700 புனித காணிக்கை மாதா ஆலயம், மாதாபுரம்

            

புனித காணிக்கை மாதா ஆலயம், மாதாபுரம்

இடம்: மாதாபுரம், தொலையாவட்டம் அஞ்சல், 629157

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: குழித்துறை

மறைவட்டம்: வேங்கோடு

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித அந்தோனியார் ஆலயம், விழுந்தயம்பலம்

பங்குத்தந்தை: அருட்பணி. பிரைட் சிம்சராஜ்

தொடர்புக்கு: 9487015472

குடும்பங்கள் : 235

அன்பியங்கள் : 8

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணிக்கு

வெள்ளி மாலை 05:30 மணி செபமாலை, 06:00 மணி புனித காணிக்கை மாதா நவநாள் திருப்பலி

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 05:30 மணிக்கு செபமாலை, நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர்

திருவிழா: ஆகஸ்ட் 15-ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்சகோதரி. பெர்னாடின், SAT

2. அருட்சகோதரி. எராஸ்மஸ் மேரி, SAT

3. அருட்சகோதரி. மார்கிரட் மேரி, SAT

4. அருட்சகோதரி. காசியா மேரி, SAT

5. அருட்சகோதரி. சுதா, கார்மெல் சபை

6. அருட்சகோதரி. ஜெயா புஷ்பம், காணிக்கை மாதா சபை

7. அருட்சகோதரர். ஆட்லின் ஜோ, OCD

வழித்தடம்: நாகர்கோவில் -கருங்கல் -மாதாபுரம்

மார்த்தாண்டம் -தொலையாவட்டம் -மாதாபுரம்

பேருந்துகள் :

நாகர்கோவில் > 9L, 307C

மார்த்தாண்டம் > 87C, 87E, 87F, 88E

கருங்கல் > 87C, 9L, 307C பாலக்காவிளை மினிபஸ்

இறங்குமிடம்: மாதாபுரம்

அருகில் உள்ள இரயில் நிலையம் : குழித்துறை >8கி.மீ

அருகில் உள்ள விமான நிலையம்: திருவனந்தபுரம் >51கி.மீ

Location map: https://g.co/kgs/GxGaqd

வரலாறு:

முக்கடலும் முத்தமிடும் கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழகத்தின் கடைசி சட்டமன்றத் தொகுதியான கிள்ளியூர் பகுதிக்குட்பட்ட, செந்நிற மண் வளத்தைக் கொண்டு, காய்கனிகளும், பலவித மரங்களும் நிறைந்த அழகிய மாதாபுரம் ஊரில் அமைந்துள்ள துயரெல்லாம் துடைக்கும் தூய காணிக்கை மாதா ஆலய வரலாற்றைக் காண்போம்.....

மன்னர் ஆட்சி காலத்தில் மக்கள் நடைப்பயணமாக வணிகம் செய்து வந்த வழிப்பாதை ஒன்று மாதாபுரம் (பழைய பெயர் விளாப்பட்டி) வழியாக கிழக்கு -மேற்காக சென்றது. இந்தப் பாதையானது கோட்டார், ஆளூர், கண்டன்விளை, தலக்குளம், திக்கணங்கோடு, பூட்டேற்றி, மாதாபுரம், வேங்கோடு, புதுக்கடை, அதங்கோடு, களியக்காவிளை வழியாக மக்கள் கேரளாவுக்கு சென்று வர பயன்பட்டு வந்தது. அக்காலத்தில் மக்கள் சிறுகூட்டமாக பனை ஓலைக் குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு ஊர்களிலும் ஒரு பிரமாணி (ஊர்த்தலைவர்) மக்களை வழிநடத்தி வந்துள்ளார். நல்மனம் உள்ள பிரமாணிகள் வேதபோதகர்களுக்கு, தமது ஊரில் நற்செய்தி பணியாற்ற உதவி செய்தனர். ஆகவே இறையடியார்கள் இத்தகைய ஊர்களுக்கு வந்து சென்று கொண்டிருந்தனர்.

மாதாபுரம் ஊரில் வாழ்ந்த மக்கள், தற்போது புனித காணிக்கை மாதா ஆலயம் அமைந்திருக்கும் இடத்தைச் சுற்றித்தான் வாழ்ந்தனர். அந்த காலகட்டத்தில் பனைமரம் ஏறுவதும் மற்றும் விவசாயிகளாகவும் மாதாபுரம் மக்கள் இருந்தனர். 

தற்போதைய ஆலயத்தின் இடப்புறமாக பாதையோரத்தில் சுமைதாங்கி ஒன்று இருந்தது. ஆகவே இவ்வழியாக தலையில் சுமைகளை சுமந்து செல்லும் மக்கள், இந்த சுமைதாங்கியில் தங்களது சுமைகளை இறக்கி வைத்து சற்று இளைப்பாறிச் செல்வார்கள். இவர்களுக்கு மாதாபுரம் ஊரில் உள்ள பனையேறும் மக்கள் பதனீர் (அக்கானி) கொடுத்து உபசரிப்பார்கள். இது வழக்கமாக நடக்கும் நிகழ்வாகும்.

இவ்வாறிருக்க... இந்த வழியாக சென்ற இறையடியார் ஒருவர், திருத்தூதர் புனித தோமையார் காலத்து மரச்சிலுவையை, சுமைதாங்கியிலிருந்து சுமார் 50 அடி தெற்கு நீக்கி நாட்டிச் சென்றார். 

இங்கு வாழ்ந்த மக்கள் நோய் வந்தால் இந்த சிலுவையை தொட்டு வேண்டுவதும், தேங்காய் எண்ணெய், தேங்காய்ப்பால், பசும்பால் கொண்டு சிலுவையை மெழுகி தங்களது உடம்பில் பூசி விசுவாசத்தை வளர்த்து... பிணிகள் நீங்கி வாழ்ந்து வந்தனர்...

16-ம் நூற்றாண்டில் புனித பிரான்சிஸ் சவேரியார் வேங்கோடு பகுதி வழியாக மறைப்பணியாற்றி சென்றதன் விளைவாக, மாதாபுரம் பகுதியிலும் ஒருசில தலைமுறைகளுக்கு முன்பாக மக்கள் கிறிஸ்தவம் தழுவியுள்ளனர்.

புனித சவேரியார் வழியாக மெய்யறிவை பெற்றுக் கொண்டு, வேதபோதகர்கள் வழியாக கிறிஸ்தவம் தழுவிய மாதாபுரம், விழுந்தயம்பலம் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் வேங்கோடு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் சென்று தங்களது ஞான காரியங்களை மேற்கோண்டனர். பிரான்சிஸ், சேவியர், சவேரியார் போன்ற பெயர்களை தங்களது வாரிசுகளுக்கு சூட்டி புனிதரின் மீதான தங்களது விசுவாசத்தை வளர்த்துக் கொண்டனர். இன்றளவும் இது தொடர்ந்து வருகிறது...

1946 ஆம் ஆண்டில் கம்பிளார் மற்றும் மாதாபுரம் ஊரில் வசித்து வந்த பெரியோர்கள், வேங்கோட்டில் புதிய ஆலயம் கட்டுவதற்கு வரி கேட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதற்கான வரி செலுத்த மறுத்தனர். மேலும் கம்பிளார் மக்கள் கம்பிளாரில் உள்ள ஆலயத்திலும், மாதாபுரம் மக்கள் விழுந்தயம்பலம் ஊரில் உள்ள ஆலயத்திலும் வழிபட வழிவகை செய்ய வேண்டும் என, புதுக்கடை பங்கில் இருந்த பங்குத்தந்தை அருட்பணி. மத்தியாஸ் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆகவே அருட்பணி. மத்தியாஸ் அவர்கள், கோட்டார் மறைமாவட்ட ஆயருக்கு இதனைக் குறித்து 03.05.1946 அன்று கடிதம் எழுதினார். ஆயரும் 1946 ஜூன் மாதத்தில் இதற்கு அனுமதியளித்தார்.

1950 ஆம் ஆண்டு வேங்கோடு தனிப்பங்காக உயர்த்தப்பட்ட போது விழுந்தயம்பலம் அதன் கிளைப்பங்காக ஆனது. கம்பிளார், மாதாபுரம் ஆகிய இரு ஊர்களும் விழுந்தயம்பலம் கிளைப்பங்கில் இணைந்தன.

வேங்கோடு பங்குத்தந்தையர் அருட்பணி. பீட்டர் லாசர் கிறிஸ்டியன், அருட்பணி. லாரன்ஸ், அருட்பணி. ஹிலாரி, அருட்பணி. M. அருள் சுவாமி ஆகியோர் இப்பகுதி மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றனர்.

13.11.1984 அன்று விழுந்தயம்பலம் புனித அந்தோணியார் ஆலயம் தனிப்பங்காக உயர்த்தப்படவே, மாதாபுரம் மற்றும் கம்பிளார் ஊர்கள் விழுந்தயம்பலத்தின் கிளைப் பங்குகளாயின.

சிற்றாலயம் (குருசடி):

மாதாபுரம் ஊரில் சுமைதாங்கிக்கு அருகே நாட்டப்பட்ட மரச்சிலுவை வெட்டவெளியில் இருந்ததால், மழையில் நனையாமல் இருக்க, ஊர்மக்கள் பாதையோரத்தில் இருந்த சிலுவையை 20 அடி தூரம் மேற்கே எடுத்து வந்து நட்டு வைத்து, சிறு ஆலயம் அமைத்து (குருசடி) இறைவனை வழிபட்டு வந்தனர். இது நூறாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு இருக்கலாம் என முன்னோரின் வாய்மொழிச் செய்தி. பின்னர் சிலுவையின் இடது பக்கம் பலிபீடம் அமைத்தனர். மரத்தினால் மெழுகுகால் (Candle stand) செய்து அதில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ஜெபம் செய்யத் தொடங்கினர். குருசடி மிகவும் சிறியதாக இருந்ததால் அதனுடன் இணைந்து சுமார் 15 அடி நீளத்தில் ஒரு சத்திரம் கட்டினர். அன்றைய காலகட்டத்தில் இரவு நேரத்தில் பயணம் செய்யும் மக்கள் ஓய்வெடுக்கவும், நோயாளிகள் வந்து தங்கும் இடமாகவும், இரவில் பஜனை பாடிவிட்டு வருபவர்கள் தங்குமிடமாகவும் இச்சத்திரம் பயன்பட்டது.

இதனைத் தொடர்ந்து சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிலுவையையும், பீடத்தையும் அப்படியே வைத்து விட்டு ஆலயத்தின் அகலத்தையும், நீளத்தையும் சற்றே அதிகரித்து ஓடுவேய்ந்து மெருகூட்டினர். 

1949 ஆம் ஆண்டு ஒரு இறைவிசுவாசி ஜெர்மனி நாட்டிலிருந்து கொண்டு வந்த மரத்தால் கடைந்த புனித காணிக்கை மாதா சுரூபத்தை இவ்வாலயத்தில் நிறுவினார். இடது கரத்தில் குழந்தை இயேசுவையும், வலது கரத்தில் செங்கோலையும் தாங்கி புன்னகை பூத்த புதுநிலவாக மாதா காட்சி நல்க....! மக்கள் உள்ளம் மகிழ்ந்தனர். ஆகவே விளாப்பட்டி ஊர் பெயர் 'மாதாபுரம்' என மாற்றம் பெற்றது.

அக்காலத்தில் காசநோயினால் மக்கள் பெரிதும் துன்புற்றனர். ஆகவே புனித காணிக்கை மாதாவிடம் வந்து நம்பிக்கையுடன் வேண்டி, நலம் பெற்றதன் நன்றியாக தோண்டி (பனையோலையால் செய்யப்பட்ட நீர் இறைக்க பயன்படுத்தும் குடுவை), கயிறு நேர்ச்சையாக செலுத்தினர். மேலும் குழந்தைச் செல்வம் இல்லாத தம்பதிகள், மாதாவிடம் வேண்டி குழந்தை பெற்றுக் கொள்ளவே தென்னங்கன்று காணிக்கை செலுத்தி வந்தனர்.

இவ்வாறிருக்க ஆலயத்தை சுற்றி வாழ்ந்த மக்கள் (8 குடும்பத்தினர்), ஆலயத்தின் வடக்கு பக்கமாக தங்கள் குடியிருப்புகளை மாற்றிக் கொண்டனர். ஆகவே இறந்தோரை அடக்கம் செய்வதற்காக ஆலயத்தின் அருகில் கல்லறைத் தோட்டம் அமைத்தனர். இவ்வேளையில், எங்கிருந்தோ வந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், மாதாவின் பாதமே புகலிடம் என ஆலயத்திலேயே கிடந்தார். மாதாபுரம் மக்கள் அவரை பரிவோடும், பாசத்தோடும் பராமரித்து வந்தனர். அவர் மாதாவின் சன்னிதியில் இறுதி மூச்சை விடவே, மக்கள் அனைவரும் இணைந்து அவரது இறுதிச் சடங்குகளை நிறைவேற்றி ஊர் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

சில காலங்களுக்குப் பிறகு ஆலயமணி ஒன்று வாங்கப்பட்டு, மாலைவேளைகளில் ஒலிக்கப்பட்டது. ஆலயத்தில் பாடப்பட்ட பஜனை, ஊர் பஜனையாக மாறியது. 

அருட்பணி. பீட்டர் லாசர் கிறிஸ்டியன் அவர்கள் குருத்தோலை ஞாயிறு திருவிழாவை மாதாபுரத்திலிருந்து பவனியாக தொடங்கி, விழுந்தயம்பலம் சென்று திருப்பலி நிறைவேற்றி, இறைமக்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்தார். மேலும் மாத்திரவிளை பங்கைச் சேர்ந்த படுவூர் என்ற ஊரிலிருந்து அன்னம்மாள், வியாகுலமேரி ஆகிய இரு சகோதரிகள் மாதாபுரம், கம்பிளார், விழுந்தயம்பலம் ஊர் மக்களுக்கு மறைக்கல்வி கற்பித்து வந்தனர். அருட்பணி. கிறிஸ்டியன் அவர்கள் இச்சகோதரிகளுக்கு ரூ. 30 மாத ஊதியமாக வழங்கி வந்தார்.

இரண்டாவது ஆலயம்:

விழுந்தயம்பலம் 1984 ஆம் ஆண்டு தனிப்பங்காக ஆனது முதல் அதனோடு இணைந்து செயல்பட்ட மாதாபுரம் ஊர் மக்களின் ஆலய ஈடுபாடுகளை கண்டுணர்ந்த அருட்பணி. மரிய ஆரோக்கியம் அவர்கள், மாதாபுரத்தில் ஆலயம் அமைக்க வழிகாட்டினார். ஆகவே ஆலயம் அமைக்க சிற்றாலயம் இருந்த நிலத்தின் உரிமையாளர்கள் 12 பேரும் அந்த நிலத்தை மறைமாவட்டத்திற்கு எழுதிக் கொடுத்தனர். 

1989 ஆம் ஆண்டு ஆலயம் கட்டும் பணி துவங்கியது. மாதாபுரம் இறைமக்களின் உழைப்பு, நிதியுதவி மற்றும் அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. J. லூக்காஸ் அவர்களின் நன்கொடையினாலும் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 23.12.1994 அன்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை திருப்பலி, புதன்கிழமை நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. திருமணம், இறப்பு திருப்பலிகளும் நிறைவேற்றப்பட்டு வந்தது.

புதிய ஆலயம்:

புனித காணிக்கை மாதாவின் வழியாக இறையாசீர் நிரம்ப பெற்றுக் கொண்ட மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, ஆலயத்தில் இடநெருக்கடி மற்றும் பழைமை காரணமாக விரிசல்கள் இருந்ததால், அருட்பணி. S. ஜெயப்பிரகாஷ் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த வேளையில், அவர் மாற்றம் பெற்றுச் செல்ல, தொடர்ந்து பொறுப்பேற்ற அருட்பணி. சேகர் மைக்கேல் அவர்களின் பணிக்காலத்தில் 21.09.2014 அன்று நடைபெற்ற பங்கு பொதுக்குழு கூட்டத்தில் புதிய ஆலயம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழைய ஆலயம் அமைந்த பகுதியை சுற்றிலும் தங்களது உறவுகளின் கல்லறைகள் காணப்பட்டதால், ஆலயத்தை பெரியதாக கட்ட வேண்டுமெனில் கல்லறைத்தோட்ட இடமும் தேவைப்படவே...! உரிமையாளர்கள், கல்லறைத்தோட்டத்தை மாதாவின் ஆலயம் கட்ட கொடுத்தனர். கல்லறைத் தோட்டத்திற்கு மாற்றிடம் வாங்கி கொடுக்கப் பட்டது. 

பழைய ஆலயம் இடிக்கப் படாமலேயே புதிய ஆலயத்திற்கு 19.07.2015 அன்று குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜெறோம்தாஸ் ச.ச அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆலய கட்டுமானப் பணிகள் 09.09.2015 அன்று துவக்கப்பட்டு, மாதாபுரம் இறைமக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு, நிதியுதவி, ஊர்மக்களின் நிதியுதவி, உள்ளூர், வெளியூர், வெளிநாட்டுவாழ் மாதாபுரம் இறைமக்களின் நன்கொடை, பங்குத்தந்தையர்கள் வழிகாட்டுதலில் 107 அடி நீளமும், 41 அடி அகலமும், 78 அடி உயரமும் கொண்ட அழகிய ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதுடன்,  53 அடி உயர கொடிமரமும் வைக்கப்பட்டு, 11.08.2017 அன்று மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் ச.ச அவர்களால் அர்ச்சித்து, திறந்து வைக்கப்பட்டது.

ஆலய வளர்ச்சிப்படிகள்:

புனித தோமையார் காலத்து மரச்சிலுவையை மையமாகக் கொண்டு மாதாபுரம் மண்ணில் கிறிஸ்தவ விசுவாசம் தழைத்தோங்க தொடங்கியது.

தொடக்கத்தில் ஓலை வேய்ந்த சிற்றாலயம் கட்டப்பட்டது. 1994 ஆம் ஆண்டில் இரண்டாவது ஆலயம் கட்டப்பட்டது. முதலில் மறைக்கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டன. 19.02.1995 அன்று அருட்பணி. J. லூக்காஸ் அவர்களால் பங்கு அருட்பணிப்பேரவை தொடங்கப்பட்டது.

அருட்பணி. மரியதாஸ் பணிக்காலத்தில் (1995-1996) மாதாபுரம் புனித காணிக்கை மாதா ஆலயமானது விழுந்தயம்பலத்தின் கிளைப்பங்காக உயர்த்தப்பட்டது.

1999 ஆம் ஆண்டு ஆலயத்திற்கு சொந்தமான 30 சென்ட் நிலம் கார்மெல் சபை அருட்சகோதரிகளுக்கு, ஆங்கில பள்ளிக்கூடம் அமைக்க வழங்கப்பட்டது.

அருட்பணி. S. அருளப்பன் பணிக்காலத்தில் அன்பியங்கள் தொடங்கப்பட்டன. புனித காணிக்கை மாதா கலையரங்கம் கட்டப்பட்டது. 

அருட்பணி. V. மரியதாசன் பணிக்காலத்தில் மறைமாவட்ட நிதியுதவியுடன் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. 

1998 ஆம் ஆண்டு அருட்பணி. அருள் ஜோ அவர்களால், திருமுழுக்கு பெறாத இளைஞர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து திருமுழுக்கு, உறுதிபூசுதல் வழங்கப்பட்டது. மற்றும் முறைப்படுத்தப்படாத திருமணங்கள் முறைப்படுத்தப் பட்டது. இந்த நிகழ்வு மாதாபுரம் ஆலய வளர்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி எனலாம்.

அருட்பணி. S. சேவியர் பெனடிக்ட் பணிக்காலத்தில் புனித காணிக்கை மாதா சமூக நலக்கூடத்திற்கு 16.08.2007 அன்று மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருள்பணி. V. மரியதாசன் அவர்களால் அடிக்கல் போடப்பட்டு, ஆலய இறைமக்கள், புனித காணிக்கை மாதா மன்றம் மற்றும் இங்கிலாந்து நாட்டு சகோதரியின் நிதியுதவியுடன் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 2009 ஆம் ஆண்டு பேரருள்பணி. V. மரியதாசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அருட்பணி. சேவியர் பெனடிக்ட் அவர்கள் அதிகமாக இல்ல சந்திப்புகள் மேற்கொண்டும், அன்பியங்களின் ஈடுபாடுகளை அதிகரித்தும், இளையோர்களை ஊக்கப்படுத்தியும் பங்கின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தார். இவரது பணிக்காலத்தில் அருட்சகோதரர். பென்சர் சேவியர், திருத்தொண்டர். ஆரோக்கிய ஆன்றோ (தற்போது இருவரும் அருள்பணியாளர்கள்) சிறப்புற பணியாற்றினர்.

அருட்பணி. பெனடிக்ட் M. D. ஆனலின் அவர்களின் முயற்சியால் 12.05.2013 முதல் புனித காணிக்கை மாதாவுக்கு நவநாள் தொடங்கப்பட்டது. அதுவரை புதன்கிழமையாக இருந்த நவநாள் அன்றுமுதல் வெள்ளிக்கிழமையாக மாற்றப்பட்டது. வெள்ளிக்கிழமைகளில் புனிதக் கஞ்சி வழங்கப்பட்டது. 

அருட்பணி. S. ஜெயப்பிரகாஷ் பணிக்காலத்தில் சமூக நலக்கூடத்தின் முன்பக்கம் கண்ணாடிகள் பதிக்கப்பட்டு,  புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டு சமூக நலக்கூடமானது புதுப்பொலிவு பெற்றது. புதிய ஆலயம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் இறைமக்களிடம் விதைக்கப்பட, அருள்தந்தையவர்கள் பங்கு அருட்பணிப்பேரவையினருடன் இணைந்து ஆலய கல்லறைத் தோட்ட உரிமையாளர்களிடம் பேசி, கல்லறைத்தோட்டங்களை அகற்ற முயற்சிகள் மேற்கொண்டு வந்த வேளையில் பணிமாற்றம் பெற்றுச் சென்றார்.  

அருட்பணி. S. சேகர் மைக்கேல் பணிக்காலத்தில் ஆலயத்திற்கு செலுத்தும்  ஆண்டுவரி மாதவரியாக மாற்றப்பட்டது. நிதிக்குழு, தணிக்கை குழு ஏற்படுத்தப்பட்டது. புதிய ஆலய கட்டுமானப் பணிக்காக, 22.11.2014 அன்று கல்லறைகள் அகற்றப்பட்டு, தற்போதைய புதிய ஆலய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அருட்சகோதரர். டேனியல் ஆபிரகாம் (தற்போது அருட்பணியாளர்) அவர்கள் ஓராண்டு காலம் பங்குத்தந்தையோடு இணைந்து பணிபுரிந்தார்.

அருட்பணி. A. சார்லஸ் விஜூ பணிக்காலத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று அர்ச்சிக்கப்பட்டது. கழிப்பறைகள், அலுவலக அறை, ஜெனரேட்டர் வசதி, கண்காணிப்பு கேமரா வசதிகள் செய்யப்பட்டது. சமூகநலக்கூடத்தின் பின்புறம் ஆலயத்திற்கு நிலங்கள் வாங்கப்பட்டது. புனித காணிக்கை மாதா மன்றமானது, புனித காணிக்கை மாதா கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கமாக மாற்றம் பெற்றது.

மாதாபுரம் கிளைப்பங்கானதன் வெள்ளிவிழா தொடக்க நிகழ்வு "இணைந்து அன்னையின் பாதையிலே" என்னும் மையக்கருத்துடன் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பத்தாம் திருவிழாவின் போது கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப் பட்டது. வெள்ளிவிழா நினைவாக புற்றுநோயாளர் நிதி தொடங்கப்பட்டு எட்டு இலட்சம் ரூபாய் வங்கியில் சேமிப்பு வைக்கப்பட்டது. கொரோனா தொற்றின் காரணமாக அரசாங்கம் அறிவித்த ஊரடங்கால், வெள்ளிவிழா நிகழ்வுகள்  2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எளிமையாக நிறைவு செய்யப்பட்டது.

மேலும் தவக்காலங்களில் ஏழைகளுக்கு கொடுப்பதற்காக சிறப்பு காணிக்கையாக உணவு, மளிகைப் பொருட்கள், பற்பசை, சலவை மற்றும் குளியல் சோப்புகள், ஆடைகள் போன்றவை பெறப்பட்டு ஆதரவற்ற இல்லங்களுக்கு வழங்கி வருகின்றோம்.. இவ்வாறாக எங்கள் ஆலயம் கிளைப்பங்கானதன் வெள்ளிவிழாவை அர்த்தமுள்ள விழாவாக கொண்டாடி வருகின்றோம்...

புனித காணிக்கை மாதாவின் புதுமைகள்:

1. இரண்டாவது ஆலயம் (1989-1994) கட்டுகிற வேளையில், புனித காணிக்கை மாதாவின் சுரூபமானது ஓடு வேய்ந்த அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. அந்நாட்களில் ஓயாது பெய்த அடைமழையில் ஓட்டரங்கம் முழுவதும் இடிந்து விழுந்தது. ஆனால்..! மாதாவின் சுரூபமானது கையில் சிறு விரிசலை தவிர வேறெந்த பாதிப்பும் ஏற்படாமல், புன்னகை ததும்ப வீற்றிருப்பதைக் கண்ட இறைமக்கள், ஆனந்தமடைந்து மாதாவின் மீது அதிக பற்றுகொண்டனர்.

2. 2015 ஆம் ஆண்டு தற்போதைய புதிய ஆலய கட்டுமானப் பணிக்காக 25 டன் கம்பிகளை ஏற்றி வந்த டாரஸ்ட் வண்டியை, சாலையிலிருந்து ஆலய கலையரங்கத்திற்கு கொண்டு வர 6 முறை ஓட்டுநர் முயன்றும் முடியாமல் போகவே..! அதிக பாரத்தை சாலையில் இறக்கலாம் என்றிருந்த போது, இறுதி முயற்சியாக இறைமக்களில் சிலர் மாதாவிடம் செபித்து, மாதாவுக்கு அணிவித்திருந்த மலர் மாலையில் சிறிது மலர்களை எடுத்து வண்டியின் மீது போட்டு, மீண்டும் முயற்சி செய்ய வண்டி நகர்ந்து கலையரங்கத்திற்கு வந்தது அதிசயம்...!

3. 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் எமது மாதாபுரத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் மூளையின் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, பழுப்பு நிறைந்து மிகவும் ஆபத்தான நிலையில் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். குழந்தையின் உயிரைக் காக்க பங்குத்தந்தை அருட்பணி. சார்லஸ் விஜூ அவர்கள் வெள்ளிக்கிழமை நவநாள் திருப்பலியில் சிறப்பு ஜெபம் மேற்கொள்ள, இறைமக்கள் அனைவரும் ஒருமித்து ஜெபிக்க சிறுவன் அதிசயமாய் உயிர் பிழைத்தார். இந்தச் செய்தி உலகெங்கும் பரவ, மாதாவின் வல்லமையை மக்கள் அதிகமாக உணர்ந்து கொண்டனர்.

4. வேலை இல்லாத பலர் மாதாவிடம் வேண்டி, வேலை வாய்ப்பை பெற்று, மாதாவிற்கு நன்றி கூறி காணிக்கை செலுத்தி செல்கின்றனர்.

5. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணம் தடைபடுபவர்கள், பல்வேறு நோய்களால் துன்புறுபவர்கள் ஆலயம் வந்து ஜெபித்து ஆசி பெற்றுச் செல்கின்றனர். 

6. தவக்காலங்களில் சென்னை, சேலம், திருநெல்வேலி, மதுரை மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் திருப்பயணிகள் ஆலயம் வந்து ஜெபித்து செல்கின்றனர்.

தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக கொடுத்து நன்றி கூறி செல்பவர்கள் ஏராளம்.

இன்னும் ஏராளமான அற்புதங்கள் புனித காணிக்கை மாதாவின் வழியாக நாள்தோறும் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.

ஆலய பங்கேற்பு அமைப்புகள்: 

1. மறைக்கல்வி மன்றம்

2. பங்கு அருட்பணிப் பேரவை

3. தணிக்கைக் குழு

4. திருவழிபாட்டுக் குழு

5. நற்செய்தி பணிக்குழு

6. பாடகற்குழு

7. பீடச்சிறார்

8. மரியாயின் சேனை

9. கத்தோலிக்க சேவா சங்கம்

10. பெண்கள் இயக்கம்

11. KIDS விவசாயக் குழு 

12. கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம்

13. புனித வின்சென்ட் தே பவுல் சபை

14. பாலர் சபை

15. சிறுவழி இயக்கம்

16. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

17. இளையோர் இயக்கம்

18. கைகள் மாதர் தன்னம்பிக்கை இயக்கம்

19. அடித்தள முழு வளர்ச்சி சங்கம்

20. சிறுசேமிப்புக் குழு

21. சமூக நலக்கூட குழு

22. அன்பிய ஒருங்கிணையம்

23. பக்தசபைகள் இயக்க ஒருங்கிணையம்

பங்கில் பணிபுரியும் அருட்சகோதரிகள்:

1. புனித கார்மெல் சபை அருட்சகோதரிகள்

2. புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள்

ஆலயத்தில் உள்ள அரங்கங்கள், சிறப்பு வசதிகள்:

1. புனித காணிக்கை மாதா கலையரங்கம்

2. புனித காணிக்கை மாதா சமூகநலக்கூடம்

3. கழிப்பறை வசதி

4. ஆலயம் மற்றும் சமூக நலக்கூட வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள்

5. சிறு விளையாட்டு மைதானம்

6. சிறார் நூலகம்

தனிச்சிறப்புகள்:

1. ஒருங்கிணைந்த செயல்பாடுகள்

2. ஏழைகள் நலன் சார்ந்த பகிர்வுகள்

3. ஆற்றல் மிகுந்த இளையோர்

4. பிறசபை, பிற சமயத்தாரோடு இணைந்து கொண்டாடும் திருவிழா

5. ஊர்பஜனை

6. கடவுளின் விருப்பம் ஏவாள் வழியாக நிறைவேறாமல், அன்னை மாமரி வழியாக நிறைவேறியதால், நாம் மாதாவை 'புதிய ஏவாள்' என அழைக்கின்றோம். அதனை உணர்ந்து மாதாவின் மீது மிகுந்த விசுவாசம் கொண்ட இறைமக்கள்.

ஆலயத்தில் இறைப்பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. J. லூக்காஸ் (1994-1995)

2. அருட்பணி. A. மரியதாஸ் (1995-1996)

3. அருட்பணி.‌ S. அருளப்பன் (1996-1998)

4. அருட்பணி.‌ I. அருள்ஜோ (1998-2001)

5. அருட்பணி. பென்சிகர் (2001-2002)

6. அருட்பணி.‌ V. மரியதாசன் (2002-2005)

7. அருட்பணி. கபிரியேல் (2005-2007)

8. அருட்பணி. S. சேவியர் பெனடிக்ட் (2006-2012)

9. அருட்பணி.‌ பெனடிக்ட் M. D. ஆனலின் (2012-2013)

10. அருட்பணி. S. ஜெயப்பிரகாஷ் (2013-2014)

11. அருட்பணி. S. சேகர் மைக்கேல் (2014-2016)

12. அருட்பணி. சார்லஸ் விஜூ (2016-2024 ஜனவரி)

13. அருட்பணி. பிரைட் சிம்சராஜ் (2024 ஜனவரி முதல்...

புதுமைகள் நிறைந்த மாதாபுரம் புனித காணிக்கை மாதா ஆலயம் வந்து இறையாசீர் பெற்றுச் செல்ல வருகைதரும் அனைவரையும், மாதாபுரம் இறைசமூகத்தினர் அன்புடன் வரவேற்கின்றோம்...

மாதாவின் வல்லமை நிரம்பப் பெற்ற, ஆலயம் அறிவோம் வரிசையில் 700 -வது மைல்கல் பதிவை (ஆலயம் அறிவோம் பதிவாளர் ஜோஸ் மாதாபுரத்தின் சொந்த ஊர் ஆலயம்) இறைவனின் பாதம் சமர்ப்பிக்கின்றோம்...

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. சார்லஸ் விஜூ அவர்களின் வழிகாட்டலில், ஆலயம் அறிவோம் பதிவாளர் Mr. K. Jose Mathapuram

புகைப்படங்கள்: ஆலய இறைமக்கள்

ஆலய வரலாறு:  2017 ஆம் ஆண்டு மாதாபுரம் ஆலய அர்ச்சிப்பு விழா மலர், விழுந்தயம்பலம் ஆலய அர்ச்சிப்பு விழா மலர் மற்றும் கம்பிளார் ஆலய அர்ச்சிப்பு விழா மலர்.