருவிழாவின் போது சப்பர பவனியாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டு சுரூபங்களும் ஓலைக் குடிசை ஆலயத்தினுள் வைக்கப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்று வந்தது. பாத்திமா மாதாவின் வருகைக்குப் பின்னர், கூவைகிணறு மிகவும் பிரபலம் அடைந்து வந்தது. ஆகவே இவ்வூர் பாத்திமா புரம் என்ற பெயரும் பெற்றது.

அருட்பணி. அந்தோனி S. பெர்னாண்டோ அவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த நன்கொடையாளரின் உதவியைப் பெற்று, மிக விரைவாக புனித பாத்திமா மாதா ஆலயத்தைக் கட்டி 17.02.1953 அன்று மேதகு ஆயர் தாமஸ் பெர்னாண்டோ அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது .

கூவைகிணறு மக்கள் கிறிஸ்தவம் தழுவிய பிறகு, குருக்களின் வழிகாட்டல் மற்றும் உதவியுடன் இந்த மக்கள் கல்வியறிவு பெற்றுக் கொண்டு 1970-80களிலேயே மருத்துவர், ஆசிரியர், பேராசிரியர் என பல்வேறு துறைகளிலும் கால்பதித்து, அன்றைய காலகட்டத்திலேயே தமிழகத்தின் சில பகுதிகளிலும், பிற மாநிலங்களிலும் பணிபுரிந்து வந்துள்ளனர்.

சிந்தாமணி பங்கின் கீழ் செயல்பட்டு வந்த கூவைகிணறு ஆலயமானது, சோமநாதபேரி பங்கின் அருகில் அமைந்திருந்ததால், ஒருசில ஆண்டுகளிலேயே சோமநாதபேரி பங்கின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

கூவைகிணறு ஆலயத்தில் பாத்திமா மாதாவின் இரண்டு சுரூபங்கள் வந்த பிறகு, சனிக்கிழமை நவநாள் சிறப்பிக்கப்பட்டு வந்தது.‌ அருகில் உள்ள ஊர்களில் இருந்து மக்கள் இங்கு வந்து தங்கி, ஜெபித்து நலமடைந்து சென்றனர். 1980 ஆம் ஆண்டு வரை நவநாள் நடைபெற்று வந்தது. அதன்பிறகு படிப்படியாக நவநாள் நின்று போனது.

1984 ஆம் ஆண்டு சோமநாதபேரியில் இருந்து பிரிந்து, நெடுங்குளம் தனிப்பங்கான போது, கூவைகிணறு புனித பாத்திமா அன்னை ஆலயமானது, நெடுங்குளத்தின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

ஆலய பொன்விழா நினைவாக, ஆலயமானது அருட்பணி. அமல்ராஜ் பணிக்காலத்தில் வெளிநாட்டு உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு, Msgr. ஜோசப் சேவியர், DCL அவர்கள் தலைமையில் 23.05.2003 அன்று பொன்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

09.01.2021 அன்று கூவைகிணறு ஆலயத்தில் வைத்து, 'தூத்துக்குடி மறைமாவட்ட தென்மண்டல சமத்துவ பொங்கல் விழா' மேதகு ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்குதந்தை அருட்பணி. சேவியர் கிங்ஸ்டன் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. இதில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமய மக்கள் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து சிறப்பு செய்தனர்.

ஆரம்ப காலத்தில் ஆவணி மாதத்தில் பாத்திமா மாதா திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் வெளியூர் மக்களின் வசதிக்காக மே மாதத்திற்கு திருவிழா மாற்றப் பட்டது. அதன்பிறகு மூன்றாவது முறையாக திருவிழா தேதி மாற்றப்பட்டு, மாதாவின் காட்சி நாளாகிய மே 13-ம் தேதியை மையமாகக் கொண்டு, 10 நாட்கள் திருவிழா இன்றுவரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. அ. சேவியர் கிங்ஸ்டன் அவர்கள்.