768 ஜெபமாலை அன்னை ஆலயம், ஆவேரிப்பள்ளி

    
  

ஜெபமாலை அன்னை ஆலயம் 

இடம்: ஆவேரிப்பள்ளி

மாவட்டம்: கிருஷ்ணகிரி 

மறைமாவட்டம்: தருமபுரி 

மறைவட்டம்: தேன்கனிக்கோட்டை 

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை: அருட்பணி. டோமினிக்

குடும்பங்கள்: 87

அன்பியங்கள்: 6

வழிபாட்டு நேரங்கள்: 

ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி

வாரநாட்களில் திருப்பலி மாலை 06:30 மணி

திருவிழா: பிப்ரவரி இரண்டாவது வாரம்

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. Rev. Fr. Raja

2. Rev. Sr. Pascha, SMMI

3. Rev. Sr. Antony Mary, SMMI

வழித்தடம்: தளியில் இருந்து ஆச்சுபாலு சாலை போகும் வழியில் 6 கி.மீ தொலைவில் ஆவேரிப்பள்ளி அமைந்துள்ளது. 

முகவரி: பெரிய ஆவேரிப்பள்ளி, தளி 635301, கிருஷ்ணகிரி மாவட்டம்.

Map : https://goo.gl/maps/YeLnBm9pNo5hyz9j9

முன்னுரை:

தளியிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள பெரிய ஆவேரிப்பள்ளியில் குக்கிராமத்தில் அமைந்துள்ளது ஜெபமாலை அன்னை ஆலயம். முன்னதாக இது தாசரப்பள்ளி பங்கின் கிளைப் பங்கு ஆலயமாக இருந்தது. பின்னர் 2013 ஆம் ஆண்டு மிஷன் (மறைப்பரப்பு தளம்) தேவாலயமாக மாறியது. தற்போது 2022 ஆம் ஆண்டு முதல், பங்கு ஆலயமாக உயர்ந்துள்ளது.

வரலாறு:

பெரிய ஆவேரிப்பள்ளி கிராமம் 58 ஆண்டுகள் பழைமையானது. மதகொண்டப்பள்ளிக்கு அருகில் உள்ள பெலகேரி என்ற கிராமம் இம் மக்களின் பிறப்பிடம். இரண்டு இந்துக் குடும்பம் உட்பட பதினொரு குடும்பங்கள் 1962 ஆம் ஆண்டு இங்கு குடியேறினர். இந்த இடம் தாசரப்பள்ளி பங்கின் கீழ் வருவதால், தாசரப்பள்ளியின் அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. இன்னாசி அவர்கள், அவ்வப்போது இங்கு வந்து குடும்பங்களைச் சந்தித்து, திருப்பலி நிறைவேற்றினார். 

ஆவேரிப்பள்ளியில் ஆலயம் இல்லாததால், வீடு ஒன்று தேர்வு செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தன. பெரிய ஆவேரிப்பள்ளியில் இருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பங்கு ஆலயமாக விளங்கிய தாசரப்பள்ளிக்கு, அனைத்து ஆன்மிகத் தேவைகளுக்கும் சென்று வர மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். 

அப்போது வாகன வசதி இல்லாததால் மக்கள் வெகுதூரம் நடந்து சென்று வந்தனர். இதன் காரணமாக நாளடைவில் இறைமக்களின் வருகை குறைந்து கொண்டே வந்தது. 

தேவாலயம்: 

1964 ஆம் ஆண்டில், தாசரப்பள்ளி  பங்குத்தந்தை அருட்பணி. சவரிமுத்து அவர்கள், ஆவேரிப்பள்ளியில் ஆலயத்தின் தேவையை உணர்ந்து, ஒரு தேவாலயம் கட்ட திட்டமிட்டு, அதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 

மக்கள் நிலம் மற்றும் அவர்களது உடல் உழைப்பை நன்கொடையாக அளித்தனர். மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியின் மூலம் தேவாலயத்தை கட்டத் தொடங்கினர். 09.05.1965 அன்று சேலத்தைச் சேர்ந்த அருட்திரு. ஓ. பெர்ட்டி. (Fr. O. Berti) ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார். இரண்டு வருட கடின உழைப்புக்குப் பிறகு அஸ்பெஸ்டாஸ் (AC) ஷீட் கூரையுடன் கூடிய தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டு, 06.10.1967 அன்று அப்போதைய சேலம் மறைமாவட்ட ஆயரான மேதகு செல்வநாதர் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு,  மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

மிஷன் தேவாலயம்:

தருமபுரி மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்களிடம், 2013-ம் ஆண்டு பெரிய ஆவேரிப்பள்ளி தேவாலயத்தை பங்கு ஆலயமாக மாற்ற மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதே ஆண்டில் பெங்களூரின் புனித அன்னாள் சகோதரிகள் திருத்தலத்திற்கு அருகாமையில் ஒரு நிலத்தை வாங்கினார்கள். அடுத்த ஆண்டு அவர்கள் தங்கள் துறவற சபையைத் தொடங்கினார்கள். சகோதரிகளின் வருகை மக்களின் நம்பிக்கையை உயர்த்தியது. கிராமத்து குழந்தைகளுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தினார்கள். 2017 இல் சகோதரிகள் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியைத் தொடங்கினர். 

2016 ஆம் ஆண்டு சகோதரிகளின் வேண்டுகோளின் பேரில் அருட்பணி. பி. லூர்துசாமி துறவற சபைக்கு ஆன்மீக குருவாக (chaplain) நியமிக்கப்பட்டார். அவர் ஆலயத்தின்  பலிபீடத்தின் பின்புற அறையில் தங்கினார். பின்னர் அவ்வறையில் சில சீரமைப்புகளை மேற்கொண்டார். ஏப்ரல், 2017 இல், பெரிய ஆவேரிப்பள்ளி ஒரு மிஷனரி திருத்தலமாக (Mission Chruch) அறிவிக்கப்பட்டது மற்றும் *அருட்பணி. விஜய் அமிர்தராஜ்* அவர்கள் இந்த இடத்தின் பொறுப்பாளராக  நியமிக்கப்பட்டார். அவரும் பலிபீடத்தின் பின் அறையில் (Sacristy) வசித்து வந்தார்.

தேவாலயம் சீரமைப்பு:

தேவாலயத்தின் பொன்விழா கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில், தேவாலயத்தைப் புதுப்பித்து, அதிகமான மக்கள் வருகைக்கேற்ப விரிவாக்கம் செய்ய மக்கள் முடிவு செய்தனர். பங்குப்பணியாளர் தங்குமிடமானது பலிபீட பின் அறையில் இருந்து ஆலய இடப்புறம் இருக்கும் கொட்டகைக்கு மாற்றப்பட்டது. அதன்பின் பின் அறை சேர்த்து ஒரே நீளமாக திருத்தலம் நீடிக்கப்பட்டது.  

2018 ஏப்ரல் மாதத்தில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. கிராம மக்கள் தாராள நன்கொடை உதவியால்  27 லட்சம் செலவில் தேவாலயத்தின் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்தன. புதுப்பிக்கப்பட்ட ஆலயம் 5.03.2019 அன்று, தருமபுரி மறைமாவட்ட  ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு  திறந்து வைக்கப்பட்டது. 

பங்குத்தந்தை இல்லம்:

ஆவேரிப்பள்ளி ஒரு மிஷன் திருச்சபையாக அமைக்கப்பட்டதால், ஒரு அருட்பணியாளர் கிராமத்தில் தங்கத் வேண்டியதாயிற்று. அதனால்  பங்குத்தந்தை இல்லம் தேவைப்பட்டது . ஆனால் அருட்பணியாளர் ஆலயத்தின் இடதுபுறம் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகையில் தங்கியிருந்தார். மக்கள் மற்றும் அருட்பணியாளரின் வேண்டுகோளுக்குப் பிறகு, ஆயர் பங்குத்தந்தை இல்லத்தை கட்ட அனுமதித்து நிதியளித்தார். 

மார்ச் 16, 2021 அன்று பங்குத்தந்தை  இல்லத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பிப்ரவரி 23, 2022 அன்று இல்லம் கட்டிடப்பணி நிறைவடைந்து, ஆயரால் திறந்து வைக்கபட்டது. அதேநாளில் மிஷன் தலத்திலிருந்து பங்குத் தலமாக ஆவேரிப்பள்ளி திருநிலை படுத்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. விஜய் அமிர்தராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆன்மீகப் பாதையில் சிறப்புற சென்று கொண்டிருக்கிறது ஆவேரிப்பள்ளி பங்கு இறைசமூகம்..

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

புனித வின்சென்ட் தே பவுல் சபை

மறைக்கல்வி

கன்னியர் இல்லம்:

St. Anne's of Banglore

பள்ளிக்கூடம்: 

St. Anne's Academy Nursery and Primary school.

பங்கில் பணிபுரிந்த பங்குத்தந்தையர்: 

அருட்பணி. விஜய் அமிர்தராஜ் (2013-2022)

அருட்பணி. டோமினிக் (2022 ஜூன் முதல்)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. விஜய் அமிர்தராஜ் அவர்கள்

தகவல்கள் சேகரிப்பில் உதவி: 

திரு ஏசுதாஸ், கிருஷ்ணகிரி