77 இயேசுவின் திரு இருதய ஆலயம், விரிகோடு


இயேசுவின் திரு இருதய ஆலயம்

இடம் : இதயபுரம், விரிகோடு.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : பங்கு தளம்
கிளைகள் : இல்லை.

குடும்பங்கள் : 182
அன்பியங்கள் : 12

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு.

பங்குத்தந்தை : அருட்பணி கிறிஸ்டோபர்.

திருவிழா : ஜூன் மாதத்தில் இயேசுவின் திரு இருதய திருநாளை உள்ளடக்கிய ஐந்து நாட்கள்.

வரலாறு :

1930 களில் மறை பரப்பு பணியாளர்களும் ICM அருட்சகோதரிகளும் இப் பகுதிக்கு வந்து மக்களை சந்தித்து அவர்களின் இதயங்களில் இயேசுவின் நற்செய்தி ஒளியை ஏற்றி வைத்தனர். அவர்களின் இடைவிடா இறையாட்சிப் பணிகளின் பயனாக கத்தோலிக்கத் திருச்சபை இம் மண்ணில் காலூன்றத் துவங்கியது. அவ்வேளையில் முள்ளங்கனாவிளை பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி உபால்டு ராஜ் அவர்கள் இதயபுரத்தை முள்ளங்கினாவிளையின் கிளைப்பங்காக தொடங்கி இறைசமூக வளர்ச்சிக்கு வலுவூட்டினார்.

அவ்வேளையில் மக்கள் திருவழிபாடு நடத்திட காட்டாவிளை பகுதியில் தென்னை ஓலை வேயப்பட்ட ஒரு சிறு குடிசைக் கோயிலை உருவாக்கி அதனை இயேசுவின் திரு இருதயத்திற்கு அர்ப்பணித்தனர். ஆனால் சில காரணங்களால் இந்த ஆலயத்தை அப்பகுதியில் தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. அதன்பிறகு விரிகோடு பகுதியில் உள்ள செந்தரைவிளையில் அதாவது தற்போதைய ஆலயம் இருக்கின்ற பகுதியில் அருட்பணி சூசை மிக்கேல் அவர்களின் முயற்சியாலும் , இறை மக்களின் தியாகத்தாலும் ஆலயம் அமைக்கப்பட்டு 16-11-1938 அன்று அப்போதைய மறை வட்ட முதன்மைப் பணியாளர் பேரருட்தந்தை வின்சென்ட் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

தொடக்கத்தில் முள்ளங்கினாவிளையின் கிளைப்பங்காகவும், அதன்பின் காப்புக்காடு பங்கின் கிளையாகவும் இருந்து, பின்னர் 1972 ல் காப்புக்காடு பங்கிலிருந்து இலவுவிளை தனிப்பங்காக உருவாக்கப்பட்ட போது, இலவுவிளையின் கிளைப்பங்காகவும் இருந்து இறையாட்சிப் பயணம் மேற்கொண்டு வந்த இவ் இறைசமூகம் 1980 களில் இதயபுரம் என்னும் பெயரில் அழைக்கப்பட்டு இயேசுவின் திரு இருதயத்திற்கு மகிமை சேர்த்தது.

இயேசுவின் திரு இருதயத்தைப் பாதுகாவலாக கொண்டு 1930 களில் உருவாக்கப்பட்ட இவ்இறைசமூகம் பல்வேறு வளர்சிகளையும் மாற்றங்களையும் கண்டு 2005 ம் ஆண்டு ஜூன் 24 ம் நாளில் அன்றைய கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லியோன் தர்மராஜ் அவர்களால் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு சிறப்புற்றது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி N. மார்ட்டின் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். பல்வேறு அமைப்புகளும் திருத்தூதுக்களகங்களும் ஏற்படுத்தப் பட்டன. பங்குத்தந்தை மார்ட்டின் மற்றும் பங்கு மக்களின் முயற்சியாலும் பங்குத்தந்தை இல்லம் 2006 ம் ஆண்டு வாங்கப் பட்டது. வளர்ச்சியின் இன்னொரு அத்தியாயமாக 02- 07- 2007 ம் ஆண்டு திரு இருதய ஆங்கிலப் பள்ளி துவங்கப் பட்டது.

தொடர்ந்து 2008 ம் ஆண்டு அருட்பணி S. மரிய மார்ட்டின் அவர்களும், 2009 ல் S. அருட்பணி லாரன்ஸ் அவர்களும் பொறுப்பேற்று சிறப்பாக மக்களை வழி நடத்தி இறை பணி செய்தனர். 2010 ம் ஆண்டு அருட்பணி ஜெகன் போஸ் அவர்கள் பங்குப் பணியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது பணிக்காலத்தில் இதயபுரம் பங்கு புதுப்பொலிவு பெற்றதுடன் பல்வேறு வளர்சியையும் கண்டது. 10-12-2011 அன்று புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பங்கு மக்களின் அயராத உழைப்பு நன்கொடைகள் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி Jegan Bose அவர்களின் அயராத முயற்சிகளாலும் 28-05-2014 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 2015 ம் ஆண்டில் அருட்பணி டேவிட் மைக்கிள் அவர்களும், இடையில் சில மாதங்கள் அருட்பணி புஷ்பராஜ் அவர்களும்,தொடர்ந்து 2017முதல் அருட்பணி கிறிஸ்டோபர் அவர்களும் பங்குத்தந்தையாக இருந்து இதயபுரத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்கின்றார் .

மார்த்தாண்டம் -கருங்கல் வழித்தட சாலையில் ரெயில்வே கேட் பகுதியைத் தாண்டி வலப்புற சாலையில் சற்றே தூரம் வந்தால் இந்த ஆலயத்தை அடையலாம்.