509 புனித அந்தோணியார் ஆலயம், அச்சம்பாடு


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : அச்சம்பாடு

மாவட்டம் : திருநெல்வேலி
மறைமாவட்டம் : தூத்துக்குடி
மறைவட்டம் : வடக்கன்குளம்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அன்னம்மாள் ஆலயம், கிழவனேரி

பங்குத்தந்தை : அருட்பணி. பிராக்ரஸ்

குடும்பங்கள் : 50
அன்பியங்கள் : 3

ஞாயிறு காலை 07.00 மணிக்கு திருப்பலி.

செவ்வாய் மாலை 06.15 மணிக்கு திருப்பலி.

திருவிழா : ஜனவரி மாதத்தில் பத்து நாட்கள்.

மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. சேகரன்
2. அருட்சகோதரி. கலிஸ்டா மேரி

வழித்தடம் : வள்ளியூருக்கு அருகே அச்சம்பாடு அமைந்துள்ளது.

Location map : St.Antony's Church Achampadu, Tamil Nadu 627117 https://maps.app.goo.gl/z4rWXnsMW1zAhu9n6

வரலாறு :

நெல்லை மாவட்டம் இராதாபுரம் தாலுகாவில் வள்ளியூர் மற்றும் கள்ளிகுளம் அருகே அமைந்துள்ளது அச்சம்பாடு என்னும் வளமிக்க கிராமம்.

இங்கு அமைந்துள்ள கோடி அற்புதர் தூய அந்தோனியார் ஆலயமானது சுமார் இருநூறு ஆண்டுகள் பழைமையும் பெருமையும் வாய்ந்த ஆலயமாகும்.

இங்கு வாழ்ந்த மக்கள் பல ஆண்டுகளாக விவசாயத்தையும், பனை மரத்தையும் நம்பி வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். அந்த நேரத்திலும் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஓடு வேய்ந்த சிறு ஆலயத்தை, ஒற்றைக் கோபுரம் கொண்ட மாபெரும் ஆலயமாக உருவாக்கினார்கள் அச்சம்பாடு மக்கள்.

அதன்பிறகு விவசாய வருமானம் தங்களுக்கு போதுமான வசதியான வாழ்வைத் தராததால் ஊர் ஆண்கள், மலேசியா, சிங்கப்பூர், கொழும்பு என்று கடல் தாண்டி உழைக்கச் சென்றனர். கோடி அற்புதரின் கருணையால் செழிப்பான செல்வவளம் ஊருக்கு வந்தது. பின்னர் பழைய ஒற்றைக்கோபுர ஆலயத்தை மாற்றி புதிய ஆலயம் கட்ட ஊர் மக்கள் தீர்மானித்தனர்.

ஆலய கட்டுமானப் பணிகளுக்கு நன்கொடைகள் குவிந்தன. முதல் தலைமுறை போல அடுத்த தலைமுறையினர் மும்பை, அரபு நாடுகளுக்கு பயணம் செய்து வாழ்வை மேம்படுத்திக் கொண்டனர். இவர்களும் நன்கொடைகளை அள்ளி வழங்கினார்கள்.

வானளாவிய இரண்டு கூம்பு கோபுரங்களுடன் அழகிய ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.

தனிப்பங்கு கிடைக்காத காரணத்தால் அச்சம்பாடு தூய அந்தோணியார் ஆலயம், கிழவனேரி பங்கின் கிளைப் பங்காக இருந்து வருகின்றது.

ஆரம்ப காலத்தில் இருந்தே இறைமக்கள் தினமும் மாலை வேளையில் கூடி ஜெபமாலை செய்து வருகின்றனர்.

தொடக்க காலத்தில் மக்கள் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க கிழவனேரிக்கு சென்று வந்தனர். பின்னர் ஊர் மக்களின் அயராத முயற்சியினால், ஞாயிறு திருப்பலி அச்சம்பாடு ஆலயத்தில் நிறைவேற்றப் படுகின்றது.

அவ்வப்போது ஆலயத்தில் புனரமைப்புப் பணிகள் புனித அந்தோணியாரின் புதுமையால் நடத்தப்பட்டுள்ளது.

ஆலயத்தைச் சுற்றிலும் மதிற்சுவர் கட்டப்பட்டுள்ளது. பழைய தேர் அகற்றப்பட்டு புதிய தேர் வடிவமைக்கப்பட்டது.

ஆலய மதிற்சுவரில் அழகிய கெபி கட்டப்பட்டுள்ளது.

ஊர் எல்லையில் புனித மிக்கேல் அதிதூதர் கெபி நிறுவப்பட்டது. இவைகள் யாவும் கடந்த 50 ஆண்டுகளில் கோடி அற்புதர் புனித அந்தோணியாரின் புதுமையால் நடந்த அதிசயங்கள் ஆகும்.

ஆலயத் திருவிழா :

அச்சம்பாடு புனித அந்தோணியார் ஆலய ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவையாகும்.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் 10 நாட்கள் வெகு சிறப்பாக திருவிழா நடத்தப் படுகிறது. இதில் ஏராளமான இறைமக்கள் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் கலந்து கொள்கின்றனர். பத்து நாட்களும் அலங்கார மின்விளக்குகளால் ஆலயமும், ஊரும் ஜொலிஜொலிக்கும் அழகைக் காண கோடி கண்கள் வேண்டும்.

பத்து நாட்களும் காலையில் திருப்பலியும் மாலையில் திவ்ய நற்கருணை ஆராதனையும் நடைபெறும்.

திருவிழா சிறப்பு அம்சமே அன்னதானம், அசனத்திருவிழா என்று இந்த வட்டாரமே பெருமையாக சொல்லிக் கொள்வது உண்டு. காலையிலும் மாலையிலும் திருவிழாவிற்கு வரும் இறைமக்கள் வெறும் வயிற்றுடன் செல்லக் கூடாது என்பதற்காக ஆலய நிர்வாக உறுப்பினர்கள், பொது மக்களும் கடும் முயற்சி செய்து பத்து நாட்களும் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் புண்ணிய சோறு என்ற அன்னதானம் வழங்கப்படுகிறது.

திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றப்படும். தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் நடைபெறும். திருவிழாவின் மணிமகுடமாக ஒன்பதாம் திருவிழாவின் போது மாலையில் ஏராளமான தூத்துக்குடி மறைமாவட்ட குருக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும் கூட்டு திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெறும். மக்கள் புத்தாடை அணிந்து புதுப் பொலிவுடன் கலந்து கொண்டு மகிமைப் படுத்துவார்கள்.

ஏராளமான இறைமக்கள் கலந்து கொள்ள நள்ளிரவு தேர்பவனி மிகச் சிறப்பாக நடைபெறும்.

பத்தாம் திருவிழா காலையில் கூட்டுத் திருப்பலியும், நண்பகல் சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் இனிதே நடத்தப்படும். மாலையில் நற்கருணை ஆசீர்வாதம் முடிந்தவுடன், முதல் திருவிழாவன்று ஏற்றப்பட்ட கொடி சகல வழிபாடுகளுடன் சிறப்பிக்கப்படும்.

அச்சம்பாடு புனித அந்தோணியார் ஆலயம் வந்து வேண்டும் வரங்களை எண்ணற்ற மக்கள் பெற்றுச் செல்கின்றனர். நீங்களும் கோடி அற்புதரின் புதுமைகள் நிறைந்த அச்சம்பாடு ஆலயம் வாருங்கள்..! ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்லுங்கள்...

தகவல்கள் : ஆலய பொறுப்பாளர்கள்.
புகைப்படங்கள் : ஆலய இளையோர்.