660 புனித கித்தேரியம்மாள் ஆலயம், கூத்தன்குழி

    

புனித கித்தேரியம்மாள் ஆலயம் 

இடம் : கூத்தன்குழி (கூத்தன்களி)

மாவட்டம் : திருநெல்வேலி 

மறைமாவட்டம் : தூத்துக்குடி 

மறைவட்டம் : மணப்பாடு 

நிலை : சிற்றாலயம் 

பங்கு : திருக்காட்சி ஆலயம், கூத்தன்குழி

பங்குத்தந்தை : அருள்திரு. ராஜன் 

உதவிப் பங்குத்தந்தையர்கள் : 

அருள்திரு. ஃபிளாவியன்

அருள்திரு. ராஜேஷ் 

வியாழன் மாலை 06.00 மணிக்கு திருப்பலி 

மாதத்தின் முதல் வியாழன் மாலை 05.00 மணிக்கு திருப்பயணிகள் திருப்பலி. 06.00 மணிக்கு சப்பரபவனி, தொடர்ந்து குணமளிக்கும் வழிபாடு, நற்கருணை ஆசீர், அன்பின் விருந்து 

திருவிழா : மே மாதம் 13 ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலான பத்து நாட்கள். 21ம் தேதி மாலை ஆராதனையைத் தொடர்ந்து இரவு 10.00 மணி முதல் 22ம் தேதி அதிகாலை 05.00 மணி வரை தேர்பவனி. 

வழித்தடம் : நாகர்கோவில் - தூத்துக்குடி விரைவுப் பேருந்துகள். இறங்குமிடம் கூத்தன்குழி

நாகர்கோவில் 561E, 570C

Location map : St.Quiteria Church/புனித கித்தேரியம்மாள் ஆலயம்

Kuthenkully, Tamil Nadu 627104

https://maps.app.goo.gl/4FTnWFdYNdy8VjqT7

வரலாறு :

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கூத்தன்குழியில் வாழ்ந்த தொம்மை பூபாலராயர் என்பவருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்தார். அவர் மணக்கரையில் உள்ள புனித கித்தேரியம்மாளின் புதுமைகளை கேள்விப்பட்டு அங்கு சென்று வேண்டுதல் செய்தபின், கூத்தன்குழியில் ஒரு சிறு குருசடியை கட்டி அதில் புனித கித்தேரியம்மாள் சுரூபத்தை வைத்து இறைவனை வழிபட்டு வந்தனர். 

வெகுவிரைவில் அவரது மன்றாட்டு கேட்கப்பட்டு புனிதையின் பரிந்துரையால் ஓர் குழந்தையை பெற்றனர். இந்த செய்தி ஊரெங்கும் பரவ அனைத்து மக்களும் தங்களது வேண்டுதல்களோடு புனிதையிடம் தஞ்சம் கொண்டனர். புனித கித்தேரி அன்னையின் பரிந்துரை செபத்தின் வல்லமையால் வேண்டுதல்கள் அனைத்தும் புதுமைகளாக மாறி, மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி என்னும் ஒளியை கொண்டு வந்தது. 

சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஊரில் கொள்ளை நோயால் மக்கள் பலர் இறக்க, புனிதையிடம் மன்றாட ஊர்மக்கள் அனைவரும் கொள்ளை நோயிலிருந்து காப்பாற்றப் பட்டனர். 

எனவே மக்கள் புனிதையின் சிற்றாலயத்தை 1914 ஆம் ஆண்டு பெரிய ஆலயமாக மாற்றினர்.

கிறிஸ்தவ நம்பிக்கைக்கு மறைசாட்சியாக இறந்த அவரது வாழ்வும், 

புனிதையின் பரிந்துரையால் நடந்த புதுமைகளும் கூத்தன்குழிவாழ் மக்களின் கிறிஸ்தவ நம்பிக்கையை மேலும் வளர்த்தெடுத்தது. 

2015 ஆம் ஆண்டில் புனித கித்தேரியம்மாள் ஆலய நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. 

2017 ஆம் ஆண்டு முதல் மாதத்தின் முதல் வியாழக்கிழமையும் புனித கித்தேரியம்மாள் நவநாள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவநாள் திருப்பலியிலும் ஜெபமாலையுடன் கூடிய சப்பரபவனியிலும், குணமளிக்கும் நற்கருணை ஆராதனையிலும் கலந்து கொள்ள உள்ளூர் மக்களுடன் வெளியூர் திருப்பயணிகளும் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர். 

புனித கித்தேரியம்மாள்  சாட்சிய வாழ்வை மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக அவரின் தலைவெட்டப்பட்ட காட்சி ஒரு ஆலயமாக கட்டப்பட்டு 03.12.2020 ல் திறந்து வைக்கப்பட்ட பின்னர் திருப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

புனிதையின் பரிந்துரை செபத்தாலும், அவருடைய உறுதியான கிறிஸ்தவ நம்பிக்கையாலும், அவரது சிறந்த எடுத்துக்காட்டான வாழ்வாலும் இன்னும் ஏராளமான மக்கள் இயேசு கிறிஸ்து கூறிய வழியில் நடந்து, அவரது போதனைகளை சாட்சிக்குரிய வாழ்வாக்க கூத்தன்குழி புனித கித்தேரியம்மாள் திருத்தலம் மாபெரும் சாட்சியாக விளங்குகிறது.

சிற்றாலய மண்டபமானது 24.09.1995 அன்று கட்டப்பட்டது. 

புதுமைகள் :

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கூத்தன்குழியில் வாழ்ந்த தொம்மை பூபாலராயர் என்பவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இன்றி வாழ்ந்து வந்தார். இவர் மணக்கரை ஊருக்கு சென்ற போது அங்கு புனித கித்தேரியம்மாள் செய்து வந்த புதுமைகளைக் கண்டு, கூத்தன்குழியிலும் புனிதையின் பெயரில் குருசடி கட்டி இறைவனை வழிபட குழந்தை வரத்தைப் பெற்றார். 

சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னர் கூத்தன்குழியில் கொள்ளை நோயால் ஆண்டுதோறும் பலர் மடிந்து வந்தனர். ஆகவே மிகுந்த புலமை வாய்ந்த கித்தேரியான் உபதேசியார் என்பவர் வீரமாமுனிவரின் கித்தேரியம்மாள் அம்மானையை ஆதாரமாகக் கொண்டு, புனித கித்தேரியம்மாள் வரலாற்றை கவிதை நாடக வடிவில் எழுதி அதனை பண்டிதர்கள் முன்னிலையில் பாமர மக்களைக் கொண்டு அரங்கேற்றினார். அந்த ஆண்டு முதல் கொள்ளை நோய் பரவல் நீங்கியது. 

புனிதையின் வழியாக எண்ணற்ற புதுமைகள் நடந்து வந்ததால் பலரும் தங்களது நன்றியறிதலை ஆலயத்தில் வெளிப்படுத்தி வந்தனர். அவ்வாறு தான் பெற்ற புதுமைக்கு நன்றியாக ஒருவர் தங்க கிரீடம் ஒன்றை புனிதைக்கு வழங்கினார். அப்போது பங்குத்தந்தையர்கள் இல்லாததால் சந்தகுரூஸ் மொடுதகம் வீட்டில் கிரீடம் பாதுகாக்கப்பட்டு வந்தது. பின்னர் கிரீடமானது பொதுவில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் மொடுதகம் அவர்கள் கிரீடத்தை கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்தார். 

அதனை பெற்றுக் கொண்ட பிரமுகர்கள் பக்தியுடன் ஆலயத்தை நோக்கி கொண்டு சென்ற வேளையில் கருடன் (கழுகு) வந்து தூக்கிச் செல்ல, அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். 

பகல் முழுவதும் தேடியும் கிரீடம் கிடைக்கவேயில்லை. அன்றிரவு சந்தகுரூஸ் மொடுதத்தின் கனவில் புனிதை தோன்றி "சந்தகுரூஸ் எழுந்து கொள். உடனே சென்று ஆலயத்திற்கு முன்பாக உள்ள பனைமரத்தில் எமது கிரீடம் உள்ளது. அதனை எடுத்துக் கொள்" எனக் கூறியதைக் கேட்டு, அங்கு சென்று பார்த்த போது பனைமரத்தின் கீழே பாதி கிரீடமும், பனைமரத்தில் மீதி கிரீடமும் இருந்ததைக் கண்டு அதிசயித்து, உடைந்த கிரீடத்தை இணைத்து புனிதைக்கு அணிவித்து சிறு சப்பரம் அமைத்து ஊர்சுற்றி மகிழ்ந்தனர். 

மேலும் ஏராளமான புதுமைகள் புனிதையின் பரிந்துரையால் நாள்தோறும் நடந்து வருகின்றன.

வாருங்கள்... புதுமைகள் பல புரியும் கூத்தன்குழி புனித கித்தேரியம்மாள் ஆலயத்திற்கு...

தகவல்கள் : மண்ணின் மைந்தர்கள் 

புகைப்படங்கள் : திரு. அருள் ரூடால்ஃப்

வரலாறு : ஆலய வரலாற்று புத்தகம்